22. எரிந்துமீள்தல்
ஒவ்வொருநாளும் அரசனின் உடல் சுருங்கி நெற்றாகி, உலர்ந்த புழுபோலாகி, வெண்பட்டுப்படுக்கையில் வழிந்த கறையென்றாகி கிடந்தது. அறையெங்கும் மட்கும் தசையின் கெடுமணமே நிறைந்திருந்தது. அதை மறைக்க குந்திரிக்கப் புகை எழுப்பிக்கொண்டிருந்தனர். தரையை மும்முறை கோரோஜனையும் புனுகும் கொண்டு தூய்மைப்படுத்தினர். தேவர்களை அடிமைகளாக்கி ஆளும் இருளுலகத்து கொடுந்தெய்வம்போல அனைத்து நறுமணங்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு மேலும் பெருகி நின்றிருந்தது அக்கெடுமணம்.
அரண்மனை முழுக்கவும் அந்த மணம் பரவி முற்றத்தில் நின்றால்கூட அதை முகரமுடிந்தது. “நோயுற்ற விலங்கின் உடலில் அழுகும் புண்போல் அம்மஞ்சத்தறை” என்றார் ஒரு முதுகாவலர். “இந்நகரிலுள்ள அனைவருக்கும் வலிக்கும் புண் அது, மூத்தவரே” என்றான் இன்னொரு இளைய காவலன். ஒவ்வொரு காலையிலும் அரசனின் இறப்புச்செய்திக்கென நகர் விழித்திருந்தது. ஒவ்வொருமுறை முரசு முதலுறுமலை எழுப்பியதும் முதலெண்ணத்துளி செய்திதான் என்றே செவிகூர்ந்தது.
பின்னர் அவன் இறக்கப்போவதில்லை என இளிவரலாக அவ்வெதிர்பார்ப்பை மாற்றிக்கொண்டது. ஆயிரம் ஆண்டுகாலம் அங்கு அவ்வுடல் அழுகியபடி கிடக்கும் என்றொரு சூதன் கதை சொன்னான். அதை பெரியதோர் முதுமக்கட்தாழியில் சுருட்டி அமைத்து பரணில் எடுத்து வைப்பார்கள். நெடுங்காலத்துக்குப் பின் அதை எடுத்துப்பார்த்தால் அழுகி நொதித்து ஊறி நுரையெழுந்து மதுவென்றாகியிருக்கும். அதில் ஒரு துளி அருந்தினால் காதற்பெருங்களிப்பை அடையமுடியும்.
ஏழாண்டுகாலம் காதலின் கொண்டாட்டத்தில் திளைத்தபின் எஞ்சிய வாழ்நாளெல்லாம் அதன் பெருவலியுடன் வாழத்துணிந்த எவருக்கும் அது அளிக்கப்படும். பேரின்பத்தின் பொருட்டு பெருந்துன்பத்தை ஏற்கத் துணிபவர் யோகியர். அவர்கள் உண்ணும் அறிவமுது அது. ஒரு கையில் தேன்கலமும் மறு கையில் நச்சுக்கலமும் என நின்றிருக்கும் ஒரு தேவியின் வடிவில் அதை இங்கு ஓர் ஆலயத்தில் வைப்பார்கள். ஒரு கண் நகைக்க மறு கண் சினக்கும் சிலை அவள். ஒரு காலை விண்ணிலும் மறு காலை கீழுலகிலும் விரித்து மண்ணுலகில் உடலமைத்து நின்றிருப்பாள். அவளை பிரேமை என்றனர் கவிஞர். விண்ணாளும் முதலாற்றலின் பெண் வடிவம்.
ஒருநாள் மஞ்சத்தறைக்குச் சென்று வழக்கம்போல அரசனைப் போர்த்தியிருந்த போர்வையை மெல்ல விலக்கிய சேடி எப்போதும் மெல்ல தசை நெளிந்துகொண்டிருக்கும் அவன் வயிறு சேற்றுப்படிவென அமைந்திருப்பதைக் கண்டாள். மெல்ல அவன் மூக்கில் கை வைத்துப் பார்த்தாள். மூச்சோடுகிறதா இல்லையா என்பது எப்போதும் அறியக்கூடுவதாக இருந்ததில்லை. அவன் இறந்தபின்னர் அவனுடலில் ஏதோ அறியாத் தெய்வமே வாழ்கிறது என்னும் அலர் அரண்மனையில் அதனால்தான் புழங்கியது.
