20. விண்வாழ் நஞ்சு
குருநகரி மீண்ட விஸ்வவசு தன் பொந்துக்குள் பிற கந்தர்வர் எழுவரையும் கூட்டி அமர்ந்து சொல்சூழ்ந்தான். “நாம் இங்கு செய்வதற்கு ஏதுமில்லை. ஒருவர் முப்பொழுதும் அவளை தொடர்க! ஆறு மைந்தரை அறுவர் தொடர்க! அரசனை நான் தொடர்கிறேன்” என்றான். “நாம் அறிய வேண்டியதென்ன? ஆற்றப்போவதென்ன? அதில் தெளிவின்றி பின் தொடர்வதனால் ஏது பயன்?” என்றான் சந்திரஹாசன். “நான் ஒன்றும் அறியேன். ஆனால் ஏதோ ஒன்றை அணுக்கமாக தொடர்வோம் என்றால் முன்பு அறிந்திராத ஒன்று கண்முன் எழுந்து வருமென்பது ஓர் அரசுசூழ் மெய்மை. இன்று நம் முன்னிருப்பது இச்செயல் ஒன்றே. விழி முழுமையும் திறந்திருக்கட்டும். செவி உச்சக்கூர் கொண்டிருக்கட்டும். மூக்கு மணமனைத்தையும் பெறட்டும். எண்ணம் புலன்களில் மட்டும் குவிந்திருக்கட்டும். எங்கோ ஒன்று நிகழும் என்று காத்திருப்போம்” என்றான் விஸ்வவசு.
விஸ்வவசு இரவும் பகலும் புரூரவஸின் அருகிலேயே இருந்தான். வண்டின் இசை ஒன்று தன்னை எப்போதும் சூழ்ந்திருப்பதை ஓரிரு கணங்களில் புரூரவஸ் உணர்ந்தாலும் அவனைச் சுற்றி ஒலித்த மங்கல இசையும், வாழ்த்துரைகளும், அரசுசூழ் சொல்லாடல்களும், குலத்தலைவர் கூற்றுகளும், மன்றில் எழுந்த வழக்குகளும் அவனை ஆழ்த்தி வைத்திருந்தன. அரசனின் அரியணைக்குப்பின் இருந்த சிறுதுளையில் புகுந்து சொல்கேட்டிருந்தான் விஸ்வவசு. அவன் மஞ்சத்தில் தென்கிழக்கு மூலையில் ஒரு துளையிட்டு அங்கு இரவில் உடனிருந்தான். ஊர்வசியுடன் அவன் காதலாடுகையில் மச்சிலிருந்து தொங்கிய மலர்க்கொத்து விளக்கில் அமைந்திருந்தான்.
நாட்கள் கடந்தனவெனினும் ஒன்றும் புலப்படாமை கண்டு அவ்வப்போது உளம் சோர்ந்தான். பிறிதொன்றும் செய்வதற்கில்லையென்று அதிலேயே தொடர்ந்தான். பெருங்காதலை அறிந்தவனின் உடலில் இருக்கும் குழந்தைக்குரிய துள்ளல் புரூரவஸிடம் இருந்தது. வெறுமனே இருக்கையில் இன்நினைவு கொண்டவன்போல் முகம் மலர்ந்திருந்தது. இதழ்களில் அவன் இறுதியாகக் கேட்ட பாடலின் இசை எழுந்தது. புதியவர்களிடம் பேசுகையில் அருஞ்செய்தி கொண்டுவருபவர்கள் அவர்கள் என அவன் எண்ணுவதுபோல் தோன்றியது. அவன் கை அலைநீரில் பாவை தெரிவதெனப் பெருகியிருந்தது என்றனர் புலவர். ஒன்று உகந்த இடத்தில் நூறு அளித்தான். போதுமென சொல்தயங்கும் பாவலர் முகம் கண்டு மேலும் கோருகிறார் என்று எண்ணி மீண்டும் அளிப்பதற்கு அள்ளினான்.
