புரட்சி, மக்களின் திருவிழா!

index

 

சிலநாட்களாக பாதிநேரம் செல்பேசியை அணைத்தே வைக்கவேண்டியிருக்கிறது. மலையாள டிவிக்களிலிருந்து அழைத்து கொஞ்சம் பேசமுடியுமா என்கிறார்கள். ஒப்புக்கொண்டால் நம் படத்தை போட்டு “தமிழ் எழுத்துக்காரன் ஜெயமோகன் நம்முடே ஒப்பம் உண்டு. ஸ்ரீ ஜெயமோகன், அவிடே எந்து சம்பவிக்குந்நு?” என ஆரம்பிப்பார்கள். ஊழல்வழக்குகள் வழியாகத்தான் தமிழகம் இந்தியாவில் புகழ்பெற்றிருக்கிறது. மற்றவிஷயங்களைப் பேசினால் மைக்கை நாசூக்காக நகர்த்திவிட்டு நன்றி சொல்லிவிடுவார்கள்.

தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு நான் தொலைக்காட்சி ஆளுமை அல்ல என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். விடமாட்டார்கள். ’நீயெல்லாம் அண்ணா தம்பியோட பொறக்கலையா” என கண்ணீருடன் கதறவேண்டிய நிலை. உண்மையில் ஆளுமைகளுக்கு நாட்டிலே அவ்வளவு பஞ்சமா வந்துவிட்டது? மனுஷ்யபுத்திரன் பேசுவது மக்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டதென்றால் எம்.டி.முத்துக்குமாரசாமியைக் கூப்பிடவேண்டியதுதானே? அருமையாகக் கட்டுடைப்பாரே மனுஷன்.

மலையாளப் பத்திரிகைநண்பர்களின் கொடுமைகள் தனி. ”ஈ பந்நீர்ஸெல்வம் ஆரா? ஆயாள் ஸஸிகலயுடே அம்மாவனாணோ?” என்றவகை அரசியல் விசாரிப்புகள். உசாவல் முடிந்த ஐந்தாவது நிமிடம் செய்திக்கட்டுரை எழுதியாகவேண்டும். எதிரிகள் எவரையாவது கைகாட்டிவிடுவது என் வழக்கம். வன்மத்துடன் ”நீங்க ஏன் சுகுமாரன் கிட்ட கேட்கக்கூடாது? அவர் அந்தக்கால நக்ஸலைட். சூடா விஷயங்களைச் சொல்வாரு” என்றேன். அவர் என்னை கைகாட்டி விட்டிருப்பாரோ என்றும் சந்தேகம் உண்டு.

அரசியல்சூழல் நமக்கே மசமசவென்றிருக்கையில் பக்கத்து மாநிலத்தார் பரிதவிப்பதில் வியப்பில்லை. எடியூரப்பாவுக்கும் சித்தராமையாவுக்கும் சாதிய உரசல் உண்டா என்று கேட்டால் நாம் என்ன சொல்வோம்? ஒருவர் கேட்டார். “பன்னீர்செல்வம் தேவரா?” உச்சரிப்பு மென்மையானது. அப்படியென்றால் அசுரர்கள் எவர் என எண்ணசெய்தது. ”சசிகலா மூக்குலத்தோர் தானே?”. குழம்பி “ஆமாம்” என்றேன். “அப்படியென்றால் இது மூக்குலத்தோருக்கும் தேவருக்குமான சண்டையா?” நான் பதறி “அய்யய்யோ பன்னீர்செல்வமே முக்குலத்தோர்தான்” என்றேன். “ஓ, அப்படியென்றால் சசிகலாதான் தேவர் இல்லையா?”.

“என்னை விட்டுவிடுங்கள். உண்மையில் எனக்கே ஒன்றும் புரியவில்லை” என்று சொல்லி செல்பேசியை அணைத்துவிட்டேன். வீட்டில் டிவியும் இல்லை. அருண்மொழி அலுவலகத்தில். வீட்டுக்கு எவரும் வருவதுமில்லை. ஆகவே அமைதி. நான் கொஞ்சம் வெண்முரசு எழுதினேன். டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் கொஞ்சம் வாசித்து ஒரு மெல்லிய ஆன்மவிடுதலையை அடைந்தேன். எப்படி இருந்தாலும் தமிழ்நாடு தப்பிக்கும். இல்லை என்றால் அதை சாயங்காலம் யாராவது  கூப்பிட்டுச் சொல்லிவிடுவார்கள்.

