‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14

14. இருளாடுதல்

“ஊரு என்னும் தொடையில் பிறந்தமையால் அவள் ஊர்வசி என்றழைக்கப்பட்டாள். இந்திரனின் அவையில் ஆடற்கணிகையரிலும் பாடற்கணிகையரிலும் அவளே தலைக்கோலி என அமைந்தாள். பாடகியர் அனைவரின் குரலினிமையும் அவளில் அமைந்தது. அவர்கள் அனைவரும் கொண்ட எழிலசைவுகளின் நுண்மைகள் அவள் உடலில் சூழ்ந்தன. தெய்வங்களுக்குரிய அருமலர் என்பதனால் தேவர் தலைவனும் அணுக முடியாத கன்னியாக அவள் இருந்தாள். முனிவர் அவளை பெண்ணுருவில் எழுந்த விண்மலர் என்று வாழ்த்தினர். அத்தகைய கன்னியொருத்தியை மானுடன் ஒருவர் அடைந்தார். அவரே உம் குலமூதாதையாகிய புரூரவஸ்.”

ஊர்வசியின் சிற்றாலயத்தின் படியில் அமர்ந்து கைகளை மார்பில் கட்டியபடி பீமன் கேட்டிருக்க, எதிரே கால்சுவடு வைத்து, கை முத்திரை காட்டி, விழிசலித்து உடல்நெளித்து கதை தன்னில் நிகழவிட்டு நின்றிருந்தான் முண்டன். “பெருந்தோளரே, கேளுங்கள். புரூரவஸ் சந்திரகுலத்தின் முதல் மன்னர். இன்று பாரதவர்ஷமெங்கும் கொடியும் முடியும் கோலும் கொண்டமர்ந்திருக்கும் சந்திரகுலத்து அரசக்குடிநிரைகள் அனைத்துக்கும் முதல்தாதை அவரே.”

imagesபிரஜாபதியாகிய அத்ரிக்கு அனசூயையில் வெண்நுரைக்குழலும் வெள்ளிமின்னும் உடலும் கொண்ட அழகனாகிய சந்திரன் பிறந்தான். அவன் தேவகுருவாகிய பிரஹஸ்பதியிடம் மெய்யறிதல் கற்கும்பொருட்டு சென்றமைந்தான். வியாழன் என விண்ணில் ஒளிரும் பிரஹஸ்பதி நடைமுறைமெய்மை எனும் கொள்கையின் முதலாசிரியன். “எது தன்னலமோ அதையே தன்னுள்ளம் விழையும். எது நிகழும் விழைவோ அதுவே அகம் ஏற்கும் உண்மை. ஏற்கும் உண்மையே நடைமுறை உண்மை, ஏற்கமுடியாத உண்மை வெறும் கனவு. அதை அறிந்தாலென்ன, அறியாவிட்டாலென்ன?” என்றார் குரு. ஆம் என அடிபணிந்து ஏற்றான் சந்திரன். உலகாண்மை என அவர் அவனுக்களித்த மெய்மை அழைக்கப்பட்டது.

குருவின் துணைவி தாரை. ஆசிரியர் மாணவனுக்களிக்கும் கல்வியை நாளும் கேட்டுக்கொண்டிருந்தாள். முதியவராகிய வியாழனின் விலக்கத்தால் சலித்திருந்த அவள் ஒருநாள் இளைய மாணவனை காமத்துக்கு அழைத்தாள். அவன்மேல் அவள் காமம் கொண்டிருப்பதை அறியாது அவன் முகம் தன்னுள் எழுவதைக்கொண்டு அவள் அறிகையில் அக்காமம் முற்றிலும் வளர்ந்துவிட்டிருந்தது. அவன் உடலை அவள் ஓரவிழியால் பலமுறை நோக்கியதுண்டு. நோக்கியகணமே எழும் உளஅதிர்வால் படபடப்புகொண்டு விழிவிலக்கி பிறிதொன்றில் மூழ்குவாள். முகம் சிவந்து மூச்சு சீறிக்கொண்டிருக்கும். பின்னர் கண்கள் கசிய மீள்கையில் தன் தனிமையை எண்ணி ஏங்குவாள்.

கணவனுடனிருக்கையில் அறியாது அவன் முகம் நினைவுக்கு வருவதனால் அவர் தொடுகைகள் அவளை குளிர்ந்து தன் தோலுக்குள் தசைகளுக்குள் ஒளிந்துகொள்ளச் செய்யும். ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அவர் தொடுகை அவனுடையதென்றாகும். அவள் காமத்தால் எரிந்தெழுந்து ஆயிரம் கைகள் கொண்டு அவரை அள்ளித் தழுவிக்கொள்வாள். புதுமழைக் காட்டாறென அவரை சுருட்டிக்கொண்டுசெல்வாள். பின்னர் மீண்டு எழுகையில் அவையனைத்தையும் கடந்து பிறிதொரு நதிக்கரைச் சதுப்பில் தன்னந்தனிமையில் சித்தம் மயங்கிக் கிடப்பாள். அப்போது அவர்கள் இருவரையும் எண்ணி அவளுக்குள் முற்றிலும் ஒளிந்துகொண்டு ஒரு சிறுமி புன்னகை செய்வாள்.