தன் ஆடையிலிருந்து சிறுநூலொன்றை எடுத்து அவன் மூக்கருகே காட்டினாள் அச்சேடி. அது அசையாமல் நிற்பதைக்கண்டு மூச்சிழுத்து நெஞ்சைப்பற்றி ஒருகணம் நின்றபின் வெளியே ஓடி அங்கு நின்றிருந்த மருத்துவர்களிடம் “அரசர் உயிரவிந்துவிட்டது போலும், மருத்துவரே” என்று சொன்னாள். அவர்கள் அதைப்போல பலமுறை கேட்டிருந்தனர். “நன்று, முதுமருத்துவர் வந்து நோக்கட்டும்” என்றனர். “இல்லை, உண்மையாகவே. இதை என் உள்ளாழமும் அறிந்தது…” என அவள் சொன்னாள்.
அவர்கள் ஆர்வமில்லாது உள்ளே சென்று அவன் நாடியைத் தொட்டு நோக்கினர். இருப்பதுபோன்றும் இல்லை என்றும் காட்டியது நாடி. முன்னர் பலமுறை அதைத் தொட்டு நாதமெழாமை உணர்ந்து இறந்துவிட்டானென்று எண்ணி மீண்டும் மீண்டும் நோக்கி உயிர்கொண்டுள்ளான் என உறுதி செய்தமையின் குழப்பம் அவர்களை ஆட்கொண்டது. அவர்களில் இருவர் ஓடிச்சென்று முதுமருத்துவரை அழைத்துவந்தனர்.
முதுமருத்துவர் அரசனின் நாடியை ஏழுமுறை நோக்கியபின் “அரசர் இறந்துவிட்டார். ஐயமில்லை” என்றார். ஏவலர் அப்போதும் ஐயம்கொண்டிருந்தனர். செய்தி சென்றதும் ஆயுஸ் நேரில் பார்க்க வந்தான். அவனிடம் முதுமருத்துவர் அரசனின் மண்நீங்கலை சொன்னார். அவன் அரசனின் மஞ்சத்தருகே சற்றுநேரம் நின்றான். குனிந்து சுருங்கி சுள்ளி என்றாகிவிட்டிருந்த கால்களைத் தொட்டு தலையில் வைத்து வணங்கியபின் திரும்பி தன்னருகே நின்றிருந்த அமைச்சரிடம் “ஆவன செய்க!” என்றான்.
அரசன் விண்ணேகியதை அறிவிக்க முகக்கோட்டைமேல் எழுந்த பெருமுரசம் முழங்கலாயிற்று. ஆனால் அரசனின் இறப்பை எதிர்பார்க்கும் புலன்கள் முன்னரே மழுங்கிவிட்டிருந்தமையால் முதலில் அதை எவரும் அடையாளம் காணவில்லை. செவிமங்கி பிற ஒலி ஏதும் கேட்காது ஆன முதியவர் ஒருவர்தான் “அரசர் நாடு நீங்கினார் போலும்” என்றார். “என்ன?” என்றான் இளையவன் ஒருவன். அவர் தயங்கி “அந்த முரசொலி!” என்றார்.
அனைவரும் ஒரே தருணத்தில் திகைத்து “ஆம்!” என்றனர். மறுகணமே அம்முரசோசை சொல்லென மாறி பொருள் கொள்ளலாயிற்று. “சந்திரகுலத்து அரசன் புரூரவஸ் மண்மறைந்து விண்ணேகினான். புகழ்கொண்டு உடல் துறந்தான்!” நகரம் ஆர்த்தெழுந்தது. “நீடுவாழ்க அரசர். நெடும்புகழ் நின்று ஓங்குக!” என்று வாழ்த்து கூவினர். தெருக்களில் கூடிநின்று தங்கள் பூசெய்கை அறைகளிலிருந்து தட்டுமணிகளையும் செம்புக்கலங்களையும் கொண்டுவந்து சீராகத் தட்டி ஒலிக்கத் தொடங்கினர். சற்றுநேரத்தில் குருநகரமே மாபெரும் இசைக்கருவி என அதிர்ந்துகொண்டிருந்தது.
உயிர் நீத்த அரசனுக்கு முறைமை செய்யும்பொருட்டு தாலங்களில் சுடர், நீர், மலர், கனி, பொன் என்னும் ஐந்து மங்கலப்பொருட்களும் மஞ்சளரிசியும் ஏந்தி தலைப்பாகைகளோ அணிகளோ இன்றி மக்கள் அரண்மனை நோக்கி நிரை நிரையாகக் குவிந்தனர். அரண்மனைமுற்றம் தலைகள் செறிந்து கருமைகொண்டது. அரண்மனைக்காவலர் எவரையும் கட்டுப்படுத்தவோ ஆணையிடவோ இல்லை. பேச்சில்லாமலேயே அரண்மனை எறும்புப்புற்றென சீராக இயங்கியது.
