நான் வாசித்த ஜெயமோகனின் பெரு நாவல்களில் பின் தொடரும் நிழலின் குரல்முதல் நாவல்.பல ஆண்டுகளுக்கு முன் நான் வாசிப்பு முதிர்ச்சியற்றிருந்த காலத்தில்வாசித்த ரப்பர் என்னுள் எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை.புரியவில்லை என்றஒரு சொல் தான் நினைவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளாகத்தான் நான் ஜெயமோகனை இணையம் மூலமாகநெருங்கியிருந்தேன்
விஷ்ணுபுரமோ கொற்றவையோ வாசிக்க எனக்குத் துணிவில்லை.பின் தொடரும் நிழலின் குரல் எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்.இள வயதில் சுஜாதா பற்றி “சுஜாதாவுக்கு எதையும் சுவாரஸ்யமில்லாமல் சொல்லவே தெரியாது.லாண்டரிக்குப்போட்ட துணிகளின் லிஸ்ட் போடச் சொன்னால் கூட அதிலும் சுவாரஸ்யம் இருக்கும்'”என்று சொல்வார்கள்.ஜெயமோகன் பற்றி இப்போது தோன்றுகிறது .இவரால் எதையும் கனமில்லாமல் சொல்ல முடியாது.ஒரு ஜோக் அல்லது ஒரு போர்னோவாக இருந்தால் கூடஅதை அர்த்தம் நிரம்பியதாக, ஆழமானதாக,கவிதாபூர்வமானதாக,படிமங்களுடன் கனமானதாகத்தான் இவரால் படைக்க முடியும்.இவருடைய நகைச்சுவைக் கட்டுரைக்குக் கூட விழிப்பான மூளையுடன் செல்வது நல்லது.
கம்யூனிசம் என்ற மானுடக் கனவின் சரிவும் வீ ழ்ச்சியும் அதன் இன்றியமையாமையும்அது ஏற்படுத்திய நாசங்களும்,மானுட நன்மை என்ற உன்னத நோக்கத்துடன் அது கொண்ட லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்ப்பலியும் 360 டிகிரியில் சாத்தியமான அத்தனைகோணங்களிலும் விரிவாக எழு நூற்றி சொச்சம் பக்கங்களில் அலசப் படுகிறது என்பது உண்மைதான்.அதே நேரத்தில் நாவல் மிகவும் சுருக்கமாக அர்த்தம் பொதிந்து வைக்கப் பட்டுள்ளது என்பதும் உண்மையே!
இந்த நாவலில் கம்யூனிசத்தின் அனைத்து தரப்புகளின் நியாயங்களும் நேர்மையாகவும்ஜன நாயகத் தன்மையுடனும் பதிவு செய்ய ப் பட்டுள்ளன. வேட்டையாடும் பூனையின்பசியும்,உயிர் பிழைக்கப் போராடும் எலியின் தவிப்பும் வன்மையாக பிரதி நிதித்துவம்பெற்றுள்ளன.ஸ்டாலினியம் ஏற்படுத்திய பேரழிவுகளும், ஸ்டாலின் தரப்பு நியாயங்களும்சம வீச்சில்.எஸ்.எம்.ராமசாமி,ஜோணி இருவரின் எதிரெதிர் விவாதங்களும் வலுவானவையே
இது கம்யூனிசத்துக்கு எதிரான நாவல் என்று யாராவது சொன்னால் அவர்கள் நாவலைமுழுமையும் வாசிக்கவில்லை என்றே அர்த்தம்.மாற்றுக் கருத்துக்களைக் கூறுபவர்கள் எல்லாம் துரோகிகள் என்றும் திரிபு வாதிகள் என்றும்கூறி அவதூறு செய்வதும் அழித்தொழிப்பதும் ஒரு இயக்கம் மேற் கொள்ளக் கூடிய தற்கொலைமுயற்சிகள்.தவறுகளைச் சுட்டிக் காட்டும் ஆசிரியரும்,அறுவைச் சிகிச்சையின் போது உடலைக்கிழித்து கெட்டுப் போன உறுப்பை அறுத்தெறியும் மருத்துவரும் எதிரிகள் அல்ல.இடித்துரைப்பார்இல்லாத எவனும் கெடுவான்.புகாரின்,வீரபத்திர பிள்ளை,அருணாசலம் மூவருக்கும் கட்சி தரும்எதிர் வினை ஒன்றே.தலைவன் தொண்டனுக்கு வழி காட்ட வேண்டும்.தொண்டனின் விருப்பம்அறிந்து அதை நிறைவேற்றுபவன் வழி காட்டி அல்ல;பின் தொடர்பவன்.தொழிற் சங்கம்தொழிலாளிக்கு ஒரு வக்கீலாக இருந்தால் போதுமா என்று கதறும் கெ.கெ.எம். ஈவிரக்கமின்றிகட்சியிலிருந்து தூக்கி எறியப் படுகிறார்.வீரபத்ரபிள்ளை வரலாற்றிலிருந்தே தூக்கி எறியப்படுகிறார் புகாரினைப் போலவே.வறுமையுற்று குடித்து சீரழிகிறார்.பிச்சை எடுக்கிறார்.சந்தையில் செத்து வீழ்கிறார் அனாதையாய்.அருணாசலம் மனப் பிறழ்வின் எல்லையைத்தொட்டு மீள்கிறான்.