ஆனால் அவள் உள்ளத்தை அவன் அறிந்திருக்கவில்லை. அவன்மீது கொண்ட காமத்தாலேயே அவள் தன்னை அவனிடமிருந்து முற்றிலுமாக மறைத்துக்கொண்டாள். அவனிடம் கடுமுகம் மட்டுமே காட்டினாள். ஏதென்றில்லாமல் அவனிடம் முனிந்தாள். அவனைப்பற்றி கணவனிடம் பொய்க்குற்றம் சொன்னாள். தன் மாணவர்களில் இளையோனும் அழகனுமாகிய அவன்மேல் மனைவி சொன்ன பழுதுகள் அவருள் நுண்ணிய உவகையை நிறைத்தன. அவர் அவனுக்காக அவளிடம் நல்லுரை சொன்னார். அவனை வேண்டுமென்றே அழைத்துவந்து தன்னுடன் உணவுக்கு அமரச்செய்தார். அவர்கள் இருவரையும் இணைத்து நகையாட்டுரைத்து சிரித்து மகிழ்ந்தார்.

அவள் மேலும் மேலும் சினம் கொண்டு விலக அவர் இன்னும் இன்னும் என அவ்வாடலை முடுக்கினார். அவளையும் அவனையும் முற்பிறவிக் காதலர்கள் போலும் என்று ஒருமுறை சொன்னார். அவள் அரைக்கணம் விழிதிடுக்கிடுவதைக் கண்டு நகைத்து “அன்று கொண்ட நெருக்கத்தால் உருவான பகைமை இது” என்று சிரித்தார். அவள் பற்களைக் கடித்து “இனியொரு சொல் எழுந்தால் இங்கு நாக்குபிழுது இறப்பேன்” என்றபின் எழுந்து அடுமனைக்குள் சென்றாள். முலைவிம்ம விழிகசிய அங்கே நின்றாள். உணவில் கையளைந்தபடி அமர்ந்திருந்த சந்திரன் எழுந்து கைகழுவிவிட்டு ஆசிரியரை வணங்கி மீண்டான்.

அடுமனைக்குள் சென்று அவளை இடைவளைத்து “என்ன இது? வீண்சொல் சொல்லவும் உரிமையில்லையா எனக்கு?” என்றார். “இனி அவ்வண்ணம் ஒரு சொல் எழலாகாது. நான் உயிர்சூடமாட்டேன்” என அவள் விம்மினாள். “மூடப்பெண்ணே, உன்னை நான் அறியமாட்டேனா?” என்று சொல்லி அவளை அணைத்துக்கொண்டார். மணமாகி நெடுநாளானதனால் இருவர் நடுவே இருந்த உளமாடல் ஓய்ந்து உடற்தழுவல் தோலில் மட்டுமே என்றாகிவிட்டிருந்தது. அந்தப் புதிய நுண்விளையாட்டு தன்னை மீண்டும் அவளிடம் அணுக்கம் கொள்ளச்செய்வதை அவர் உணர்ந்தார்.

அந்த ஆடலை இருபுறமும் இருவரும் விழிமூடி நின்று வளர்த்தெடுத்தனர். அவளைச் சீறவைத்து பின் அழச்செய்து அணைத்துக்கொள்கையில் மெய்க்காமம் உடலில் ஊறியவளாக இருப்பதை அவர் உள்ளூர அறிந்திருந்தார். எங்கோ உள்ளுக்குள் ஓர் எச்சரிக்கை ஒலித்தாலும் அது தொலைவின் போர்முரசம்போல தன்னியல்பான கிளர்ச்சியையே அளித்து காமத்தை துடிப்புகொண்டதாக்கியது. அவளோ மேலும் மேலும் சினம்கொண்டு கடுஞ்சொல் சொன்னாள். ஒரு கட்டத்தில் அதைச் சொல்லவேண்டாமென்றே ஆகியது. ஒரு விழிச்சந்திப்பும் சீண்டும் ஒரு சிரிப்பும் மட்டுமே அதற்கு போதுமென்றாகியது. அச்சொற்களால் தன் காமத்தை முழுமையாக ஒளித்துக்கொள்ளமுடிவதைக் கண்டபின் அவள் அதை மீண்டும் விரித்தெடுத்தாள்.

