வண்டி நகர்ந்ததும் ஏய்டன் திரும்பிப் பார்த்தான். அந்தக் குழந்தை அவ்வளவு தூரம் முன்னால் நகர்ந்து வந்திருந்தது அவனைத் துணுக்குறச் செய்தது. புதர்களுக்குள் நாய்க்கூட்டம் நெருங்கிவரும் அசைவுகள். அந்தக்குழந்தை மேலும் முன்னால் நகர்ந்து கொண்டே இருந்தது, வண்டியைத் தொடர்ந்து வருவது போல். “எங்கிருந்து வருகிறது அந்த ஆற்றல்?’. அது உயிரின் ஆற்றல். மண்ணிலுள்ள ஒவ்வொரு உயிரிலும் நிறைந்திருக்கும் வாழ்வின் விசை.
‘அது தான் சாத்தானா?’
-வெள்ளையானை – அத்தியாயம் 6
[ 1 ]
“ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள்? ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள்?”
இக்கேள்வியை அடிப்படையாகக் கொள்கிறேன்.
தீமை என இங்கு வரையறை செய்யப்படுவது எது? என இன்னொரு கேள்வியையும் இணைத்துக் கொள்கிறேன்.
இரு வகையான தீமைகளை அவதானிக்க முடிகிறது. சுபாவத்தினால் தனிமனிதன் ஒருவனுக்குள் ஊடுருவியிருக்கும் தீமை. ஆ.மாதவனின் புனலும் மணலும் நாவலில் வரும் அங்குசாமி மூப்பனைப் போல். அவனுக்கு பங்கியின் மீதிருக்கும் வெறுப்புக்கு முகாந்திரம் என எதையும் சொல்லி விட முடியாது. அது இருந்து கொண்டே இருக்கிறது. அதனைப் புரிந்து கொள்ள அந்த நாவல் முழுவதுமே ஆசிரியர் போராடுகிறார். இறுதியில் அந்த வெறுப்பிற்கு அவளை பலி கொடுப்பதோடு அந்த நாவல் முடிகிறது. தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் அமரந்தாவிற்கு ரெபேக்காவின் மீதும் அவள் காதலின் மீதும் ஏற்படும் பொறாமையும் அத்தகையதே. அப்பொறாமை அமரந்தாவின் வாழ்க்கையைச் சிதைக்கிறது. ஆனால் இறுதிவரை ரெபேக்காவை தினமும் நினைத்திருப்பவளும் அவளாகவே இருக்கிறாள். அவளை ஆழமாக விரும்பும் கிரெஸ்பியையும் பின்னர் மார்க்கேஸையும் அவள் மறுதலிப்பதற்கு அப்பொறாமையே காரணமாக அமைகிறது.
அழுக்காறு அவா வெகுளி என்றெல்லாம் நாம் சொல்வது இந்த சுபாவத்தில் உறையும் தீமையின் பரிணாமங்களே. சுபாவத்தில் உறையும் தீங்கினை களைவதற்காகவே அத்தனை அறங்களும் இளவயதில் போதிக்கப்படுகின்றன போலும். அற நூல்கள் பெரும்பாலும் தன்னுடைய இச்சைகளை முதன்மைப்படுத்திக் கொள்வதை தீமை என்று வரையறை செய்கின்றன. சத்தியசோதனையில் காந்தி ஒரு சம்பவத்தை சொல்லியிருப்பார். அவருடைய தந்தையின் மரணத் தறுவாயில் ஒரு தாதியாக அருகில் இருந்து பணிவிடை செய்தவர் காந்தி. ஒரு இரவில் அவர் தந்தை உறங்கிய பிறகு மனைவியிடம் செல்கிறார். நள்ளிரவில் கதவு தட்டப்படுகிறது. தந்தை இறந்துவிட்டார் என்ற தகவல் வருகிறது. இறப்பு நேரத்தில் அவருடன் இருக்க முடியாமல் போனதற்காகவும் தன்னுடைய இச்சைக்காவும் தன்னை நொந்து கொள்கிறார் காந்தி. தன்னை தன் உடலை முன்னிறுத்திக் கொண்டதற்காக காந்தி அங்கு குற்றவுணர்வு கொள்கிறார். அது ஒரு தற்செயல் எனினும் லட்சியத்திற்கும் தேவைக்குமான இருமையை உணர்த்தும் குறியீடாக அச்சம்வத்தை சொல்ல முடியும்.
