சு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு

சு.வேணுகோபால் (1)

சு.வேணுகோபால் தமிழ் விக்கி 

[ 1 ]

சு.வேணுகோபால் சிறுகதைகள் பற்றிய எனது முந்தைய கட்டுரை ஒன்றை தொடர்ந்து (https://padhaakai.com/2015/09/07/london-prabhu-on-su-venugopal/) ஜெயமோகன் பின்வரும் கேள்விகளை கேட்டிருந்தார் – ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள்? ஏன் அதில் எதாவது ஒளி தென்படாதா என்று ஏங்கி துழாவுகிறார்கள்? எழுத்தாளர்கள் இருவகையில் மானுட கீழ்மையை எழுதுகிறார்கள். மானுடத்தீமை என்பது மனிதனின் அகம் இயல்பாக வெளிப்படும் ஓர் உச்சம் என்று எண்ணும் படைப்பாளிகள் உண்டு. மானுட அறத்துக்கான தேடலில் மானுடக் கீழ்மையை கண்டு சீற்றம் கொண்டு எழுதுபவர்கள் உண்டு. இதில் சு.வேணுகோபால் எந்த வகை? அவரது கதைகளில் கீழ்மைச் சித்தரிப்பில் கண்டுகொண்ட தன் கொண்டாட்டமா அல்லது அறச்சீற்றமா எது வெளிப்படுகிறது?(http://www.jeyamohan.in/94249#.WIRmtjKcbq0)

இந்த கேள்விகளை தொடர்ந்து சு.வேணுகோபால் கதைகளை ஒரு மறுவாசிப்புக்கு உட்படுத்தினேன். என் எல்லைக்குட்பட்ட வாசிப்பில் உன்னதத்தையும் தீமையையும் எழுதிய பிற எழுத்தாளர்களுடன் சு.வேணுகோபால் எழுத்துக்கள் எப்படி வேறுபடுகின்றன என்று ஒரு ஒப்பீட்டை செய்தேன். அந்த சிந்தனைகளை தொகுத்து கொள்ளும் முகாந்திரமாகவே இந்தக் கட்டுரை.

[ 2 ]

 

 

முதலில் அறம் என்பதை இவ்வாறு வகுத்துக் கொள்கிறேன். அது சமுதாய சட்டதிட்டங்களுடனும், மதிப்பீடுகளுடனும் சம்பந்தப்பட்டது அல்ல. சமுதாய சட்டதிட்டங்களை மீறுவது எல்லாம் அறமீறல் ஆகாது. உதாரணமாக, ஒருவர் சாலை விதிகளை மீறும்போது சட்டத்தை மீறுகிறார். அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே. ஆனால் அப்படி மீறியவரை நாம் அறம் பிழைத்தவர் என்று சொல்வதில்லை. சமுதாய மதிப்பீடுகளுக்கு வெளியே வாழ்வதும் அறமற்ற செயல் ஆகாது. நூறு வருடங்களுக்கு முன் மறுமணம் செய்து கொண்ட ஒரு விதவை சமூக விழுமியங்களை மீறியவராகவே கணிக்கப்பட்டிருப்பார். ஆனால் இன்று அப்படியல்ல. இது போல மாறிவரும் சமூக விழுமியங்கள் அறம் என்பதன் வரையறைக்குள் வராது. எது ஒன்று அடிப்படை மனித காருண்யத்தையும், நல்லியல்பையும் சென்று தொடுகிறதோ, எது சகமனிதனின் உரிமைக்காகவும், மேன்மைக்காகவும், தன் நலன்களையும் தியாகம் செய்ய வைக்கிறதோ, அதுவே அறம். இது சேர்ந்து வாழ்தலுக்கு மனித இனம் படிப்படியாக வளர்த்துக்கொண்ட ஒரு பண்பாட்டுக் கருவி.