ஒருநாள் அவன் பிரஹஸ்பதியின் பூசனைக்காக மலர்கொய்து கொண்டுவந்தான். ஒரு மலரை தன் குழல்சுருளில் செருகியிருந்தான். தேவருலகின் தென்கிழக்கு மூலையில் நின்ற அந்த நறுமணமலர்மரத்தடிக்குச் சென்றபோது இயல்பாகவே அவள் நினைவெழுந்தது. அவன் உடல் அவள் உடலை அவன் கண்ட கணங்களை மட்டும் தொட்டெடுத்து தன்னை மீட்டிக்கொண்டது. அந்த மலர்களில் ஒன்றை தன் குழலில் சூடியபோது அவன் அக்கிளர்ச்சியில் அன்று முழுக்க நீடிப்பதைப்பற்றியே எண்ணியிருந்தான்.

ஆனால் அவனை எதிர்கொண்ட அவள் விழிகள் திடுக்கிட்டவைபோல மாறுவதைக் கண்டான். சற்றே பருத்த அவள் உதடுகள் மெல்ல விரிசலிட மேலுதடு வளைந்து வேட்கை காட்டியது. நீர்மை படர்ந்த விழிகளைத் திருப்பி முலையிணை விம்ம “அவர் இல்லை” என்றாள். அச்சொல்லிலேயே அனைத்தையும் அவள் சொல்லிவிட்டதை நெடுங்காலம் கழித்து அதை எண்ணத்தில் மீட்டியபோது உணர்ந்தான். ஆனால் அவனுள் வாழ்ந்த காமம் அதன் முழுப்பொருளையும் உணர்ந்துகொண்டிருந்தது அப்போதே. “அறிவேன்” என்றபின் மலர்களை கொண்டுசென்று வைத்துவிட்டு வந்தான்.

அவள் அவன் வழியில் மூச்சிரைக்க விழிதாழ்த்தி நின்றிருந்தாள். மேலுதட்டில் வியர்வை பூத்திருந்தது. அனல்கொண்ட கலம் என அவள் உடல் சிவந்திருந்தது. இருவரும் அசைவிழந்து நின்றனர். அவள் இமைகள் தாழ்ந்திருந்தமையால் நோக்கை அறியமுடியவில்லை. ஆனால் உடலே விழியென நோக்கு கொண்டிருந்தது. அவள் விழிகள் சரிந்து தன் வலமுலையை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து அவன் உடல் சிலிர்த்த கணம் அவள் நீள்மூச்சு ஒன்றை விடுத்தாள். அவன் அக்கணமே அவளை தாவித்தழுவிக்கொண்டான்.

அவளுக்குள் மூழ்குகையில் “இது நெறியல்ல. எவ்வகையிலும் முறையும் அல்ல” என்று கூறிய அவனிடம் “நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு” என குரு சொன்னதையே தானும் உரைத்தாள் தாரை. நோக்கம் கூர்கொண்டவர்களுக்கு சொல்மகள் துணைசெல்கிறாள். சந்திரன் அவளிடம் பணிந்தான். உடலுருகி அனல்கொள்ளும் அரணிக்கட்டைகள்போல அவர்கள் காதலாடினர்.

அதன்பின் அவர்களால் பிரிந்திருக்க இயலவில்லை. ஓர் உறவே அவர்களின் உடல்கள் அதன்பொருட்டென்றே அமைந்தவை என அவர்களுக்குக் காட்டியது. அதுவன்றி பிறிதுநினைப்பே இல்லாமலாக்கியது. சந்திரன் தாரையை அழைத்துக்கொண்டு வந்து தன் வெள்ளிவேய்ந்த அரண்மனையில் குடியேறினான். ஆசிரியர் அறிந்தால் தன்னை தீச்சொல்லிடக்கூடும் என்று அஞ்சினான். தேவருலகே தன் செயலைப் பழிக்குமென அறிந்திருந்தான். எனவே அவளை ஓர் சிறு அல்லிமொக்கென ஆக்கி தன் அரண்மனைச் சுனையில் விட்டான். அந்தியில் அவன் ஒளிகொண்டு எழும்போது அவளும் மலர்ந்தாள். அவர்கள் ஒளியுடன் ஒளி என கூடினர்.

MAMALAR_EPI_14

துணைவியைக் காணாத பிரஹஸ்பதி அவளைத் தேடி நாற்புறமும் மாணவர்களை அனுப்பினார். அவர்களால் அவளை கண்டடைய முடியவில்லை. அசுரரோ அரக்கரோ அவளை கவர்ந்து சென்றிருக்கக்கூடுமென்று அவர்கள் எண்ணினர். அனைத்துலகுகளிலும் வண்டுகளாகவும் தும்பிகளாகவும் வல்லூறுகளாகவும் நாகங்களாகவும் சென்று அவளை தேடினர். ஒவ்வொருவரும் சோர்ந்தும் கசந்தும் திரும்பிவந்தனர். அவள் எங்குமில்லை, அவள் அழிந்துவிட்டிருக்கக்கூடும் என்றனர்.