சமூகம் மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு பாதையை வகுத்துள்ளது. அதனை மட்டுமே பின்பற்றி தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவனை பிரதிபலனாக அச்சமூகம் மதிக்கிறது. அதனை மீறிச் செல்பவர்களை சமூகம் தண்டிக்கிறது அது சாத்தியமில்லாத போது தூற்றுகிறது அல்லது வசைபாடுகிறது. ஆனால் சமூகம் வரையறுக்கும் இந்த எல்லைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் வாழ்கிறோம். ஆகவே எது சரி எனத் தீர்மானிப்பதில் சொந்த ஊரை விட்டு வெளியே செல்லாத என் அம்மாவின் பார்வையும் உலகம் முழுவதும் சுற்றும் ஒரு பெண்ணின் பார்வையும் வேறாகவே இருக்கும். நம் ஒழுக்கத்தையும் நீதியுணர்ச்சியையும் அழகுணர்ச்சியையும் அறவுணர்ச்சியையும் பரிசீலனை செய்யும் பணியை இலக்கியம் நிச்சயம் செய்கிறது. ஆகவே அது சுபாவத்தில் உறையும் தீங்கினை மட்டுமல்லாது அனைத்தும் சரியாகவே நடப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் செயல்பாட்டில் இயல்பாகவே உறையும் தீங்கினையும் விவாதத்திற்குள் இழுக்கிறது.
முன்னது தனிமனிதனின் அகப்போராட்டங்களை அவனால் சமாளிக்க முடியாத சூழல்களில் அவன் எடுக்கும் முடிவுகளில் உறையும் கருணையை அல்லது குரூரத்தை அவன் சென்று தொடும் கீழ்மைகளை அல்லது உச்சங்களை சொல்வதாக உள்ளது. பெரும்பாலும் சுபாவத்தில் உறையும் தீங்கினைச் சொல்லும் படைப்புகள் சமகாலத் தன்மை உடையவை. நிகழ்காலத்துக்கும் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளுக்கும் அணுக்கமான பாவனையை மேற்கொள்பவை. அவை கையாளும் காலமும் சிக்கல்களும் தனிமனிதன் சார்ந்தவையாக உள்ளன.
அதே நேரம் அமைப்பில் உறையும் தீங்குகளை அல்லது கொடூரங்களை எடுத்துச் சொல்லும் படைப்புகள் ஒரு வித “வரலாற்று விசாரணை” பாவனையை மேற்கொள்கின்றன. மிக விரிந்த பெருங்கதையாடல் களமும் நீண்ட காலமும் அதிகமான பாத்திரங்களும் கொண்டவையாக அவை அமைகின்றன.
இந்த காரணங்களால் என்னவோ சுபாவத்தில் உறையும் தீங்குகளைச் சொல்ல சிறுகதையும் அமைப்பு ரீதியான தீங்குகளை எடுத்துரைக்க நாவலும் ஏற்ற வடிவங்களாக தென்படுகின்றன.
ஏன் தீமையை எழுத வேண்டும்?
நல்ல படைப்பு ஏதோவொரு விதத்தில் கால மாற்றத்துடன் பயணிக்கிறது. நேற்று சாதாரண நடைமுறையாக இருந்த ஒன்று இன்று தீங்கென மாறியிருக்கலாம். உதாரணமாக சாதி. நேற்று செய்யத் தகாதவை என்று எண்ணப்பட்டவை இன்று இயல்பானதாய் மாறியிருக்கலாம். உதாரணமாக விதவை மறுமணம் அல்லது விவாகரத்து. இவை புரிந்து கொள்ளக் கூடியவை. சற்றே விவாதித்தால் எதிர்தரப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மன விரிவை அடைந்து விட முடியும். ஆனால் அதையும் கடந்து முகாந்திரமற்ற இருண்மைகள் சூழ்ந்து கிடக்கும் மனங்களையும் அமைப்புகளையும் படைப்புகள் வழியே தரிசித்த படியே உள்ளோம்.