அரண்மனைக்குள் தங்கள் அறையில் மூதரசியும் அரசரும் விழிநீர் வார ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி தங்கள் முழுத்தனிமைக்குள் எட்டுத்திசை வாயில்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் அமைச்சர் சூழ ஆயுஸ் வந்து செய்தியைச் சொன்னபோது மூதரசர் கதறியழுதபடி நெஞ்சில் அறைந்துகொண்டார். அவர் கைகளை எட்டிப் பற்றிக்கொண்டாள் முதுமகள். அமைச்சர் அருகே செல்ல ஆயுஸ் வேண்டாம் என கைகாட்டினான்.
முதியவரை துணைவி மெல்லப்பற்றி படுக்கையில் படுக்கவைத்தாள். அவர் உடலில் மெல்லிய வலிப்பு வந்துசென்றது. அவர் பற்கள் கிட்டித்து கண்கள் செருகியிருந்தன. முதியவள் மெல்ல சாமரத்தால் வீசிக்கொண்டு அருகே அமர்ந்திருந்தாள். அவளுடைய மெல்லிய உதடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தன. சுருக்கங்கள் செறிந்த கன்னங்களினூடாக கண்ணீர் வழிந்தது. பெருத்த விம்மலோசையுடன் முதியவர் மீண்டு வந்தார். தன் துணைவியின் கைகளைப்பற்றி நெஞ்சோடணைத்துக்கொண்டு விம்மி அழுதுகொண்டே இருந்தார். ஆயுஸும் அமைச்சர்களும் ஓசையின்றி விழிபரிமாறியபின் திரும்பி நடந்தனர். அதன்பின் அவர்கள் பிறரிடம் ஒரு சொல்லும் பேசவில்லை.
ஆயுஸ் முகமுற்றத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் அரசர் மண்மறைந்ததை முறைப்படி அறிவித்தான். அவர்கள் “பேரறத்தான் புரூரவஸ் வெல்க! சந்திரகுலத்து பெரும்புகழ் வாழ்க!” என்று கண்ணீருடன் கூவினர். இறப்பில் குவியம்கொண்ட புரூரவஸின் நற்பண்புகள் அவர்களை துயர்வெறி கொள்ளச்செய்தன. இறப்பு என்னும் பேருரு தங்களை அச்சுறுத்தி அத்தனை நற்பண்புகளையும் மறக்கவைத்து அவனை புறக்கணிக்கச் செய்ததை எண்ணியபோது எழுந்த குற்றவுணர்ச்சி உடன் இணைந்துகொண்டது.
ஈமச்சடங்குகள் இயற்றும்பொருட்டு வைதிகர் நூற்றொருவர் அரண்மனைக்கு வந்தனர். ஏழு நிமித்திகர் களம்பரப்பி அரசன் மண்மறைந்த பொழுதைக் கணித்து நாற்பத்தொரு நாட்களில் அவன் விண்ணுலகு சேர்வது உறுதி என்றனர். முற்றத்தில் அவன் உடல் கொண்டு வைக்கப்பட்டு குலமூத்தார் சூழ்ந்தமர்ந்து முறை செய்தபோது ஒரு தொல்சடங்கைச் செய்யும் அமைதியும் ஒழுங்குமே அங்கு நிலைத்தது. நிரையாக வந்து அவன் காலடியில் மங்கலப்பொருள் படைத்து மலரிட்டு வணங்கி சுற்றிச்சென்றனர் மக்கள். அவனுடன் குருதியுறவுகொண்ட மூத்தகுடிகளில் அவனுக்கு தந்தை, உடன்பிறந்தார், மைந்தர் முறை கொண்டவவர்கள் அவன் முகத்தில் வாய்க்கரிசியிட்டு இடம்சுற்றி சென்றமர்ந்து கொண்டிருந்தனர்.
இறுதியில் மூதரசரையும் அரசியையும் நான்கு ஏவலர் கை பற்றி அழைத்து வந்தனர். மூதரசர் மூர்ச்சையில் கொண்டுவரப்படுபவர் போலிருந்தார். மூதரசி உள்மடிந்த மெல்லிய உதடுகளால் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். முற்றத்தை அடைந்ததும் மூதரசர் திரும்பி எங்குள்ளோம் என நோக்கினார். விழி சென்று ஒருகணம் மைந்தனின் உடலைப்பார்த்ததும் அறியாது உடைந்து அடிபட்ட விலங்கென குரலெழுப்பி நடுங்கினார். அவரைத் தாங்கிவந்த முதிய வீரர் “அரசே!” என்று மெல்லச் சொல்லி அணைத்து முன்னால் இட்டுச்சென்றார்.
