வெ.சா-ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல்

1. எழுச்சிகளைப் பின் தொடர்ந்தவர்

இலக்கியம் கற்பனாவாதம் நோக்கி நகரும்போது இலக்கிய விமரிசனம் அதன் பேசுபொருளைத்தன் அளவுகோலாகக் கொள்கிறது; செவ்வியல் தன்மை கொள்ளும்போது இலக்கிய விமரிசனம் வடிவ இலக்கணமாக மாற்றம் கொள்கிறது. பொதுமைப்படுத்தும் வரியாக இது இருக்கக் கூடும். ஆனால் இதன் மூலம் இலக்கிய விமரிசனத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவை வரையறை செய்துகொள்ள நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது.

தமிழின் நெடுங்காலச் செவ்வியல் பாரம்பரியத்தில் நமக்கு இன்றைய அளவுகோலின்படி இலக்கிய விமரிசனம் என்பதே இருக்கவில்லை. இலக்கணமே இருந்தது. அந்த இலக்கணம் பேசுபொருளை வடிவத்தின் ஒரு பகுதியாக வரையறை செய்து வைத்திருந்தது. உரிப்பொருள், முதற்பொருள் இரண்டும் வடிவத்தின் கூறுகள் மட்டுமே. இலக்கணமே இலக்கியத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக நமக்குப் பயன்பட்டிருக்கிறது.

பேசுபொருள் நமக்கு முதன்மைப்பட்டது நமது கற்பனாவாதக் காலகட்டமாகிய பக்தியுகத்தில்தான். பக்தியுகத்தின் பாடல்களை நாம் இலக்கணம் சார்ந்த ஆய்வுக்கு உள்ளாக்கவே இல்லை. அவற்றின் ஆன்மீக தத்துவ உள்ளடக்கம் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். பக்தி இயக்கமே விசிஷ்டாத்வைத வைணவ தத்துவத்தையும், சைவ சித்தந்தத்தையும் உருவாக்கியது. அப்பாடல்கள் அந்த தத்துவங்களின் வெளிச்சத்திலேயே ஆராயப்பட்டன.

பண்டைய இலக்கியம் குறித்த விவாதங்களில் உள்ளடக்கம் ஒரு பொருட்டாகவே எண்ணப்படவில்லை. சிறப்பான கட்டமைப்பு கொண்ட பாடல் சிறந்தது என்ற எண்ணம் நிலவியது. இதனால்தான் என்ன காரணத்தால் கவிதை என கருதப்பட்டது என்றே தெரியாத பல பாடல்களும் நம் செவ்வியல் கவிதைகளின் பட்டியலில் அமர்ந்துள்ளன. அதே போல பக்திக் கவிதைகளில் எவ்விதமான இலக்கிய நயமும் இல்லாத வெறும் தத்துவ வரிகள் கவிதையுடன் சமமான இருக்கை பெற்றுள்ளன.

இலக்கிய விமர்சனம் என்று நாம் இன்று கூறும் எழுத்துமுறை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், ‘பிரான்ஸிலும், இங்கிலாந்திலும் உருவாகியது. தத்துவ, அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதும்அதே நடையில் இலக்கியம் சார்ந்த கருத்துக்களையும் எழுதும் முறையே இலக்கிய விமர்சனத்திற்கான அடிப்படையை அமைத்தது. ஆகவே தருக்கம் இலக்கிய விமரிசனத்தின் மையக்குணமாக அமைந்தது. ஆரம்பகாலத்தில் இலக்கிய விமரிசகர்களில் பலர் கவிஞர்கள். இருந்தும் கவிதைக்குரிய கருவிகள் இலக்கிய விமரிசனத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை. அது முறையற்றதாகக் கருதப்பட்டது. இலக்கிய விமரிசனத்தை அது தெளிவற்றதாக ஆக்கும் என்று கூறப்பட்டது. நெடுங்காலம் இந்த விதி புழக்கத்தில் இருந்தது. கவிஞரான டி.எஸ்.எலியட்டின் திறனாய்வுகளில் கருத்துருவகம் (அலிகரி) உண்டே ஒழிய கவித்துவமான மொழி எழுச்சிகள் இருப்பதில்லை. அதையே தமிழில் இலக்கிய விமரிசனங்களை எழுதிய சுந்தரராமசாமியைக் குறித்தும் கூறலாம். கறாராக எழுத வேண்டும் என்றே அவர்கள் விரும்பினார்கள். வரையறுத்துக் கூறவேண்டும் என்று முயன்றார்கள், கவித்துவம் அதற்கு எதிரானது என்றார்கள்.