தீமையின் கவர்ச்சியை மிக நேர்த்தியாக கட்டமைத்த படைப்பாளியாக டால்ஸ்டாயை சொல்லலாம். மனித சுபாவத்தில் உறையும் மீறலையும் அமைப்புகளில் உறையும் அற்பத்தனங்களையும் ஒரே நேரத்தில் அவரது படைப்புகள் கையாள்வதை காண முடிகிறது. போரும் வாழ்வும் நாவலில் அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை எனினும் பீயர் ஹெலனை நோக்கி ஈர்க்கப்படுகிறான். நட்டாஷா அனடோலிடம் மனம் மயங்குவதையும் ஒரு உச்சகட்ட நாடகத் தருணமாக அமைத்திருப்பார் டால்ஸ்டாய். ஆனால் அந்த ஈர்ப்பில் இருந்து அவர்களை மீண்டு வருவதே அவர்களின் முழுமையாக சித்தரிக்கப்படுகிறது.
அதே நாவலில் மற்றொரு புறம் போர். ஊழல்களும் சூறையாடல்களும் தீ வைப்புகளும் சதிகளும் சிறைபடுத்தல்களும் வெற்றுப் பெருமிதங்களும் என அதுவரை இருந்த மனிதநேயம் என்ற பாவனையை முற்றாக அழிக்கும் ஒரு பெரு நிகழ்வு. ராஸ்டாப்சைன் என்ற தளபதியின் தெளிவற்ற ஆணையால் அதுவரை தங்களை அப்பாவிகள் என நம்பியிருந்த மக்கள் ஒருவனை அடித்தே கொல்கின்றனர். சாதாரணமாக கொலைக்கு அஞ்சும் அவர்களால் ஒருவன் இறந்ததை எளிதாக வியாக்கியானம் செய்து விட முடிகிறது.
ஏறத்தாழ அன்னா கரீனினா புத்துயிர்ப்பு என அவரது மற்ற நாவல்களிலும் இதே தன்மையை காண முடிகிறது. தீமை என நம்பும் ஒன்றை நோக்கியே அன்னாவும் நெஹ்லூதவும் ஈர்க்கப்படுகின்றனர். அன்னாவின் பயணம் மேலும் சரிவு நோக்கியதாக ஆடம்பரமானதாக வெறுப்பும் அன்பும் அன்பிற்கான எதிர்பார்ப்பும் நிறைந்ததாக அமைந்திருக்கும். நெஹ்லூதவின் பயணம் அதுவரை அவன் சகஜமாக புழங்கிய மேட்டுக்குடியினரின் அற்பத்தனத்தையும் பெருமிதத்தையும் நேர்மையின்மையையும் காண்பதாகவும் அவன் மஸ்லவாவிற்கு இழைத்த தவறுக்காக தன்னை வருத்திக் கொள்வதாகவும் அமைந்திருக்கும்.
மனதில் உதிக்கும் அந்த ஒரு நொடியின் இச்சையை கட்டுப்படுத்த முடிந்திருந்தால் டால்ஸ்டாயின் படைப்புகள் எதுவும் இத்தனை பக்கத்திற்கு விரிந்திருக்காது. ஆனால் அது முடியாது என்ற நிதர்சனத்துடன் அவர் படைப்புகள் மோதுகின்றன. அதுவே அவரது படைப்புகளுக்கு ஒரு அச்சமூட்டும் கவர்ச்சியை அளிக்கிறது.
வேதசகாயகுமார் தொகுத்த புதுமைபித்தனின் சிறுகதை தொகுப்பை தமிழ் சிறுகதையின் வழிகாட்டிக் கையேடாகவே எடுத்துக் கொள்ள முடியும். பொன்னகரம் போன்ற சில சம்பவங்கள் மட்டும் கொண்ட கதைகளின் வழியாகவும் செல்லம்மாள் துன்பக்கேணி போன்ற நீண்ட சித்தரிப்புகள் கொண்ட கதைகளின் வழியாகவும் மிக ஆழமாக இருளை சென்று தொட அவரால் முடிகிறது.
