12. நீர்ச்சொல்
கரிச்சான் குரலெழுப்பிய முதற்புலரியிலேயே பீமன் எழுந்து கோமதிக்குச் சென்று நீராடி அங்கேயே புதிய மான்தோல் இடையாடையை அணிந்துகொண்டான். கோமதி இருளுக்குள் வானொளிகொண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதன்மேல் விண்மீன்கள் தாழ்ந்து நின்றிருந்தன. கரைமரங்கள் இளங்காற்றில் உலைய அவற்றின் நிழல்கள் அலைகளில் அசைவதை காணமுடிந்தது. அவனுடன் வந்த குரங்குகள் கரைமரங்களில் அசையாமல் அமர்ந்திருந்தன. படித்துறையாக அமைந்த ஆலமரத்தின் வேர்வளைவில் இரு பெருங்குரங்குகள் அவனை நோக்கிய விழிகள் மின்ன குவிந்தமைந்திருந்தன.
பீமன் ஈரக்குழல்திரிகளை விரல்களால் நீவி தோளில் பரப்பியபடி படியேறி இடைவழியில் நடந்தான். குரங்குகள் அவனுக்கு முன்னும் பின்னும் வால்வளைந்திருக்க கைகால்களை ஊன்றி நடந்து வந்தன. குடிலை அடைந்ததும் ஒரு குரங்கு பாய்ந்து அடுப்பொளி தெரிந்த அடுமனை நோக்கி சென்று வெளியே அமர்ந்து ’ரீச்’ என்று குரலெழுப்பியது. அடுமனைக்குள் இருந்த திரௌபதி வெளியே வந்து நூலேணியில் பீமன் ஏறி வருவதை பார்த்தாள். அவள் முகத்தின் வலப்பக்கத்தில் நெருப்பின் ஒளி செம்மையென பூசப்பட்டிருந்தது.
பீமன் மேலேறி வந்து “கதிரெழுவதற்குள் நான் கிளம்பவேண்டும், தேவி” என்றான். அவள் உதடுகள் விரியாமல் புன்னகைத்தாள். அவன் திரும்பியதும் “நான் வெற்றுப்பேச்சென ஏதோ சொல்லிவிட்டேன் என இப்போது உணர்கிறேன், பாண்டவரே” என மெல்லிய குரலில் சொன்னாள். “ஏன்?” என்றான். “பின்னிரவின் உணர்வுகள் அனைத்துமே பொய்யானவை” என்றாள். அவன் “நான் எப்போதும் ஒரே உள்ளம் கொண்டவன்” என்றான். அவள் அவன் கைகளைப்பற்றி விழிகளில் ஈரம் பரவ “செல்லவேண்டியதில்லை. நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடுங்கள்” என்றாள். “அவர்களும் சென்றுவந்தனர், தேவி” என்றான் அவன். “அவர்கள் தமக்காகச் சென்றனர்” என்றாள். “நான் எதையும் எனக்காகச் செய்ததில்லை” என்றபின் “எனக்கும் செல்லவேண்டியிருக்கிறது…” என அவள் தோளைத் தட்டினான்.
அவன் தன் அறைக்குள் சென்றபோது முண்டன் மான்தோலை விரித்து அதற்குள் மாற்றாடையையும் பிற பொருட்களையும் எடுத்து வைத்து நான்கு கால்களாக விரிந்திருந்த முனைகளை எடுத்து சேர்த்து கட்டிக்கொண்டிருந்ததை கண்டான். அருகே இடுப்பில் கைவைத்தபடி நின்ற சகதேவன் பீமனிடம் “தங்களுக்குரிய பொருட்களெவையும் இதில் இல்லை, மூத்தவரே” என்றான். “மாற்றாடை உள்ளதல்லவா?” என்றான் பீமன். “ஆம், ஆனால்…” என்றான் சகதேவன். “அதற்கப்பால் எனக்கு தேவையொன்றுமில்லை” என்று பீமன் சொன்னான். முண்டன் “உண்மையில் எனக்கு மாற்றாடைகூடத் தேவையில்லை. அரச துணையாக செல்கிறேன் என்பதற்காகவே ஆடையையே அணிந்திருக்கிறேன்” என்றான்.
சகதேவன் கண்களில் சினத்துடன் “எப்போது நகையாட்டு சொல்வதென்று ஒரு கணிப்பு உன்னிடம் இருக்க வேண்டும்” என்றான். “உரிய தருணம் நோக்கிதானே சொல்கிறேன்?” என்றான் முண்டன். “அரசர்கள் குழம்பியிருக்கையில் மேலும் குழப்புவதற்காக சொல்லப்படுவதுதானே நகையாட்டு என்பது?” சகதேவன் சினத்துடன் “வெளியே போ!” என்று கையை காட்ட முண்டன் “நன்று, அடுமனைவரை சென்றுவிட்டு வருகிறேன்” என்று வெளியே சென்றான்.