அந்நாளில் ஒருமுறை பட்டத்துயானையாகிய துங்ககீர்த்தி நோயுற்றிருக்கும் செய்தியை படைத்துறை அமைச்சர் வந்து அவையில் சொன்னார். அதன் நலம் விசாரித்தபின் மருத்துவர் குழு கூடி ஆவன செய்யட்டும் என்று ஆணையிட்டு பிற தொழிலில் மூழ்கினான் புரூரவஸ். நோயிலும் துயரிலும் அவன் உள்ளம் நிலைக்காதிருந்தது. தேன் மட்டுமே தேரும் வண்டென்று ஆகிவிட்டிருந்தது அது. அன்று அவை முடிந்து அவன் எழுந்தபோது ஆயுஸ் “தந்தையே, நாம் துங்ககீர்த்தியை பார்த்துவிட்டுச் செல்லலாமே?” என்றான். “நன்று” என்று சொல்லி செல்வோம் என்று அமைச்சரிடம் கை காட்டினான் புரூரவஸ்.
அமைச்சர்களும் இரு படைத்தலைவர்களும் ஏவலரும் தொடர அவன் யானைக்கொட்டிலை நோக்கி நடந்தான். அவனை எதிர்கொண்டு வணங்கிய சிற்றமைச்சர் கொட்டிலாளரும் யானைக்காப்பரும் அவனுக்காக காத்திருப்பதை உணர்த்தினார். தலைமை மருத்துவர்கள் மூவர் அவனருகே வந்து யானையின் நோய் குறித்தும் அளித்துள்ள மருந்துகள் குறித்தும் சுருக்கமாக சொன்னபடி உடன்நடந்தார்கள். அவர்கள் சொல்வதை அவன் செவிகூரவில்லை. துள்ளும் கன்றுகளையும் முலைபெருத்து வெண்துளி கசிய மைந்தரை நோக்கிய அன்னைப்பசுக்களையும் மட்டும் நோக்கி மகிழ்ந்தபடி அவன் நடந்தான்.
யானைக்கொட்டில் நோக்கி செல்கையில் அங்கு இரு ஆடுகள் கட்டப்பட்ட சிறு தொழுவம் வந்தது. ஆயுஸ் முகம் மலர்ந்து திரும்பி கைசுட்டி “அன்னையின் வளர்ப்பு ஆடுகள்!” என்றான். ஒருகணம் உடல் விதிர்க்க, விழிகள் மின்னிச்சென்று அவற்றைத் தொட்டு மீள, திரும்பி மருத்துவரிடம் யானையின் மருந்து குறித்தொரு ஐயம் கேட்டபடி புரூரவஸ் கடந்து சென்றான். அத்தருணத்தில் அவனில் நிகழ்ந்து மறைந்த ஒன்றை அருகே பறந்து வந்த விஸ்வவசு அறிந்துகொண்டான். ஆம், இதுவே, இதுவேயாம் என அவன் உள்ளம் துள்ளியது. “குறையொன்று இல்லாது முழுதும் மலர்ந்த உள்ளம் இல்லை மானுடர் எவருக்கும்” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
மீண்டும் தன் துளைக்கு வந்து தோழரை அங்கு வரச்சொன்னான். “அந்த ஆடுகள் எவை? விளக்குக!” என்றான். முதுகந்தர்வனாகிய சூர்யஹாசன் “ஊர்வசி இங்கு வந்தபோது உடன் வந்தவை அவை. அவள் உளம்கொண்ட ஆழமே இரு ஆடுகளாக பின் தொடர்ந்தது. தேவருலகில் அவள் அறிந்தவை அனைத்தும் ஸ்ருதன் எனும் வெண்ணிற ஆடாயின. அவள் அவற்றுள் ஊடுபுகுந்து தான் எண்ணியவை ஸ்மிருதன் என்னும் கரிய ஆடாயின. ஸ்ருதனும் ஸ்மிருதனும் மீண்டும் அவளை தேவகன்னிகையாக்கி விண்ணுக்கு அழைத்து வரும் பொறுப்பு கொண்டவை” என்றான். முகம் மலர்ந்த விஸ்வவசு “ஆம், இதுவே வழி. நன்று, நாம் ஆற்ற வேண்டியதென்ன என்பது தெளிவுற்றுவிட்டது” என்றான்.