பல பாத்திரங்கள் உண்மையில் வரலாற்றில் வாழ்ந்த நிஜப் பாத்திரங்களே. ஸ்டாலின், புகாரின்,அன்னா,டால்ஸ்டாய்,தஸ்தாயெவ்ஸ்கி,காந்தி,அய்யன்காளி என்றுநீண்ட வரிசை.எளிதில் யூகிக்கக் கூடிய மெல்லிய ஒப்பனை பூச்சுகளுடன் சில பாத்திரங்கள்.இரண்டு மூன்று சீன்களில் ஜெயமோகனும் உண்டு.கதிர்,நாராயணன்,இசக்கி,பாஸ்கரன்,கவிஞர் கரியமால் போன்ற சிறிய பாத்திரங்கள் கூட நீண்ட காலம் நினைவில் வாழும்
இது ஆண்களின் கதைதான்.அரசியலே இன்னும் கூட ஆண்களின் ஆடல்தானே! நாவல்முழுக்க அருணாசலம்,கெ.கெ.எம்.,வீரபத்ரபிள்ளை, புகாரின் என்ற ஆண்களின் மேன்மைவிழைவும்,நடை முறை தந்திரங்களின் பொருட்டு வீழ்ந்து விடாதிருக்கும் யத்தனங்களும் அதற்கான போராட்டங்களும் தான்.ஆனால் இவர்களின் விமோசனம் என்னவோ பெண்களால்தான் சாத்தியமாகிறது.அருணாசலம் தன் மனைவி நாகம்மையின் முயற்சியால் மீட்டெடுக்கப்படுகிறாள்.நாகம் அதிகம் படித்திராத எளிய பெண்.ஆனால் அதனாலேயே அவள் சில அரியவிஷயங்களை அநாயாசமாக சொல்லி விடுகிறாள்.கெ.கெ.எம். தன் முன்னாள் காதலியால்கரையேற்றப் படுகிறார்.புகாரின் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன் மனைவி அன்னாவால்நிரபராதி என்று நிரூபிக்கப் படுகிறார்.பாவம் வீரபத்ரபிள்ளையைக் காப்பாற்ற இசக்கி வரவில்லை .அதனால் சீரழிந்து சாகிறார்..
புரட்சி பெண்களைப் பொருட்படுத்தவில்லை.பெண்களைப் பயன் படுத்தியிருக்க வேண்டும்.புரட்சி பெண்களால் வழி நடத்தப் பட்டிருந்தால் புரட்சியின் பேரழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்கிறார் ஜெயமோகன்.இந்திரா காந்தி,ஜெயலலிதா,மாயாவதி,மம்தா பேனர்ஜி ஏனோ நினைவுக்கு வருகிறார்கள்.ஆணாதிக்க வாதி என்று பெரும்புகழ் பெற்ற ஜெயமோகனின்கருத்துக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.சாரதா தேவி,அன்னி பெசண்ட்,அவ்வையார்,ஜான்சி ராணி போன்ற அற்புத பெண்மணிகளை ஏன் நினைத்துப் பார்க்கக் கூடாது?
பின் தொடரும் நிழலின் குரல் ஒரு பெரு விருந்து!அதில் இல்லாத சுவையே இல்லை.ஆழ்ந்த தத்துவ விமர்சனங்கள்,சித்தாந்த விளக்கங்கள்,நீண்ட வாதப் பிரதிவாதங்கள்,என்றுபடு சீரியசாகப் போய்க் கொண்டிருக்கும் நாவலில் பயங்கர நகைச் சுவை சர வெடிகள்,சிறுகதைகள்,கவிதைகள்,நாட்குறிப்புகள்,கடிதங்கள்,அங்கத நாடகங்கள் எல்லாம் உண்டு.
நம்பவே முடியாத வியப்புகளில் ஒன்று படு சீரியசான ஜெயமோகன் ஒரு பயங்கர நகைச்சுவையாளரும் கூட என்பது.ஓரிடத்தில் கீதை,பைபிள்,குரான்,கம்யூநிஸ்ட் மேனிபெஸ்டோ ,ரிபப்ளிக் போன்ற நூல்கள் பலவற்றை அடுப்பில்வேக வைத்து சமைத்து பரிமாறுவார்கள்.அப்போது”அய்யோ ஒரே கசப்பாக இருக்கிறதே.சாப்பிடவே முடியவில்லையே.கொஞ்சம் தொட்டுக் கொள்ள மூலதனம் கிடைக்குமா?”என்று ஒரு தோழர் கேட்பார்.சில நாட்களுக்கு முன் தான் எனக்கு வயிற்றுப் பகுதியில்ஒரு அறுவைச் சிகிச்சை நடந்தது என்பதை மறந்து நான் வெடித்துச் சிரித்து விட்டேன்..வலி உயிர் போனது.