அரசியோ அங்கிலாதவள் போலிருந்தாள். சரடுகளால் இயக்கப்பட்ட பாவையென அவள் உடல் அசைந்தது. இருவரும் மும்முறை உடல் சுற்றிவந்து குல மூத்தார் அளித்த மலரையும் அரிசியையும் அவன் கால்களிலும் முகத்திலும் வைத்து மீண்டபோது முதற்படியிலேயே மூதரசர் நினைவழிந்து விழுந்தார். கூட்டம் ஓசையிட்டு சளசளக்க தளபதி ஒருவன் “அமைதி!” என ஆணையிட்டு அமையச்செய்தான். அரசரை போர்வையொன்றில் படுக்கவைத்து நான்குமுனைகளையும் பற்றித்தூக்கி உள்ளே கொண்டு சென்றார்கள்.
மூதரசி தடுமாறும் சிறிய அடி வைத்து செதுக்கிய மரப்பாவை போன்ற சுருங்கிய முகத்துடன் கூப்பிய கைகளுடன் அவரைத் தொடர்ந்து சென்றாள். அவர்கள் செல்வதை விழிநிலைத்து நோக்கி நின்றனர் மக்கள். அவர்கள் நோக்கு மறைந்ததும் நீள்மூச்சு ஒன்று அனைவரையும் தழுவியபடி எழுந்தது. சூதன் ஒருவன் “துயர்கொள்ளுதல் ஒரு தவம்” என மெல்லிய குரலில் சொன்னான். அனைவரும் திரும்பிநோக்க அவன் தன் யாழின் நரம்பில் விரலை ஓட்டிக்கொண்டிருந்தான்.
ஆயுஸ் உடைவாளேந்தி தந்தையின் கால்மாட்டில் நின்றான். ஸ்ருதாயுஸ், சத்யாயுஸ் இருவரும் அவனுக்கு இருபக்கமும் வாளேந்தி நிற்க பின்னால் இரு சேடியரின் ஆடைகளைப் பற்றியபடி விஜயனும் ரயனும் நின்றனர். ஜயனை ஒரு முதுசேடி இடையில் வைத்திருந்தாள். குலச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன. அரசனின் ஏழு மூத்தவர்களின் சிதைக்குழிகளில் வைக்கப்பட்ட நீர் அவன் மேல் தெளிக்கப்பட்டது. பன்னிரு குலங்களின் சார்பிலும் பட்டுகள் போர்த்தப்பட்டன. பன்னிரு குடிகளைச் சேர்ந்த பன்னிரு மூதன்னையர் அவனை தங்கள் மகன் என கொண்டு பாலூற்றி வணங்கினர். பன்னிரு குடியின் பன்னிரு சிறுவர் அவனை தம் தந்தையென எண்ணி நீரூற்றி கால்கழுவி வணங்கினர்.
பின்னர் வைதிகர்கள் அவன் உடலை கங்கைநீரூற்றி தூய்மை செய்தனர். வேதச்சொல் சூழ அவனை வாழ்த்தி விண்ணேற்றம் கொடுத்தனர். குடிமூத்தார் கிளம்புக என ஆணையிட்டதும் குரவையொலியும் வாழ்த்தொலியும் சூழ அவன் உடலை பசுமூங்கில் பின்னிக்கட்டி மலர் அணிசெய்த பாடை மேல் ஏற்றிவைத்தனர். முரசுகள் முழங்கின. கொம்புகளும் குழல்களும் சங்கும் மணியும் இணைந்துகொண்டன.
அரசனின் உடல் அரசகுடியின் இடுகாடு நோக்கி கொண்டு செல்லப்பட்டது. வேதமோதிய அந்தணர் குழு முன்னால் செல்ல இசைச்சூதர்கள் இசையுடன் தொடர்ந்தனர். வாழ்த்தொலிகளுடன் அவன் குடிநிரைகள் பின்னால் சென்றனர். அவன் மணந்த தேவியர் மங்கலக்குறி களைந்து மரவுரி அணிந்து விரிந்த தலையுடன் நெஞ்சை அறைந்து அழுதபடி அரண்மனை முற்றத்தின் எல்லைவரை வந்து அங்கு விழுந்து மயங்கினர். அரண்மனைப்பெண்டிர் கண்ணுக்குத்தெரியா வரம்பால் கட்டப்பட்ட கடல் அலைகளைப்போல முற்றத்திற்குள் நெஞ்சறைந்தும் தலையறைந்தும் அலறியும் விழுந்து அழுதுநின்றனர்.