சியாமை குருநாட்டிற்கு வந்த தொடக்க நாட்களில் பட்டத்துயானைக்கும் அரசப்புரவிக்கும் நிகரான மதிப்புடன் அந்த இரு ஆடுகளும் கொட்டிலில் பேணப்பட்டன. அவற்றை பராமரிப்பதற்கென்று ஏழு தேர்ந்த இடையர்கள் மூதிடையர் ஒருவரின் தலைமையில் அமர்த்தப்பட்டனர். தினம் அவற்றை நீராட்டி அரண்மனையின் பசுஞ்சோலைகளில் மேயவிட்டு அந்தியில் புகையிட்டு கொட்டிலில் கட்டி இரவெல்லாம் உடனிருந்து காவல் காத்தனர். ஒவ்வொரு நாளும் முதற்புலரியிலேயே எழுந்து அவற்றிடம் வந்து பிடரி தடவி, காதுகளை வருடி, இன்குரலில் முகம் தாழ்த்தி உரையாடிக்கொண்டிருப்பது அரசியின் வழக்கமாக இருந்தது. அவற்றை அரண்மனைக்குப் பின்னிருக்கும் அணிக்காட்டில் உலவவிட்டு அவளும் உடன் செல்வாள். அங்கு மேய்ந்து நிறைந்து அவை மரநிழல்களில் படுத்து அசை போடுகையில் இரண்டுக்கும் நடுவே சருகுமெத்தையில் படுத்து துயில்வாள். அவை அசைபோடும் மலர்களை தன் கனவில் மலரச்செய்வாள்.
பின்னர் அவள் வருவது குறைந்தது. வாரம் ஒருமுறை என்றாகி பின் மாதம் ஒருமுறை என்றாகியது. சிறப்பு நாட்களில் மட்டுமே என குறைந்து பின்னர் அவள் அதை முற்றிலும் மறந்தாள். அவள் வராமலானபோது ஆடுகளை பராமரிப்பவர்கள் ஆர்வமிழந்தனர். பாராட்டப்படாத பணி வெற்றுச்சடங்கென்று ஆகிறது. சடங்கென்றாகும் பணி உளம் குவிதலற்று பொருளிழக்கிறது. மறக்கப்பட்ட ஆடுகள் தங்கள் விலங்கியல்புக்கு திரும்பின. உடலெங்கும் புழுதிபடிந்து கட்டற்று வளர்ந்த உடலுடன் அவை காட்டுக்குள் செருக்கடித்து திரிந்தன. அந்தியில் தொழு திரும்பின. தங்கள் தோற்றுவாயை முற்றிலும் மறந்தன. அவற்றைப் பராமரிப்பவர்களும் அவற்றை மறந்தனர். இரு விலங்குகள் அங்கிருப்பவை என்பதற்கு அப்பால் எதுவும் எவருக்கும் தெரியாமலாயிற்று. அவையோ முதிர்வு கொள்ளா தோற்றத்துடன் கொட்டிலில் நின்றன.
மழைமுகில் திரண்டு துளிச்சாரல் நிறைந்த காற்று சுழன்றுகொண்டிருந்த ஓர் அந்திவேளையில் விஸ்வவசு தன் தேவஉரு மீண்டு கொட்டில் நோக்கி சென்றான். உடன் பிற கந்தர்வர்களும் ஓசையின்றி தொடர்ந்தனர். அவர்களை எதிர்கொண்ட காவலர்களுக்கு அவர்களும் காவலர் வடிவு காட்டினர். சேடியருக்கு சேடியர் உருவையும் மருத்துவருக்கு மருத்துவர் உருவையும் காட்டினர். கற்பனை அற்ற விலங்குகளுக்கு மட்டும் அவர்களின் தன்னுருவே தெரிந்தது.
பன்னிரு வாயில்களைக் கடந்து கொட்டில்களுக்குள் சென்றபோது காவல்நாய் குரைக்கத்தொடங்கியது. விழித்திருந்த முதிய பிடியானையாகிய சிருங்கை மெல்ல அமறி பிற யானைகளை எச்சரித்தது. கொட்டில்களுக்குள் உடல் திருப்பி துதி நீட்டி மோப்பம் கொண்டு அவை தேவர்களை அறிந்தன. துங்ககீர்த்தி துதிதூக்கி உரக்கப் பிளிறி அறைகூவியது. அதன் ஏழு பிடி துணைகளும் உடன் சின்னம் விளித்தன. கொட்டிலெங்கும் ஓசை நிறைய அருகிருந்த வாளால் இரு ஆடுகளின் கட்டுச் சரடுகளையும் வெட்டி நுனி பற்றி இழுத்தபடி வெளியே ஓடினான் விஸ்வவசு. அவனைத் தொடர்ந்து வாட்களைச் சுழற்றியபடி பிற கந்தர்வர்களும் விரைந்தனர்.
