உங்கள் எழுத்தை முதலில் வாசிக்க முயன்ற நாட்களை அடிக்கடி நினைத்து பார்ப்பேன். இத்தனை கடினமாய் ஏன் இவர் எழுத வேண்டும் என்று சலித்திருக்கிறேன். பிறகு புரிந்தது, உங்கள் எழுத்துக்கள் கேட்பது சிதறாத கவனம். அதைக் கொடுக்கும் போது பதிலுக்கு கிடைப்பது பெரும் நிறைவு. வெண்முரசு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து உங்களை வாசித்து வந்தாலும் சமயங்களில் காரணம் ஏதுமின்றி முழுமையாய் துண்டித்து கொண்டு சோதித்து பார்த்திருக்கிறேன்.
பலரை போல எனக்கும் கவிதை எழுத பிடிக்கும். ஆனால் உங்களை வாசிக்க ஆரம்பித்ததும், என் கவிதை எழுதும் நம்பிக்கையை இரக்கம் இல்லாது நீங்கள் தகர்த்தீர்கள். என் மானசீக குருவாகிய உங்கள் எழுத்தின் வழியே நான் பலவற்றை அறிந்துக் கொண்டேன் – எப்படி ஒரு படைப்பை அணுக வேண்டும் (குறிப்பாக கவிதையை), எது இலக்கியம், எது வணிக எழுத்து, இரண்டும் இருக்க வேண்டிய அவசியம், நகைச்சுவை என்பது என்ன என்று இப்படி இன்னும் நிறைய. உங்களுடைய பரந்துப்பட்ட படிப்பு, இமைப்பதை போல அனிச்சையாய் நீங்கள் எழுதி கொண்டே இருப்பதை எல்லாம் பார்த்து விட்டு நான் எழுதுவதை குறைத்துக் கொண்டேன்.
நேரில் 2 முறை பார்த்தும் எனக்கு பேச நா எழவில்லை -என் உயரத்தையும் ஆழத்தையும் காட்டிக்கொடுத்து விடும் என்ற அச்சமே. இப்போதும் அதுவே காரணம். “Cliche” ஆக போகிறேன் என்று நினைக்காதீர்கள். பெரும்பாலும் உண்மை என்பது ஒன்றே உடைகள் மட்டுமே வேறு.
இன்று விகடனில் “கள் மணக்கும் மலர்” படித்தேன். மாலை நேரத்து வானம், ஒரு கவிதை, இரவு நேர இசை – தேவகணமாய் மாற்றும் வித்தை கற்றவை இவை. அதில் ஒன்று தான்
நன்மை செய்யும் சலவைக்காரி
கஞ்சிப்பசையிட்டு எடுத்து
கல்லில் அடித்துப் பிழிந்து
குளிர்ந்த குளத்தில் இடுகையில்
நீரில் பிரியும் துணிபோல
அகன்ற இலைகள் கொண்ட
பகன்றையின் பெரிய மலர்
துவர்ப்பும் இனிப்பும் மிக்க
கள் போல மணக்கும்
இதுபோன்ற ஒரு மாலைப்பொழுது
அவன் பிரிந்து சென்ற
அந்த நாட்டிலும் இருக்காதா என்ன?
இதில் சலவைக்காரி என்பதை மாயை அல்லது அறிவு என்றும், துணி என்பதை தலைவியின் மனம் என்றும், மலரை தலைவனின் மனம் என்றும் வைத்து படிக்கும் போது, குழந்தையின் நுனி விரல் தீண்டலில் திறக்கும் சிலிர்ப்பினை கொள்கிறேன் நான். “இனிய நினைவுகளை அகழ்ந்து இன்று அவன் இல்லாத நிஜத்தில் அதை அறைந்து, அழுது அழுது நீர் வழியாக இளகி கொள்ளும் என்னை போல், கள் சுவைப்போன்ற உள்ளதைக் கொண்ட அகன்ற மார்பினின் நெஞ்சத்தை மலர வைக்கும் பொழுது ஒன்று அங்கே இருக்காதோ” என்றே மாற்றி படிக்கிறேன்.
நன்றி இதை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு
சரி தவறு என்ற துலாக்கோலில் நிறுத்தாமல், நினைத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்ற திருப்தியோடு தூங்க செல்கிறேன்.
வி. பிரசாத்
*
அன்புள்ள பிரசாத்,
நான் 1999 ல் கேரள வார இதழான மாத்யமத்தில் அக்கட்டுரைத் தொடரை எழுதினேன். பின்னர் அதை தமிழில் விகடனில் எழுதினேன்.
அதை எழுதும்போதிருந்த நோக்கங்கள் சிலவற்றை அன்றே வகுத்துச் சொல்லியிருந்தேன். சங்கப்பாடல்களை ஒரு மதநூலை வாசிப்பது போல ‘சரியான’ பொருள் கொண்டு வாசிப்பதற்கான மனநிலையையே தமிழாசிரியர்கள் உருவாக்கினர். பொழிப்புரைகள் வழியாகவே அவை புரிந்துகொள்ளப்பட்டன. அவற்றை பழந்தமிழரைப் பற்றி அறியும் பண்பாட்டு ஆவணங்கள் என்று மட்டுமே பார்த்தனர்
நான் அவை தொல்சான்றுகள் அல்ல என்றும் இன்றும் வாழும் கவிதைகள் என்றும் காட்டவிரும்பினேன். கவிதை என்றுமுள்ள வாழ்க்கையைச் காட்டவேண்டும். நம் சொந்த வாழ்க்கையை வைத்துப் புரிந்துகொள்ளப்படவேண்டும். அதாவது சங்கப்பாடல்கள் கவிதைகள் என்றால் அவை பழந்தமிழர் வாழ்வைக் காட்டுவனவாக இருக்கக்கூடாது, நம் வாழ்க்கையை நமக்கு தெளிவுறுத்துவனவாக இருக்கவேண்டும்
கவிதையை வாசிப்பதென்பது ‘பொருள்கொள்வது’ அல்ல. பொருளை ‘உருவாக்குவது’. கவிதையை வாழ்க்கையாக விரிவாக்குவது. அதை ஒவ்வொரு வாசகனும் தன் வாழ்க்கையை ஆதாரகளமாகக் கொண்டு செய்யவேண்டும். என் வாழ்க்கையை கொண்டு அதைச் செய்து காட்டினேன். அதுதான் அந்நூல்
இன்று யோசிக்கும்போது அந்நூலின் வெற்றியே அதில் எங்குமே கவிதையைப் பொருள்சொல்லி விளக்கவில்லை என்பதும் எப்படி பொருள் கொள்வதென்று வழிகாட்டவே இல்லை என்பதும்தான். அந்த அனுபவக் குறிப்புகளில் இருந்து கவிதைக்குச் செல்லும் பாதை வாசகனின் கற்பனைக்கே விடப்பட்டுள்ளது
ஜெ,
***