துணைவி இறந்தாள் என அறிந்ததும் வஞ்சமும் சினமும் அகன்று பெருந்துயர் மட்டுமே எஞ்சிய பிரஹஸ்பதி அவள் புழங்கிய அடுமனையிலும் புழக்கடையிலும் அமர்ந்து அவளை நினைத்து ஏங்கினார். அவளை மீண்டும் காணலாகாதா என எண்ணி விழிநீர் விட்டார். அவள் அணிந்த ஆடைகள் பேழைக்குள் இருப்பதைக் கண்டு எடுத்து தோளிலிட்டு அவள் என எண்ணித் தழுவி நெஞ்சுலைந்தார். பின் எவரும் அறியவில்லை என்று எண்ணி அவ்வாடைகளை தான் அணிந்தார். அவள் கழற்றிவைத்துவிட்டுச் சென்ற அணிகளையும் பூண்டபோது அவளென்றே ஆனார். இடையொசிய நடந்து ஆடியில் தன்னை நோக்கியபோது அவர் உள்ளம் அவள்கொண்டிருந்த விழைவைச் சூடியது.

“செல்க, அவள் இங்கு வந்துசென்ற என் மாணவன் சந்திரன் இல்லத்தில் உள்ளாள்” என அவர் கூவினார். மாணவர்கள் சென்று சந்திரனின் அரண்மனையை மொய்த்தனர். “அவள் இங்கில்லை, நான் ஏதுமறியேன்” என சந்திரன் சொன்னான். “தேடுங்கள், அவள் இங்கிருந்தால் அழைத்துச்செல்லுங்கள். இல்லையென்றால் என்மேல் எய்த பழிக்கு மாற்று சொல்லுங்கள்” என்றான். அவர்கள் ஈயென்றும் கொசுவென்றும் வண்டென்றும் மாறி ஆயிரம் பளிங்கறைகள் கொண்ட அவ்வரண்மனையை இடுக்கு எஞ்சாமல் தேடினர்.

அவர்களில் ஒருவன் வண்டென்றாகி சுழன்று நீராழங்களில் அறைகளுள்ளனவா எனத் தேடினான். களைத்தபோது வண்டின் இயல்பால் அருகே இருந்த அல்லிமொட்டுமேல் அமரச்சென்றான். சலிப்போசையுடன் அது அவனை உதறியது. அக்கணமே அவள்தான் அது என உணர்ந்த அவன் “இங்குள்ளார் நம் ஆசிரியர்துணைவி” என்று கூவினான். மாணவர்கள் ஓடிவந்து மலரைச் சூழ்ந்தனர். மலர்வடிவம் கொண்டிருந்த தாரை எழுந்து சினத்துடன் “ஆம், நான் இங்கிருக்கிறேன். இவரே என் கொழுநர். இங்கிருப்பதே என் விழைவு” என்றாள்.

“தாங்கள் அவர் துணைவி, இது முறையல்ல” என்றான் சுக்லதாரன் என்னும் முதல்மாணவன். அவள் விழிசீற நாகம்போல் தலைசொடுக்கி எழுந்து “சென்று சொல்லுங்கள் அவரிடம், அவர் சொன்ன உலகாண்மையின் நெறிப்படியே நான் இங்கிருக்கிறேன் என. அவர் தன் சொற்களை மறுப்பார் என்றால் இங்கு வந்து அதை சொல்லட்டும், நான் உடன்செல்கிறேன்” என்றாள். பெண்முகம் அதன் அனைத்து எழில்களையும் அப்படி ஒருகணத்தில் இழக்கமுடியும் என்பதைக் கண்டு சுக்லதாரன் திகைத்தான். அக்காட்சியில் அவளை அருகே நின்ற சந்திரனே வெறுத்தான்.

மாணவர்கள் சென்று அதைச் சொன்னதும் உள்ளம் தளர்ந்த பிரஹஸ்பதி “இல்லை, வாழ்நாளெல்லாம் நான் சொல்லிச்சேர்த்த கொள்கையை கைவிடமுடியாது” என்றார். “எப்படி அவள் இதை செய்தாள்? எவ்வண்ணம் உளம் துணிந்தாள்?” என ஏங்கினார். “நான் என் சொற்களை விழுங்குவேன் என்றால் வீணன் என்றே ஆவேன். என்னால் அது இயலாது” என்றார். தேவர்கள் தாரை சொன்னதையே ஏற்றனர். “ஆம், அவள் செய்தது அவள் கொழுநன் காட்டிய நெறிப்படியே. அவர் அதைத் துறக்காத வரை அதில் பிழையென்று ஏதுமில்லை. தேவர்கள் அவருக்கு துணைநிற்கவேண்டியதில்லை” என்றனர்.