ஓசை கேட்டு அனைத்து திசைகளிலிருந்தும் உள்ளே வந்த காவலர்கள் ஆடுகளை இழுத்தபடி செல்லும் தேவர்களைக் கண்டு “திருடர்கள்! விடாதீர்கள்! பிடியுங்கள்!” என்று கூச்சலிட்டபடி வில்லும் வாளுமெடுத்து ஓடிவந்தனர். “அம்பு செலுத்த வேண்டாம். ஆடுகளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது” என்று முதலில் ஓடிவந்த காவலர் தலைவன் கூவினான். கொட்டிலுக்கு வெளியே வந்து இருளில் பாய்ந்த விஸ்வவசு தன் இரு கைகளையும் விரித்து சிறகுகளாக்கி காற்றை மிதித்து மேலேறினான்.
இரு ஆடுகளும் அலறியபடி சரடில் கழுத்து இழுபட்டுத் தொங்க கால்கள் நீண்டு காற்றிலுதற அமறியபடியும் துடித்தபடியும் அவனுடன் சென்றன. மண்ணில் அமைந்து ஏழாண்டுகாலம் அவை உண்ட உணவனைத்தும் எடையெனத் தேங்கியமையால் உயிர் வலிகொண்டு அவை அலறின. ஏழு தேவர்களும் வானில் எழுவதைக்கண்ட காவலர் தலைவன் அரண்மனைக்குள் ஓடினான். அந்தப் வேளையிலும் சியாமையுடன் காமம் ஆடிக்கொண்டிருந்த புரூரவஸின் சந்தன மண்டபத்தின் கதவை ஓங்கித் தட்டி “அரசே! அரசே!” என்று கூவினான்.
எழுந்து கதவுக்குப் பின்னால் நின்று “என்ன? சொல்?” என்று எரிச்சலுடன் புரூரவஸ் கேட்டான். “அரசியின் இரு ஆடுகளையும் கள்வர் கவர்ந்து செல்கிறார்கள்” என்றான் காவலர் தலைவன். “பிடியுங்கள் அவர்களை! பிறரை தலை வெட்டிவிட்டு ஒருவனை மட்டும் இழுத்து வாருங்கள்” என்றான் புரூரவஸ். “அரசே, அவர்கள் மானுடர்கள் அல்ல. காற்றை மிதித்து விண்ணிலேறிச் செல்கிறார்கள். நாங்கள் அவர்களைப் பின்தொடர இயலவில்லை” என்றான் காவலன். “என் ஆடுகள்! அவை மறைந்தால் நான் இங்கு இருக்கமுடியாது” என சியாமை கூவினாள்.
தேவியுடன் உறவுகொள்கையில் வாளை உருவி தொடையருகே வைத்திருப்பது அரசன் வழக்கம். அக்கணம் மூண்டெழுந்த சினத்தில் தன் நிலை மறந்த புரூரவஸ் வாளை எடுத்தபடி ஓடிச்சென்று சாளரம் வழியாக நோக்கினான். தொலைவில் அரைமின்னலில் எட்டு தேவர்களும் ஆடுகளுடன் செல்வதைக் கண்டான். “எனது ஆடுகள்! பிடியுங்கள் அவற்றை!” என்று கூவியபடி அவனுக்குப் பின்னால் சியாமை எழுந்து வந்தாள். பெருஞ்சாளரத்தினூடாக வெளியே பாய்ந்து தன் தவ வல்லமையால் இரு கைகளையும் விரித்து காற்றில் பறந்தெழுந்தான் புரூரவஸ்.
அக்கணம் விண்ணில் எழுந்த தேவர்தலைவன் தன் ஒளிர்படையை அசைக்க மின்னலொன்று வெட்டிச் சுழன்று கொடிவீசி வான் பிளந்து நின்றதிர்ந்து மறைந்தது. அந்த ஒளியில் சியாமை புரூரவஸின் வெற்றுடலைக் கண்டாள். அலறியபடி மயங்கி கால்குழைந்து சாளரத்தைப் பற்றியபடி சரிந்து தரையில் விழுந்தாள்.