ஆயுஸும் மைந்தர் ஐவரும் இருபுறமும் பாடையை தொடர்ந்தனர். சந்திரகுலத்தின் பதினெட்டு பெருங்குடிகளைச் சேர்ந்தவர்கள் பாடையை தூக்கிச் சென்றனர். போரில் விழுந்த அரசனை முரசொலிக்க கொம்பும் குழலும் துணைக்க வேலும் வாளும் ஏந்திய படைவீரர்கள் களநடனமிட்டு முன்செல்ல தெற்கு நோக்கி கொண்டு செல்வது குருநகரியின் வழக்கம். நோயுற்று முதிர்ந்த அரசனின் இறப்பை குல மூத்தார் பன்னிருவர் முன்னால் சென்று சங்கூதி மூதாதையருக்கு அறிவித்துக்கொண்டு செல்ல ஆண்கள் கழியேந்தி வேட்டைநடனமிட்டுக்கொண்டு செல்வார்கள். இளமையில் நோயுற்று இறந்த புரூரவஸை சிதை நோக்கி கொண்டுசெல்கையில் ஒவ்வொருவரிடமும் துயரும் அமைதியுமே விளைந்தது.
குருநகரியின் குறுங்கோட்டையின் தெற்கு வாயிலினூடாக பாடை சுமந்து சென்ற பெருநிரை அப்பால் கடந்து அங்கு விரிந்திருந்த இடுகாடுகளை அணுகியது. நெருஞ்சியும் ஆவாரையும் கொடுவேலியும் எருக்கும் மண்டியிருந்த அப்பாழ்வெளியில் அன்றுதான் வழிசெதுக்கப்பட்டிருந்தது. அந்தப் புதுமண்ணில் மண்புழு நெளியும் கதுப்பில் காலடிகள் மேலும் மேலுமென பதிந்து சென்றன. இருமருங்கும் செறிந்த மரங்களிலிருந்து பறவைகள் கலைந்து எழுந்து வானில் சுழன்றொலித்தன.
அரசர்களுக்குரிய இடுகாடு தென்மேற்கே எழுந்த நடுகற்கள் மலிந்த குன்றொன்றின் அடிவாரத்தில் அமைந்திருந்தது. அங்கு ஓடிய சிற்றாறு பூர்வமாலிகா என்றழைக்கப்பட்டது. அதன் கரையில் மண்குழைத்து இடையளவு உயரத்தில் அமைக்கப்பட்ட மேடையில் சந்தனக்கட்டைகளால் ஆன சிதை ஒருக்கப்பட்டிருந்தது. நெய்யும் தேன்மெழுகும் கொம்பரக்கும் ஒருபுறம் கடவங்களில் காத்திருந்தன. குங்கிலியமும் குந்திரிக்கமும் ஜவ்வாதும் புனுகும் கோரோஜனையும் பிற நறுமணப்பொருட்களும் மறுபால் வைக்கப்பட்டிருந்தன. பதினெட்டு மலர்க்கூடைகளில் ஏழுவகை மலர்கள் நீர் தெளித்து வாடாது பேணப்பட்டிருந்தன.
இடுகாட்டுத் தலைவன் தொலைவில் எழுந்த ஓசையைக் கேட்டதும் கைகாட்ட வெட்டியான்கள் எழுவர் எழுந்து தங்கள் வெண்சங்குகளை ஊதினர். அவர்களின் கலப்பறைகள் ஒலிக்கலாயின. மரங்கள் நடுவே வண்ணங்கள் ஒழுகி ஆறென வருவதுபோல அந்த அசைவுநிரை தெரிந்தது. இடுகாடு ஒருக்க அமைக்கப்பட்டிருந்த சிற்றமைச்சர் வேர்வை வழியும் வெற்றுடலுடன் ஆணைகளை இட்டபடி அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தார்.
இடுகாட்டை அணுகிய வைதிகர்கள் வெளியிலேயே நின்று பொற்குடங்களிலிருந்த நீரை மாவிலைகளில் அள்ளி அரசன் செல்லும் பாதையில் தெளித்து வேதம்பாடி தூய்மைப்படுத்தியபின் வேதமோதியபடியே சென்று பூர்வமாலிகாவில் இறங்கி மூழ்கி மறுபுறம் கரையேறி ஈர ஆடையும் குழலுமாக தங்களை தூய்மைப்படுத்தும் வேதச்சொற்களை உரைத்தபடி அவ்வழியே சென்று மறைந்தனர். குலமூத்தார் முன்னால் சென்று அரசனின் பாடையை இறக்கி வைத்தனர்.
அதுவரை இயல்பாக நடந்து வந்த பலரும் உளம் தளர்ந்துவிட்டிருந்தனர். எங்கோ எவரோ விசும்பும் சிற்றொலி எழுந்தபோது கட்டுகள் அவிழ்ந்து அனைவருமே அழத்தொடங்கினர். சற்று நேரத்தில் அம்மானுடநிரையின் இறுதிவரை தேம்பும் ஒலி எழுந்து அவ்வெளியை சூழ்ந்தது. சிதைச்சடங்குகள் ஒவ்வொன்றாக முடிந்ததும் குலமூத்தார் அரசன் படுக்கவைக்கப்பட்டிருந்த பட்டின் நான்கு முனையையும் பற்றி மெல்ல தூக்கிக்கொண்டு சென்று சிதைமேல் வைத்தனர். அவன் உடம்புக்கு மேல் மெல்லிய சந்தனப்பட்டைகள் அடுக்கப்பட்டன. சுற்றிலும் நெய்யும் அரக்கும் தேன்மெழுகும் ஊற்றப்பட்டது.