அறம் குறித்த இந்த கதையாடலில், பல வருடங்களுக்கு முன், ஒரு பேருந்து பயணத்தில் அசோகமித்திரனின் வெறி என்ற கதையை படித்ததை நினைவுகூர்கிறேன். கதைசொல்லி வேலை பார்க்கும் சினிமா ஸ்டூடியோவிற்கு, தருண்முகர்ஜி என்ற வட இந்திய பத்திரிகையாளன் ஒருவன் சினிமா நட்சத்திரங்களைப் பேட்டி, புகைப்படம் எடுக்க என்று அவ்வப்போது வந்து செல்கிறான். புகைப்படங்கள் எடுப்பது அதிக வருமானம் ஈட்டும் தொழிலாக இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அவன் சேரியை போன்ற பகுதியில் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறான். நாட்போக்கில் முகர்ஜியும் கதைசொல்லியும் நண்பர்களாகின்றனர். ஒரு நாள் முகர்ஜி, ஸ்டூடியோவில், ஒரு புது பட விழாவினை ஒட்டி வந்திருக்கும் சத்யன்குமார் என்ற நடிகனை சந்திக்க முயல்கிறான். சத்யன்குமார் பல வித பொய் காரணங்கள் சொல்லி முகர்ஜியை சந்திப்பதை தட்டி கழிக்கிறான். நீண்ட நேரமுயற்சிக்கு பின் முகர்ஜி சென்றுவிடுகிறான். பின் பல மாதங்கள் முகர்ஜி ஸ்டூடியோவிற்கு வருவதேயில்லை. சத்யன்குமாருக்காக காத்திருந்த அந்த நாளில் அவனது குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் குழந்தை இறந்துவிட்டதை கதைசொல்லி அறிகிறான். அதை கேட்டு ஸ்டூடியோவிற்கு வந்து பத்தே நிமிடத்தில் சத்யன்குமாரை பாய்ந்து தாக்குகிறான்.

கதையின் முடிவில், அந்த பஸ் பயணத்திலும், உளம் பொங்கி கண்ணீர் வந்ததை எண்ணிப் பார்க்கிறேன். ஸ்டூடியோவில் கீழ்நிலையில் இருக்கும் ஒரு குமாஸ்தா ஒரு திரைநட்சத்திரத்தை அடிப்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அதன் பின் அவன் வேலையையும் கூட இழக்க நேரிடும். இருந்தாலும் அந்த அளவிற்கு அவனை வெறி கொள்ள வைத்தது எது? இத்தனைக்கும் அந்த நடிகன் பெரிய தவறு எதுவும் செய்யவில்லை. ஒரு பிரபலமானவர் சாதாரணமாக செய்யக்கூடியது தான். யோசித்து பார்க்கும் போது, அவன் கோபம் நடிகரை எதிர்த்து இல்லை. அந்த குழந்தையை சாகடித்த இயலாமையின் மீதும் விதியின் மீதும். முகர்ஜிக்களிடம் வாழ்க்கை காட்டும் பாரபட்சம் மீது. மற்றும் அந்த குழந்தையினிடமும், நண்பனிடமும் உள்ள அன்பு.

எளியாரிடம் அன்பு காட்டுதலிலும், அதன் பொருட்டு வெகுண்டு எழுதலிலும் ஒரு அறம் உள்ளது. வாழ்க்கையின் இரும்பு விதிகளுக்குள் அடைபட்டு இருக்கும் ஒருவன் மேன்மையின் பொருட்டு சிந்தும் கண்ணீர், அவன் இருண்ட வாழ்விலிருந்து வெளிவரும் ஒளியின் கீற்று. வெவ்வேறு எழுத்தாளர்களின் கதைகளில் இந்த அறத்தை, மானுட உன்னதத்தை படித்து உளஎழுச்சி அடைந்திருக்கிறேன்.

இதிலிருந்து வேறுபடுத்தி பார்க்கவேண்டியது, முழுக்க தீமையை சித்தரிக்கும் ஆ.மாதவனின் உலகு. உதாரணமாக ஆ.மாதவனின் ஒரு கதை – சினிமா. இதில், கதை நாயகனுக்கு காலை எழுந்தது முதல் ஒரு எரிச்சலுடன் இருக்கிறான். அவன் சாப்பாட்டு தட்டிற்கு அருகே வரும் பூனையை வாலை பிடித்து இழுத்து கதவில் சாத்துகிறான். பின் மனைவியுடன் செல்லும் சினிமாவில் பின் சீட்டிலிருப்பவன் சீண்டலில் ஈடுபட, திரும்பும்போது அவனை ஒரு கணத்தில் மாடியிலிருந்து காலைப்பிடித்து கீழே தள்ளிவிடுகிறான். பின் எதுவுமே நடக்காதது போல நடந்து செல்கிறான். தீமையை கண்டுகொள்ளும், செயல்படுத்தும் ஒரு கணம் மட்டுமே அந்த கதையில் உள்ளது. தன் இயல்புவாத நடையில் மாதவன் அதை சித்தரிப்பதுடன் நின்றுவிடுகிறார். அது குறித்த எந்த நியாப்படுத்தல்களும் கண்டித்தல்களும் இல்லை.

