இனிய ஜெயம்,
எனது சிறிய வாழ்வின் சந்தோஷங்களில் ஒன்று உங்களை தொடர்பு கொள்ள கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகள் வைக்கும் விண்ணப்பங்களுக்கு செவி கொடுப்பது.
இந்த விளையாட்டு உங்களின் மனிதனாகி வந்த பரம்பொருள் கட்டுரை வழியே துவங்கியது. குலாமதஸ்தகீர் ஜாமூன் பாபாவை சந்திக்க வகைமை கேட்டு பக்தி கமழும் குரல்கள் தொடர்ந்து அழைக்கும். ஒரு எல்லைக்குமேல் என்னை நம்ப மறுத்துவிட்டு [பாவி பாவி பகவானை சந்திக்க தடையா இருக்கிறது மகா பாவம்] நீங்க அவர் முகவரியை குடுங்க என அழிச்சாட்டியம் செய்ய துவங்குவார்கள்.
அடுத்து அறம்வளர்த்த நாயகி எறிந்த நாள். தொலைபேசியை எடுத்தால் ஹலோ சொல்ல துவங்கும் முன்பே நாரோயில் வசவு துவங்கி விடும். நோ நோ மம்மி பாவம், நோ நோ டாடியும் பாவம் என மனதுக்குள் கதறுவேன். ஒரு வாரம் தொலைபேசியை அணைத்து வைத்தேன். உயிர்ப்பித்ததும் வந்த முதல் அழைப்பு அதே வசவு.
மற்றொரு நாள் [அன்று ஜெயம் வேறு ஒரு தலை போகும் சர்ச்சையில் இருந்தார்] ஒரு அமானுஷ்ய குரல். பெயரோ ஊரோ எதையும் தெரிவிக்கவில்லை. ”ஹலோ ஜெயமோகனா?’
‘ ”இல்லைங்க நான் கடலூர் சீனு. நான் பாவங்க”
டொக்.
இரவு பத்து மணி அதே குரல். ”ஹலோ ஜெயமோகன் நம்பர் தர முடியுமா?”
” ஹலோ நீங்க யாருங்க என்ன விஷயமா சார பாக்கணும் எதுவுமே சொல்லாம அவரை தொடர்பு கொள்ள கேட்டா எப்புடி? அவருக்கு மெயில் போடுங்க. தொடர்பு கொள்வார்”
டொக்.
காலை ஆறு மணி அதே அமானுஷ்ய குரல் ”சார் நம்பர் கிடைச்சிடுச்சி சார் சுட்ச் ஆப்ல இருக்கார். நான் இப்போ நாகர்கோவிலில் தான் இருக்கேன் சார் வீட்டு அட்ரஸ் தர முடியுமா?”
அவ்வளவுதான் உண்மையில் பீதி அடி வயிற்றை கவ்வ, பதறி அரங்காவை அழைத்தேன். சர்வவவல்லமை படைத்த அரங்கா அரை மணி நேரத்தில் ஆளை அமுக்கினார். விசாரித்ததில் சினிமால சேர சான்சு தேடி அலையும் யுவன். கமலை ஓரம் கட்டும் கனவுடன் கிளம்பி இருக்கிறார். கமலின் நண்பரை அமுக்குவதுதானே முதல் வழி? [நாசமா போக].
பெரும்பாலானவை ஏதேனும் கல்லூரி மாணவி ”சார் ஒர்க்ஸ்ல எம்பில் பண்றேன் சார பாத்து ஒரு இன்டர்வியூ பண்ணனும்” என்பார்.
அவர்களின் கேள்விகளை சும்மா கேட்டுப் பார்ப்பேன். முதல் கேள்வி ”ஜெயமோகன் உங்களது புனைப்பெயரா?”
இதையாவது பொறுத்துக் கொள்ள இயலும். ஒரு பெண் ”உங்கள் பெயர் என்ன”என்றே பேட்டியை துவங்கி இருந்தாள். ஒரு மாணவி ஜெயமோகனை யூ டியூபில் கூட பார்த்தது இல்லை என்றாள் ”எங்க எச்சோ டி தான் சார் ஓர்க்ஸ எடுத்து பண்ணுன்னு சொன்னார்”.
ஒரு மாணவியை முதற்கனல் நாவலை தேர்வு செய்த காரணத்தை கேட்டேன் ”தலைப்பே அவ்ளோ நல்லா இருந்துங்க சார்” என்றாள்.