எரிச்சலுடன் “இவனை எதற்கு கூட்டிச்செல்கிறீர்கள்?” என்று சகதேவன் கேட்டான். சிரித்தபடி “வழித்துணை” என்றான் பீமன். “இவனா? மூடன்!” என்றான் சகதேவன். “நான் பேசுபவன் அல்ல. ஆகவே பேசிக் கேட்க ஒருவன் உடன் இருப்பது நன்று” என்றான் பீமன். “இவன் பேசினால் அதைக் கேட்டு பொறுத்துக்கொள்ள முடியாதே…!” என்றான் சகதேவன். “அவன் பேசுவது முன்பு நான் பேசியதுபோலவே இருக்கிறது. நன்கு கனிந்த கசப்பின் சொட்டுகள்” என்றான் பீமன்.
திரௌபதி வாயிலில் வந்து நின்று “உணவு ஒருங்கிவிட்டது” என்றாள். “நான் மூத்தவரிடம் ஒரு சொல் சொல்லிவிட்டு வருகிறேன்” என்றான் பீமன். முள் என நோக்கு கூர்ந்திருக்க “அவர் இன்னும் துயில் விழிக்கவில்லை. தாங்கள் உணவுண்டுவிட்டே அவரை பார்க்கலாம்” என்று திரௌபதி சொன்னாள். பீமன் விழிதவிர்த்து “நன்று!” என்றபின் தலைகுனிந்து நடந்து அடுமனைக்குச் சென்று நிலத்திலிட்ட பாயில் அமர்ந்தான். தரையில் விரித்த தைத்த இலைப்பரப்பில் திரௌபதி இரு கலங்களை தூக்கிச் சரித்து குவித்த புல்லரிசிச் சோற்றை புளிப்பழம் கலந்து அட்ட பருப்புக்கறியை ஊற்றி கொதிக்கக் கொதிக்க உருட்டி உண்ணலானான்.
அவனருகே வந்து மூங்கில் பீடத்தில் அமர்ந்த சகதேவன் “தாங்கள் செல்வது எதற்காக என்று மூத்தவர் அறிவாரா?” என்றான். தலைநிமிராது “எனக்கே நன்கு தெரியாது” என்று சொன்னபடியே பீமன் உண்டான். “விளையாடாதீர், மூத்தவரே! தாங்கள் படைக்கலம் தேடிச் செல்பவரல்ல என்று நான் அறிவேன்” என்றான். பீமன் தலையைத் தூக்கி “ஏன் இளையவன் திசைவென்று சிவன்படை கொண்டுவந்திருக்கிறான். எனக்கென்றொரு படைக்கலம் தேடலாகாதா?” என்றான்.
“யாருடைய படைக்கலம்? எத்தெய்வத்தின் அருள்?’’ என்றான் சகதேவன். பீமன் “எந்தை…” என்றான். இருவர் விழிகளும் சந்தித்தன. பீமன் “பண்டு அனுமன் வீசிய கதாயுதமொன்று கிஷ்கிந்தையின் புற எல்லையில் கிடப்பதாக சொன்னார்கள். அதைத் தேடி எடுத்துவரலாமென்று எண்ணுகிறேன்” என்றான். சகதேவன் எரிச்சலுடன் “அதை விடுங்கள், மூத்தவரே. இந்தத் தொல்கதைகளையெல்லாம் நம்புபவர் அல்ல தாங்கள் என்று எனக்குத் தெரியும்” என்றான். “உண்மையிலேயே அப்படி ஒரு படைக்கலம் இருக்குமா என்று பார்க்கத்தான் செல்கிறேன்” என்று பீமன் சொன்னான். சகதேவன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்து பின் பேசாமல் இருந்தான்.
