நெடுஞ்சாலை புத்தர் -கடிதங்கள்

wed

அன்புள்ள ஜெ.

 

அந்த மின்னூலை (நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்) நண்பர் ஸ்ரீனிவாச கோபாலன் தான் பதிவேற்றம் செய்திருக்கிறார். எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத்தில் அச்சில் இல்லாத பல நல்ல புத்தகங்கள் புத்தகங்கள் கிடைக்கும். அப்படிக்கிடைத்து நாங்கள் வாசித்து சிலிர்த்த தொகுப்புகளில் அதுவும் ஒன்று. பிடித்த கவிதைகளை எல்லாம் புகைபபடம் எடுக்கப்போய் கடைசியில் முழுப் புத்தகத்தையும் எடுத்துவிட்டார். அதுவே இப்போது மின்னூலாக வந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல ஒரு புத்தகம் அச்சில் இருக்கும்பொழுது ஆசிரியர் பதிப்பாளர் அனுமதியின்றி மின்னூல் பதிவேற்றுவது தவறு தான். அப்புத்தகம் மீண்டும் அச்சில் வந்தால்  மின்னூலை நீக்கிவிடுவார் என்றே நம்புகிறேன்.

 

யமுனைச்செல்வன்

திருநெல்வேலி.

 

 

வணக்கம்.

 

:-)

 

‘நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்’ நூலை PDF வடிவில் விட்டது நான் தான். அண்ணன் யமுனை செல்வன் வழி அறிமுகமான நூல் அது. இந்த மின்னூலை பரவச்செய்ததே அவர்தான். நாங்கள் இருவரும் ஒருசேர கொண்டாடும் கவிதை நூல்களில் ஒன்று. அதன் முன்னுரை பற்றி அண்ணன் குறிப்பிட்டுச் சொன்னார். அதன் பின் நானும் படித்தேன். மிகச்சிறந்த தேர்வு. அந்த முன்னுரை எனக்கு ஒரு கவிதையை நினைவுறுத்தியது.

 

கூச்சல் தன் எதிரொலிகளைக்

கேட்க முனைந்து மவுனமாகியது

ஏற்கனவே இருந்த மவுனம்

தன் உள் ஒலிகள் மேல் கவனம்கொண்டு

மேலும் செறிந்தது.

 

– தேவதேவன்

 

மின்னூலை இணையத்திலிருந்து அழிக்க வேண்டுமானால் உடனே செய்கிறேன்.

 

மேலும். அச்சில் இல்லாத பல ‘அரிய’ நூல்கள் மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் அகப்படும். நண்பர்கள் பரிந்துரைக்கும் நூல்கள் அங்கே பெரும்பாலும் கிடைத்தன. பல்கலைக்கழகத்தில் படித்த ஈராண்டு காலம் வாசிப்பின் பொற்காலம் என்று சொல்லிக்கொள்ளலாம். அச்சில் இல்லாத நூல்கள் பல அங்கு சீண்டுவார் இல்லாமல் புதிதாக இருக்கும். தேவதேவன் கவிதைகள் பெருந்தொகுதி அப்படி புதிதாகவே கிடைத்தது. யவனிகா ஸ்ரீராமின் முதல் கவிதைத் தொகுப்பு (‘இரவு என்பது உறங்க அல்ல’?) அவரிடமே இல்லை என்று ந.முருகேசபாண்டியன் ஒரு கட்டுரையில் குறிப்பட்டிருக்கிறார். அத்தொகுப்பு இருக்கிறது அங்கே. தொ.ப.வின் முனைவர் பட்ட ஆய்வு நூல் ‘அழகர் கோயில்’ பல்கலைக்கழகப் பதிப்பு இருக்கிறது. கணக்கதிகாரம் என்ற பழைய கணித நூலுக்கு தஞ்சாவூர் பெண்மணி ஒருவர் எழுதிய உரை இருக்கிறது. பல எழுத்தாளர்களின் முதல் நூலின் முதல் பதிப்பு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் அங்கே கிடைக்கும். பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்யவோ முழுத்தொகுப்பு வெளியிடவோ உதவும். நூலகப் பணியாளர்களுக்கு இதெல்லாம் தெரியாது. விஷ்ணுபுரத்தை ஆன்மீக நூல்கள் வரிசையில் சேர்க்கத்தான் தெரியும்.

 

நன்றி.

 

ஸ்ரீனிவாசகோபாலன்

 

அன்புள்ள யமுனை, ஸ்ரீனிவாசகோபாலன்

 

அதை வலையேற்றம் செய்ததில் பிழையில்லை. அதை மேலும் பலர் வாசிக்கமுடியுமே. கவிதைகள் மறுபதிப்பு வருவதெல்லாம் மிக அரிதானது. அதை பலர் வாசிக்கட்டும் என்றுதான் இணைப்பை அளித்தேன்

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21
அடுத்த கட்டுரைஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017