பின்நவினத்துவ எழுத்து முறைகள் மேலை நாட்டில் உருவாகி வந்த பின்னர்தான் கவித்துவத்தின் சாத்தியங்களை ஆய்வுக்கட்டுரைகளுக்குள்ளும் கையாள ஆரம்பித்தார்கள். பார்த், தெரிதா இருவருமே கவித்துவத்தைக் கையாண்டவர்கள் என்றாலும் ழாக் லக்கான்தான் இலக்கியத்திற்குரிய மொழி மயக்கத்தை ஆய்வுக்குரிய சிறப்பான கருவியாகப் பயன்படுத்திய முன்னோடி. அதன் பின்னரே இலக்கிய விமரிசனத்தில் கவித்துவம் ஓர் உபகரணம் என்ற நிலை உருவாகியது. மலையாளத்தில் சிறப்பான உதாரணமாகக் கூறத்தக்கவர் கல்பற்றா நாராயணன். படிமங்கள் வழியாகவே விரிந்து செல்லும் ஒர் இலக்கிய விமரிசன முறையை அவர் பலத்த எதிர்ப்புகள் நடுவே உருவாக்கிக் கொண்டார். தமிழில் அப்படி ஒரு முயற்சி செய்யுமளவுக்கு கவித்துவம் உடைய பின் நவீனத்துவ திறனாய்வாளர் எவருக்கும் இருக்கவில்லை.

இந்தக் கறாரான ஆய்வுத்தன்மை காரணமாகவே இலக்கியத்திறனாய்வு என்ற அமைப்பு ஒட்டுமொத்தமாகக் கற்பனாவாதத்திற்கு எதிராக இருந்தது. கற்பனாவாதக் கவிஞர் ஜான் கீட்ஸ் கூறியதுபோல் அது ‘வானவில்லைப் பிரித்துப் பார்த்தல்’ (unweaving the Rainbow) ஆகவே இருந்தது. ஆய்வுநோக்குக் கற்பனாவாதக் கவிதையைத் தொட்டதுமே கற்பனாவாதக் கவிதையில் எது அழகோ அது மறைந்து விடுகிறது. பிறகு எஞ்சுவது சிலவகையான உணர்ச்சிப்பெருக்குகள், உச்சப்படுத்தப்பட்ட உலகப்பார்வைகள், சமநிலையற்ற சில கருத்துக்கள் அவ்வளவுதான்.

ஆகவே இலக்கிய விமர்சனம் என்ற அறிவுத்துறை உருவானதுமே அது கற்பனவாதத்தை மெல்ல மெல்லக் கரைத்தழித்து நவீனத்துவத்தை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. காரணம் இலக்கியத்திற்குள் தர்க்கத்தை அது நிறுவியபடியே இருந்தது. அதன் விளைவாக இலக்கியத்தை அது தத்துவம் நோக்கிக் கொண்டு சென்றது. அதனூடாக நவீனத்துவத்தின் அடிப்படைகளை உருவாக்கியது. கூல்ரிட்ஜ் தொடங்கியதை எலியட் முடித்து வைத்தார் என்று காணலாம்.