ஒரு பிள்ளை “சார் எங்க எங்கேல்லாம் போவார் சொல்லுங்க எப்புடியாவது துரத்தி பேட்டி வாங்குறேன்” என்றது. ஒரு பிள்ளை குரல் அழகாக இருக்கிறது என்று சொல்லி வைத்தேன் உடனடியாக இளங்காத்து வீசுதேயே ஈஈஈ என துவங்கினாள். அனைவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை அவர்கள் ”இனிமேல்தான் சாரோட நாவலை படிக்கணும் சார்”.
சமீபத்து வரவு தமிழ்த் தேசியர்கள். குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் பாலா தமிழ் தேசியத்தின் தேவை குறித்தும், அதில் ஜெயமோகன் பங்களிக்கவேண்டிய பண்பாட்டு எல்லைகள் குறித்து ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தார். ”நீங்க சாருக்கு மெயில்…… ”
”இல்ல அவர் பதில் போடல, அதனாலதான் உங்ககிட்ட சொல்றேன். இருந்தா அவர் நம்பர் குடுங்க அவர் கிட்டயும் சொல்றேன்” குடுத்து வைப்போம் என மனம் பரபரத்தது.
வலி மிகுந்த நாட்கள் ஆறு மெழுகுவத்திகள் திரைப்படம் வந்த நாள். வேறு வேறு சமயங்களில் இரு தொலைபேசி அழைப்புகள். இரு பெண்களுமே எதையும் வாசித்தவர்கள் இல்லை. தங்கள் மகள்களை தொலைத்தவர்கள். ஆறு படத்தில் வருவது எல்லாம் உண்மை தானே. சாரை தொடர்பு கொண்டால் எங்கள் குழந்தை எங்களுக்கு திரும்ப கிடைக்க ஏதேனும் வழி கிடைக்குமா என்று கேட்டு வந்த அழைப்புகள் அவை.
தேவாங்கு சர்ச்சையில் என் சொந்த நிலத்திலிருந்து [கடலூர்] எனக்கு என் தனிப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அழைப்புகள். ”உன் ஆசான் அப்டின்னுதானே சொல்ற நீயே போய் அவர் கிட்ட இதுக்கு மன்னிப்பு கேக்க சொல்” வகையறா போன்கால்கள்.
தமிழ்நாட்டில் கடலூரில் ஜெயமோகன் ஒழிக என கோஷத்துடன் வங்கி ஊழியர்கள் ஒரு சனிக்கிழமை காலை போராடினார்கள். [என்னை கண்டதும் ஒருவர் ஒழிக கோஷத்தை உரக்க ஒலிக்க துவங்கினார்] நண்பர் அருள். “யோவ் உங்க ஆளு இவ்ளோ பேமஸா ? கடலூர்லயே போராட்டம் வெடிச்சுடுச்சே” என்றார்.
பின்னர் பண மதிப்பு சிக்கல் வந்து சனிக்கிழமை மாங்கு மாங்கு என அந்த ஊழியர் வேலை பார்த்த போது மீண்டும் பதிவான கூண்டு பதிவை அந்த ஊழியருக்கு சுட்டி காட்டினேன். லீவு போட நல்ல காரணம். பயன்படுத்திக் கொண்டாரா தெரியவில்லை.
முந்தா நாள் இளங்கோ என்பவரின் அழைப்பு. விசும்பு தொகுதி படித்திருக்கிறார். ஜெயமோகனுக்கு நிச்சயம் ரசவாதத்தின் சூக்குமங்கள் தெரியும். அவரை அறிமுகம் செய்து வைக்காவிட்டால் உயிர் தரிக்கேன் என மிரட்டினார்.
நேற்றைய இரவு ”ஹலோ ஜெயமோஹனா?”
”இல்லைங்க நான் கடலூர் சீனு”
”பரவாயில்ல இருக்கட்டும் இருக்கட்டும் நான் அவர் பக்கத்து வீடுதான். சார் மோட்டாரை நிறுத்தாமலே போய்ட்டார். ஒரே தண்ணி… போன்ல கூப்பிட்டா ஆளைக் கெடைக்கல. எப்டியாவது சார் கிட்ட சொல்லி ஆப் பண்ணிடுங்க”
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…..
கடலூர் சீனு