மாணவர்கள் ஒவ்வொருவராக அவரிடமிருந்து விலகினர். தன் கொள்கையை சொல் சொல்லென நெஞ்சுள் உரைத்துக்கொண்டு தனித்திருந்தார் பிரஹஸ்பதி. சொல்லிமுடித்த கணமே சொல்கடந்த துயர் வந்து நெஞ்சை கவ்விப்பிசைவதன் வலியையும் அறிந்தார். “இது என் கொள்கைக்கு வந்த தேர்வு போலும். வென்று செல்வேன் இதை” என நாளும் வஞ்சினம் உரைத்தார். அவள் இல்லத்தில் எஞ்சவிட்டுச்சென்ற அனைத்தையும் அள்ளி வெளியே வீசினார். அகற்றும்தோறும் அவள் அங்கே மேலும் இருக்கலானாள். ஒரு குங்குமத்தீற்றலில் அவள் எழுந்து வந்தாள். கொல்லையில் நின்றிருந்த பசுவின் விழிகளில் அவள் தோன்றினாள். முற்றிலும் அகற்றப்பட்டபின் அகற்றப்படமுடியாத நுண்வடிவில் அவளே அங்கிருந்தாள்.

என்ன நிகழ்ந்தது என தன்னிடமே விழிப்புள்ளபோதெல்லாம் கணமொழியாது கேட்டுக்கொண்டிருந்தார். இவ்வளவுதானா இது, இத்தனை எளிதானவையா இவையெல்லாம், இதன் மீதா அமைந்துள்ளன அனைத்தும்? எண்ணிக் குமைந்து உருகி அழுது தேறி மீண்டு நீள்மூச்செறிந்து மீண்டும் எண்ணிக்குமையத் தொடங்குகையிலும் அதில் தான் ஆடியதை முழுமையாகவே அவர் உள்ளம் மறந்துவிட்டிருந்தது. அதை மூழ்கடிக்கவே அப்பெருந்தத்தளிப்பை அது சமைத்துப் பெருக்கிக்கொண்டது.

ஒருநாள் காலை அழுதபடி பிரஹஸ்பதி ஓடிச்சென்று சந்திரனின் அரண்மனை வாயிலில் நின்றார். “என் தேவி… இங்கிருக்கிறாள் என் துணைவி!” என கூவினார். வெள்ளிவேலேந்திய காவலரால் தடுக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டார். நெஞ்சிலறைந்து அழுதபடி “நீயிலாது நான் வாழ இயலாதென்றறிந்தேன். என் தேவி, என் நெஞ்சின் அரசி, என்னுடன் வருக!” என கதறி அழைத்தார். தாரையின் தோழி வந்து “அரசி உங்கள் நினைவை உள்ளத்திலிருந்தும் உடலில் இருந்தும் ஒழித்துவிட்டாள். இன்று நீங்கள் அயலான் மட்டுமே. அவளுக்கு உங்கள் குரலே அருவருப்பூட்டுகிறது” என்றாள். “நான் ஒழிக்க வல்லேன் அல்லேன்… ஒருகணமும் அவள் நினைப்பொழியமுடியாதவன் ஆனேன்… அவள் இன்றி செல்லமாட்டேன்” என்று அவர் நெஞ்சிலறைந்து அழுதார்.

சாளரம் வழியாக எட்டிப்பார்த்த சந்திரன் “என் காமம் சலிக்கும்போது அவளை நான் அனுப்புகிறேன். இங்கு எனக்கு இருபத்தேழு மனைவியர் முன்னரே உள்ளனர்” என்றான். சினந்தெழுந்த பிரஹஸ்பதி சாளரத்தை அறைந்தபடி “இழிமகனே, நீ தேய்ந்தழிவாய். என் மனைவியை வெறும் காமக்கிழத்தியென்றாக்கி இழிவுசெய்த உனக்கும் இவ்விழிவே அமையும்” என்று கூவினார். தலையால் சாளரத்தை ஓங்கி ஓங்கி முட்டியபடி “நீ இதன்பொருட்டு துயர்கொள்வாய்…” என்றார். “நான் என் கொள்கையனைத்தையும் உதறுகிறேன். தன்னலம் கொண்டு பிறர்துயர் பெருக்குபவன் அழிந்தாகவேண்டும். நெறி என்று ஒன்று அமையும் என்றால் அது அனைவர்பொருட்டும் ஆகும்” என்றார்.