இலக்கிய விமரிசனம் என்று நமக்கு எது சொல்லப்படுகிறதோ அது தன் அடிப்படைகளாக அறிவியலையே கொண்டிருக்கிறது. அது தத்துவமும் அறிவியலும் ஈன்று இலக்கியத்தின் கூட்டில் கொண்டு வந்து போட்ட குஞ்சு. இலக்கியம் அதன் வாழ்விடமும் உணவும் மட்டும்தான். அடிப்படையில் இலக்கிய விமரிசனம் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. இலக்கியத்திற்கு மாறானது. இலக்கியத்தின் அடிப்படை அலகு என்பது கற்பனையைத்தூண்டும் ஒரு படிமம். இலக்கிய விமரிசனத்தின் அடிப்படை அலகு என்பது சிந்தனையை திட்டவட்டமாக ஆக்கும் ஒரு வரையறை. ஒரே வரி இலக்கியத்தில் வருவதற்கும் இலக்கிய விமரிசனத்தில் வருவதற்கும் பெரும் வேறுபாடு உண்டு. இலக்கியத்தில் அது நம் சொந்த அனுபவத்தைத் தீண்டி எழுப்பி அதைப் பரிசீலனை செய்ய வைக்கிறது. இலக்கிய விமரிசனத்தில் அது தன்னைப் பகுத்தறியுமாறு நம்மை அறைகூவுகிறது.

மிக விரைவிலேயே பிரிட்டனில் இலக்கியம் நவீனத்துவத்தைக் கட்டமைத்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்காலத்தை இலக்கிய விமரிசனத்தின் யுகம் என்று கூடக் கூறலாம். எ·ப். ஆர்.லூயிஸ், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் முதலிய புது செவ்வியல்வாதிகள் எலியட், எஸ்ட்ரா பவுண்ட் முதலிய நவீனத்துவ முன்னோடிகள், நவீனத்துவத்தின் உச்சத்தைச் சாத்தியமாக்கிய புதுத்திறனாய்வாளர்களான (New Critics) வில்லியம் விம்சாட் போன்றவர்கள் என்று இந்த இலக்கிய விமரிசனப் பேரலையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

தமிழில் நவீன இலக்கியமும் நவீன இலக்கிய விமரிசனமும் ஏறத்தாழ சேர்ந்தே பிறந்தன என்று கூறலாம். பாரதியிடம் நவீன இலக்கியத்தின் தொடக்கம் நிகழ்ந்தது. பாரதியின் கண்ணன் பாடல்களுக்கு வ.வெ.சு. அய்யர் எழுதிய ஆய்வு முன்னரையில் நவீன இலக்கிய விமரிசனத்தின் பிறவி நிகழ்ந்தது. இலக்கிய விமரிசனம் என்ற பிரக்ஞையுடன் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு அது. இலக்கிய விமரிசனத்தின் அடிப்படைகள் கடைப்பிடிக்கப்பட்டது. வ.வெ.சு. அய்யர் கம்பனைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய இலக்கிய விமரிசனக் கட்டுரை அவரது நோக்கை இன்னும் தெளிவுபடுத்தியது.

வ.வெ.சு. அய்யருக்குப் பிறகு அவரது இலக்கிய அணுகுமுறையின் நீட்சியாக அமைந்தவர் என்று ஏ.வி.சுப்ரமணிய அய்யரைக் கூறலாம். இவ்விருவருடைய இலக்கிய விமரிசன முன்னோடிகள் கூல்ரிட்ஜ், ஜான்சன் போன்ற பிரிட்டிஷ் விமரிசகர்களே. அவர்கள் அவர்களின் சமகால கற்பனாவாத இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமரிசனம் செய்தார்கள். இலக்கியத்தைக் கூர்ந்து அவதானித்து நுண்மையான ரசனைக்குரிய விஷயங்களைத் தொட்டுக்காட்டியும், பிற இலக்கியங்களுடன் ஒப்பிட்டும் தங்கள் விமரிசனத்தை இவர்கள் நிகழ்த்தினார்கள். அதையே வ.வெ.சு. அய்யரும், ஏ.வி.சுப்ரமணிய அய்யரும் செய்வதைப் பார்க்கிறோம். வ.வெ.சு.அய்யர் கண்ணன் பாடல்களை ஆழ்வார் பாடல்களுடனும் அஷ்டபதியுடனும் ஒப்பிடுகிறார்.