அந்த நாடகம் முடியும் வரை மிகவும் சிரமப் பட்டு நான் சிரிப்பைஅடக்கியவாறே படித்தேன்.சிரித்து சிரித்து வயிறு புண்ணானது என்று வாசகர் கடிதத்தில்வருமே அது உண்மைதான்.நாடகத்தில் சிலப்பதிகாரம்,மகாபாரதம்,இராமாயணம்,திருவிளையாடற் புராணம்,எதையுமே ஜெயமோகன் கிண்டல் செய்யாமல் விட்டு வைக்கவில்லை.அவருடைய நையாண்டியிலிருந்து எந்த தலைவரும் தப்பவுமில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியால் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பேரழிவுகளைப் பற்றிப்பேசுவதோடு நாவல் நின்று விடவில்லை.கம்யூனிசம் மட்டுமே சித்தாந்தம் அல்ல.சோவியத்தில் மட்டுமேபேரழிவு நடக்கவும் இல்லை.மத அடிப்படை வாதம்,ஜிகாத்,சிலுவைப் போர்கள்,மதக் கலவரங்கள்,சீனாவிலும் ,சிங்களத்திலும் ஏற்பட்ட பேரழிவுகள்என்று மேலும் மேலும் விரிந்து கொண்டே போகிறது.எல்லா சித்தாந்தங்களும் அன்பின்,கருணையின் அடிப்படையில் மனித குல மேம் பாட்டுக்காக உருவானவையே.ஆனால் எல்லா மானுட துயரங்களும் சித்தாந்தங்களால் ஏற்படுத்தப் பட்டவையே.ஏனிந்தநகைமுரண்?
நாவலின் இறுதியில் அருணாசலம் தன் மனைவி நாகம்மையால் மீட்டெடுக்கப் படுகிறான்.ஒரு ஆலயத்தில் ஆவுடை தரிசனத்தில் அவனுக்கு தெளிவு பிறக்கிறது.அவனே சமஸ்தாபராதபூஜைக்கு ஏற்பாடு செய்கிறான்.அதில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிஅனுதாபிகள் கலந்து கொள்கின்றனர்.கெ.கெ.எம்.முழு கிருஷ்ண பக்தர் ஆகிறார்.புகாரினுக்குஒரு வகை கிறிஸ்து மீட்பு கிடைக்கிறது.ஆக எந்த ஆன்மீகத்தை கம்யூனிசம் காலமெல்லாம்எதிர்த்து வந்ததோ அந்த ஆன்மீகத்தை கலந்தால் கம்யூனிசம் இன்னும் கூட மானுட மேன்மைக்குபயன் பட முடியும் என்ற தொனியுடன் நாவல் முடிகிறது.ஆன்மீகத்துடன்கூடிய கம்யூனிசத்தைப் பற்றி ஜெயகாந்தன் கூறியது நினைவுக்கு வருகிறது.கட்சிக்கு வெளியிலும் கம்யூனிஸ்டுகள் உண்டு.அவர்கள் கட்சியை வளர்ப்பதில்லை என்பதுஉண்மைதான்.ஆனால் அவர்கள் கட்சியை நிச்சயம் அழிப்பதில்லை
இடது சாரிகளின் பங்களிப்பு இல்லாமல் முதலாளித்துவம் கட்டுக்குள் வைக்கப் படமுடியாது.ஏழைகளுக்காக உண்மையில் இடது சாரிகள் மட்டுமே போராட முடியும்.ஒரு வேளைஹீரோ வேடத்துக்கு கம்யூனிசம் பொருந்தவில்லை போலிருக்கிறது.அதனால் என்ன?வில்லன் வேடத்துக்கும் குணச்சித்திர வேடத்துக்கும் இதை விட பொருத்தமானது வேறில்லை.
இந்த நாவலை நான் படித்த காலம் இதை மேலும் எனக்கு அணுக்கமாக்குகிறதுஇரண்டாம் முறையாக எனக்கு குடலிறக்க அறுவைச் சிகிச்சை நடந்த சில நாட்களில் நான் இதைப் படிக்கத் தொடங்கினேன்.எங்கள் வீட்டு நாகம்மையின் ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தாமல் படித்தேன்.பொதுவாக நான் புத்தகங்களையும் இனிப்புகளையும் மெதுவாகவேஅனுபவிப்பேன்.ஆனால் இப்போது 722 பக்கங்களையும் ஒரே வாரத்தில் பல இடையூறுகளுக்குமத்தியில் வாசித்து முடித்தது எனக்கு புதிய அனுபவம்.
மேலும் ஒரு முக்கியமான விஷயம். இனி எனக்கு விஷ்ணுபுரம் வாசிக்கும் துணிவு வரும்.
ஜெ.சாந்தமூர்த்தி,
மன்னார்குடி