அரக்கிலேயே எரிமணம் உறைந்திருந்தது. எரியின் குருதி அது என சூதர்சொல் என்பதை ஆயுஸ் நினைவுகூர்ந்தான். அவன் உள்ளம் விழவு ஓய்ந்த களமென உதிரி வீண்சொற்கள் சிதறிக்கிடக்க வெறித்திருந்தது. வெற்றுவிழிகளுடன் அனைத்தையும் பார்த்தான். பிறிதெங்கோ இருந்துகொண்டும் இருந்தான். அங்கே வாளேந்தி நிற்கவேண்டியவன் ஜாதவேதஸ் அல்லவா என நினைத்தான். ஆனால் வேதத்துறவு கொண்ட அவனுக்கு குருதியும் குலமும் குடியும் இல்லமும் ஏதுமில்லை. அதை எண்ணி அவனுக்காக அவன் பலமுறை வருந்தியதுண்டு. அப்போது அவன் பறவை என்றும் தான் புழு என்றும் தோன்றியது.
“அரசமைந்தர் எழுக…! எரிசெயல் ஆகுக!” என்றார் ஈமச்சடங்குகளை நடத்திய முதுவெட்டியான். ஆயுஸ் சென்று அரசநாவிதன் முன் அமர்ந்தான். அவன் கந்தகம் கலந்த நீரில் கைமுக்கி அவன் குழல்கற்றையை ஈரமாக்கி கூர்கத்தியால் மழித்து முடித்தான். முடி காகச்சிறகுகள் போல அவன் மடியிலும் தரையிலும் விழுந்தது. எவருக்கோ அவை நிகழ்வதுபோல அவன் எண்ணினான். கிண்ணத்தில் இருந்து மலரால் கந்தகநீர் தொட்டு அவன் தலையில் தெளித்து “அவ்வாறே ஆகுக!” என்றான் நாவிதன். அவனுக்கு ஏழு பொன்நாணயங்களை காணிக்கையாகக் கொடுத்துவிட்டு கைகூப்பியபடி ஆயுஸ் எழுந்தான்.
அவன் உடன்பிறந்தார் இருவரும் இருபுறமும் உடைவாள் கொண்டு தொடர்ந்தனர். சிறுவர்கள் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி தங்களை ஏவிய முதுஏவலர்களின் சொல்லுக்கு ஏற்ப நடந்தனர். முதிய ஏவலர் ஒருவரின் இடையில் அமர்ந்து வாயில் சுட்டுவிரல் இட்டபடி வந்த ஜயன் அங்கு நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தான். வரும் வழியில் ஓசையை அஞ்சி அழுது காலுதறித் துடித்து பின்பு சற்று துயின்று எழுந்த அவன் முகத்தில் கண்ணீரின் இரு கோடுகள் உப்பெனப் படிந்திருந்தன. மீண்டும் ததும்பிய கண்ணீர் இமைகளிலும் விழிப்படலங்களிலும் சிதறி இருந்தது.
“நற்பொழுது” என்றார் குலமூத்தார் ஒருவர். பிறிதொருவர் கைதூக்க முழவுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் இணைந்து ஆர்த்தன. புரூரவஸின் புகழ் பாடி சூதர்கள் இசைக்குரல் பெருக்கினர். குடிகள் அழுகையோசை கொண்டன. இடறிய குரலில் வாழ்த்தொலிகளும் கலந்தெழுந்தன. “சந்திரகுல மூதாதை வாழ்க! குருநகரி ஆண்ட பேரரசன் வாழ்க! அறச்செல்வன் வாழ்க! வெல்லற்கரிய பெரும்புயத்தான் வாழ்க!” என ஓசையிட்டனர் மக்கள்.
ஆயுஸின் கையில் மூன்று உறவுமைந்தர் கொண்டுவந்த எரிகுட உறியை அளித்தனர். அனல் பெருக்கப்பட்ட அக்கலத்தை ஏந்தியபடி சிதையை மும்முறை சுற்றிவந்து அவன் தந்தையின் கால்களில் மலரிட்டு வணங்கினான். மைந்தர் நால்வரும் மும்முறை சுற்றி வந்து கைமலர்த்தி மலரிட்டு வணங்கினர். ஜயனை ஏந்திய முதுஏவலர் அவனை தந்தையின் காலடியில் மெல்ல இறக்கி மலரள்ளி அவன் கையில் கொடுத்து போடும்படி சொன்னார். நாற்புறமும் சூழநின்றவர்களை விரிவிழிகளால் திகைத்து நோக்கியபடி கையை உதறிவிட்டு திரும்பி ஏவலன் தோளை கட்டிக்கொண்டான் ஜயன்.
