சுட்டிப்ப்ப்பெண்!

shalala
நண்பர் சுகாவிடம் நான் ஒருமுறை ஒரு தமிழ்ப்படம் பற்றிப்பேசினேன். “கதாநாயகி என்ன கேரக்டர்?” என்றேன். “வழக்கம்போலத்தான் மோகன், சுட்டிப்ப்ப்பெண்!” என்றார். எனக்கு மெல்லிய பரவசம் ஏற்பட்டது. , எத்தனை சுட்டிப்ப்ப்பெண்களால் உயிர்த்துடிப்பாக்கப்பட்டது தமிழ் சினிமா. அதில் ஹன்ஸிகா மொத்துவானி என்னும் பெண்மணி சுட்டிப்ப்ப்பெண் ஆகத் தோன்றினார். சுட்டிப்ப்ப்பெண்கள் பொதுவாக கன்றுக்குட்டி போல துள்ளிக்குதிக்கவேண்டும். அந்த அம்மாள் பசுபோல

நீகேட்டால் நான் மாட்டென் என்றா சொல்வேன் கண்ணாஎன்று ஸ்ரீப்ரியா சுட்டிப்ப்ப்பெண் ஆக வந்து நாக்கைச்சுழற்றியபடி ஆடியதைக் கண்டு மனமுருகி நான் கேசுமாமாவிடன் சொன்னபோதுஎன்ன மசுத்துக்கு இவளை ஸ்டைலுன்னு சொல்லுதே? ஏல, நீ வைஜெயந்தி மாலா ஆடுகத கண்டிட்டுண்டா? இல்ல கண்டிட்டுண்டாலே?” என எகிறிவிட்டார். “அது ஆட்டம்இப்பம் வாற குட்டிகளுக்கு ஒரு இது உண்டா? இல்ல கேக்கேன்

உன்கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்என்று வைஜூ மேலே ஆம்புளைச்சட்டை போட்டுக்கொண்டு ஓர் ஆட்டம் ஆடியது. தாத்தாக்கள் ஈரக்கனிவு கொண்டார்கள். அக்காலத்தில் பாட்டிகள் ஜாக்கெட் அணிவதில்லை. ஆகவே முலைகள் மூடப்பட்டிருந்தால்தான் கவற்சி. முழுசாக மூடியிருந்தால் ஆபாசம்.“அவ ஆட்டத்த பாத்தபின்னால ஆம்புள பயக்க சட்டபோட்டத பாத்தாலே ஒரு எளக்கமுல்லா?”

அன்றுமுதல் வாழையடி வாழையாக வந்துகொண்டே இருக்கிறார்கள் சுட்டிப்ப்ப்பெண்கள். தலைமுறைகள் மாறிவிட்டன.  சுட்டிப்ப்ப்பெண்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வேறு எதைவேண்டுமானாலும் மாற்றலாம், கிராஸ்பெல்ட் போட்ட இன்ஸ்பெக்டரும், டபிள்பிரெஸ்ட் கோட் போட்ட கதாநாயகனும், அவ்வளவு ஏன் பட்டுகவுன் போட்டு பைப் பிடிக்கும் முதலாளியப்பாக்களும்கூட மாறிவிட்டார்கள். இதைமட்டும் மாற்றமுடியாது. தமிழ் சினிமா அழிந்துவிடும்.

சுட்டிப்ப்ப்பெண்களின் குணச்சித்திரம் நன்கு வரையறுக்கப்பட்டது. அவளுக்கு மூளை வளர்ச்சியில் சிக்கல். இன்றைய மருத்துவமொழியில் சொல்லப்போனால் ஆட்டிஸம். பொதுவாக ஹைப்பர் ஆக்டிவ் சிண்ட்ரோம்.ஆகவே சின்னப்பாப்பாக்களின் உடைகளைத்தான் போட்டுக்கொள்வாகள். ராத்திரி சின்னப்பாப்பாவாக படுத்து காலையில் ஆடைக்குள் பெரியபாப்பாவாக உப்பி வளர்ந்துவிட்டதுபோன்ற வெடிப்புறு தோற்றம். அசை,அடி,தொடை எல்லாமே தெரியும், இரட்டுறமொழிதலும் தெரிந்தாகவேண்டும். உள்ளுறை உவமம், இறைச்சி எல்லாம் தெரிவது பட பட்ஜெட்டைப்பொறுத்தது.