ஆனால் இவ்விருவரும் உதிரியான முன்னோடி முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டார்கள். தமிழின் நவீன இலக்கிய விமரிசனம் என்பது க.நா.சுப்ரமணியத்தில் இருந்தே வேகம் பிடிக்கிறது. அவரது நண்பரும் (பகைவரும்) சமகாலத்து இலக்கிய ஆளுமையுமான சி.சு.செல்லப்பா வையும்  சேர்த்துக் கொள்ள வேண்டும். இவரும் தமிழின் இலக்கிய விமரிசன மரபின் அடித்தளங்களை நவீனத்துடன் சார்ந்து உருவாக்கினார்கள். இலக்கியப் படைப்பாளிகளாகவும் இவ்விருவரும் நவீனத்துவத்தைச் சார்ந்தவர்களே. குறிப்பாக க.நா.சு.வை தமிழ் நவீனத்துவத்தின் சிற்பி என்றே கூறிவிட முடியும்.

க.நா.சு.வின் இலக்கிய விமரிசன முறை என்பது இலக்கியப்படைப்புகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவதில் ஆரம்பிக்கிறது. இந்தப் ‘பட்டியல் விமர்சனம்’ குறித்து சமகாலத்தைய மார்க்சியர்களும் பிறகு வந்த முதிரா அமைப்பியலாளர்களும் கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருக்கிறார்கள். இத்தகைய ஒரு அணுகுமுறை ஒரு தனிநபரின் மனநிலை சார்ந்தது என்று பார்ப்பதைவிட அது தேவையாக இருந்த சூழல் என்னவாக இருக்கும். இவர்கள் தங்களுடையது என்று கூறிக்கொண்ட இலக்கிய சமூகவியல் அரசியல் கோட்பாட்டு அணுகுமுறைக்கு உகந்ததாக இருக்கும் என்று இவர்கள் எண்ணிப்பார்க்கவில்லை. வணிகக் சூழலால் கட்டமைக்கப்பட்ட கேளிக்கை எழுத்து சராசரி வாசகனின் ரசனையும் கல்வித் துறையையும் கட்டுப்படுத்தியிருந்த ஒரு காலகட்டத்தில் அதற்கு எதிரான ஒர் இலக்கிய இயக்கமாகவே க.நா.சு.தன்னுடைய இலக்கிய விமரிசனத்தை நிகழ்த்தினார். அவர் முன்வைத்தது ஒரு சில இலக்கிய ஆக்கங்களையோ, அழகில் கோட்பாடுகளையோ, அரசியல் நிலைபாடுகளையோ அல்ல. மாறாக ஒரு மாற்று இலக்கிய மரபைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். அதைத் தமிழில் அம்மரபுசார்ந்த எழுத்துக்களின் ஒரு பட்டியலாகவே அவர் சுட்டிக்காட்ட முடியும். வேறு எவ்வகையிலும் அதைச் செய்திருக்க இயலாது. அப்படி பட்டியலிடுவதென்பது  உலகமெங்கும் அன்றும் இன்றும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபும் கூட.

க.நா.சு. சுட்டிக்காட்டிய இலக்கியப் படைப்புகள் அனைத்தும் கேளிக்கையம்சம் இல்லாமல் உண்மையான தீவிரம் காரணமாக எழுதப்பட்டவை. வடிவபோதம் உடையவை; உரத்தகுரல் எழுப்பாதவை; சமூகவிமரிசனப் பாசாங்குகளைச் செய்யாமல் நேர்மையாக சமூகத்தை ஆராய முயல்பவை; மிதமான மொழிநடையும் யதார்த்தமான அணுகுமுறையும் உடையவை; இந்த எல்லைக்குள் அப்படைப்புகள் பேசும் விஷயம் முற்போக்கா பிற்போக்கா என்பது பற்றி க.நா.சு. கவலைப்படவில்லை. ஆகவேதான் அவருக்கு சமூகம் சார்ந்த பழமை நோக்குள்ள ஆர்.சண்முக சுந்தரமும், புதுமை நோக்குள்ள பூமணியும் பிடித்தமானவர்களாக ஆனார்கள். ஒழுக்க நெறிகளுக்கு அப்பாற்பட்ட ”பசித்த மானுடம்” (கரிச்சான்குஞ்சு)மும் சம்பிரதாயமான ”கேட்டவரம்” (அநுத்தமா)வும், பிடித்திருந்தன. இந்தப் பொது குணாம்சத்தையே தன் பட்டியல்கள் மூலம் க.நா.சு. வலியுறுத்தி வந்தார் என்று கூறலாம்.

