19. மண்ணுறு அமுது
ஏழாண்டுகாலம் அமராவதி காத்திருந்தது. ஊர்வசியே அமரகணிகையரில் தலைக்கோலி என்பதனால் அவளை மையமாக்கியே அங்குள்ள ஆடல்கள் அதுவரை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அவள் முன்னின்று ஆடியதை தொடர்ந்தாடியமையால் ஒவ்வொருவரும் அவளைப்போலவே ஆகிவிட்டிருந்தனர். அனைவரிலும் வெளிப்பட்டமையாலேயே அவள் அங்கில்லாமை மேலும் துலக்குற்றது. அவள் இடத்தில் ரம்பையோ திலோத்தமையோ நின்று நிகழ்த்தப்பட்ட ஆடல்கள் அனைத்திலும் அவள் எழுந்து வந்து மறைந்துகொண்டே இருந்தாள். ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் அவளைப்பற்றி பேசிக்கொண்டு கலைந்து சென்றனர் முனிவரும் தேவர்களும். அப்பேச்சை எடுக்கவேண்டாமென இந்திரனின் ஆணை எழுந்தபிறகு அவளைப்பற்றி எண்ணியபடி கலைந்து சென்றனர்.
“அவை நடனங்கள் உயிரிழந்துள்ளன, அரசே. கலை முழுமை கொள்வதில்லை. ஆனால் நிகழ்கையில் இதோ முழுமை என முகம் காட்டியாகவேண்டும். இங்கு ஆடலனைத்தும் அவள் இன்மையையே காட்டி எழில் சிதைந்துள்ளன” என்றார் அவையில் எழுந்த தும்புரு முனிவர். “சொல்க, ஊர்வசி எப்போது மீள்வாள்?” என்றார் சௌரவ முனிவர். அவையே அவ்வினாவுடன் இந்திரனை நோக்க அவன் தத்தளித்த விழிகளுடன் நாரதரை நோக்கினான். “மானுடக் காதலின் எல்லை என்ன என்றுணர்ந்து தன் எல்லையின்மையை கண்டடையும் வரை அவள் அங்கிருப்பாள்” என்றார் நாரதர். “அதற்கு எத்தனை காலமாகும்?” என்றான் விஸ்வவசு என்னும் தேவன். “அது அவள் ஆழத்தையும் நுண்மையையும் பொறுத்தது” என்று நாரதர் மறுமொழி சொன்னார்.
அன்று அவை நீங்குகையில் இந்திரன் நாரதரிடம் தாழ்ந்த குரலில் கேட்டான் “இசை முனிவரே! மெய்மையை அறிய அவள் விழையவில்லை என்றால் என்ன செய்வது?” நாரதர் திடுக்கிட்டுத் திரும்பி நோக்கி “ஏன்?” என்றார். “அவள் தன் அறிவை ஒத்தி வைத்திருந்தால்…?” என்று மீண்டும் இந்திரன் சொன்னான். “அறிவை விழையாத எவரேனும் உளரா? அதைத் தடுக்க எவருக்காயினும் இயலுமா?” என்றார் நாரதர். இந்திரன் புன்னகைத்து “நீங்கள் காமத்தையும் காதலையும் அறிந்ததில்லை, முனிவரே” என்றபின் அகன்று சென்றான்.
அன்றே விஸ்வவசுவையும் ஏழு கந்தர்வர்களையும் அழைத்து “நீங்கள் குருநாட்டுக்கு செல்லுங்கள். புரூரவஸின் அரண்மனையில் எப்போதும் இருந்துகொண்டிருங்கள். அங்கு என்ன நிகழ்கிறதென்பதை எனக்கு அறிவியுங்கள்” என்றான். ஒரு கருவண்டென யாழிசை மீட்டியபடி விஸ்வவசு எழுந்தான். உடன் சிறுபொன்வண்டுகளென கந்தர்வர்கள் சென்றனர். அவர்கள் சியாமைக்காக புரூரவஸ் அமைத்த சந்தனமரத்தாலான தூண்கள் கொண்ட அணிமண்டபத்தில் உத்தரங்களைத் துளையிட்டு உள்ளே புகுந்து அமைந்தனர். அங்கு இருந்தபடி நிகழ்வதனைத்தையும் நோக்கினர். சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் கேட்டு உணர்ந்தனர்.