நகுலன் வந்து வாயிலில் நின்று பீமன் உண்ணுவதை பார்த்தான். “மூத்தவர் எழுந்துவிட்டார். முகம் கைகால் கழுவிக்கொண்டிருக்கிறார்” என்றான். “இதோ வருகிறேன்” என்றான் பீமன். “தாங்கள் எங்கு செல்கிறீர், மூத்தவரே?” என்றான் நகுலன். “ராகவராமனின் அணுக்கர் அனுமன் முன்பு விட்டுச்சென்ற கதாயுதம் ஒன்று கிஷ்கிந்தையில் கிடக்கிறது. அதை எடுத்துவரச் செல்கிறார்” என்று ஏளனம் கலந்த குரலில் சகதேவன் சொன்னான். புரியாமல் “கிஷ்கிந்தையா? அது எங்குள்ளது?” என்றான் நகுலன். “அது தெரிந்தால் நேராகச் சென்று எடுத்துவரமாட்டேனா? தொல்கதைகளில் வழி இருந்தால் எங்கோ அது தொடரும். கதைகளிலிருந்து மண்ணில் இறங்குவதற்கு ஒரு பயணம் உள்ளது. அதைத்தான் செய்யப்போகிறேன்” என்று பீமன் சொன்னான்.
“தாங்கள் எதையோ ஒளிக்கிறீர்கள்” என்றான் நகுலன். “உங்களிடமா?” என்றான் பீமன். “ஆம், வெறும் கைகளே மிகையென்றெண்ணும் வீரர் நீங்கள். ஒரு படைக்கலம் தேடி நீங்கள் செல்லப்போவதில்லை.” பீமன் ஒன்றும் சொல்லாமல் உண்டு முடித்து இலையைச் சுருட்டி எடுத்தபடி எழுந்தான். அதை வெளியே கொண்டுசென்று போட்டுவிட்டு கைகழுவி மீண்டு வந்தான். திரௌபதி மரக்குடுவை நிறைய எடுத்துவந்த பாலை வாங்கி அண்ணாந்து குடித்தான். அவர்கள் அவன் அருந்தும் ஓசையைக் கேட்டபடி நோக்கி நின்றனர். “வருக!” என்றபடி பீமன் நடக்க அவர்கள் தொடர்ந்து சென்றனர்.
“சொல்லுங்கள் மூத்தவரே, தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான் நகுலன்.
“இதை எதற்கு தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?” என்று பீமன் கேட்டான். “தாங்கள் எங்கள் மேல் சினத்துடன் செல்லவில்லை என்று உறுதிபடுத்திக்கொள்வதற்காக மட்டுமே” என்றான். “சினமா, உங்கள் மீதா?” என்ற பீமன் அவன் தோளை அறைந்து “மூடா, பல்லாண்டுகாலம் வெளியுலகு சென்றுவிட்டு மீண்டு வந்திருக்கிறான் இளையோன். அதன் பொருட்டே” என்றான். இருவரும் அவன் சொல்வதை புரிந்து கொண்டனர். “ஆகவே…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த நகுலன் “அவ்வாறெனில் அது உகந்ததே” என்றான். “அதையே மூத்தவருக்கும் சொல்ல நினைக்கிறேன். சொல்ல முடியாதென்பதால் இப்படைக்கலத்தின் கதையை சொல்கிறேன். இக்கதையே இங்கு நிலவட்டும்” என்றபடி பீமன் கூடத்திற்குள் சென்றான்.
கூடத்தில் தருமனின் அறையருகே அர்ஜுனன் நின்றிருந்தான். பீமன் “நான் கருக்கிருட்டில் கிளம்புகிறேன். முண்டனும் என்னுடன் வருகிறான்” என்றான். “சொன்னார்கள்” என்றான் அர்ஜுனன். உள்ளறைக்குள் தருமன் மெல்ல செருமினார். அதைக் கேட்டதும் பீமன் உள்ளே சென்று தருமனின் காலடி தொட்டு சென்னி சூடினான். தருமன் அவன் தலைமேல் கைவைத்து “வெற்றி சூழ்க!” என்றார். பீமன் எழுந்து “சென்று வருகிறேன்” என்று சொல்லி அவர் மேற்கொண்டு ஏதேனும் கேட்பாரா என்று எண்ணியவன்போல் காத்து நின்றான். தருமன் ஒருகணம் நோக்கிவிட்டு சுவடியை கையில் எடுத்து புரட்டத்தொடங்கினார். பீமன் வெளியே வந்து “சென்று வருகிறேன்” என்று மீண்டுமொரு முறை அர்ஜுனனிடம் சொன்னான்.