விண்ணில் விரைந்த தேவர்களை துரத்திச்சென்ற புரூரவஸ் இருளை உறிஞ்சிப் பரந்திருந்த முகில்களுக்கு மேலே அவர்கள் எழுவதைக் கண்டான். முகில்விளிம்புகளை மிதித்துத் தாவி வாளைச் சுழற்றியபடி அவர்களை அணுகினான். அவனைச் சூழ்ந்து மின்னல்கள் துடித்தன. இடியோசை எழுந்து திசைகளனைத்தையும் அதிரச்செய்தது. ஒளிரும் வெண்முகில்களுக்கு அப்பால் தேவர்கள் விரைந்து செல்வதை அவன் கண்டான். “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று கூவியபடி அவன் தொடர்ந்து சென்றான். “விண்ணகர் புகுந்தாலும் விடமாட்டேன். விண்ணவர்கோனையும் வெல்வேன்” என வஞ்சினம் கூவினான்.
ஆனால் இன்னொரு மின்னலில் கீழிருந்து ஆடை சிறகெனப் பறக்க குழல் எழுந்து நெளிய பறந்தணைந்த பெண்ணுருவம் ஒன்று அந்த இரு ஆடுகளையும் பாய்ந்து கழுத்தை கைகளால் சுற்றி பற்றிக்கொள்வதைக் கண்டான். அறிந்த முகம், பொன்னொளிர் நிறமென்றாலும் நன்கு பழகிய உடலசைவுகள். திகைத்து நின்று அவன் சொல்லெடுப்பதற்குள் இரு ஆடுகளுக்கும் சிறகுகள் முளைத்தன. இரு கால்களையும் அவற்றின்மேல் ஊன்றி சரடுகளை பற்றிக்கொண்டு அவள் எழுந்து நின்றாள். அவளைக் கண்டது எங்கென அவன் அப்போது உணர்ந்தான். மறுகணமே அவள் எவளென்றும் தெளிந்தான்.
அவன் கைகால்கள் செயலற்றன. சிறகுகள் தொய்வடைய அவன் கீழே சரியலானான். “தெய்வங்களே! மூதாதையரே!” என கூவியபடி அவன் விண்ணில் முகில்கணம் ஒன்றை பற்றிக்கொண்டான். அவன் உடைவாள் ஒளியுடன் கீழிறங்கிச் சென்று மண்ணில் விழுந்தது. அவள் விண்ணில் புதைந்து சிறு புள்ளியென மாறி மறைந்தாள். புலரி ஒளி எழுந்ததும் செந்நிற முகில்கீற்றுகள் சிதறிப்பரந்திருக்க ஓய்ந்த போர்க்களமென ஒழிந்து கிடந்த வான்வெளியை நோக்கி புரூரவஸ் திகைத்தான். திசை என ஏதுமற்ற அந்தப் பெருவட்டத்தை சுழன்று சுழன்று நோக்கி சோர்ந்து சுருங்கினான். அவன் உடல் எடைகொண்டு வந்தது. முன்னோர் அளித்த முதற்சொல் அவன் சித்தத்திலிருந்து மறைய மெல்ல மண் நோக்கி விழலானான்.
முகில்களைக் கடந்து காற்றைக் கிழித்தபடி குருநகரின் புறக்கோட்டைக் காட்டின் குறுமரங்களின்மேல் வந்து விழுந்து கிளையுடைத்து தரையில் பதிந்தான். உடலில் படிந்த புழுதியும் சருகும் பறக்க பாய்ந்தெழுந்து ஆடையிலா உடலுடன் நகர்த்தெருக்கள் வழியாக ஓடி குருநகரியின் அரண்மனை முற்றத்தை அடைந்தான். அவனைக் கண்டு காவலர் திகைத்து ஓசையிட்டனர். பொன்னுடல் இளவெயிலில் மின்ன பித்தனைப்போல “அரசி எங்கே? எங்கே சியாமை?” என்று கூவியபடி படிகளில் ஏறி அரண்மனைக்குள் புகுந்தான். அவனைக் கண்டு அனைவரும் சிதறிப்பரந்தனர்.