தமிழில் அற்பத்தனத்திற்கு எதிரான மிக ஓங்கி ஒலித்த குரலாக ஜெயகாந்தனுடையதை சொல்லலாம் எனினும் மனித மனங்களின் இடுக்குகளையும் ஓரங்களையும் அவர் புறங்கையால் ஒதுக்கி விடுகிறார். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற படைப்புகளில் பொறாமையாலும் தாழ்வுணர்ச்சியாலும் தூண்டப்பட்ட ஒருவனின் மனம் சென்று தொடும் எல்லைகளை அவர் சித்தரித்திருந்தாலும் அதுவும் ஒரு மூத்தோனின் சொற்களில் வெளிப்படுவதால் அந்த கீழ்மைகளை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பினை மறுக்கிறது.
சுந்தர ராமசாமியிடம் ஒரு அடங்கிய தன்மை வெளிப்படுகிறது. கவிதைக்கே உரிய மயக்கும் நேர்த்தியினாலேயே அவர் படைப்புகளில் ஒரு எழுச்சி தென்படுகிறது. ஆனால் அதை ஆழமாக நோக்கும் போது மனித வாழ்வின் வக்கிரங்களால் லட்சியவாதத்தில் நம்பிக்கை இழந்த ஒரு மூத்தோனின் பார்வையை அதில் காணலாம். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் போன்ற குடும்பம் சிறுவர்களுக்கு இழைக்கும் குடும்பமே காண முடியாத தீமையை கோடிட்டுச் செல்லும் படைப்புகளில் கூட மின்னும் அழகும் நேர்த்தியும் அந்த அமைப்பின் அபத்தங்களை விசாரணை செய்வதை தடுக்கின்றன.
அசோகமித்திரனிடம் அது பெரும் சலிப்பாக வெளிப்படுகிறது. அவர் மொழியின் சர்வ சாதாரணத் தன்மையாலேயே அவர் படைப்புகள் பெரும் அதிர்ச்சியை உருவாக்குகின்றன. தண்ணீர் நாவலில் நாவல் முழுவதுமே தொடரும் தண்ணீர் பிரச்சனை இன்று ஒரு குறியீடு.
“நான் இன்னிக்கும் குளிக்காம ஓட்டிகோலானை போட்டுண்டு ஏமாத்துறேன். நாளைக்கு இங்க முடியலேன்னா ஆபீசிலயாவது குளிச்சிடுறேன்”
“நீயாவது ஆபீஸ்ல குளிச்சிப்ப. நான் எங்க போய் குளிக்கிறது” என்பது போன்ற மிகச் சாதாரண உரையாடல்களை வழியாகவே மிகப் பெரிய அமைதியின்மையை அவர் படைப்புகள் உருவாக்குகின்றன. எவ்வளவு ஈரத்துடன் தொடங்கினாலும் ஒரு வித வறட்சி மனநிலையை ஒரு சில வசனங்கள் வழியாக வாழ்வியல் அபத்தங்கள் வழியாக அசோகமித்திரனால் உருவாக்கி விட முடிகிறது.
கரைந்த நிழல்கள் இன்று என அவரது மற்ற படைப்புகளிலும் அபத்தமானவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் இயலாதவர்கள் மரத்துப் போனவர்கள் என பாவனைகளற்ற மனிதர்கள் ஒரு பக்க இருளில் இருந்து வெளிவந்து தரிசனம் தந்துவிட்டு மறுபக்க இருளில் மறைந்த படியே உள்ளனர். எளிதாக கடந்துவிடக்கூடிய எளிய மனிதர்கள் தான் அவர்கள். சுயநலமும் இயலாமையும் நிறைந்தவர்களாகவே வருகின்றனர். ஆனால் சற்றே அவர்களுடைய வாழ்வை எட்டிப் பார்த்தாலும் பெருஞ்சோகமும் சலிப்பும் நம்பிக்கை இன்மையும் அப்பிக் கொள்ளும் பேருலகாக அசோகமித்திரனின் படைப்புகள் உள்ளன. அவதானிப்பின் வழியாக மட்டுமே உணரக்கூடிய இருண்மைகளை சித்தரிப்பதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்.
மிக இருட்டான வாழ்க்கையை மட்டுமே எழுதிய படைப்பாளி ஜி. நாகராஜன். குறத்தி முடுக்கின் வழியாக அவர் எதையும் சொல்ல வருவதாக தெரியவில்லை. நூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த சிறிய நாவலில் நுழைந்து வெளிவருகையில் வாழ்க்கை அர்த்தமற்று வெளிறிப் போய் கிடக்கிறது.