மின்னஞ்சலைத் திறந்தால் ஏகப்பட்ட கடிதங்கள். ”ஏன் நீங்கள் கருத்து சொல்வதில்லை?” உடனடி விஷயங்களில் கருத்துச் சொல்வதில்லை என்று ஒரு கெத்து காட்டினேன். அப்படியென்றால் ஜல்லிக்கட்டு விஷயத்தில் கருத்து சொல்லுங்கள் என்று ஒருவர் சொன்னார். “சார், உண்மையிலே எனக்கு என்ன நடக்குதுன்னே புரியலை. அதனாலேதான் கருத்தே சொல்றதில்லை” என்றேன். “என்ன நீங்க, இப்ப என்ன நடக்குதுன்னு தெரிஞ்சா மத்தவங்க கருத்து சொல்றாங்க? ஒரு ஒப்பீனியன் தானே? சொன்னா என்ன?”

ஆமாம், ஒப்பீனியன் எல்லாருக்கும் இருக்கலாம் அல்லவா? ஒப்பீனியன் என்பது மிக அவசியமான ஒன்று. அதை பலவகையில் பயன்படுத்தலாம். ஒப்பீனியன் உள்ளவர்கள் வெளியே செல்லும்போது பிறருடைய ஒப்பீனியனை அதைவைத்து தடுக்கமுடியும்.திரும்பிவந்து வீட்டுக்குள் செல்லும்போது அதை மடித்து ஓரமாக வைத்துவிடலாம்.

“சார் நீங்க யாருக்கு எதிரா கருத்து வச்சிருக்கீங்க?” என்றார் பக்கத்துவீட்டு வங்கியாளர். “யாருக்கு எதிராவா? நானா?” என்றேன் திகைப்புடன். “ஏன் சார், அரசியலிலே ஒரு ஸ்டேண்ட் வேணும்லா?” வேண்டும்தான். ஆனால் ஏன் அது எதிராக இருக்கவேண்டும்?. “சார், என்ன சொல்லுதீக? இப்ப நாம எப்டி ஒரு முடிவ எடுக்குதோம்? நமக்கு இன்னாரைப் பிடிக்காது. அவருக்கு எதிரிய சப்போர்ட் பண்ணுதோம். அதுதானே ஸ்டேண்டு? நல்ல ஒரு எதிரி இல்லேன்னாக்க பின்ன மயிராட்டா ஸ்டேண்ட் எடுத்து வெளங்குகது?”

“ஆமாம்” என்றேன். “ஆனா எனக்கு எதிரின்னு ஒருத்தரும் இல்லியே” என்றேன். “அடாடா ஏன் சார்?” என்றார். “எனக்கு யாரையுமே தெரியாது சார்”. அவர் உற்சாகத்துடன் “அப்ப அவந்தான் சார் நம்ம எதிரி. எப்டி தெரியாம ஒளிச்சு இருக்கான் பாத்தியளான்னு ஆரம்பிக்கவேண்டியதுதானே?” நான் பம்மி “எதுக்குங்க?” என்றேன்.

”என்ன இப்டி கேட்டுட்டீக? ஒரு எதிரி இருந்தாத்தான் நாம ஒரு ஆளூண்ணு இருப்பம் சார். மோடிய இல்லாட்டி கருணாநிதிய கிளிகிளீன்னு கிளிச்சா நமக்கு ஒரு இதுதானே?” என்றார். ”நம்ம எதிரி இன்னின்ன மாதிரி சூழ்ச்சி பண்ணுதான்னு நினைக்குதோம். ஒடனே நாம அதுக்கு எதிரா சூழ்ச்சி பண்ணுதோம். காலம்பற எந்திரிச்சு கட்டன்சாய குடிக்கிற நேரத்திலேயே லைஃப் தொடங்கிரும்லா?”.

நான் குரல்கம்ம “நான் சூழ்ச்சில்லாம் பண்ணுறதில்லீங்க” என்றேன். “என்ன சார் சொல்லுதீக, இப்ப செய்யல்லேன்னாக்க எப்ப செய்ய போறீக? ஹைடைம்லா? வாங்க நானே சொல்லித்தாறேன். சூப்பரா செஞ்சுபோடலாம். சூழ்ச்சி பண்ணணும் சார். சூழ்ச்சி பண்ணேல்லன்னாக்க பின்ன என்ன அரசியல்?” என்றார்.

நான் “அத எங்க போயி பண்ணுறது?” என்று கேட்டேன். “ஃபேஸ்புக்கிலேதான்” என்றார். “எனக்குத்தான் ஃபேஸ்புக் அக்கவுண்டே இல்லியே” அவர் அயர்ந்து “ஓ” என்றார். பின்னர் “சவம், ஒண்ணை தொடங்கிப்போட்டா அதுபாட்டுக்கு கெடக்கும்லா?” என்றார். குரல்தாழ்த்தி “பயமாட்டிருந்தா ஃபேக் ஐடி போரும். நமக்கு நாலஞ்சு ஃபேக் ஐடியாக்கும் உள்ளது. சொந்தப்பேரில தொடங்கினாக்க வில்லங்கம் பாத்துக்கிடுங்க. மக கெட்டிப்போறதுக்கு நிக்காள்லா?”