இதில் சு.வேணுகோபால் எங்கு பொருந்துகிறார்? அவர் வாழ்க்கையின் இருளை குறித்தே அதிகமும் எழுதியிருப்பதாக ஜெயமோகன் சுட்டி கொடுத்த அந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது. (https://padhaakai.com/2015/09/07/london-prabhu-on-su-venugopal/). ஆனால் அது மானுட இருளையும் தீமையையும் கொண்டாடும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறதா இல்லை அதில் ஒளி தென்படுகிறதா என்ற தேடுதலோடு எழுதப்பட்டிருக்கிறதா? இருண்மையை பற்றி பேசும் படைப்பு எந்த நோக்கத்தில் அதைப் பற்றி பேசுகிறது என்று எப்படி அளவிடுவது?

சு.வேணுகோபால் கதைகளை மொத்தமாக வகைப்படுத்தினால், அது விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள் என்று வகைப்படுத்தலாம். ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கப்பட்ட, மையத்திற்கு வெளியில் இருப்பவர்களுடைய கதைகள். பால்கனிகள் கதையில் வரும் திருநங்கை, கூந்தப்பனையில் வரும் மலட்டுத்தன்மை உடைய ஆண். செங்கல் சூளையில் வேலை செய்பவர்கள், பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்கள், பசுமை புரட்சியும் இயந்திர புரட்சியும் வெளித்தள்ளிய விவசாயிகள் என்று சமூகத்தின் மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். பல்வேறு வகைகளில் சுரண்டலுக்கு ஆளானவர்கள்.

இந்த பேசுபொருட்கள் காரணமாகவே, சு.வேணுகோபாலின் கதைகள் அதிகமும் துயரையும், தனிமைப்படுத்தலையும் பேசுபவனவாக இருக்கின்றன. இருளின் ஆழங்களை காணும் கண் அவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் அது இருளை பார்த்து திளைத்து ரசிப்பதாக இல்லை. அதில் வாழும் மனிதர்களை மிகுந்த பரிவுடனும், வருத்தத்துடனும் நோக்குவதாகவே உள்ளது. அவர்களுக்காக நம்மை கண்ணீர் சிந்த வைப்பதாகவே உள்ளது.

இதைத் தொடர்ந்து எழும் கேள்வி – எழுத்திற்கென்று ஒரு கடமை இருக்கிறதா? நன்மையின் தரப்பில் நிற்க வேண்டும் என்றோ, ஒளியை நோக்கி துழாவ வேண்டும் என்றோ? காம்யூ போன்று வாழ்க்கையின் அபத்தத்தை பேசிய இருத்தலியவாதிகளும் இலக்கியவாதிகளாக தான் கருதப்படுகின்றனர். பாலியல் பிறழ்வுகளை எழுதிய மார்க்யூஸ்ஸேட் படைப்புகள் ஒரு சாராரால் இலக்கியமாக கருதப்படுகிறது. தமிழிலேயே தீமையின் சித்திரங்களை எழுதிய ஆ.மாதவன் நாம் கொண்டாடும் படைப்பாளிகளுள் ஒருவர். மகாபாரதம் போன்ற ஒரு பேரிலக்கியம் தீமைகளின் ஆடுகளமாக உள்ளது. ஒரு எழுத்தாளன் நன்மையின் தரப்பிலோ, தீமையின் தரப்பிலோ நின்றாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஒரு படைப்பாளி எதை எழுதுகிறான் என்பது அவன் ஆளுமையும் வாழ்க்கை பார்வையும் மட்டுமே தீர்மானிப்பது என்றே நினைக்கிறேன்.