மிக அடங்கிய குரலில் மனித சுபாவத்தில் உறையும் இருளை உக்கிரமாக சொன்ன படைப்பாளி வண்ணதாசன். புதுமைபித்தனின் எள்ளல் நடையோ அசோகமித்திரனின் உணர்ச்சிகள் வடிகட்டப்பட்டோ நடையின் பாதிப்போ இல்லாமல் சூழலை தொடர்ந்து கவனிக்கும் ஒருவனின் எதைச் சொல்வது எதை விடுவது என்ற ஒரு பதற்ற பாவனை கொண்ட நடை வண்ணதாசனுடையது. மிக மென்மையானவற்றை எளியவற்றை சொல்லியே ஈர்க்கும் படைப்பாளியாக அவர் அறியப்படுகிறார். ஆனால் எதிர்மறைத் தன்மையின் உக்கிரம் வெளிப்படுபவையாகவே அவர் சிறுகதைகளில் பல உள்ளன. போய்க் கொண்டிருப்பவள் போன்றவை நம்பிக்கை தரும் படைப்புகள் எனினும் நிலை தனுமை போன்ற படைப்புகள் உருவாக்கும் அமைதியின்மை வலிமையானது.
சுபாவத்தில் உறையும் தீங்கு அமைப்பில் உறையும் தீங்கு இரண்டையும் டால்ஸ்டாய்க்கு பிறகு ஒரே வாகனத்தில் வெற்றிகரமாக ஏற்ற முடிந்த படைப்பாளி ஜெயமோகன். அவருடைய முதல் நாவலான ரப்பர் தொடங்கி சமீபத்திய கிராதம் வரை மனித மனத்தின் இருள் குறித்த விசாரணையை காண முடிகிறது. ரப்பரின் பிரான்சிஸில் தொடங்கி கிராதத்தின் அர்ஜுனன் வரை தடுமாற்றங்கள் கொண்ட தேடல் நிறைந்தவர்களால் ஆனது அவரது புனைவுலகு. அறம் என நம்பும் ஒன்றினை கேள்விக்குள்ளாக்கியபடியே அவருடைய நாயகர்கள் முன்நகருகிறார்கள். மேலும் சிக்கலான ஒன்றில் நுழையும் பதற்றம் அவருடைய நாயகர்களையும் நாயகிகளையும் மேன்மையாக்குகிறது. மாறாக வெளிப்புறத்தில் இருளினை சித்தரிப்பது போன்ற தோற்றம் தரும் ஏழாம் உலகம் போன்ற படைப்புகளின் வழியாக மானுட வாழ்வின் கொண்டாட்டத்தை சொல்கிறார்.
ஒரு ஆண் மனம் சென்று தொடக்கூடிய கீழான உச்சங்களையும் அதே நேரம் அவ்வாழத்தை குனிந்து நோக்கும் மன விரிவு கொண்ட ஒரு பெண்ணின் உயரத்தையும் சொல்லும் நாவலாக கன்னியாகுமரியை சொல்லலாம்.
ஒரு தனிமனிதனின் அகம் சிதையக்கூடிய உச்ச நிலையை பின் தொடரும் நிழலின் குரல் காண்பிக்கிறது. ஆனால் அந்த சிதைந்த மனத்தினூடாக நடக்கும் வரலாற்று விசாரணை அப்படைப்புக்கு மறுக்க முடியாத முன்னிலையை அளிக்கிறது.
விஷ்ணுபுரத்தின் மையம் மரபை திரும்பிப் பார்க்க வைக்கும் பெரு முயற்சி எனினும் முதல் பகுதியான ஸ்ரீபாதம் அமைப்பு ரீதியான தீங்குகளை கோடிட்டுச் செல்கிறது.
எழுத்தாளர்கள் இருண்மையை இவ்வளவு எழுதுகிறார்கள் என இப்போது தான் எனக்கும் தெரிகிறது.