பிரஹஸ்பதி குருதிவழியும் முகத்துடன் சென்று இந்திரனிடம் நின்றார். “நான் சொன்ன அனைத்துக் கொள்கைகளையும் மறுக்கிறேன். என் துயர் ஒன்றே மெய். பிறிதேதும் எனக்கு ஒரு பொருட்டல்ல. என் மனைவியை என்னிடம் கொண்டுவந்து சேர். இது உன் ஆசிரியனாக என் ஆணை!” என்று கூவினார். “உங்கள் ஆணைப்படி செய்கிறேன், ஆசிரியரே. எழுக தேவர்படை!” என்றான். படைக்கலங்களுடன் போர்க்குரலுடன் தேவர்கள் எழுந்தனர்.

அதை அறிந்த அசுரகுருவாகிய சுக்ரர் சந்திரனிடம் வந்தார். “அறிக, வெண்ணொளித்தேவனே, நான் கொண்டுள்ள கொள்கையெல்லாம் என் ஆசிரியர் வியாழனிடமிருந்து கற்றவையே. இன்று தனக்கென ஒன்று வந்தபோது கொள்கையை துறந்துள்ளார். நானோ அக்கொள்கையையே வாளென ஏந்தியிருக்கிறேன். இன்பம் ஒன்றே மெய்ப்பொருள். எய்துவதொன்றே வீடுபேறு. உன்னுடன் அசுரப்படைகள் இருக்கும்” என்றார். “தாரையை நீ விட்டுவிடுவாய் என்றால் தேடிவந்த இன்பத்தை துறக்கிறாய். அது அளிக்கும் இழப்பின் துயரை நீ கடக்கமாட்டாய். அவளை அவர்கள் வென்று செல்வார்கள் என்றால் ஆண் என நீ இழிவும் கொள்வாய்” என ஊக்கினார்.

தேவர்களும் அசுரர்களும் படைமுரசு ஒலிக்க விண்ணில் போர்முகம் கொள்வதை நாரதர் சென்று பிரம்மனிடம் சொன்னார். பதறி எழுந்த பிரம்மன் இரு படைகளுக்கு நடுவே ஒரு வெண்பறவையாக வந்திறங்கினார். ஒரு கையில் அமுதகலமும் மறுகையில் மின்படையுமாக பேருருக்கொண்டு எழுந்தார். இடியோசையாக ஒலித்த குரலில் சந்திரனிடம் “பெண்பொருட்டு ஒரு போர் நிகழலாகாது. இது என் ஆணை, நீ பிரஹஸ்பதியின் மனைவியை திருப்பி அனுப்புக!” என்று கூறினார். மின்படை வான் நிறைத்து எரிபடர எழுந்ததைக் கண்டு நடுங்கிய சந்திரன் “இக்கணமே… இதோ!” என்றான்.

தேவர்கள் சென்று தாரையை அழைத்தனர். முன்னரே அவளுக்கு செய்தி சென்றிருந்தது. நாணி ஒடுங்கி ஒரு சிற்றெறும்பென ஆகி அரண்மனையின் ஒரு சிறுபொந்துக்குள் ஒளிந்திருந்தாள். தேவர்களின் அழைப்பை கேட்டாள். அவர்களின் குரலில் இருந்த களியாட்டு ஒரு தருணத்தில் அவளை சீற்றம் கொள்ளச்செய்தது. எழுந்து தன் முழுவடிவழகுடன் முழுமையற்ற ஆடை அணிந்து அவர்கள் முன் தோன்றினாள். இனிய புன்னகையுடன் “என்ன ஆயிற்று? எதன் பொருட்டு வந்தீர்கள்?” என தேவர்தலைவனாகிய சித்ரகனிடம் கேட்டாள். அப்புன்னகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நாணமற்ற அவள் விழிகள் முன் அவர்கள் கூசினர். விழிதிருப்பிக்கொண்டு தாழ்ந்த குரலில் பிரம்மனின் ஆணையை கூறினர்.

“நன்று, அதற்கென்ன?” என அவள் புன்னகைத்தாள். “நான் என் அரசணிகளைப் பூணலாம் அல்லவா?” என இன்குரலில் கேட்டாள். “ஆம்” என்று சித்ரகன் குரல் தழுதழுத்தான். பேரரசியின் அணுக்கர்கள் என அவர்கள் சூழ்ந்துவர நிமிர்ந்த தலையுடன் குழந்தைகளுக்குரிய தெளிந்த விழிகளால் நோக்கியபடி தாரை அவர்களுடன் சென்றாள். தேவரும் அசுரரும் அவளைக்கண்டு ஓசையழிந்து படைக்கலம் தாழ்த்தி ஓவியப்பெருக்கென நின்றனர். பல்லாயிரம் முகங்கள் அவள் பாவையை மட்டுமே விழிமணியெனக் கொண்டு நிலைத்தன.