சியாமை காதலில் ஏழு மைந்தரின் அன்னையென ஆகி கனிந்துவிட்டிருந்தாள். தன் மைந்தரினூடாக கணவனை ஏழு மடங்கு பெருக்கிக்கொண்டாள். அவன் கொண்ட அறத்தூய்மை ஜாதவேதஸில் வெளிப்பட்டது. அவன் உடலழகை கொண்டிருந்தான் ஆயுஸ். அவன் கூர்மொழியென ஒலித்தான் ஸ்ருதாயுஸ். சத்யாயுஸ் அவன் நடையை தான் கொண்டிருந்தான். ரயனும் விஜயனும் அவன் சிரிப்பின் அழியா இளமையை வெளிப்படுத்தினர். ஜயன் அவளுக்கு மட்டுமே அறிந்த அவன் நோக்கொன்றை எப்போதேனும் தன் இளவிழிகளில் மின்னச் செய்தான். ஒவ்வொன்றிலும் புதியதொரு புரூரவஸை கண்டடைந்தாள். அக்கண்டடைதலினூடாக தன் கணவனை ஒவ்வொரு நாளும் புதியவனாக மீண்டும் மீண்டும் அடைந்து கொண்டிருந்தாள்.
செவிலியின் கை உதறி ஓடிய ஜயனை துரத்திப்பிடித்து இரு குட்டிக்கைகளையும் பற்றி இழுத்துச்சென்று தானே வெந்நீர் தொட்டிக்குள் ஏற்றி அமரச்செய்து சிகைக்காய் பசை இட்டு குழல் அலம்பியபின் நெஞ்சோடு சேர்த்து மரவுரியால் தலைதுவட்டிக்கொண்டிருக்கும் ஊர்வசியை விஸ்வவசு பார்த்தான். அப்பால் முற்றத்தில் ஓசையெழக்கேட்டு அவனைத் தூக்கி இடையில் வைத்தபடி “என்ன அங்கே ஓசை?” என்று கூவிக்கொண்டு அவள் வெளியே சென்றாள். மைந்தனின் எடையால் மெல்ல தள்ளாடினாள். அங்கு பூசலிட்டு ஆடிக்கொண்டிருந்த ரயனையும் விஜயனையும் தாழ்ந்த மரக்கிளையொன்றை ஒடித்து தளிருடனும் மலருடனும் வீசியபடி துரத்தினாள்.
தேன்கூடொன்றைப் பிய்த்து மாறி மாறி வீசி விளையாடிக் கொண்டிருந்த இருவரும் துள்ளிக் குதித்து அவளுக்கு வாய் வலித்துக்காட்டிச் சிரித்தபடி ஓடி அகன்றனர். பொய்யாக அவர்களை வசைபாடியபடி மூச்சிரைக்க படியேறி வந்தாள். இடையில் இருந்த ஜயன் இரு விரல்களை வாயிலிட்டு அவள் தோளில் தலைசரித்து விழிகள் மேலெழுந்து செருக துயிலத் தொடங்கியிருந்தான். எச்சில்குழாய் அவள் ஆடைமேல் படிந்தது. மெல்ல அவனை கொண்டுசென்று சிற்றறைக்குள் வெண்ணிற விரிப்பிட்ட படுக்கையில் சாய்த்தாள்.