இப்பட்டியல்களிலும் படைப்புகளைப் பற்றி எழுதிய அரிய சிறு கட்டுரைகளிலும் க.நா.சு. எப்போதுமே இலக்கியத்தை வடிவம் சார்ந்தே அணுகி வந்தார். அழகியல் என்பது வடிவத்தின் நேர்த்தியும் மொழியின் எழிலும்தான் அவருக்கு. பெரும்பாலும் படைப்பின் வடிவம் கச்சிதமாக வந்திருக்கிறது, மொழியும் அடக்கமாக இருக்கிறது, என்பது போன்ற கருத்துக்களையே அவர் பாராட்டாகத் தெரிவித்து வந்தார். க.நா.சு.வின் இலக்கிய அளவு கோல்கள் முழுக்க முழுக்க நவீனத்துவம் சார்ந்தவை என்பதே இதற்குக் காரணம். நவீனத்துவம் இலக்கியம் என்பது மொழியில் நிகழும் ஒரு கட்டுமானம் என்ற மதிப்பீட்டையே கொண்டிருந்தது அதன் நேர்த்தியை நோக்கியே அதன் இலட்சியங்கள் அமைந்திருந்தன.

சி.சு.செல்லப்பாவை க.நா.சு.வின் மறுபாதி என்று கூறுலாம். செல்லப்பா க.நா.சு.வின் இடைவெளிகளை நிரப்புபவர் மட்டுமே. அதைக் கடைசி காலத்தில் உணர்ந்தமையால்தான் செல்லப்பா க.நா.சு.மீது அந்த அளவுக்குக் கடுப்பைக் கொட்டினார் என்று படுகிறது. க.நா.சு.தன்னுடைய இலக்கிய விமரிசன அளவுகோல்களை கோட்பாடுகளாக முன் வைக்கவில்லை. அக்கோட்பாடுகளை படைப்பின் மீது விரித்து ஆராய்ச்சிகளைச் செய்யவும் இல்லை. க.நா.சு.விற்கு அதில் நம்பிக்கை இருக்கவில்லை. அவற்றை க.நா.சுவின் அதே கோணத்தில் செய்தவர் சு.செல்லப்பா மேலைநாட்டு இலக்கிய இயக்கங்களின் அழகியல் கோட்பாடுகளைக் கற்று அவற்றில் இருந்து தன் அளவுகோல்களை உருவாக்கித்  தமிழ் படைப்புகளை விரிவான புறவய அலசல்களுக்கு உள்ளாக்கியதே சொல்லப்பாவின் பங்களிப்பு எனலாம்.

செல்லப்பாவின் அணுகுமுறை க.நா.சு. முன்வைத்த அதே நவீனத்துவம் சார்ந்தது என்பதைக் காணலாம். இலக்கியக் கோட்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக அலசும் செல்லப்பா கற்பனாவாதத்தை முழுமையாக நிராகரித்து செவ்வியலை தழுவிக்கொள்கிறார். நவீனத்துவத்தின் அழகியல் என்பது செவ்வியல்தான் என்பதனால் அவர் இயல்பாக நவீனத்துவத்திற்கு வந்து சேர்கிறார். தமிழில் நவீனத்துவ அழகியலை நிறுவிய சிற்றிதழ் என்றால் அது சி.சு.செல்லப்பா நடத்திவந்த ‘எழுத்து’ இதழ்தான். ‘எழுத்து’ செல்லப்பாவின் நவீனத்துவத்திற்கு வலுவான வாரிசுகளை உருவாக்கியது. சுந்தர ராமசாமி, நகுலன், சி.மணி ஆகிய மூவரையும் சிறந்த உதாரணங்களாகக் கூறலாம்.