இருண்மையை ஏன் எழுத வேண்டும் என்பதற்கு பதில் இருண்மை நம் வாழ்வில் இருக்கிறது என்பதாகவே இருக்கும். அவ்விருண்மையைச் சொல்வதன் வழி நாம் அஞ்சி ஒதுங்கி நின்றிருக்கும் ஒரு பாதைக்குள் கைவிளக்குடன் நம்மை அழைக்கிறார்கள். இருண்டவை என ஒதுக்கப்பட்டவற்றின் சிக்கல்களை விசாரணை செய்ய வைக்கிறார்கள். அதோடு இருண்மை வழியாக மேலும் மேலும் கருணை நோக்கியே எழுத்து நகர்வதாக எனக்குப்படுகிறது.
உடல் சிதைந்த ஒரு பிச்சைக்காரனின் முகம் கூம்பியதற்காக அவனை தேற்றி அவனுள் ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கி அவன் சிரித்தான் (குய்யன் சிரித்தான் – ஏழாம் உலகம்)என்பதை ஒரு நாவலின் உச்சமாக வைக்க மிகப்பெரிய கருணை மனநிலையில் மட்டுமே ஒரு ஆசிரியனால் முடியும். அந்த புள்ளியை சென்று தொட மகத்துவத்தை மட்டும் சிந்தித்தல் போதாது. கீழ்மையையும் சிந்தித்தாக வேண்டும்.
[ 2 ]
பேட்டில் ஷிப் என்ற அறிவியல் புனைவுத் திரைப்படத்தில் (சற்றே மொக்கை படம் தான்) ஒரு வரி வரும்.
“ஒருவேளை நாம் அவர்களை (வேற்றுகிரக வாசிகள்) சந்தித்தால் கொலம்பஸ் செவ்விந்தியர்களை சந்தித்தது போலவே ஆகும். ஆனால் நாம் தான் அப்போது இந்தியர்களாக இருப்போம்.”
சு.வேணுகோபாலின் வெண்ணிலைத் தொகுப்பு எப்படியோ இந்த வரியை நினைவிற்கு கொண்டு வந்து விட்டது. மிக விரைவாக வாசிக்கக்கூடிய மொழிநடை கொண்டதாக இருக்கின்றன இக்கதைகள். வட்டார வழக்குகள் அருகி தொலைக்காட்சி மற்றும் பள்ளிக்கல்வியின் பரவலாக்கத்திற்குப் பிறகு உருவான ஒரு பொதுமொழியைக் கொண்டிருப்பதால் வாசிப்பு வேகம் எங்குமே தடைபடுவதில்லை.
இத்தொகுப்பின் முதல் கதையான உயிர்ச்சுனையின் சாயல் மீண்டும் மீண்டும் பல்வேறு கதைகளில் தென்படுவதைக் காண முடிகிறது. நவீனக் கல்வி பெற்ற ஒரு தலைமுறையின் பெண். அவளது மகன். அவனது தாத்தா. போர் போடுவதற்காக மகளிடம் வாங்கிய தொகை ஒன்றுக்கும் பயனில்லாமல் வீணாவதை சொல்கிறது. ஆனால் அந்த அதிர்ச்சி நிதின் மீது வன்மமாக திரும்பும் இடமே அதிர்ந்து நிற்கச் செய்கிறது. அதுவரை பிரியத்துடனும் சலிப்புடனும் செல்லக் கோபத்துடனும் அணுகப்படும் சிறுவன் தனக்கு அடிபட்டால் தன் குடும்பம் ஆறுதலுக்கு வரும் என்று நம்பியிருந்த சிறுவன் ஒரு பொருளியல் தோல்வியால் அவன் கையில் ஏற்பட்ட சிராய்ப்பை கண்டு கொள்ள அந்த குடும்பம் மறுப்பதில் ஏற்படும் அதிர்ச்சியை அவன் வீட்டு நாயிடம் சொல்லும் போது இறந்து போகப் போவதாக முடிவெடுக்கும் போது மிக எளிமையாக உணர்த்தி விட்டு முன் சென்று விடுகிறார்.