சேடி வந்து ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் ஆசிரியர் இல்லத்திலிருந்து வந்துகொண்டிருப்பதை சொன்னாள். “எப்போது? வந்துவிட்டார்களா?” என ஆடை திருத்தாமல் அவள் எழ “தாங்கள் முறைப்படி ஆடை அணியவில்லை, அரசி” என்றாள் சேடி. ‘விடு’ என கையை அசைத்தபடி அவள் உடல் குலுங்க விரைந்து நடந்துசென்று படிகளிறங்கி பெருங்கூடத்திற்குள் புகுந்தாள். அரண்மனை முற்றத்தில் குளம்படிகள் ஒலிக்க இரு சிறுபுரவிகளில் வந்து இறங்கிய ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் அவளை நோக்கி சிரித்தபடி ஓடிவந்து இருகைகளையும் பற்றிக்கொண்டனர்.
“இப்புரவிகளில் அங்கிருந்து நாங்களே வந்தோம்” என்று சொன்னான் ஸ்ருதாயுஸ். “நான் ஒருமுறை கூட நிலைபிறழவில்லை” என்றான் சத்யாயுஸ். இருவர் தலைகளையும் கையால் வருடி “ஆம் நான் அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் ஸ்ருதாயுஸ். “உங்கள் தந்தையும் ஒருபோதும் புரவியில் நிலை தடுமாறியதில்லை என்று அறிந்திருக்கிறேன்” என்றாள் அவள். “இன்னும் சிலநாட்களில் நான் மலைமேலிருந்து பாய்ந்திறங்குவேன்” என்றான் ஸ்ருதாயுஸ். அவன் பேசவிடாமல் மறித்து கைவீசி “எங்கள் ஆசிரியர் பலதேவர் குதிரையில் அமர்ந்து விரைந்தபடியே தரையில் கிடக்கும் குறுவாளை எடுக்கிறார்…” என்றான் சத்யாயுஸ். “நான் எடுப்பேன்… நான் அடுத்த மாதம் எடுப்பேன்” என்று மற்றவன் இடைமறித்தான்.
அரசவைக் களத்தில் இருந்து புரூரவஸ் முதல் மைந்தன் ஆயுஸுடன் பேசியபடி நடந்துவந்தான். தந்தையின் முகத்திலிருந்த எண்ணச்சுமையையும் கையசைவுகளையும் அவன் சொற்களைக் கேட்டபடி நடந்துவந்த மைந்தனின் விழிக்கூரையும் தொலைவிலிருந்தே நோக்கிநின்றாள். அருகே வந்த புரூரவஸ் “நாளை முதல் இவனுக்கு தென்மொழிகளில் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். உகந்த ஆசிரியர் ஒருவர் வந்திருக்கிறார்” என்றான். அவள் ஆயுஸைப் பார்த்து புன்னகைக்க அவன் இளையோர்களை நோக்கி “இவர்கள் எப்போது வந்தார்கள்?” என்றான். “புரவியில் நாங்களே வந்தோம்” என்றான் ஸ்ருதாயுஸ். “நிலைபிறழவே இல்லை… விரைந்து வந்தோம்” என்றான் சத்யாயுஸ்.
ஆயுஸ் அன்னையை நோக்கி புன்னகைத்தான். குழந்தை நகை அல்ல, முதியவனின் குழந்தை நகைப்பென தோன்றியது அவளுக்கு. இரு கை நீட்டி அவனை அள்ளி நெஞ்சோடணைக்க உளம் எழுந்தாலும் அது இனி முறையன்று என்று அறிந்தவளாக “முழுப்பொழுதும் அவையமர வேண்டுமா? இளமைந்தர் சற்று விளையாடுவதும் வேண்டாமா?” என்று அவனிடம் கேட்டாள். “முற்றிலும் கேட்காமல் எதையும் அறிய முடியாது, அன்னையே” என்றான் ஆயுஸ். “அறிய அறிய அதைவிட்டு அகலமுடியாது. அரசனின் அவை என்பது வாழ்க்கையின் மையம் நடிக்கப்படும் நாடகமேடை.”