மேலும் படைப்பாளிக்கு ஒரு கருத்தியல் சட்டகம் என்றும் எதுவும் கட்டாயமில்லை. தன் ஆழ்மனதிற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவன் முன் உள்ள சவால். அவன் எழுதுவது இருண்ட தீமையாக இருந்தாலும், உலகை உய்விக்கும் நன்மையாக இருந்தாலும் அது எவ்வளவு தூரம் உண்மைக்கு அருகில் இருக்கிறது என்பதை வைத்தே அதற்கு மதிப்பு.

இதே கேள்வியை மற்ற முன்னோடி படைப்பாளிகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை ஆராயும் பொருட்டு மூன்று பேரை இவருடனான ஒப்பீட்டிற்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். கரிசல் மண்ணை சேர்ந்த கி.ராஜநாராயணன், விளிம்பு நிலை மனிதர்களை எழுதியவராக அறியப்படும் ஜி.நாகராஜன் மற்றும் தீமையின் பல்வேறு சித்தரிப்புகளை அளித்துள்ள ஆ.மாதவன்.

கி.ராஜநாராயணன் – சு.வேணுகோபாலின் கரிசல் மண்ணிலிருந்து வரும் கி.ரா இருண்மை குறித்து எழுதியிருக்கிறாரா? அறம் குறித்த தேடல் அவர் படைப்புகளில் எங்ஙனம் நிகழ்ந்திருக்கிறது? ஒப்புநோக்க கி.ராவின் கதைகளில் இருண்மையின் சித்திரம் மிக குறைவாகவே காணக் கிடைக்கிறது. கி.ராவின் உலகம் ஒரு வண்ணமயமான உலகம் என்றே சொல்ல வேண்டும். பல்வேறு நிறங்களில் மனிதர்கள் காணக் கிடைக்கிறார்கள். பொம்மைகளை எடுத்து ஆர்வத்தோடு பார்க்கும் ஒரு குழந்தையை போல கி.ரா வெவ்வேறு மனிதர்களை பார்க்கிறார். அவர் கதைகளில் பெரும்பாலும் அவர் இனக்குழுவை சேர்ந்த மனிதர்களின் கதைகளாக தான் இருக்கிறது. அதில் வருத்தங்கள், சோகங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அது சமூகத்தில் புறம் தள்ளப்பட்டவர்களின் கதைகளாக இல்லை.

வேணுகோபாலின் உலகில் கி.ராவின் பல கதைகள் காணக்கிடைக்கின்றன் – தொப்புள்கொடி, தீராக்குறை போன்று (இவை கிராவின் ‘பேதை’ மற்றும் ‘கறிவேப்பிலைகள்’ கதைகளுடன் ஒப்புநோக்கத்தக்கவை). ஆனால் கி.ராவின் கதைகளில் வேணுகோபால் பேசும் பல தளங்கள் காணக் கிடைப்பதில்லை. உதாரணமாக, ‘இனக்குழு அழகியலின் முன்னோடி’ கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பதை போன்று கி.ரா படைப்புகளில் தலித் மக்களின் வாழ்க்கை குறிப்பிடும்படி சொல்லப்படுவதில்லை. அவர் கதைகளில் பெரும்பாலும் வருவது நாயக்கர் கதாபாத்திரங்கள் தான். அவர்களையும் ஒரு கேலிச் சித்திரமாக ஆக்கி (‘வேட்டி’, ‘நாற்காலி’) அவர்களது கருமையான பக்கங்கள் வெளிக்கொணரப்படுவதில்லை.

மாறாக சு.வேணுகோபால் சமூக அழுத்தங்களில் சிக்கித் திணரும் தலித் கதாபாத்திரங்கள் பல கதைகளில் காணக் கிடைக்கிறார்கள். ‘இழைகள்’, பட்டம்மா’, ‘திசையெல்லாம் நெருஞ்சி’ போன்று. விளிம்பு மனிதர்கள் மீது வேணுகோபால் கொண்டுள்ள இயல்பான கரிசனத்தின் விளைவாக அவர் தலித் வாழ்க்கையை சொல்லத் தேர்ந்தெடுத்து அதை அற்புதமாக சித்தரித்தும் உள்ளார்.