அவனை எதிர்கொண்ட அரண்மனை முதுசெவிலி “நேற்று நீங்கள் கிளம்பியதும் தன்னினைவிழந்து கிடந்த அரசியை தூக்கிக்கொண்டு சென்று மஞ்சத்தில் படுக்க வைத்தோம். நீர் தெளித்து முகம் தெளியச்செய்தோம். ஆடுகள் ஆடுகள் என கூவி அரற்றினார். பின்னர் என் மைந்தர், என் மைந்தரை விட்டுச்செல்லமாட்டேன் என கலுழ்ந்து விழிநீர் வார்த்தார். அவர் அருந்த இன்நீருடன் வந்தபோது மஞ்சம் ஒழிந்திருப்பதைக் கண்டோம்” என்றாள்.
“எங்கு சென்றாள்? எங்கு சென்றாள் அவள்?” என்று கூவியபடி அவன் படிகளிலேறி அரண்மனை இடைநாழிகளினூடாக ஓடி தன் மஞ்சத்தறையை அடைந்தான். அங்கே அவள் இல்லை. திரும்பி அவள் மஞ்சத்தறையை மீண்டும் அடைந்து அவள் பேழைகளை திறந்து தேடினான். அவன் அளித்த அணிகளும் ஆடைகளும் அருமணிகளும் அங்கே இருந்தன. திரும்பியபோது சிறுபீடத்தின்மேல் அவன் அணிவித்த கல்மாலையும் மங்கலத்தாலியும் மெட்டிகளும் கணையாழியும் இருந்தன.
அவன் கால்தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்தான். “அரசே, இவ்வறைக்கு வாயில் ஒன்றே. இவ்விடைநாழி வழியாக வந்து படிகளினூடாகவே வெளியேற முடியும். இங்கு காவலர் இருந்தனர். சேடியர் பலர் நடந்தனர். இவ்வழியாக அரசி சென்றிருக்க வாய்ப்பில்லை. அறையிலிருந்து எவ்வண்ணம் அவர்கள் மறைந்தார்கள் என்றறியேன்” என்றாள் முதுசெவிலி. பிறிதொருத்தி ஏதோ சொன்னாள். என்ன என அவன் விழிதூக்க அவள் “ஒன்றுமில்லை, சாளரம் வழியாக அரசி எழுந்து சிறகுகொண்டு பறந்து செல்வதைக் கண்டதாக இளஞ்சேடி ஒருத்தி சொல்கிறாள். கீழே அவள் கலம் கழுவிக்கொண்டிருக்கையில் அதை கண்டாளாம். அஞ்சி மயங்கி விழுந்து விழித்தெழுந்ததும் அழுதபடி தான் கண்டதை முதுசேடியிடம் சொல்லியிருக்கிறாள்” என்றாள்.
“அவளை அழைத்து வா! மெய்யேதென்று உசாவுவோம்” என்றாள் முதுசெவிலி. “தேவையில்லை” என்றுரைத்து இரு கைகளாலும் தலையை தாங்கிக்கொண்டான். குறடொலிக்க வாயிலில் வந்து நின்ற காவலர் தலைவன் “அரசியை நகரெங்கும் தேட காவலர்களை அனுப்பியிருக்கிறோம், அரசே” என்றான். அருகே வந்து நின்ற ஆயுஸ் “அன்னையை தேடிப்பார்க்க ஒற்றர்களும் சென்றுள்ளனர்” என்றான். புரூரவஸ் “நன்று, முறைப்படி அதை செய்க! ஆனால் அதனால் பயனில்லை” என்றான். திகைப்புடன் “ஏன், தந்தையே?” என்றான் மைந்தன். “அவள் இனி மீளமாட்டாள்” என்றான்.
ஆயுஸ் புருவங்கள் சுருக்கி நோக்கினான். “அவள் சென்றுவிட்டாள். அது ஒன்றே மெய்” என்று அவன் சொன்னான். அதற்குமேல் ஆயுஸ் ஏதும் கேட்கவில்லை. புரூரவஸ் உடைந்து விழிநீர் சிந்தத்தொடங்கினான். ஆயுஸ் திரும்பி நோக்க வாயிலில் நின்றிருந்த காவலர் விலகிச்சென்றனர். அவன் எழமுயன்றான். உடல் எடை மிகுந்தபடியே வந்தது. எழுந்து மஞ்சம் நோக்கி நடக்க முற்பட்டவன் தூக்கி வீசப்பட்டவன்போல ஓசையுடன் மரத்தரையில் விழுந்தான். பதறி ஓடி வந்து அவனைத் தூக்கி மஞ்சத்தில் படுக்க வைத்து நீர் தெளித்து விழிப்பூட்டி குளிர்நீர் அருந்த வைத்தனர் செவிலியரும் சேடியரும். விழிப்பு மீண்டதுமே “சென்றுவிட்டாள்…” என்று அவன் தன்னுள் என சொன்னான்.