மறுபக்கம் உள்ளறை வாயிலில் வந்து நின்ற முதுசெவிலி “மைந்தர் உணவருந்தும் பொழுது” என்று மெல்ல சொன்னாள். “நன்று, நானே விளம்புகிறேன்” என்றபின் “வருக இளவரசே, உணவருந்திவிட்டுச் செல்லலாம்” என முறைப்படி தன் முதல் மைந்தனை அழைத்தாள். இளையவர்கள் “நாங்கள் உணவருந்தவில்லை… இப்போது உணவருந்தவே வந்தோம்” என்று கூவினர். புரூரவஸ் தன் எண்ணங்களிலாழ்ந்தவனாக மெல்ல திரும்ப “எங்கு செல்கிறீர்கள்? மைந்தருடன் அமர்ந்து இன்று உணவருந்துங்கள்” என்றாள். “எனக்காக அங்கே குடித்தலைவர் காத்திருக்கிறார்” என்று புரூரவஸ் சொல்ல, இயல்பாக விழிதிருப்பி அவள் இரு மைந்தரையும் பார்த்தாள். ரயனும் விஜயனும் பாய்ந்து சென்று புரூரவஸின் இரு கைகளையும் பற்றிக்கொண்டனர். “வாருங்கள் தந்தையே, எங்களுடன் உணவருந்துங்கள்” என்று துள்ளினர். “சரி சரி, கூச்சலிடவேண்டாம். வருகிறேன்” என்றான் புரூரவஸ்.
இரு கைகளையும் பற்றி அவனை அவர்கள் அழைத்துச் சென்றனர். புன்னகையுடன் அன்னையைப் பார்த்த ஆயுஸ் “உங்கள் தலைமைந்தன் குறைகிறான் அல்லவா?” என்றான். “ஆம். ஆனால் அவன் வேதம் பயில்கிறான். இல்லறத்தாருடன் அமர்ந்துண்ண வேதக்கல்வியின் நெறி ஒப்புவதில்லை. இங்கு நாமனைவரும் கூடியிருக்கையில் நமக்கு மேலிருந்து நம்மை வாழ்த்தும் பீடத்தில் அவன் அமர்ந்திருக்கிறான். அது எனக்குப் போதும்” என்று அவள் சொன்னாள்.
ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் கைகளை பற்றிக்கொண்டு ஒருவரோடொருவர் ஊக்கத்துடனும் சொற்திணறலுடனும் கைவீச்சுகளுடன் ஏதோ பேசியபடி முன்னால் சென்றனர். உணவறைக்கூடத்தில் கால்குறுகிய நீள்பீடத்தில் அவர்களுக்காக இலைத்தாலங்கள் போடப்பட்டிருந்தன. கிழக்கு நோக்கி புரூரவஸ் அமர்ந்ததும் அவனுக்கு இருபுறமும் ரயனும் விஜயனும் அமர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் இடைமறித்து குரல் எழுப்பியும், மீறிச்சொல்லத் துடித்து மெல்ல தோள்பிடித்து தள்ளியும், கழுத்தில் நீலநரம்புகள் புடைக்க உடல் துடிக்க பேசிக்கொண்டு வந்த ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் உணவறை வாயிலிலேயே நின்று சொல்தொடர புரூரவஸ் “போதும் பேச்சு, வந்தமருங்கள்” என்று உரத்த குரலில் சொன்னான்.
அவர்கள் பாய்ந்து வந்தமர சியாமை “என்ன இது? முடி அள்ளித்திருத்துங்கள். முறைமை மறந்துவிட்டீர்களா?” என்றாள். ஆயுஸ் “அங்கு ஆசிரியர் இல்லத்தில் அனைத்துக்கும் முறை உண்டு. அதை மீறி தாங்களென்றிருக்கவே இங்கு வருகிறார்கள், அன்னையே” என்றான். சியாமை புன்னகைத்து “நீ கொடுக்குமிடம் அவர்களை வீணர்களாகிய இளவரசர்களாக ஆக்காமல் இருந்தால் போதும்” என்றாள். “அவர்கள் சந்திரகுலத்து இளவரசர்கள். ஒவ்வொருவருக்கும் தனிநாடும் குடியும் கொடிவழியும் அமையுமென்பது நிமித்திகர் கூற்று” என்றான் புரூரவஸ்.