பல வண்ணங்களைக் கொண்டு வரைந்த ஓவியத்தை வண்ணங்களுக்கு இடையேயான வேறுபாட்டை அணுகிப் பார்த்தால் மட்டுமே தெரியும் அளவிற்கு நீர்த்துப் போகச் செய்தது போல இருக்கின்றன இக்கதைகள். தனித்தனியே பார்க்கும் போது பெரும் மனக் கொந்தளிப்புகளை உருவாக்கும் தனித்தனி சித்திரங்களாக உதிர்ந்து கிடக்கின்றன இக்கதைகள். அவற்றை ஒரு சட்டகத்துக்குள் பொறுத்திக் கொள்ளாமல் இம்மனிதர்களின் வாழ்வை தொகுத்துக் கொள்ளவே முடியாது. தொகுத்துக் கொள்வதற்கான ஒரு மெல்லிய இழையை வைத்தபடிதான் அனைத்து படைப்புகளும் உள்ளன. அவர்களின் உலகம் இருண்டது கிடையாது. அக்கா வீட்டிற்கு திராட்சை வாங்கி வரும் தம்பி தங்கைகளை திருமணம் செய்து வைக்கும் அண்ணன் வீட்டு வேலை செய்ய மறுக்கும் கணவன் தூரத்தில் நின்று தங்களை பார்க்கும் பெண்ணை “கேஸு” என நினைக்கும் இளைஞர்கள் பிள்ளைக்கு பணம் அனுப்ப முடியாத தகப்பன் மாட்டுக்கு புல் வைக்க முடியாமல் வருந்துபவன் என இக்கதைகளில் வரும் எல்லோரும் இயல்பான மனிதர்களே. ஆனால் அவர்களின் சுபாவத்தில் உறையும் சிறு தீங்கினை தீண்டுவதன் வழியாக ஒட்டு மொத்த சூழலின் காந்தலை இப்படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. பொட்டை நாய் குட்டியை கண்காணாத இடத்தில் கொண்டு விடுவது எங்கும் நடப்பதே. ஆனால் பூமிகா எனும் சிறுமியின் கண்கள் காண்பதே (புற்று) அந்நிகழ்வை அமைதி அற்றதாக்குகிறது.
உடையாளி (கூரு கெட்டவன்), பொம்மையா (வயிற்றுப் புருசன்) போன்ற கள்ளமற்ற மனிதர்களின் வியப்பேற்படுத்தும் ஆளுமை அழுத்தமான பாதிப்புகளை உருவாக்கும் அதே நேரம் அவர்களைப் பயன்படுத்தி கடந்து செல்லும் அற்பத்தனங்கள் மேலும் வலி ஏற்படுத்துகின்றன. மகன்களுக்கு காசு வெட்டிப் போட்டு அழிக்க நினைக்கும் ஒரு அம்மா மாட்டிற்கு புல் திருடப் போகும் கணவன் வெறுமனே சோம்பேறியாய் அமர்ந்திருக்கும் மற்றொரு குடும்பஸ்தன் என அனைவரையும் ஒரு சரடில் இழுத்துக் கட்ட முடிகிறது. வாழ்வின் ஓட்டத்தில் எங்கோ அஞ்சித் தயங்கி நின்று விடுகிறவர்கள் அல்லது மாற்றத்தின் அனலை விளிம்பில் இருந்து எதிர் கொள்கிறவர்கள். பல உரையாடல்களை நிகழ்த்தியபடியே தான் சமூகம் முன்னகர்கிறது. அவற்றில் மிக நுண்ணியவற்றை வேறுபாடு காண முடியாதவற்றை தொட்டெடுப்பதாக சு.வேணுகோபாலின் கதைகள் உள்ளன. அந்த நுண்மையே இத்தொகுப்பை மிக வறண்டதாக இருண்மையானதாக சித்தரிப்பதாக தோன்றுகிறது. விவசாயத்தால் கை விடப்பட்டவர்கள் என்ற பொதுச் சித்திரத்தைக் கொண்டிருந்தாலும் அதிலும் மிகப் பிந்தி அதை உணர்ந்தவர்கள் என்ற தனிச் சித்திரமும் இக்கதைகளில் இருக்கிறது.