‘எழுத்து’ இதழில் விமரிசனக் கடிதங்களை எழுதியபடி தமிழிலக்கியத்திற்குள் நுழைந்தவர் வெங்கட் சாமிநாதன். சாமிநாதனின் விமரிசனப் பங்களிப்பை இந்தக் கோணத்தில்தான் நாம் விரிவாக ஆராயமுமடியும். அவர் நவீனத்துவத்தின் மடியில் பிறந்தவர். அதன் இடைவெளிகளை நிரப்ப முயன்று அதன் போதாமைகளை முன்வைத்து அதைத்தாண்டி வந்தவர். நவீனத்துவ விமரிசகர்களான க.நா.சு. செல்லப்பா இருவரிடமிருந்து வெங்கட் சாமிநாதனுக்கு உள்ள உறவும் தொலைவும் இப்படி உருவானவையே. அவர் ‘எழுத்து‘வுடன் ஆழமான உறவு கொண்டிருந்தார். அதே சமயம் அதனுடன் ஊடி விலகவும் செய்தார். கடைசிவரை செல்லப்பாவுடன் வெங்கட்சாமிநாதனுக்கு நெருக்கமான உறவிருந்தது. ஆனால் செல்லப்பாவை அவர் முழுமையாக ஒத்துக் கொள்ளவுமில்லை.

‘எழுத்து’ இதழுடன் சாமிநாதனுக்கு இருந்த உணர்வுபூர்வ ஈடுபாடு என்பது ‘எழுத்து’ இதழ் கொண்ட தனித்த பண்பாட்டு நிலைப்பாட்டை ஒத்துக் கொண்டதன் மூலம் உருவாகியது. ‘எழுத்து’ இதழை செல்லப்பா தொடங்கி நடத்திய ஐம்பதுகளில் தமிழ்பண்பாட்டுச்சூழல் எப்படி இருந்தது? தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சி சுதந்திரப் போராட்டத்தின் முடிவுக்குப் பிறகு அதிகாரத்தைக் கையாளும் அமைப்பாக மாறியது. அதன் சமூக விமரிசனத்தன்மை, போரிடும் தன்மை முழுமையாகவே இல்லாமலாகியது. ‘மணிக்கொடி’ இதழ் தேசவிடுதலைப்போரின் உருவாக்கம். அந்த உணர்வெழுச்சிகள் இலட்சியக் கனவுகள் ஆகியவற்றை பிரதிபலித்தது அது. அந்த எழுச்சி அடங்கி அந்தக்காலகட்டமே பொய்யாய் பழங்கதையாய் மெல்லப்போய்விட்டிருந்தது.

பதிலாக இரு புதிய எழுச்சிகள் உருவாகியிருநதன. ஒன்று இடதுசாரி இயக்கம். அதன் வீச்சு கருத்தியல் – பண்பாட்டுச் செயல்பாட்டின் அனைத்துத் தளங்களிலும் வியாபித்திருந்தது அன்று எல்லா கருத்தியல் கலாச்சாரச் செயல்பாடுகளையும் பொருளியல் அடிக்கட்டுமானத்தின் விளைவுகளாகவும் அக்கட்டுமானத்தை மாற்றுவதற்கான கருவிகளாகவும் மட்டுமே காணும் குழுக்கள் வாத நோக்கு இடதுசாரித் தரப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடக இருந்தது. இதற்கு எதிராக அன்று இந்திய மொழிகள் அனைத்திலுமே குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களும், கலைஞர்களும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது தரப்பு திராவிட இயக்கம், சுயமான சமூக அரசியல் கருத்துநிலைகள் ஏதுமில்லாத பரப்பிய (Populistic movement) இயக்கம் அது. இடதுசாரிகளின் சமூக – அரசியல் கருத்துநிலைகளை எடுத்துக்கொண்டு அவற்றை எளிமையான கோஷங்களாக மாற்றி ஒலித்தது அது. அத்துடன் வெறுப்பு மற்றும் பிரிவினை நோக்கையும் இணைத்துக் கொண்டது. வெறுப்பு, பிரிவினை அம்சம் இல்லாத பரப்பிய இயக்கம் எங்குமே சாத்தியமானதில்லை. மக்களை எளிதில் சென்று சேர்வது வெறுப்பும் பிளவுவாதமும்தான் என பரப்பிய இயக்கத்தவர் உடனடியாகக் கண்டு கொள்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். ஒரு பரப்பிய இயக்கம் எந்தநிலையிலும் நுண்ணிய முரணியக்கங்களை பொருட்படுத்தாது. வெகுமக்களிடையே எளிதில் பரவக்கூடிய எளிமைப்பாடுகளையே அது எடுத்துக்கொள்ளும்.