முடியள்ளி தோல்நாரிட்டுக் கட்டியபடி ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் பீடங்களில் அமர்ந்து உடனே விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்கினர். ஆயுஸ் கண்களில் சிரிப்புடன் சியாமையைப் பார்த்து “இனி சில நாட்களுக்கு புரவிகளன்றி வேறேதும் அவர்கள் உள்ளத்தில் இருக்காது, அன்னையே” என்றான். புரூரவஸ் நகைத்து “ஆம், அதன் பின்னர் புரவிகள் முற்றிலுமாக சித்தத்திலிருந்து மறைந்து போகும். கால்களென்றே ஆகும். எண்ணுவதை இயற்றும். அப்போது மட்டுமே ஒருவன் புரவியேற்றம் கற்றுமுடித்தான் என்று பொருள்” என்றான்.
சேடியர் உணவுக்கலங்களுடன் வந்தனர். “இருவர் குறைகிறார்கள்” என்று இரு விரலைக்காட்டி ரயன் சொன்னான். விஜயன் “ஆம், இருவர்” என்றான். சியாமை திரும்பி சேடியிடம் “குழந்தையை எடுத்துக்கொண்டு வா” என்றாள். புரூரவஸ் “அவன் எதற்கு? துயின்றுகொண்டிருக்கும் நேரம்” என்றான். “இல்லை, அரிதாக அமையும் ஒரு நேரம். அது முழுமையடையட்டும்” என்றாள். “உனக்கு சித்தம் குழம்பிவிட்டது போலும்” என்று புரூரவஸ் சொன்னான். சியாமை புன்னகைத்தாள்.
செவிலி துயின்று கடைவாய் வழிந்த ஜயனை தோளில் தூக்கிக்கொண்டு வந்தாள். “நீயும் அமர்ந்துகொள்” என்றான் புரூரவஸ். அவனுக்கு எதிர்ப்பக்கம் முகம் நோக்கியபடி சியாமை அமர்ந்தாள். செவிலி ஜயனை அவள் மடியில் அமர்த்தினாள். உணவுக்கலங்கள் நிரந்ததும் “இன்னும் ஒருவர்” என்றான் ரயன். “அவன் இங்கில்லை. அவனுக்கு இனி பதினெட்டாண்டுகள் அன்னையும் தந்தையும் மூதாதையரும் தெய்வமும் ஆசிரியர் ஒருவரே. அனைத்தையும் அளித்தாலன்றி வேதம் ஒரு சொல்லையும் அளிப்பதில்லை” என்றான் புரூரவஸ்.
“நாங்கள் கற்பதும் வேதம்தான் என்றாரே?” என்றான் சத்யாயுஸ். “வேதங்கள் பல. நீ கற்கும் தனுர்வேதம் அதிலொன்று. அவை எல்லாம் வேதமெனும் கதிரவனின் ஒளிகொள்ளும் ஆடிகளும் சுனைநீர்ப்பரப்புகளும் மட்டுமே” என்று புரூரவஸ் சொன்னான். “அறுவர் நீங்கள். ஆறு கலைகளுக்கும் தலைவராக அமையப்போகிறவர்கள். புவியாள்வீர்கள், படைகொண்டு வெல்வீர்கள், அறம் நாட்டுவீர்கள். அவற்றினூடாக பெரும்புகழ் கொள்வீர்கள். அவையனைத்தும் பிழையற நிகழ வேண்டுமென்றால் அங்கே அடர்காட்டில் எவர் விழியும் தொடாத ஆற்றங்கரையொன்றில் எளிய குடிலில் அவன் வேதமொன்றே சித்தம் என்று தவம் இயற்றியாக வேண்டும்.”