”அருண்மொழி என்னமாம் சொல்லுவா?” என்றேன். “சார், இப்பல்லாம் பொம்பிளையாளுகதான் அரசியலிலே ஏறி நிக்காளுக. மெரினாவிலே ஓரோண்ணும் சங்கப்பிடிச்ச கோளி மாதிரி என்னா சத்தம் பாத்தியள்லா?” என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”சரி சார்” என விடுபட்டேன். “சாயங்காலம் வாறேன்… ஒரு நல்ல எடமா பாப்பம் என்னா?” என்றார்.

களைப்புடன் டீக்கடைக்குச் சென்றேன். அங்கே உச்சக்குரல் விவாதம். “இவன் அவளுக்க அண்ணன் மகனாக்கும். அவன் பெண்ணெடுத்த வகையிலே மத்தவன் நேரே மச்சான். அவளுக்க மூத்த மாமனுக்க மகளாக்கும் இவள கெட்டியிருக்கது. அவளுக்க எளையவன் மத்தவன்.. ”

நுணுக்கமான செய்திகள். டிவி சீரியலாக இருக்குமோ? “பெரியவரு என்ன சொல்லுதாரு?” என்றார் ஒருவர். “:அவரு கெடப்புல்லா? கைய அனக்க முடிஞ்சா லெட்டரு எளுதமாட்டாரா?” அரசியலேதான். எவ்வளவு உட்சிக்கல். எத்த்தனை ஊடுபாவுகள். அயோவா அல்லது பெர்க்லி பல்கலை சார்பில் எவரேனும் ஆய்வுசெய்ய ஓரிரு ஆண்டுகளுக்குள் வந்திறங்காமலா இருக்கப்போகிறார்கள்?

எல்லா முகங்களும் மலர்ந்திருந்தன. அத்தனைபேருமே உச்சகட்ட உற்சாகத்தில் இருந்தனர். “ஐபிஸி என்ன சொல்லுதுண்ணாக்க அதில மூணு கிளாஸ் இருக்கு. முத கிளாஸிலே…”. இன்னொரு பக்கம் “ஒத்த அடி… வச்சான்லா வேட்டு…நான் என்ன சொல்லுதேன்னாக்க…”

சோர்வுடன் திரும்பி வந்தேன். மீன்கூடை கொண்டு சென்ற எலிஸாம்மாள் “சொத்தெல்லாம் பிடுங்கிட்டு செயிலிலெ அடைச்சுப்போட்டு முக்காலியிலே கெட்டிவச்சு அடிக்கணும்ணு அமேரிக்காக்காரன் சொல்லிப்போட்டானாம் பிள்ளே? தெரியுமா?” என்றார். என்ன ஒரு மகிழ்ச்சி. ”தெரியாது” என்றேன். “மேலே ஏசுவும் மாதாவும் உண்டுல்லா?” என்றபடி சென்றார்.

நாடே இப்படி செயலூக்கம் கொண்டு இதுவரை பார்த்ததில்லை. மெரினாப்புரட்சிக்கு ஒரு படி மேல்தான். புரட்சி மக்களின் திருவிழா என்றார் அந்தக்கால மார்க்ஸிஸ்ட் யாரோ. அப்படியென்றால் மக்களின் திருவிழாக்களெல்லாம் புரட்சிகளா? சுசீந்திரம் தேர்த்திருவிழாவும் ,சவேரியார்கோயில் கொடையும், கோட்டாறு கல்லுபள்ளி உறூஸ் நேர்ச்சையும் புரட்சிதான் என்று அ.மார்க்ஸ் ஏதாவது எழுதித்தொலைப்பாரோ? மூன்றாவதைச் சொல்லமாட்டார், அவரெல்லாம் சலவைசெய்த வகாபியத் தூய்மைவாதி.

வீட்டுக்கு வந்தபோது களைத்துப்போயிருந்தேன். உலகத்திற்கே புரியும் ஒன்று எனக்கு மட்டும் என்ன ஏதென்றே பிடிபடவில்லை. எங்கே சென்று சொல்ல? மலையாள இதழிலிருந்து அழைப்பு. “ஜெயேட்டா ஈ எடபாடு பழனிஸ்வாமீ ஆராணு? எந்தா அயாள்டே எடபாடு?” உண்மையிலேயே யார் அவர்?  “யார்?” என்று கேட்டவனிடமே கேட்டேன். “பின்ன விளிக்காம்” என்று வைத்துவிட்டான்.

நாட்டில் என்னென்னவோ நடக்கிறது. எப்படியானாலும் இந்தப்புரட்சியும் ஓயும். ஓயாவிட்டாலும் நாம் வீட்டுக்கதவை மூடிக்கொள்ளமுடியும். எவ்வளவு ஆறுதல்!

முந்தைய கட்டுரைஅங்கே அப்பா காத்திருக்கிறார்!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16