அரசருக்கு அணுக்கர்களும் குருதிஉறவு கொண்டவர்களும் குல மூத்தாரும் சுற்றி வந்து மலர் தொட்டு எடுத்து அடிபணிந்து சென்னிசூடி வணங்கி விலகியமைந்தனர். “எரியூட்டுக!” என்றார் முதுகுலத்தலைவர். அதுவரை இறுகிய முகம் பூண்டிருந்த ஆயுஸ் விம்மி அழத்தொடங்கினான். “அரசே, அரசர்கள் அழலாகாது” என்று மெல்ல சொன்ன குலத்தலைவர் “எரியூட்டுக!” என்றார்.
ஆயுஸின் கைகள் அவன் உள்ளத்தை அறியாததுபோல குளிர்ந்திருந்தன. “எரியூட்டுக, அரசே!” என்று மீண்டும் சொன்னார் குலமூத்தவர் ஒருவர். அவன் விம்மி அழுதபடி ஒரு அடி பின்னெடுத்து வைத்தான். “இது தாங்கள் கொண்ட பேறு. அவருக்கு தாங்கள் அளிக்கும் இறுதிக் கொடை. மைந்தனென தங்கள் கடன்” என்றார் குலமூத்தார். “இல்லை! இல்லை!” என்றபின் மீண்டு விலக பிறிதொருவர் அவன் தோளைப்பற்றி “முறை செய்க, அரசே!” என்றார்.
இரு குலமூதாதையர் அவன் இரு கைகளையும் பற்றி அக்கைகளில் இருந்த அனல்குடத்தை சிதையின் காலடியில் இருந்த நெய்நனைவின்மேல் வைத்தனர். திப் என்னும் ஒலியுடன் நீலச்சுடர் பற்றி எரிந்து மேலேறியது. பசு நீர் அருந்தும் ஓசை எழ செந்நிற நீர்போல் நெய்பட்ட இடமெல்லாம் வழிந்து பரவி மலரிதழ்கள்போல் கொழுந்தாடி எழுந்தது எரி.
அக்கணம் சிதையில் இருந்த புரூரவஸின் உடல் மெல்ல எழுந்தமைந்தது. விறகு விரிசலிடுவது என்னும் ஐயமெழுப்பும்படி மெல்லிய முனகலொன்று அவன் நெஞ்சிலெழுந்தது. அதை ஆயுஸ் மட்டுமே கேட்டான். உடல்துடிக்க “நிறுத்துக! எந்தை இறக்கவில்லை! எந்தை இறக்கவில்லை!” என்று கூவியபடி நெருப்பின் மேல் பாய்ந்து சிதைமேல் தவழ்ந்து ஏறி புரூரவஸின் இரு கால்களையும் பற்றி இழுத்து சிதையிலிருந்து புரட்டி தரையிலிட்டான்.
நிலத்தில் கவிழ்ந்து விழுந்த புரூரவஸின் உடல் மீண்டும் ஒரு முறை துடித்தது. அந்த வலியை உணர்ந்து முனகியபடி இடக்கையை சற்றே ஊன்றி தலைதூக்கி வாய்திறந்து அவன் முனகினான். “அரசர் இறக்கவில்லை! அரசர் இறக்கவில்லை!” என்று முன்நிரையோர் கூவினர். என்ன ஏதென்று அறியாமல் பின்னிரையோர் பின்னால் திரும்பி ஓடினர். சிலர் கூச்சலிட்டபடி சிதை நோக்கி வர காவலர்கள் ஈட்டிகளும் வேல்களும் ஏந்தி வேலியாகக் கட்டி அவர்களை மறித்து நிறுத்தினர். கூச்சல்களும் ஓலங்களும் அலறல்களும் அங்கே நிறைந்தன.
“கழுவேற்றுங்கள்! அம்மருத்துவர்களை கழுவேற்றுங்கள்!” என்று யாரோ கூவினார்கள். “கிழித்தெறியுங்கள்! அவர்களின் குலங்களை எரியூட்டுங்கள்!” என்று வேறொரு குரல் எழுந்தது. “ஆம்! ஆம்… கொல்க… கொல்க!” என கூட்டம் கொந்தளித்தது. விலகியோடியவர்கள் திரும்பவந்து கூடினர். கூட்டம் அலைக்கொந்தளிப்பு கொண்டு ஆரவரித்தது.