இயல்பாக திரும்பிப் பார்க்கையில் கூடத்தின் மறுஎல்லையில் கைகளை மார்பில் கட்டியபடி திரௌபதி நிற்பதைக் கண்டு அருகே சென்றான். அவள் கண்களை குனிந்து நோக்கி “சென்று வருகிறேன், தேவி” என்றான். விழிகளில் ஈரம் மின்ன அவள் தலையசைத்தாள். காதருகே குழல்சுருளின் அலைவு. கன்னங்களில் எழுந்திருந்த சிறிய பரு. அவளை அவன் அப்போது தொட்டுத் தழுவ விரும்பினான். புன்னகையுடன் “மலருடன்” என மிக மெல்ல சொன்னான். அவள் கன்னமும் கழுத்தும் மயிர்ப்புகொள்வது தெரிந்தது. இதழ்கள் மெல்ல விரியும் ஓசை கேட்பதாகத் தோன்றியது. உதடுகளை அழுத்தியபடி இமைசரித்தாள்.
பீமன் கயிற்றுப் படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தான். அவனுடன் நகுலனும் சகதேவனும் இறங்கிச்சென்றனர். திரௌபதி ஓடிவந்து குடில் விளிம்பில் நின்று அவர்கள் செல்வதை நோக்கினாள். பெருங்குரங்குகள் அவர்களுடன் கையூன்றி நடந்து சென்றன. பீமன் திரும்பி நோக்கவில்லை. வாயிலை மூடிய துலாவை விடுவித்து மேலே தூக்கி குனிந்து நிலம்தொட்டு சென்னிசூடியபின் வெளியே நடந்தான்.
முண்டன் மூட்டையை ஒரு குச்சியில் கட்டி தோளில் வைத்தபடி அவர்களுடன் ஓடினான். நகுலன் “உன் உடல் நிகழ்காலத்திலேயே இருக்கட்டும். முன்னும் பின்னும் புரள வேண்டியதில்லை” என்றான். முண்டன் “நான் அதை புரட்டுவதில்லை, காற்றை சருகு எப்படி கட்டுப்படுத்த முடியும்?” என்றான். “இந்த அணிப்பேச்சு தேவையில்லை. எப்போதும் மூத்தவருடன் இரு” என்று சகதேவன் சினத்துடன் சொன்னான். “இவர் எப்போதும் என்னிடம் சினத்துடன் பேசுகிறார். எனக்கு மேலும் சினம் வரும்” என்றான் முண்டன். “சரி விடு” என்று அவன் தலையைத் தடவி “சென்று வருக!” என்றான் நகுலன்.
பீமன் வெளியே கருக்கிருட்டில் மெல்லிய தடமாகத் தெரிந்த சாலையை கடந்தான். முண்டன் அவனுடன் நடந்தபடி “இருட்டுக்கு கண் பழகிய பிறகு எல்லாமே தெரிகிறது. என்னால் மேலே மரக்கிளைகளுக்குள் இருக்கும் கூகைகளைக்கூட பார்க்க முடிகிறது” என்றான். பீமன் அண்ணாந்து நோக்கியபின் “உமது காலடியில் ஒரு நாகம் உம்மை நோக்குகிறது, அது தெரிகிறதா?” என்றான். முண்டன் தாவிக்குதித்து “எங்கே?” என்றான். பீமன் சிரித்தபடி நடக்க “விளையாடாதீர்கள். நான் நாகத்தால் சாகலாமென நிமித்தவுரை உள்ளது” என்றான். “நாகத்தாலா?” என்றான் பீமன். “ஆம், அல்லது இடிமின்னலால். அல்லது வாளால். அல்லது அம்பால். அல்லது கதையால். இவை ஏதுமில்லை என்றால் நோயால். ஆனால் போதிய மூப்புக்கு பின்னர்தான்.”
குரங்குகள் மரக்கிளைகளில் தாவியபடி அவர்களின் தலைக்குமேல் வந்தன. இரு குரங்குகள் மட்டும் தாவித்தாவி முன்னால் சென்று அவர்கள் வந்தடைவதற்காக பொறுமையற்றவைபோல வேறெங்கோ நோக்கியபடி காத்துநின்றன. அவர்கள் கோமதியின் கரையை அடைந்து நாணல் பரப்பைக் கடந்து சாலையில் ஏறியபோது அவை தங்கள் எல்லையை அடைந்து தயங்கி நின்றன. பீமன் திரும்பி அவர்களைப் பார்த்து கைகளை மேலே தூக்கி விடைகொடுத்தான். அனைத்துக் குரங்குகளும் கிளைகளில் எழுந்து நின்று கைகளைத் தூக்கியபடி ஒற்றைக் குரலென ஓசையிட்டன.