புரூரவஸின் முகத்தில் எழுந்த உணர்வெழுச்சியைக் கண்டு சிறுவர்கள் முகம் கூர்த்து அவனை நோக்கினர். அத்தனை விழிகளிலும் இளமையின் நகைப்பு சற்றே மறைந்ததைக் கண்டு அவள் “போதும், இது அரசுசூழ்தலுக்கான மேடையல்ல. உணவு அருந்துவதற்கானது” என்றாள். தன்னருகே இடப்பட்ட இலைத்தாலமொன்றில் ஒரு கரண்டி அன்னத்தையும் நெய்யையும் பழங்களையும் தேன்கலந்த இனிப்பையும் அள்ளி வைத்தாள். சிறுகிண்ணத்தில் நுரைத்த மதுவை ஊற்றி அருகே வைத்தாள். ரயன் “அது அவனுக்கா?” என்று கை சுட்டி கேட்டான். அப்படி கேட்கலாகாதென்று புரூரவஸ் விழியசைத்து தடுப்பதற்குள் விஜயன் “அவன் அங்கு அதையெல்லாம் உண்ணலாகாதே?” என்றான். “ஆம், ஆகவேதான் இங்கு அவை பரிமாறப்படுகின்றன” என்றபின் சியாமை “உணவருந்துங்கள்” என்று கூற செவிலியர் இன்மதுவும் உணவும் அவர்களுக்கு பரிமாறினர். பேசிச் சிரித்தபடி நடுவே சிறுபூசலிட்டுக் கூச்சலிட்டபடி அவர்கள் உண்ணலாயினர்.
விஸ்வவசுவும் தோழர்களும் குருநகரிலிருந்து கிளம்பி அமராவதியை அடைந்து இந்திரனின் அரண்மனைக்குள் புகுந்து அவன் மஞ்சத்தறையில் சென்று சந்தித்தனர். நிகழ்ந்ததைக் கூறி “ஊர்வசி ஒருபோதும் மீளப்போவதில்லை, அரசே” என்றனர். விழிசுருக்கி எழுந்த இந்திரன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “அன்னையென கனிந்திருக்கிறாள். மூதன்னை என முழுமைகொள்ளும் பாதையிலிருக்கிறாள். அவ்வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் அவள் மீளமாட்டாள்” என்றான் விஸ்வவசு.
“என்னால் புரிந்துகொள்ளக் கூடவில்லை. இங்கு அவள் முழுமையிலிருந்தாள், மெய்மையிலாடினாள், முடிவின்மையில் திளைத்தாள். அங்கிருப்பதோ துளித்துச் சொட்டும் கணமென சிறுவாழ்வு. தேவர்கள் உண்டு எஞ்சிய மிச்சில். அசுரர்களின் கால்பொடி படிந்த குப்பை. அதிலெப்படி அவள் அமைய முடியும்?” என்றான் இந்திரன். விஸ்வவசு “அதை புரிந்துகொள்ளவே இத்தனை நாள் நானும் அங்கு இருந்தேன். இங்கிலாத பேருவகை ஒன்று அங்குள்ளது, அரசே. வாழும் அக்கணம் மீளாதென்று, பிறிதொருமுறை எதுவும் அமையாதென்று ஒவ்வொரு மானுடரும் உள்ளுணர்ந்திருக்கிறார்கள். எனவே அக்கணங்களில் பொங்கி முற்றிலும் நிறைகிறார்கள்” என்றான்.
புரியாமல் நோக்கி அமர்ந்திருந்த இந்திரனின் விழிகளை நோக்கி “அதைவிட இனிது சென்றவை நினைவில் மீளும் துயரம். மானுடர் ஒவ்வொருவருக்கும் சென்றகாலம் எனும் பெருஞ்செல்வம் கருவூலம் நிறைய உள்ளது. அரசே, அறியாத ஆயிரம் பண்கள் நிறைந்த ஒரு பேரியாழ் அது. இங்கு தேவர்களுக்கு அதில்லை” என்றான் உடன் சென்ற சந்திரஹாசன் என்னும் கந்தர்வன்.