இவ்விரு இயக்கங்களினாலும் தீவிரமான கலை இலக்கிய சிந்தனைச் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. அவற்றுக்கு கொள்வார் இல்லாத நிலை உருவாகியது. பிரபல ஊடகங்கள் எல்லாவகையான கருத்தியல் விவாதங்களையும் கலையிலக்கியங்களையும் முழுமையாக நிராகரித்தன. அரசியல்தளங்களும் அந்தப் பாதையைப் பின்தொடர்ந்தன. கல்வித்துறையும் அந்த வகையினரால் கையகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட பூரணமான ஒரு நிராகரிப்பு ஓர் அறுபடல்.

அந்த நிலைக்கு எதிராக ஒரு சிறிய சிந்தனையாளர் படைப்பாளர் குழுவின் எதிர்வினையே ‘எழுத்து’ இதழ். சி.சு.செல்லப்பா அதன் அபாரமான பிடிவாதத்தாலும் அர்ப்பணிப்பாலும் அந்த இதழை முன்னெடுத்தார். ‘எழுத்து’ ஓர் இயக்கமாக மாறியது. அதைப்போன்ற சிற்றிதழ்கள் ஏராளமாக உருவாகி என்பதுகளின் இறுதிவரைத் தமிழில் தீவிரமான கலையிலக்கியச் செயல்பாடுகள் அறுபட்டு நின்றுவிடாமல் காத்தன. மிகக் குறைந்த பொருட்செலவில், சில தனிமனிதர்களின் தியாகத்தால், உழைப்பால் நடந்தவை அவை. முழுமையான புறக்கணிப்பில் கூட மனம் தளராமல் ஒருவகை ‘பண்பாட்டுத்தள தற்கொலைப்படை’யாக அவை செயல்பட்டன. ஓரளவு சாதகமான ஒரு சூழல் இன்று உருவானபோது தமிழில் கலையும் இலக்கியமும் சிந்தனைகளும் அடைந்த மறுமலர்ச்சிக்கு அந்த சிற்றிதழ் இயக்கத்தால் விதைநெல் பாதுகாக்கப்பட்டு கையளிக்கப்பட்டதே காரணமாகும். அதற்காகவே க.நா.சு., சி.சு.செல்லப்பா இருவருக்கும் தமிழிலக்கிய உலகமும் சிந்தனையுலகமும் பெரிதும் கடன்பட்டிருக்கிறது.

வெங்கட் சாமிநாதன் எழுத்துடன் கொண்டிருந்த மானசீக உறவு இந்த சின்னஞ்சிறிய பண்பாட்டு மாற்றியக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டமையால் உருவானதாகும். செல்லப்பாவின் சிற்றிதழ் இயக்கத்தின் தீவிரமான பங்கேற்பாளியாகவே சாமிநாதன் இலக்கிய உலகில் நுழைந்தார். இன்றும் அந்த மனநிலையிலேயே எழுதி வருகிறார். சாமிநாதனின் எழுத்தினைத் தீர்மானிக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்று அது. எந்தக் கணத்திலும் சாமிநாதன் திராவிட இயக்கத்தின் பரப்பிய அணுகுமுறைக்கும இடதுசாரிகளின் பொருளியல் குறுக்கல்வாதத்திற்கும் எதிராகவே இருந்திருக்கிறார். அவற்றுக்கு எதிராக ஒரு தனிமனிதப் பேராளியாகவே செயல்பட்டிருக்கிறார். அந்த இயக்கங்களின் நேரடியான ஒட்டுமொத்தத் தாக்குதல்களில் இருந்து இலக்கியத்தை காத்து அதன் அழகியல் இலக்குகளையும் கருத்தியல் சுதந்திரத்தையும் முப்பதுவருடம் தொடர்ந்து முன்வைத்து வந்தார் என்பது சாமிநாதனின் முதல் சாதனையாகும்.