தேவரும் அசுரரும் கூடிய மன்றில் வந்து தலைநிமிர்ந்து நின்று சூழ்ந்திருந்தவர்களை நோக்கி சிறுமியருக்குரிய அறியாப் புன்னகையுடன் “என் பொருட்டா இப்பெரும்போர்?” என்றாள். அவள் குரல் அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது. “எளியவளுக்காகவா இத்தனை படைக்கலங்கள்?” என்று தேவர்க்கரசனின் மின்படைக்கலத்தை நோக்கினாள். அப்போது அங்கிருந்த அனைவருமே அவள்மேல் பெருங்காமம் கொண்டனர். இந்திரன் அவளை நோக்காதொழிந்தான். அவளை இழப்பதைக் குறித்து ஏங்கி உடல்தளர்ந்தான் சந்திரன். அகம் விம்மிய பிரஹஸ்பதி முன்னால் வந்து “ஆம், உனக்காக…. நீ எனக்கு அரியவள், தேவி” என்றார்.

“நான் எந்தையின் ஆணைப்படி நடக்கிறேன்” என்று அவள் பிரம்மனை பார்த்தாள். “உன் கணவருடன் செல்க!” என்றார் பிரம்மன். “ஆணை!” என தலைவணங்கிய அவள் பிரஹஸ்பதியை நோக்கி சிரித்து “செல்வோம்” என்றாள். அவர் அறியாது விம்மிவிட்டார். அவள் அவர் தோள்மேல் கைவைத்து “என்ன இது? சரி, சரி, ஒன்றுமில்லை” என்றாள். அன்னையின் கனிவு நிறைந்திருந்தது அவள் குரலில். “ஆம், இன்று அனைத்தும் முடிந்தது. இனி ஒன்றுமில்லை” என்றார் அவர்.

imagesவென்றவனின் பெருமிதத்துடன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு பிரஹஸ்பதி மீண்டும் இல்லம் புகுந்தார். நிமிர்ந்து அவருடன் வந்த தாரை தொலைவில் தன் சிற்றில்லைக் கண்டதும் கால்தளர்ந்தாள். அவள் நிற்பதைக் கண்டு திரும்பி “வா, இது நம் இல்!” என்றார் பிரஹஸ்பதி. “ஆம்” என அவள் சொன்னாள். முலைகள் விம்மியமைய சிறு தேம்பல் ஓசை எழுந்தது. “அழுகிறாயா? நீயா? அரசியென வந்தாயே?” என்றார் பிரஹஸ்பதி. அவள் அவர் கையை உதறிவிட்டு பாய்ந்தோடி இல்லத்திற்குள் சென்று தன் அடுமனைக்குள் இருண்ட மூலையில் முழங்கால் மடித்து அமர்ந்து முகம்புதைத்து கண்ணீர்விட்டாள்.

அவள் முன் சென்று நின்று பிரஹஸ்பதி “நிகழ்ந்ததை மறந்துவிடு, தேவி. காமம் எவருக்கும் கடப்பதற்கு அரியது. நீயோ எளிய பெண். நான் அனைத்தையும் பொறுத்து இப்பால் வந்துவிட்டேன்” என்றார். அவள் அருகே அமர்ந்து கனிந்த குரலில் “ஒருவேளை நாம் மீண்டும் அணுகவும் புதியவர்களென அன்புகொள்ளவும் இது வாய்ப்பென ஆயிற்றுபோலும்” என்று அவள் குழலை வருடினார். அவள் உடைந்தழுதபடி அவரை ஆரத்தழுவிக்கொண்டாள். அவள் கண்ணீர் அவர்மேல் இளவெம்மையுடன் வழிந்தது.

அவள் கண்ணீரே தன் உள்ளத்தை நிறைவிக்கிறதென அவர் உணர்ந்தார். அவள் கொண்ட நிமிர்வு வெல்வதற்கரியவள் என்றும் அறியவொண்ணாதவள் என்றும் காட்டி எழுப்பிய பெருங்காமத்தின் அடியில் சீற்றம் கொண்டு எழுந்து நின்றிருந்தது வஞ்சம். அவள் விழிநீரோ அவர் ஆணவத்தை குளிர்வித்தது. மேலும் ஆணவம் கொள்ளும்பொருட்டு மேலும் கனிவு கொண்டவரானார். “நீ பிழையேதும் செய்யவில்லை. பிழை செய்திருந்தால் அது நானே. நீ என் அன்புக்கு உகந்தவள். என் அறத்துணைவி. இந்நிகழ்வை முற்றிலும் மறப்போம். இது ஆணை!” என அவர் கைநீட்டினார். அந்தக் கைமேல் முகம் அமைத்து அவள் கதறியழுதாள்.