பிரபாஹாசன் என்னும் பிறிதொரு கந்தர்வன் அருகில் வந்து “அதைவிடவும் இனிது எதிர்காலம் முற்றிலும் அறியவொண்ணாதது என்பது. ஒவ்வொரு படியாக கால் வைத்தேறி முடிவிலா விண்ணுக்குச் செல்வதுபோல. கண்ணுக்குத் தெரியாத மறுதரப்புடன் காய் நீக்கி பகடையாடுவதுபோல. மானுடர் கொள்ளும் இன்பங்களில் முதன்மையானது நாளை நாளை என அவர்கள் மீட்டும் பெருங்கனவு. ஒவ்வொரு நாளும் அவர்களின் வீட்டு முற்றங்கள் வரப்போகும் விருந்தினருக்காக பதுங்கிய முயலின் தோலென விதிர்த்து நிற்கின்றன. அவர்கள் இல்லக்கதவு புன்னகைக்கும் வாயென திறந்திருக்கிறது. அவர்களின் அடுமனைகளில் அனல்நீர் காத்து அன்னம் தவமிருக்கிறது” என்றான்.
சூரியஹாசன் என்னும் கந்தர்வன் “நேற்றுக்கும் இன்றுக்கும் நடுவே கணமும் அமையாத துலாமுள்ளென அவர்கள் நின்றாடும் பேரின்பத்தைக் கண்டு நானே சற்று பொறாமை கொண்டேன், அரசே” என்றான். ஜ்வாலாக்ஷன் என்னும் கந்தர்வன் “முதன்மையாக அறிதல் என்னும் பேரின்பம் அவர்களுக்குள்ளது. முற்றறிதலுக்குப் பின் அறிதல் என்னும் செயல் நிகழ்வதில்லை. இங்கு என்றும் இருக்கும் பெருமலைகளைப்போல் மெய்மை நிறைந்துள்ளது. அதில் திகழ்வதனாலேயே இங்கு எவரும் அதை அறிவதில்லை. அங்கோ ஒரு சிறுகூழாங்கல்லென கண்முன் வந்து நிற்கிறது மெய்மையின் துளி. சிற்றெறும்பென அதைக் கண்டு திகைத்து அணுகிக்கடந்து ஏறிக்கொள்ளும் உவகை அவர்களை ஆட்டிப்படைக்கிறது” என்றான்.
“ஆம் அரசே, அறிதலுக்கு நிகரான விடுதலை ஒன்றில்லை. அறியும்பொருட்டு அமர்வதே தவம். அங்கு எவ்வகையிலேனும் ஒரு தவத்தில் அமையாத ஒருவனை நான் கண்டதில்லை. உழுபவனும், வேல்தாங்கி எழுபவனும், துலாபற்றுபவனும், கன்று பெருக்கி காட்டில் வாழ்பவனும், மைந்தரை மார்போடணைத்து உணவூட்டும் அன்னையும், தவத்தில் உளம் கனியும் கணங்களை அறிந்திருக்கிறார்கள். மானுடராகச் சென்ற எவரும் மீள்வதில்லை” என்றான் சுவர்ணஜிஹ்வன் எனும் கந்தர்வன்.
சுஃப்ரஹாசன் என்னும் கந்தர்வன் சொன்னான் “அரசே, அறிந்த அனைத்தையும் சுருக்கி ஓர் அழகுப்படிமமென்று ஆக்க அவர்களால் முடிகிறது. விண்நிறைத்துப் பறந்திருக்கும் பறவைக்குலம் அனைத்தையும் ஒற்றை இறகென ஆக்குகிறார்கள். புவி மூடியிருக்கும் பசுமைக்கடலை ஒரு தளிரில் உணர்கிறார்கள். ஒற்றைச் சொல்லில் வேதமெழுகிறது. ஒரு சொல்லணியில் காவியம் விரிகிறது. கற்பனையை மூன்றாம் விழியெனச் சூடியவன் அழிவற்ற பேரின்பத்தின் அடியில் அமர்ந்த தேவன். மானுட உருக்கொண்டு சென்ற எவனும் மீள வழியே இல்லை.”
