வெண்முரசும் விக்கிப்பீடியாவும் -கடிதங்கள்

index

அன்புள்ள ஆசிரியருக்கு,

திரு லட்சுமி மணிவண்ணன் அவர்களின் இலக்கியக் கொடையைப்பற்றி படித்தபோது பிரமிப்பாக உள்ளது. இவர்களைவிட ஆயிரம் மடங்கு பலம் பொருந்திய நம் ஊடகங்கள் ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த மறுக்கின்றனர்.

வெண்முரசு விக்கிப்பீடியா பக்கம் நிறுத்தம் குறித்து.

வெண்முரசைப் பொறுத்தவரையில் ஊடகங்களும் அறிவுலகமும் காட்டும் பாராமுகம் கண்டிக்கத்தக்கது. நான் இந்து தமிழ் பதிப்பாசிரியருக்கு எழுதிய கடிதத்தை கீழே தந்திருக்கிறேன்.

உங்கள் சமீபத்திய கட்டுரை சற்று சங்கடத்தை அளித்தது. அறிவுலகத்தை விட விக்கிபீடியாவின் மேல் அதிக கவனம் ஏற்படுத்திவிட்டீர்கள் என்று கருதுகிறேன். அதுவும் ஆதாரபூர்வமாக இல்லாமல் சில குற்றச்சாட்டுகளை சொல்லிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு தமிழ் விக்கிபீடியா உருவானதில் பெரும் பங்கு உண்டு. பல நூற்றுக்கணக்கான பதிவுகள் இட்டு செம்மை செய்திருக்கிறீர்கள். கூடவே அதில் ஈடுபடும் பெரும்பாலோரின் அரசியல் சாய்வுகள் தெரிந்திருக்கும், மறுக்கவில்லை. ஆனால் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் ஆங்கில விக்கிபீடியாவின் பொறுப்பாளர்கள் காழ்ப்புணர்ச்சியினாலும் தமிழியர்கள் தரும் அழுத்தத்தின் காரணமாக செயல்படுகிறார்கள் என்று நம்பமுடியவில்லை.

நானும் ஆங்கில விக்கியை பத்து வருடங்களாக தினமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். ஹிட்லர் போன்ற பிரபல பக்கங்களில் இது போல ஆயிரக்கணக்கான சண்டைகள் நடந்து முடிந்தே ஓரளவுக்கு தரமான தகவல்கள் எவை என்ற சான்று நிறுவப்பட்டிருக்கிறது. (நேற்று கூட பிரிட்டனில் வெளிவரும் ஒரு பிரபல மஞ்சள் பத்திரிக்கையை சான்றாக கொள்ளமுடியாது என்று அறிவித்திருக்கிறது).

ஆங்கில விக்கியில் உள்வட்டமாக இருப்பவர்கள் பெரும்பாலும் இணையம், ஓபன் சோர்ஸ் போன்ற மாபெரும் இயக்கங்களின் வழி வந்தவர்கள். கொந்தர் கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் ‘அனானிமஸ்’, ‘விக்கிலீக்ஸ்’ போன்ற குழுக்கள் இவர்களைப் போன்றவர்களிடமிருந்தே முளைக்கின்றன. இதில் Deletionists என்ற குறுங்குழுக்கள் உருவானபோது வந்த உராய்வுகளை பார்த்திருக்கிறேன். நான் பார்த்தவரை அவர்கள் எல்லோருமே மண்டை காய வைக்குமளவுக்கு பிடிவாதக்காரர்கள். ஆனால் உண்மையானவர்கள். இன்றுவரைக்கும் ஆங்கில விக்கிபீடியாவை தரமாக வைத்திருப்பதே இவர்கள்தான்.

வெண்முரசு notability பற்றி அவர்கள் ஆதாரம் கேட்பது தவறே இல்லை. தர இயலாதது எங்களைப் போன்ற வாசகர்களின் அவலம். நம் ஊடகங்களின், அறிவுலகத்தின் வெட்கக்கேடு.

மதுசூதனன் சம்பத்

***

ஜெ ,

நண்பர் மது மூன்று வருடங்களாக ஆங்கில விக்கிபீடியாவில் வெண்முரசு பக்கத்தை துவங்கி அப்டேட் செய்துகொண்டுள்ளார், சமீபமாக விக்கியில் இருந்து வெண்முரசு பக்கத்தை நீக்க தொடர்ந்து முயற்சி நடக்கிறது.

நியாயமான காரணத்தைத்தான் சொல்கிறார்கள், ஒரு நோட்டபிள் உருவாக்கம் எனில் ஏன் தமிழ் அறிவுலகம் வெண்முரசு குறித்து ஏன் இதுவரை எதுவுமே பேசவில்லை என்கிறார்கள், நியாயம்தான்.

குங்குமத்தில் வந்த 7 பக்க கட்டுரை தவிர வெண்முரசு குறித்து ஒருவரி குறிப்புகள், எள்ளல்கள் தவிர எதுவுமே வரவில்லை, (குமுதத்தில் சிந்துகுமார் 2014 ல் ஒரு கட்டுரை எழுதினார்).

வாசகர்களை தவிர தமிழின் எந்த எழுத்தாளரும் நல்லதாகவோ கெட்டதாகவோ ஒன்றை வார்த்தை கூட உதிர்த்ததில்லை. அப்படியே”கடந்து”போய்விடலாம் என நம்புகின்றனர் போல :)

தமிழில் வரும் முழு மகாபாரதம், தமிழில் விஷ்ணுபுரம் தொடங்கி பல நாவல்களை எழுதி ஏற்கப்பட்ட எழுத்தாளன், அவர் தவம் போல 2014 ல் தொடங்கி தினமும் எழுதும் ஒரு நூலை குறித்து அறிவுலகம் மூச்சே காட்டாமல் கடந்துபோகும் மாயத்தை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

இதை அவசியம் பதிவுசெய்ய வேண்டும் என நினைக்கிறேன், தமிழில் நடந்த ஒரு முயற்சியை எப்படி தமிழ் இலக்கிய உலகமும், அறிவுலகமும் எதிர்கொண்டது என அடுத்த தலைமுறை அறிந்துகொள்வதற்காகவேனும்.

ஆனால் ஜெ, கடலூர் துவங்கி மதுரை வரை சின்னச்சின்ன கிராமங்களில் இருந்தெல்லாம் தீவிர வெண்முரசர்கள் கிளம்பி வருவதை பார்க்கிறேன். அவர்களது தீவிரத்தை நேர்ப்பேச்சில் உணர்கிறேன். அவர்களுக்காக நீங்கள் எழுதலாம். அவ்வளவுதான்.

கே வி அரங்கசாமி

***

முந்தைய கட்டுரைஅசைவைக் கைப்பற்றுதல் -கடிதம்
அடுத்த கட்டுரைசு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்