சு.வேணுகோபாலின் பல கதைகள் இருண்மையிலிருந்து மீட்பு என்ன என்ற தாவலை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. இதை பால்கனிகள் மற்றும் கூந்தப்பனை ஆகிய குறுநாவல்களில் கண்டுகொள்ளலாம். பால்கனிகள் கதையில் தன்னைச் சார்ந்தவர்கள் அனைவராலும் கைவிடப்படும் கிருஷ்ணன் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுப்பதில் தன் மீட்பை கண்டுகொள்கிறான்.

”துரோகம் பண்ணா ஆம்பளைய விரும்ப கூடாதுனு இருக்கா? அப்படி இருக்க முடியுமாக்கா? அவங்க வெறுத்தா நாம வெறுக்கணும்னு கட்டாயம் ஏதாவது இருக்கா? எல்லோரும் என்னை வெறுக்க வெறுக்க தான் இதைத் தூக்கி முத்தம் வச்சேன். இவன் என்னை ஒருபோதும் வெறுக்க மாட்டாங்கா! ஏமாத்தமாட்டாங்கா! என்னை புரிஞ்சிப்பான். என்னை கண்கலங்காம காப்பாத்துவான். யாரையும் ஏமாத்தறது மாதிரி வளக்கமாட்டேங்கா. நல்லா படிக்க வெச்சிருவேன். யாரும் யாரையும் வெறுத்துட்டு வாழ முடியுமாக்கா? அது வாழ்க்கையா? வெறுக்கறதுல என்ன இருக்கு? நேசிக்கறதுலதான் அழகிருக்கு. என்ன நான் சொல்றது?”

கூந்தப்பனை கதையில் மலட்டுத்தன்மை காரணமாக சதீஷ் தன் மனைவியை மனமுவந்து நண்பனுக்கு மணமுடிக்கிறான். பின் மனைவி புது கணவனுடனே ஒட்டிக் கொண்டு இவனை வெறுக்கத் தொடங்கவே தற்கொலைக்கு முயல்கிறான். ஆனால் வழியில் காணும் கூந்தப்பனை சதீஷுக்குள் இருக்கும் தாய்மையை கண்டுகொள்ள உந்துகிறது. அவன் கண்டெடுக்கும் ஊற்று ஒரு குறியீடாகி கதையில் விரிகிறது.

ராஜநாராயணின் ‘கோமதி’ கதை பால்கனிகள் கதையுடன் ஒப்புநோக்க கூடியது. அதில் கோமதி செட்டியார் ஆணாக பிறந்திருந்தாலும் உணர்வுகளால் பெண்ணாக உணர்கிறான். அவன் புடவை, பூ, வளையல்கள் அணிந்து, நட்ட நடுராத்திரியில், பிரிந்து சென்ற தன் காதலன் புகைப்படத்தை நோக்கி அழும் காட்சியோடு கதை முடிகிறது. அது அளிக்கும் ஒரு அதிர்ச்சி கதையின் முடிவாக ஆகிறது. ஆனால் அதற்கு மேல் என்ன என்ற கேள்விக்குள் ராஜநாராயணன் செல்வதில்லை.

ஜி.நாகராஜன் அன்று தமிழ் நவீன இலக்கிய பரப்பில் பேசப்படாத பரத்தையர் உலகம் பற்றி அதிகம் எழுதியவர். இந்த விதத்தில் அவரது ‘நாளை மற்றுமொரு நாளே’ மற்றும் ‘குறத்திமுடுக்கு’ குறிப்பிடத்தகுந்த ஆக்கங்கள். அதைத் தவிர்த்தும் பாலுறவு சார்ந்த சிக்கல்களையும் அவர் பேசியிருக்கிறார். (மிஸ் பாக்கியம்). அந்த வகையில் விளிம்பு நிலை கதைகளை பேசியவர் என்று இவரை வகைப்படுத்தலாம்.