தீப்புண் பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் குடத்திலிருந்த குளிர்நீரை கொண்டுவந்து புரூரவஸின் மேல் கொட்டினார் குலமூதாதை ஒருவர். சத்யாயுஸும் ஸ்ருதாயுஸும் தந்தையின் உடலை பற்றிக்கொண்டு “எந்தையே! எந்தையே!” என்றனர். விஜயனும் ரயனும் ஏவலர் உடல்களில் முகம் புதைத்தனர். ஜயன் விழித்து நோக்கி திரும்பி ஒரு காகத்தை முகம் மலர்ந்து சுட்டிக்காட்டினான்.
புரூரவஸின் உதடுகள் வெயில் பட்ட புழுக்களென நெளிந்தன. “நீர் கொண்டுவாருங்கள்! இன்நீர் கொண்டுவாருங்கள்!” என்றனர் சிலர். ஒருவர் கொண்டுவந்த குளிர்நீரை மூன்று முறை உதடு நனைந்து வழிய உறிஞ்சிக்குடித்ததும் புரூரவஸ் கண் விழித்தான். “எங்கிருக்கிறேன்?” என்றான். அவன் உதடசைவால் அதை உணர்ந்தாலும் என்ன சொல்வதென்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் மறுமொழி சொல்வதற்குள் அவனே புரிந்துகொண்டு “இடுகாடா?” என்றான்.
ஆயுஸ் அஞ்சி பின்னடைந்தான். குலமூத்தார் ஒருவர் “அரசே, தாங்கள் இறந்து மீண்டிருக்கிறீர்கள்” என்றார். “ஆம், நான் அங்கு சென்று அவளைக் கண்டேன். மீளும்படி அவள் சொன்னாள்” என்றான். பின்னர் தெளிவுற அனைத்தையும் உணர்ந்தவனாக இரு கைகளையும் ஊன்றி உடலை மெல்ல மேலே தூக்கி “நிமித்திகர்களோ மருத்துவர்களோ அவர்களின் குடிகளோ எவ்வகையிலும் தண்டிக்கப்படலாகாது. இது அரசாணை!” என்றான்.
அருகே நின்ற அமைச்சர் “ஆணை, அரசே!” என்றார். திரும்பி துணைஅமைச்சர்களை நோக்கி ஓடிச்சென்று “இது அரசாணை! நிமித்திகர்களோ மருத்துவர்களோ பிறரோ எவ்வகையிலும் தீங்கிழைக்கப்படலாகாது. முரசறைந்து அறிவியுங்கள்!” என்றார். அவர்கள் கைகளை வீசியபடி ஓடினர். எவரோ ஒருவர் “பேரறத்தார் எங்கள் அரசர் வெல்க! நீணாள் வாழ்க சந்திரன் பேர்மைந்தர்!” என்று கூவ கூட்டம் வாழ்த்தொலியால் கொந்தளித்தது.
புரூரவஸ் மீண்டும் விழிகளை மூடியபின் “இனி நான் மீண்டெழுவேன்… ஆம்…” என்றான். “ஆம் தந்தையே, தாங்கள் மீண்டெழுவீர்கள். நூறாண்டுகாலம் வாழ்வீர்கள்” என்று ஆயுஸ் சொன்னான். அப்போதுதான் அவன் கால்களும் கைகளும் எரி நெய்யால் தசையுருகி வழிந்துகொண்டிருப்பதை அமைச்சர்கள் கண்டனர். “இளவரசரை மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் உடனே! வழிவிடுங்கள்!” என்றனர். “ஒன்றுமில்லை… நான் மீண்டுவிடுவேன்” என்றான் ஆயுஸ் முகம் மலர்ந்திருக்க, விழிநீர் வழிய.
“இளவரசரை அழைத்துச் செல்லுங்கள்” என்று குலமூத்தார் கூவினர். வெண்பட்டொன்றை விரித்து அதில் படுக்கவைத்து ஆயுஸை தலைக்கு மேல் தூக்கிச்சென்றனர். அவனுக்குப் பின்னால் புரூரவஸையும் ஏவலர் கொண்டுசென்றனர். “அறம் இறப்பதில்லை. தன் சிதையிலிருந்தும் முளைத்தெழும் ஆற்றல் கொண்டது அது” என்று ஒரு புலவர் தன் இரு கைகளையும் விரித்து கூவினார். “அறச்செல்வர் வாழ்க! சந்திரகுலத்து முதல் மன்னன் வாழ்க!” என்று குருநகர் குடிகள் எழுப்பிய வாழ்த்தொலிகளால் இடுகாட்டுவெளியின் அனைத்து இலைகளும் அதிர்ந்தன. அவ்வோசைகளின் மேல் மிதந்து செல்வதுபோல் இருவரும் ஒழுகி அகன்று சென்றனர்.