தனிமனித மனதில் உறையும் தீங்கு அமைப்பில் உறையும் தீங்கு எனும் சித்தரத்தில் சு.வேணுகோபாலை இவ்வாறு பொருத்தலாம். தனி மனித சுபாவத்தில் உறையும் தீங்கினை இவர் படைப்புகள் சொல்கின்றன. ஆனால் அதன் வழியே சுரணையற்றவர்களாக (கிடந்த கோலம், உள்ளிருந்து உடற்றும் பசி) கருணையற்றவர்களாக (பேதை, தொப்புள் கொடி) அறிவற்றவர்களாக (எல்லோரும் இந்நாட்டு மன்னர்) அவர்கள் மாறிப் போவதற்கான சமூகப் பின்புலத்தை கோடிட்டபடியே இக்கதைகள் நகர்கின்றன. இக்கதைகளின் வண்ணமிழப்பே அவற்றை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. முதல் வாசிப்பிற்கு பெரும் அதிர்ச்சியையும் அமைதியின்மையையும் மட்டுமே உருவாக்குகின்றன
ஜி. நாகராஜனின் படைப்புகள் போல, ஒரு மன வெளிறலை உருவாக்குவது போல. ஆனால் அவரை சு.வேணுகோபால் முந்தும் இடம் இவர் படைப்புகளில் உள்ள அன்றாடத்தன்மை. பிச்சைக்காரன் விபச்சார விடுதி திருடன் என அச்சடிக்கப்பட்ட யாரையும் அவர் உலகில் காண முடிவதில்லை. சாதாரண மனிதர்களின் வழியே வாழ்வின் மீது தனிப்பட்ட கோபம் அற்றவர்களின் வழியே ஒரு உலகை கட்டமைக்கிறார். நவீன யுகத்தால் கைவிடப்பட்டவர்கள் என்று பொதுவாக மட்டுமே இவர்களை சொல்ல முடியும். இந்த காலத்திற்கான ஒரு துருப்புச் சீட்டு மட்டுமே விவசாயம். அச்சீட்டினைக் கொண்டு சு.வேணுகோபால் இருண்மையைச் சித்தரிக்கிறார் என்பதைத் தாண்டி அதனை புரிந்து கொள்ள முயல்கிறார் என்பதே சரியாக இருக்க முடியும். பொது நீரோட்டம் எனும் வாகனத்தில் அனைவரையும் ஏற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் அதனைக் கண்டு திகைத்து நிற்பவர்களை அதனால் கைவிடப் பட்டவர்களை நோக்கி நீளும் கையாகவே அவரது படைப்புகளைக் காண்கிறேன்.
செயலற்றவனைப் பார்த்து புணர்விலும் அப்பெண் சிரிக்கவே (கிடந்த கோலம்) செய்கிறாள். காசு வெட்டிப் போட போனவளால் கூட (தாய்மை) “ஊருக்கு செழிப்பு வரணும் சாமீ. செழிப்பு வரணும்” என்று தான் வேண்ட முடிகிறது. மாற்றுடை கூட இல்லையென்றாலும் (மெய்ப்பொருள் காண்பது அறிவு) “நீ வந்ததே போதும்பா” என்று தான் மகனால் தகப்பனிடம் சொல்ல முடிகிறது. காமத்துடன் மட்டுமே அவளை அவன் பார்த்திருந்தும் (பேதை) இறுதியாக அவள் “அண்ணா” என அழைத்த போதாவது அவளுடைய உண்மையான தேவையை அவன் உணர்ந்திருக்கமாட்டானா? பேரிளம் பெண் கதையில் வருபவளின் தவிப்பு சொல்லாமல் விடப்பட வேண்டியதா?
மிக நுண்ணிய பாவனைகள் வழியாக உருவாக்கப்படும் வேறுபாடுகளை சு.வேணுகோபாலின் படைப்புகள் ஆழ்ந்து நோக்குகின்றன. ஆனால் ஆழ்ந்த அதிர்ச்சியாக அவ்வேறுபாடுகள் நம்முள் நிகழ்கின்றன. அதிர்ச்சியைக் கடந்து பயணிக்கும் போதே அவர் படைப்புகளின் இருள் எங்கும் உள்ளதே என்பது தென்படுகிறது.
[சு வேணுகோபால் குறித்து விமர்சனம் எழுதுவதற்கான போட்டிக்கு இரு கட்டுரைகள் மட்டுமே வந்தன. இது அதில் ஒன்று]