காம சித்தரிப்புகளில் ஜி.நாகராஜனுக்கும், சு.வேணுகோபாலுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாகவே நினைக்கிறேன். காமத்தின்பாவனைகள், அதன் முறைமீறல்கள் ஆகியவை இருவரது படைப்புகளிலும் காணக் கிடைக்கிறது. கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா, மிஸ். பாக்கியம் போன்ற கதைகளில் ஒழுக்க மீறலை சித்தரிக்கும் கதைகளுக்கு நிகரானவை என்று வேணுகோபாலின் உள்ளிருந்து உடற்றும் பசி போன்ற சிறுகதைகளை சொல்லலாம். (ஜி.நாகராஜனை விட வேணுகோபாலின் காமச்சித்தரிப்புகள் நீண்ட விவரணைகளுடன் இருப்பதை காணலாம். )

நாகராஜனில் இருந்து வேணுகோபாலின் மனிதர்கள் வேறுபடுவது, அவர்கள் வாழ்க்கை மிகுந்த துல்லியத்துடன் சித்தரிக்கப்படுவதில் உள்ளது. அதன் விளைவாக அவர்களை நெருங்கி அறியும் ஒரு அனுபவம் ஏற்படுவதோடு, அவர்கள் மீது ஒரு கரிசனமும் பிறக்கிறது. இதற்கு காரணம் வேணுகோபாலின் நுண்தகவல்கள் நிறைந்த புற மற்றும் அகசித்தரிப்புகள். ஜி.நாகராஜனின் படைப்புகளில் புற சித்தரிப்புகள் அதிக தகவல்களோடு விவரிக்கப்படுவதேயில்லை. மேலும் நாகராஜன் உலகில் உள்ள பரத்தையர்களின் அகச்சித்தரிப்புகளும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்படவில்லை. குறத்திமுடுக்கு கதையில் தங்கம் தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்தியவனுடன் இறுதியில் ஒரு ஒழுக்கமான மனைவியாக சென்று சேர்வது ஒரு விருப்பக் கற்பனை என்று தோன்றும் அளவே உள்ளது. அதில் அசல் வாழ்க்கையை காணக்கூடிய நம்பகத்தன்மை இல்லை.

ஆ.மாதவன் –இருண்மையை விவரிப்பதில் சு.வேணுகோபாலுடன் இணைத்து பார்க்க வேண்டியவை ஆ.மாதவனின் படைப்புகள். மாதவனின் உலகில் தீமையின் பல வகை மாதிரிகள் காணக் கிடைக்கின்றன். பல சமயம் தீமை ஒரு கொண்டாட்டமாக ஆகி மனித இயல்பின் ஆழம் பீறிடுகிற உவகையாக மட்டுமே எழுதப்படுகிறதோ என்று எண்ண வைப்பவை. ‘காமினி மூலம்’ கதை ஒரு உதாரணம். இந்த கதையில் வரும் கண்டக்டர் செபாஸ்டினுக்கும், லாட்ஜ்வாட்ச்மேன் முஸ்தபாவிற்கும் அடிக்கடி உரசல்கள் எழுந்தபடி இருக்கின்றன. ஒரு செபாஸ்டின் ஒரு இரவில் ஒரு பெண்னை லாட்ஜில் கூட்டிக்கொண்டு வர, முஸ்தபா அதை அனுமதிக்க மறுத்துவிடுகிறான். கறுவிக்கொண்டே இருக்கும் செபாஸ்டின் ஒரு நாள் முஸ்தபா கொடொவினில் மூட்டைகளை எண்ணிக் கொண்டு இருக்கும் போது கீழிருந்து ஒரு மூட்டையை இழுத்துவிட்டான். சர, மீண்டும் எண்ணிக்கொள்ளட்டுமே என்ற நினைப்பில். ஆனால் அந்த மூட்டைகளின் அட்டி முழுவதும் முஸ்தபா மீது விழுந்து அவன் இறந்துவிடுகிறான். ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துவிடுகிறது என்று உணர்ந்தும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அன்று மாலையும் அவன் எப்பொழுதும் போல் டீக்காக டிரஸ் செய்து, பவுடர், ஸ்நோ போட்டு வேலைக்கு புறப்படுகிறான் ஸெபாஸ்டியன்.

