உதிர்சருகின் முழுமை

கவிஞர் தேவதேவன்

கவிதை என்பது என்ன என்பதற்கு மிகமிகச்சுருக்கமான ஒரு மறுமொழி கவிஞனால் எழுதப்படுவதுஅதை தேவதேவன் பலமுறை மேற்கோள் காட்டியிருக்கிறார். கவிதை எழுதுவதன் ஆரம்பநாட்களில் கவிஞர்கள் பலவகையிலும் உந்தி எழ முயல்கிறார்கள். படிமங்கள், வடிவங்கள், மொழியாடல்கள். ஒரு நல்ல அணி அமைந்தால் இதோ நான் எனக் குதூகலிக்கிறார்கள். ஒரு சரியான வடிவம் எழுந்தால் தெய்வவருகை என தருக்கி எழுகிறார்கள்.

பின்னர் ஒரு கட்டத்தில் கவிதை அவர்களுக்கு முச்சென ஆகிறது. ஆனால் பிற அனைத்தையும் அதன்பொருட்டு அவர்கள் தியாகம் செய்தாகவேண்டும். அந்தப்பறவை மிகமிகக்கூச்சம் கொண்டது. அந்தத்தெய்வம் தலையைப் பலிகேட்பது. அது அவனை தன் ஊர்தி எனக்கொண்டால் அவன் எழுதினால்போதும். எழுதாமலிருக்கவும் அவனால் இயலாது.

ஒரு கட்டத்தில் கவிஞர்கள் கவிதைக்கென கருவைக்கூட கொண்டிருப்பதில்லை. வெறும் கூற்றுக்களே கவிதையாகின்றன. பலசமயம் தனிக்கவிதையாக அவை வடிவமோ மையமோ அற்ற வெற்று அறிவிப்புகளாகத் தெரிகின்றன. ஆனால் அக்கவிஞனை முழுமையாக அறிய அவை முக்கியமானவை. அவன் எழுதிய அனைத்தையும் மொத்தமாக ஒரு காவியம் எனக்கொண்டால் அவை தங்கள் இடத்தை முழுமைசெய்வதைக் காணலாம்.

சென்ற பல ஆண்டுகளாக தேவதேவன் எழுதுவதெல்லாம் வெறும் தன்வெளிப்பாடுகள். அவருடைய சிறிய உலகில், அவருடைய இல்லத்தைச் சூழ்ந்து வெளிப்படும் இயற்கையும் சில மனிதர்களும் மட்டுமே. அபூர்வ நிகழ்வுகள் என ஏதுமில்லை. அரிய அவதானிப்புகள் இல்லை. கருத்துக்களோ மலைகளைப் போலத் தொன்மையானவை. பெரும்பாலான கவிதைகள் தேவதேவன் என்னும் மையத்தால் தொகுக்கப்பட்ட வரிகள். அவருடைய குரல் என்றிருப்பதனாலேயே அவை கவிதைகள்

எல்லாம் எவ்வளவு அருமை!

நுரைத்துவரும் சிற்றலைபோல

வரிசையாய் நாலைந்து சிறுவர்கள்

ஒருபெண்

எடையில்லாமல் நடந்து போய்க்கொண்டிருந்தாள்

ஒரு காரணமும் இல்லாமல்

தளிர்பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்தது

கொன்றை

ஒரு துரும்பும் நோகாதபடி

உலவிக்கொண்டிருந்தது காற்று

பழுத்தும் விழாது ஒட்டிக்கொண்டிருக்கும்

இலைகள் தான் தொட்டதனால்தான்

உதிந்ததென்றிருக்கக் கூடாதென்ற

எச்சரிக்கை நேர்ந்து

அப்படி ஒரு மென்மையை

அடைந்திருந்தது காற்று

மீறி விதிவசமாய் உதிந்த இலை ஒன்றை

தன் சுற்றமமைத்துக்கும் குரல்கொடுத்து

குழுமி நின்று

தாங்கித் தாங்கித் தாங்கித்

அப்படி ஒரு கவனத்துடன் காதலுடன்

மெல்ல மெல்ல மெல்ல

பூமியில் கொண்டு சேர்த்தது

தேவதேவனின் உலகம் துயரற்றது. துயரென்றால் அது முடிவிலிமுன் நின்றிருப்பதன் பெருந்துயர் மட்டுமே. நவீனக் கவிதை என்பதே அன்றாடவாழ்வின் இருண்மையின் , கசப்பின், வெறுமையின் பதிவு என்றிருக்கும் சூழலில் தேவதேவனை தனித்து நிறுத்துவது இந்த இனிமை. இருத்தலின் கொண்டாட்டம் என அவர் கவிதைகளைச் சொல்லலாம். அவற்றின் குழந்தைத்தன்மை கனிந்து முதிர்வதன் விளைவாக எழுவது. அனேகமாக வாசகர்களே இல்லாத ஒருவெளியில் நின்றுகொண்டு தனக்கே என இவற்றை அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

ஒன்றும் நிகழாத ஒரு பொழுது . ஒன்றும் நிகழாதபோது அனைத்தும் முழுமையில் இருக்கின்றன. முற்றிலும் சமன் கொண்டிருக்கின்றன. சமநிலையின் தாளம் தாலாட்டுபோல நடனம்போல வெளிப்படுகிறது. பார்ப்பவன் கொள்வதற்கென எதையும் தனித்துக்கொடுக்கவில்லை வெளி. தன்னையே முன்வைக்கிறது. மிகமிக மெல்ல மண்ணில் பதியும் அந்த சருகு அந்த பெருவெளியில் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறது. தெய்வத்தால் கையில் ஏந்தப்பட்ட சருகு

அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது. கவிதைகள். தேவதேவன் நியூ செஞ்சுரி பதிப்பகம் சென்னை

*

தேவதேவன் கவிதைகள் பற்றி -சத்யானந்தன்

கவிதையின் அரசியல் தேவதேவன்

தேவதேவன் ஒரு பேட்டி

மார்கழியில் தேவதேவன்

நல்முத்து

முந்தைய கட்டுரைவான் வருவான்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–21