வெங்கட் சாமிநாதன் ‘எழுத்து’டன் கொண்டிருந்த மாறுபாடு அழகியல் சார்ந்தது. ‘எழுத்து’ இலக்கியத்தை ஒரு தூயகலையாக, அறிவார்ந்த கலையாக அணுகியது. பிறகலைகள் எதையும் அது சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதுடன் பிற கலைகளின் உறவே அதற்குத் தேவையில்லை என்றும் அது வாதிட்டது. இக்காரணத்தால் ‘எழுத்து’ முழுக்க முழுக்க இந்திய மரபையும் தமிழ் மரபையும் நிராகரித்தது. தன் ஆதர்சங்களை ஐரோப்பாவில் இருந்து எடுத்துக் கொள்ள முயன்றது. அந்த மனநிலைக்கு எதிராக இருந்த இரு ‘எழுத்து’ உறுப்பினர்கள் பிரமிளும், வெங்கட் சாமிநாதனும்தான். இலக்கியத்தை கலை என்ற அடையாளத்தில் இருந்தே நகர்த்திச் சென்று தத்துவத்தின் குட்டியாக அதன் தொழுவில் கட்ட முயன்றது நவீனத்துவம். சாமிநாதன் அந்த மனநிலைக்கு எதிரானவராக இருந்தார். இலக்கியத்தை ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக முன்வைத்தார். பண்பாடு என்ற அறுபடாத செயல்பாட்டின் ஒரு துளியே இலக்கியம். ஒரு காலகட்டத்தில் இலக்கியம் அக்காலகட்டத்தின் பிற அனைத்துக் கலைகளுடனும் தொடர்புடையது என்று வாதிட்டார்.

‘எழுத்து’ மரபு இலக்கியத்தை நவீனத்துவ நோக்கில் அதன் வடிவ ஒழுங்கு, வெளிப்பாட்டு ஒருமை, மொழியின் கச்சிதம், உணர்ச்சிகளின் சமநிலை, தத்துவார்த்தமான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட்டது. மிகச்சிறந்த ஆக்கம் மிகச்சிறந்த மனச்சமநிலையில் நின்று உருவாக்கப்பட்டிருக்கும் என்று கூறியது. அந்தச் சமநிலை அப்படைப்பின் வடிவத்தில் தெரியும் என்றது. சாமிநாதன் அதை மறுத்து இலக்கியத்தின் சாராம்சம் அதில் உள்ள உத்வேகமே என்று வாதிட்டார். அந்த உத்வேகம் கலைஞன் கொள்ளும் தன்னை மறந்த நிலை பித்துநிலை (Trance)யில் பிறக்கிறது. ஒரு கலைஞன் தன் தனியாளுமையை தன் படைப்பூக்கத் தருணத்தில் மீறிச் செல்கிறான். அப்போது அவன் அந்தப் பண்பாட்டின் குரலாகவே ஆகிவிடுகிறான். அதுவே பித்துநிலை என்பது. அதுவே இலக்கியத்தை உருவாக்குகிறது என்றார் சாமிநாதன்.

சாமிநாதனின் இன்று வரையிலான கருத்தியக்கங்கள் ‘எழுத்து’ உருவாக்கிய இலக்கிய இயக்கத்தின் வேகத்தை முன்னெடுத்துச் செல்வது, இலக்கியதளத்தில் ‘எழுத்து’ உருவாக்கிய நவீனத்துவக் கோட்பாடுகளை மீறிச் செல்வது என்ற இரு தளங்களில் செயல்படுகின்றன. அவரது பங்களிப்பை இவ்விரு கோணங்களில் ஆராயலாம். முதல் தளத்தில் சாமிநாதன் ‘ஆத்மார்த்தம்’, ‘சுதந்திரம்’ என்ற விழுமியங்களை முன்வைத்துப் பேசுபவராகவும், இரண்டாம் தளத்தில் ‘பித்துநிலை’, ‘உயர் அறம்’ ஆகியவற்றுக்காக வாதிடுபவராகவும் இருக்கிறார். இவையே சுவாமிநாதனின் விமரிசன அளவுகோல்களை நிர்ணயிக்கின்றன.


சாமிநாதன் -விக்கி

சாமிநாதன் வேதசகாயகுமார்

முந்தைய கட்டுரைகே.வி.மகாதேவன்
அடுத்த கட்டுரைகல்வாழை, கடிதங்கள்