கட்டிக்கொடுத்தால் எட்டு பெற்றுத்தள்ளும் உடலிருந்தாலும்ஆப்பா! நான் வெந்திட்டேன்!” என கத்தியபடி டென்னிஸ் பேட்டுடன் ஓடிவந்து வயோதிகரின் சோபா விளிம்பில்  தாவி அமரும். விழிகளை படபடவென அடித்துக்கொண்டுஅப்படித்தான் சொல்லுவேன்என்று தலையை ஆட்டி ஆட்டி பேசும். மழலை பேசுவதற்கென்றே ஒரு தனி முகவாய் ஆட்டம் உண்டு என்பதை தமிழ்சினிமா பிதாமகிகள் கண்டுகொண்டிருக்கிறார்கள். எக்ஸ்ட்ரா லார்ஜ் பாண்ட் போட்ட சாவித்ரி பத்தாம்கிளாஸ் பாஸாகி வந்து எம்பிக்குதிப்பதைப் பார்த்த தலைமுறை நான். எனக்கும் அன்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

சுட்டிப்ப்ப்பெண்ளுக்கு பொதுவாக எதைப்பற்றியும் எதுவுமே தெரியாது. பானட்டை திறந்து சும்மா தொட்டாலே ஓடும்நிலையிலுள்ள கார் நின்றுவிட்டதே என்று நடுக்காட்டில் குட்டைப்பாவாடையுடன் நின்றிருக்கும். கதாநாயகனைப் பார்த்ததும் எகிறும். “என்னா மேன்?” என்றெல்லாம் அந்தக்காலத்திலே பேசியிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கரப்பாம்பூச்சியை அல்லது கற்பழிக்கவருபவனைப் பார்த்தால் கிரீச்சிட்டு பாய்ந்து கதாநாயகனை  கைகால்களால் கட்டிக்கொள்ளும். திருமணத்திற்குப்பின்னர்தான் அது உண்மையில் உறவுச்சம் என அவன் புரிந்துகொள்ளப்போகிறான், பாவம்.

ஓப்பனிங்சாங்உண்டு. அதில் கன்றுக்குட்டிகளைத் துரத்தும். நாணல்புதர்கள் நடுவே படுத்துக்கிடந்து காலை ஆட்டும். வயல் வரப்பில் ஓடும். துள்ளிக்குதிக்கும். மின்மினிகளைத் துரத்தும். நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் என்று அடம்பிடிக்கும். சுருக்கமாகச் சொன்னால் நாளை ஒருவன் வீட்டில் போய் குப்பைகொட்டவேண்டிய மற்ற பெண்கள் செய்யாத எல்லாவற்றையும் செய்யும்.

முகத்தை கண்டபடி வலித்துக்கொள்ளும். ஆனால் கதாநாயகன் கழுத்துக்குக் கீழே கைவிடும்போது மட்டும் முகம் பொம்மை போல இருக்கும். எத்தனைவிதமான வலிப்புகள். சரோஜாதேவிக்கு இடப்பக்கமாகக் கோணும் வாய் என்றால் ஜோதிகாவுக்கு வலப்பக்கமாக. மொத்தமாக இழுபட்டு விரிந்தால் குஷ்பு. நடுவே பல்லில் இடைவெளி இருந்தால் தேவிகா.

சுட்டிப்ப்ப்பெண்களின் சிறப்பு என்னவென்றால் அதை அவர்களே சொல்லிக்கொள்வார்கள். ”ரெட்டைவால் வெண்ணிலா என்னைப்போல் சுட்டிப்பெண் இந்தப் பூமியில் யாருமில்லசுட்டிப்ப்ப்பெண்கள் தங்களைப்பற்றி என்னவெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ”என்னப்போல ராசாத்தி எவ இருக்கா சொல்லு?”

சுட்டிப்ப்ப்பெண்கள் வழக்கம்போல இருஇனம். நாட்டுவகைகள் செந்தூரப்பூவே என கண்ணைச்சிமிட்டும், தாவணிபோட்டு கரும்பு கடித்து துள்ளி அலையும். ஹைபிரீட் என்றால் ”சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு” என்று துள்ளிக்கொண்டு அலையும். ஏழை எளியவர்களுடன் மழைநடனம் ஆடும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுவகைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. மெரினாவில் மெழுகுவத்திகளுடன் கூடவேண்டிய காலம் நெருங்கிவருகிறது

 http://www.nettv4u.com/entertainment/tamil/article/top-10-tamil-heroine-introduction-songs

முந்தைய கட்டுரைகொஜ்ஜு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19