அச்சொல் கூரிய வாளென உடலுக்குள் புகுந்ததுபோல தசைகள் விதிர்க்க கைகால்கள் துடித்தபின் மீண்டும் மயங்கினான். “அரசே” என்று அவனை உலுக்கினாள் செவிலி. ஆயுஸின் ஆணைப்படி அறைக்குள் வந்த மருத்துவர்கள் “இப்போது அவருக்கு விழிப்பு பெரும்துயர் அளிப்பது. துயிலட்டும், அதுவே நன்று” என்றனர். அனைவரையும் விலக்கி துயிலுக்கு புகை அளித்து அவனை மஞ்சத்திலிட்டனர். அவன் துயிலுக்குள்ளும் வலிகொண்டு துடித்தபடியே இருந்தான். முனகியபடியும் தலையை அசைத்தபடியும் இருந்தவன் அவ்வப்போது சவுக்கடி பட்ட புரவி என துடித்து எழமுயன்றான்.
ஆயுஸ் அவன் அருகிலேயே இருந்தான். பிற மைந்தருக்கு அவனே அனைத்தையும் சொல்லி புரியவைத்தான். மூன்றாம்நாள் விழிப்புகொண்ட புரூரவஸ் எழுந்து ஆடையை அள்ளிப்போட்டுக்கொண்டு கீழிறங்கிச்செல்ல அவனைத் தடுக்க முயன்றவர்களை கைகாட்டி விலக்கியபின் ஆயுஸ் உடன் சென்றான். முற்றத்தை அடைந்து புரவி மீதேறி விரைந்தபோதும் அவன் ஆயுஸ் உடன்வருவதை காணவில்லை. நகர்த்தெருக்களினூடாகச் சென்று கோட்டையைக் கடந்தான். எங்கும் நிற்காமல் காட்டுக்குள் புகுந்தான். அவனை முன்னால் செல்லவிட்டு பின் தொடர்ந்த ஆயுஸ் தன்னைத் தொடர்ந்த காவலர்களை எல்லைக்கு அப்பால் நிற்கச்செய்தான்.
புரூரவஸ் காட்டுக்குள் சென்று சோலைசூழ்ந்த சிறுசுனையை அடைந்தான். புரவியிலிருந்து இறங்கி அவன் உள்ளே சென்றதை அப்பால் நின்று மைந்தன் நோக்கினான். சற்றுநேரம் கழித்து அவன் தொடர்ந்துசென்று சோலைக்குள் புகுந்து ஓசையில்லாது நடந்தான். அதற்கான தேவையே இருக்கவில்லை. ஆயுஸ் மிக அருகே வந்து நின்றபின்னரும்கூட புரூரவஸ் எதையும் அறியவில்லை. விழியிமைக்காது அந்தச் சுனையையே நோக்கியபடி அமர்ந்திருந்தான். அவனை நோக்கியபடி ஒரு மரத்தில் சாய்ந்தவனாக ஆயுஸ் நின்றான்.
காட்டின் ஒலி மாறுபட்டது. இலைநுனியொளிகள் அணைந்தன. ஒளிக்குழல்கள் சாய்ந்து சிவந்து மறைந்தன. மரச்செறிவுக்குள் இருள் தேங்கியது. கொசுக்களின் ஓசை அவர்களைச் சூழ்ந்தது. புரூரவஸ் அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தான். சென்று அவனை அழைக்கலாமா என ஆயுஸ் ஐயுற்றான். மேலும் இருட்டி வந்தபோது அவன் மெல்லிய காலடிகளுடன் அணுகிச்சென்று “தந்தையே!” என அழைத்தான். முதல் சிலமுறை புரூரவஸ் அக்குரலை கேட்கவில்லை. கேட்டதும் திடுக்கிட்டுப் பாய்ந்தெழுந்து “யார்?” என்றான். “நான்தான்… ஆயுஸ்” என்றான் ஆயுஸ். “யார்?” என்று அவன் பதறிய நோக்குடன் கேட்டான். “யார் நீ?” உரத்த குரலில் “சொல்! யார் நீ?” என்றான்.