அழுது ஓய்ந்தபின் காமம் விசைகொண்டிருந்தது. மழைக்குப்பின் வீசும் புயல் அது. அழுது அழுது அதை அவள் கடந்துவந்தாள். அவர் அவள் அழுகை ஒவ்வொன்றையும் கடந்து பேருருக்கொண்டார். தன்னைப்பற்றிய முழுமகிழ்வில் அவர் இருந்த நாட்கள் அவை. தன் மாணவர்களிடம் பொறையையும் புரிந்துகொள்ளலையும் பற்றி சொன்னார். “முனிவன் என்பவன் எது சரியான செயல் என்பதை வாழ்ந்து காட்டுபவன்” என்றார். பெருங்கனிவுடன் அவளிடம் பேசினார். ஒவ்வொருநாளும் அவளை ஆற்றுவித்தார். அவள் அதன்முன் கூசி கண்ணீர் மல்குகையில் மேலும் கனிந்தார். ஆனால் ஒருமுறை புழக்கடைத் தொழுவத்தில் அவள் தன் பசுக்கன்றிடம் எதையோ பேசிச்சிரிப்பதை சாளரம் வழியாகக் கண்டபோது சினம்கொண்டு உடல் எரியலானார். ஏன் ஏன் என அதை மீண்டும் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார்.

அன்று அவளிடம் கடுமுகம் காட்டினார். அதை அவள் உணர்ந்து அழுத ஒலியை வேறு அறையில் இருந்து இறுகிய உடலுடன் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் வீங்கிய முகத்துடன் அவள் அவரை உணவருந்த அழைத்தபோது நிமிர்ந்து நோக்கினார். அவள் விழிதாழ்த்தி நின்றிருந்ததைக் கண்டதும் போர்மன்றில் அவள் தலைதூக்கி நின்றிருந்ததை நினைவுகொண்டு எழுந்து அவளை அறைந்து வீழ்த்தி மிதித்துக்கூழாக்கவேண்டுமென வெறிகொண்டார். அதை தானே அஞ்சி மெல்ல தணிந்தார்.

அதைக் கடக்கும்பொருட்டு அவள் இடையை தொட்டார். அவள் விசும்பி அழ உளமுருகி அவளை அணைத்துக்கொண்டு முத்தமிட்டு “நன்று, ஒன்றுமில்லை. ஓர் உளச்சோர்வு. உன் மீதல்ல, தேவி” என்றார். அனைத்துக் கசப்புகளும் உடல்கொந்தளிக்கும் காமத்தில் முடிந்தன. நாள் செல்லச்செல்ல கொந்தளிப்புகள் குறைந்தது. அன்றாடத்தின் சலிப்பு கூடியது. அதையே அமைதி என்கிறார்கள் என உணர்ந்தார். கொந்தளிப்பின் காலங்களில் அறிந்த காமம் பின் நிகழவில்லை. ஆனால் அதை எண்ணுகையில் அஞ்சியது அவர் உள்ளம்.

அவள் ஆண்கள் எவரையும் ஏறிட்டுநோக்காதவளானாள். அவள் நோக்குகிறாளா என்பதை நோக்காமலிருக்க அவராலும் இயலவில்லை. தேவர்கள் நடுவே விழியொளிரும் நகையாட்டும் மென்குரல் அலர்ப்பேச்சும் அவளைப்பற்றி இருந்தன. பின்னர் அனைவரும் அதை மறந்தனர். அவர் மட்டிலுமே என்றோ ஒருநாள் இரவில் விழித்துக்கொள்கையில் அதை நினைவுகூர்வார். உடல் காஞ்சிரச்சாறு சுவைத்த நாவென கசந்து தவிக்கும். புரண்டுபுரண்டு அதை புறத்தே தள்ளி துயில்பூணுவார்.

“பெரும்புயம் கொண்டவரே, நாகத்துடன் ஆடுபவன் மண்ணுக்கு அடியில் பெருகியிருக்கும் ஏழு இருளுலகுகளுடன் ஆடுகிறான். பெண்ணுடன் ஆடுபவன் தன்னுள் விரிந்துள்ள மூன்று முடிவிலா இருள்களுடன் ஆடுகிறான்” என்றான் முண்டன். “ஆனால் பெருந்துயர் கொண்டாலும் அவ்வாறு ஆடுவது நன்று. ஆழத்தைக் கலக்கி எழுப்பாமல் தன்னை அறிந்து அமையமுடியாது என்று உணர்க!”

முந்தைய கட்டுரைசு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு
அடுத்த கட்டுரைவியாசப்பிரசாத் வகுப்புகள்