திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் கோவையில் வேலை பார்க்கிறேன். பெயர் முத்துவேல் ராமன். சொந்த ஊர் – திருநெல்வேலி.
நான் சுஜாதா உரை எழுதிய சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் நூலை வாசித்தேன்.
இப்போது ரா.முருகவேள் எழுதிய “மிளிர்கல்” வசித்துக் கொண்டிருக்கிறேன். வேறு ஒரு விசயத்துக்காக இணையத்தில் தேடிய போது உங்கள் பக்கத்திற்கு வர நேர்ந்தது.
“பளிங்கறை பிம்பங்கள்” என்னும் கட்டுரையில் மாதவியின் தாயாக சித்ராபதி என்னும் பெயரை குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆனால் சிலப்பதிகாரத்தில் மாதவி “நற்றாய்” என்றே கூறுகிறாள். பெயர் கூறவில்லை. சிலப்பதிகாரத்தில் சித்ராபதி என்ற வார்த்தையே நான் வாசித்த வரையில் வரவில்லை.
மற்ற இணைய தளங்களில் பார்த்தாலும் அவர்களும் சித்ராபதி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இளங்கோ கூறாமல் நாம் எப்படி ஒரு கதாபாத்திரத்தை கூற முடியும்? இல்லை நான் ஒழுங்காக வாசிக்கவில்லையா?
தெளிவு படுத்த வேண்டும். பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நன்றி
முத்துவேல்
*
அன்புள்ள முத்துவேல்,
கணிப்பொறித்துறையில் வேலைபார்க்கும் ஓர் இளைஞர் சிலப்பதிகாரம் வாசிக்கிறார் என்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் பயிலும் மாணவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் வாசித்ததில்லை என்பதை கவனித்திருக்கிறேன். இது ஒருவகையில் சுஜாதாவின் வெற்றி.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள். சிலம்பின் கதையையே சீத்தலை சாத்தனார்தான் இளங்கோவடிகளிடம் சொல்கிறார். ”சூழ் வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று சொல்லி இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
சீத்தலை சாத்தனார் மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை விரித்து மணிமேகலையை எழுதினார். அதில் மாதவியின் கதை முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளது. கோவலன் இறந்தபின் மாதவி பௌத்தத் துறவியாக ஆனாள். அவள் மகள்தான் மணிமேகலை. அவளும் பௌத்தத்துறவி ஆனாள். மாதவியின் அன்னை சித்ராபதி பற்றியும் மணிமேகலை விரிவாகச் சொல்கிறது.
ஜெ