ஆயுஸ் வெறுமனே நோக்கியபடி நின்றான். “நான் பாண்டவனாகிய பீமன்… இது என் சோலை…” என்றான் புரூரவஸ். ஆயுஸ் திரும்பி நோக்கியபோது மிக அப்பால் படைத்தலைவனின் செந்நிறச் சிறுகொடி தெரிந்தது. அவன் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றான். புரூரவஸ் மீண்டும் அந்த நீர்நிலையருகே அமர்ந்தான். அவன் விழிமறைந்து நின்று ஆயுஸ் நோக்கிக்கொண்டிருந்தான். விழித்து துயில்கொள்பவன் போலிருந்தான் புரூரவஸ். ஆயுஸ் எண்ணியிராது ஓர் ஐயத்தை அடைந்தான். அங்கிருப்பவன் பிறிதொருவன்தானா? எப்படி அறியக்கூடும்? மானுட உடலை மட்டுமே அறிய வாய்க்கிறது. உள்ளே குடிகொள்வது எது? அது இடம்மாறிவிட்டதென்றால் அது உரைப்பதன்றி வேறு சான்றுதான் எது?
நிலவெழுந்து வந்தது. இலைநிழல்கள் நீரில் விழுந்தன. சுனை உள்ளிருந்து என ஒளிகொண்டபடியே வந்தது. குளிர்ந்த காற்றில் இலைகள் அசைந்தபோது எழுந்த கலைவோசை அது விடியலோ என ஐயுறச்செய்தது. இனிய வெம்மைகொண்ட படுக்கையில் படுத்திருக்கிறோமா என்ன? அல்லது இவையனைத்தும் கனவா? சுனைக்குள் நிலவொளி நேரடியாகவே விழுந்தபோது அதன் சிற்றலைகளின் வளைவுகள் தளிர்வாழையிலைகள்போல பளபளத்தன. ஆயுஸ் ஒரு நறுமணத்தை உணர்ந்தான். பாரிஜாதம் எனத் தோன்றிய மறுகணமே செண்பகம் என்றும் தோன்றியது. மிக அருகே அந்த மணம். இல்லை, மிக அப்பால் அலைபெருகி விரிந்த நறுமணப்பெருக்கின் சிறு துளியா?
புரூரவஸ் எழுந்து இரு கைகளையும் முன்னால் நீட்டினான். நேர் எதிரில் நின்றிருக்கும் எவரிடமோ பேச விழைபவன்போல முகம்நீட்டியபடி முன்னால் சென்றான். நடனமிடுவதுபோல கைகளை விரித்தான். சுழன்றபோது அவன் முகம் ஒருகணம் தெரிந்தது. அதில் ஆலயச்சுவர்களில் வரையப்பட்டிருக்கும் யக்ஷர்களின் முகங்களில் தெரியும் களிப்பித்து தெரிந்தது. விழிகள் புடைத்து தெறிப்பவைபோல வெறித்திருந்தன. வாய் மலர்ந்து பற்கள் ஒளிவிட்டன. மெல்ல அவன் முனகுவது கேட்டது. பாடுகிறானா என அவன் செவிகூர்ந்தான். பாட்டல்ல, வண்டு போல் ஒரு முரல்வு. அவன் உதடுகளிலிருந்து அவ்வொலி எழவில்லை. மூச்சிலிருந்தோ உடல்முழுமையிலும் இருந்தோ அது எழுந்துகொண்டிருந்தது. அவன் கைகளை விரித்துச் சுழன்றான். பின்னர் அச்சுனையின் கரையில் அமர்ந்து கால்நீட்டி படுத்துக்கொண்டான்.
அவன் உடலில் வலிப்பு எழுவதை ஆயுஸ் கண்டான். கைகால்கள் சேற்றில் இழுபட்டன. நாக்கு வாயிலிருந்து பாதி நீண்டு தொங்கி அதிர்ந்தது. அவன் திரும்பி நோக்கியபோது படைத்தலைவனும் காவலரும் மிக அண்மையில் மரங்களில் மறைந்து நின்றிருந்தனர். அவன் கைகாட்ட அவர்கள் ஓடிவந்தனர்.