வேணுகோபாலின் கதைகள் ஆ.மாதவனின் உலகிலிருந்து வேறுபடும் இடம் அவை தீமையின் சித்தரிப்பாக மட்டுமே இல்லை என்பது. அதில் தீமையை கண்டுகொள்வதின் உவகை இல்லை. மேலும் வேணுகோபாலின் எழுத்துக்கள் பெரும்பாலும் இருண்மையை சித்தரிப்பவை. இருண்மை பல சமயத்தில் புறகாரணிகளால் உண்டாக்கப்படுவது. விவசாய வாழ்க்கையின் வீழ்ச்சி உண்டாக்கும் இடர்கள், பொருளாதாரத்தின் அடித்தட்டில் வாழ்வதால் ஏற்படும் அழுத்தங்கள், சுரண்டல்கள் மற்றும் அவை உண்டாக்கும் துயரங்கள், என்று சு.வேணுகோபால் படைப்புகளின் இருண்மை பெரும்பாலும் சமூக அமைப்பு, பொருளாதார வீழ்ச்சி போன்ற புறகாரணங்களால் அமைகிறது. ஆனால் தீமை ஒருவனின் உள்ளார்ந்த இயல்பில் இருந்து வெளிப்படுவது. மாதவனின் கதை மாந்தர்களிடம் தீமை ஒரு நீரூற்றிலிருந்து பீறிட்டு வரும் நீரை போல் வெளிவந்து, ஒரு குற்றத்தை செய்துமுடித்து பின் அடங்கிவிடுகின்றன.

வேணுகோபாலின் படைப்புகள் யதார்த்தவாத அழகியலுக்குள் வருபவை. யதார்த்தவாத அழகியல் உள்ளதை உள்ளபடி சொல்லும் ஒரு பாவனையை மேற்கொள்கிறது. இயல்புவாதத்திற்கும் இதுவே இலக்கணம் என்றாலும், யதார்த்தவாத கதைகளில் ஒரு மறைமுக ஆசிரிய குரல் நன்மை தீமைகளுக்கான ஒரு தேர்வை நிகழ்த்துகிறது. உதாரணமாக வெண்ணிலை கதையில், அநாதரவாக சாலையில் நிற்கும் ஒருபதின் வயது பெண்ணை, பாலியல் தொழிலாளியாக நினைத்து நெருங்கும் இரு இளைஞர்கள், அவள் தன் தந்தையின் இறந்து போன உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்ல யாருமே தெரியாத ஊரில் உதவி செய்யக் கூடிய ஆட்களை தேடி நிற்கிறாள் என்று அறிந்து கொள்கின்றனர். அதன் பின் அந்த பெண் மீதும் அவள் குடும்பம் மீதும் அந்த இளைஞர்கள் கொள்ளும் பரிவு மூலமும் குற்ற உணர்ச்சி மூலமும் அந்த கதையின் உணர்ச்சி உருவாகி வருகிறது. அவர்கள் மூலமாக அதை உருவாக்குவது ஆசிரியரின் குரல் தான். ஆனால் இயல்புவாத படைப்புகளிலோ வெறும் புற உலக சித்தரிப்புகள் மூலமாக கதை முன்னகர்த்தப்பட்டு ஆசிரியர் குரல் என்பதே இல்லாமல் ஆகிவிடுகிறது. இந்த இயல்புவாத அழகியலே தீமையை சித்தரிப்பதற்கான சரியான வடிவமுமாக இருக்கிறது என்று ஜெயமோகன் தன் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ளும்போது, சு.வேணுகோபால் இருண்மையை பற்றியே அதிகமும் எழுதியுள்ளார் என்று உறுதிப்படுகிறது. ஆனால் அது இருண்மையின் உலகை கொண்டாடுவதாக இல்லை. மாறாக அது இருளில் இருக்கும் மனிதர்களை பரிவுடன் பார்க்கிறது. கீழ்மையை கண்டு சீற்றம் கொள்கிறது. இருண்மைக்கு மேல் செல்லும் மீட்பை பற்றி பேசுகிறது. ஏன் அப்படி அவர்கள் மீட்பை பற்றி பேச வேண்டும், ஏன் ஒளியை நோக்கி துழாவ வேண்டும் என்றால், அதில் தான் வாழ்வதற்கான நம்பிக்கை இருக்கிறது என்பதே விளக்கமாக தோன்றுகிறது.

 

 

[சு வேணுகோபால் குறித்து விமர்சனம் எழுதுவதற்கான போட்டிக்கு இரு கட்டுரைகள் மட்டுமே வந்தன. இது அதில் ஒன்று]

 

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14