“அரசே, படிமங்களென குறுக்கி ஒளிமணி என்றாக்கி தங்கள் கருவூலங்களில் சேர்த்த பெருஞ்செல்வத்தின் மேல் அமர்ந்திருக்கிறார்கள். தங்கள் உளச்சிற்றில்களில் அவர்கள் ஒளிச்சுடரென வைத்திருப்பது அவற்றையே. அவ்வொளியில் அனைத்தையும் கண்டு பெருக்கிக்கொண்டு அவர்கள் அமைத்துள்ள உலகு நாம் அறியாதது” என்றான் ரத்னஹாசன் என்னும் கந்தர்வன். “ஒரு மலரால், தளிரால் அவர்கள் தங்கள் மைந்தருடலை அறிகிறார்கள். தழல்நெளிவால், நீர்வளைவால் மலரையும் தளிரையும் அறிகிறார்கள். சினத்தால், நகைப்பால் எரியையும் நீரையும் அறிகிறார்கள். அவர்கள் முடிவிலியில் திளைக்கும் முடிவிலி என உள்ளம் கொண்டமைந்தவர்கள்.”
அவர்களின் விழிகொண்ட திளைப்பிலிருந்தும் சொல்கொண்ட விசையிலிருந்துமே அவர்கள் உணர்ந்தது மெய்மையென்று இந்திரன் அறிந்துகொண்டான். “என்ன செய்வதென்று அறியேன், அக்கனி பழுத்து உதிரக் காத்திருப்பது ஒன்றே வழியென்று என்னிடம் சொன்னார் நாரதர்” என்றான். “கனி உதிரலாகும் அரசே, அவளோ அங்கு ஆணிவேர் அல்லவா?” என்றான் விஸ்வவசு. சினந்து திரும்பி “எனில் அந்த மரம் கடைபுழங்கி நிலம்பதிக! வேருடன் பிடுங்கி இங்கு கொண்டு வாருங்கள்” என்றான் இந்திரன். அவர்கள் விழிகளில் துயருடன் நிற்க “என்ன செய்வீர்கள் என்று அறியேன். அக்கனவிலிருந்து உலுக்கி எழுப்புங்கள் அவளை. விழித்து விலகினால், விழிப்புற்றால் அவள் அறிவாள் என்னவென்றும் ஏதென்றும். அவள் இங்கு மீள அது ஒன்றே வழி. செல்க!” என்றான்.
ஒவ்வொருவராக தயங்கி சொல்லெடுக்க முனைந்து பின் அதை விலக்கி விழிகளால் ஒருவருடன் ஒருவர் உரையாடி வெளியே சென்றனர். கந்தர்வர்கள் விஸ்வவசுவைச் சூழ்ந்து “என்ன சொல்கிறார்? எண்ணிச் சொல்கிறாரா? அறிந்து அவள் மீளவேண்டுமென்பதல்லவா இசை முனிவரின் ஆணை? கனியாத காயை பால் சொட்ட முறித்து வீசுவதால் என்ன பயன்? இங்கு வந்து எண்ணி எண்ணி துயருற்றிருப்பாளென்றால் அவள் அங்கு சென்றதே வீணென்றாகுமல்லவா?” என்றார்கள். “நாம் அதை எண்ணும் கடமை கொண்டவர்களல்ல. ஆணைகளை நிறைவேற்றுபவர். அதை செய்வோம்” என்றபின் விஸ்வவசு மீண்டும் புரூரவஸின் அரண்மனைக்கே மீண்டான்.