பீமன் மும்முறை குரலெழுப்பியபின் திரும்பி நடக்க முண்டன் தொடர்ந்து வந்து “அவர்கள் மொழியில் காவியங்கள் உண்டா?” என்றான். பீமன் ஒன்றும் சொல்லவில்லை. “விடைகொடுத்தலுக்கு அவர்கள் எழுப்பிய ஒலி பாடல்போலவே இருந்தது. பாடல்களை இணைத்தால் காவியம் வரும்” என்றான். பீமன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “காவியம் இருந்தாக வேண்டும். இல்லையேல் எப்படி கதைத்தலைவர்களை உருவாக்க முடியும்! கதைத்தலைவர்கள் இருந்தால்தானே மாவீரர்கள் இருக்க முடியும். மாவீரர்கள் இல்லையேல் குலஒழுங்கு இருக்காதல்லவா?”
பீமன் திரும்பி “ஏன்?” என்றான். முண்டன் “மாவீரர்கள்தானே அழகிய பெண்களை புணரவேண்டும்? மற்றவர்கள் அதையெல்லாம் பாடவோ நடிக்கவோ எழுதவோ செய்யலாம்” என்றான். பீமன் அறியாது புன்னகைத்து “நன்று!” என்றபின் திரும்பி நடந்தான். முண்டன் அவனுடன் நடந்தபடி “நான் என் வித்தைகளில் பலவற்றை இன்னும் காட்டவே இல்லை. உண்மையில் என்னால் காலத்தை மட்டுமல்ல, நினைவுகளையும் புரட்ட முடியும். ஒவ்வொருவரையும் பிறிதொருவராக ஆக்க முடியும். இப்போது நீங்கள் சொன்னீர்கள் என்றால் உங்களை உங்கள் தந்தையாக மாற்றிக் காட்டுவேன்” என்றான். “யாராக?” என்று பீமன் குரலை மாற்றி கேட்டான். முண்டன் குரலைத் தாழ்த்தி “உண்மையில் ஒருவரை தந்தையாக மாற்றிய பிறகுதான் அவர் தந்தை யாரென்பதை கண்டுபிடிக்க முடியும்” என்றான்.
பீமன் வாய்விட்டு சிரித்துவிட்டான். “நான் அந்த மலரை மட்டுமே அறிய விழைகிறேன்” என்றான். “ஆம், தந்தையராக ஆவது நன்றல்ல, நம்மை நன்கறிய வாய்ப்பாகும்” என்றான் முண்டன். பீமன் “நன்றாக பேசத்தெரிந்திருக்கிறீர். நிமித்திகர்கள் போல” என்றான். “நான் நிமித்தநூலும் கற்றவன். வயிறுகாய்ந்தால் அந்தத்தொழிலையும் செய்வதுண்டு” என்றான் முண்டன். பீமன் “நான் எண்ணிச்சூழ்வதில்லை, என் உள்ளொலிக்கும் குரலையே நம்புகிறேன். அந்த மலர் எங்கோ உள்ளது. அதை நான் அடைந்தாகவேண்டும்” என்றான். “ஆ! பெருங்காதலின் மாமலர்!” என்றான் முண்டன். அக்குரலில் இருந்த நகையாட்டை உணர்ந்தாலும் பீமன் மறுமொழிசொல்லவில்லை.
“அதைக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? பெண்களுக்கு அதனால் என்ன பயன்? குழல்சூடி பிற பெண்டிரிடம் காட்டி பெருமைகொள்ளலாம். அதுவும் ஒருநாள் பகல்பொழுதுக்கு.” பீமன் “அது வாடாமலர் என்கிறார்கள்” என்றான். “அதையே மறுநாளும் சூடினால் அவர்களுக்கு சலிப்பே எஞ்சும்” என்றான் முண்டன். “நன்று, உம் கசப்பு என்னுடன் இருக்கவேண்டுமென விரும்பினேன். அது எதிர்நிலையாக ஒலித்தால் மட்டுமே நான் அதை கடந்துசெல்லமுடியும்” என்றான் பீமன்.
தன் கையிலிருந்த சிறிய சலங்கையின் ஒருபாதியை ஒற்றைக்காலில் கட்டி இன்னொரு பாதியை கையில் கட்டியபடி முண்டன் சிறு தாவல்களாக பாய்ந்து சென்றான். சலங்கைகளின் தாளம் எழுந்தெழுந்தமைய ஒரு கணம் சிறுவனும் மறுகணம் கன்றுமென அவன் உருமாறிக்கொண்டிருந்தான். “நல்ல தாளம்” என்றான் பீமன். “உங்கள் உளம் கொண்ட வினாக்களுக்கான விடைதேடிச்செல்லும் இப்பயணத்தில் உடன் நான் எதற்கு என்றே எண்ணிக்கொண்டிருக்கிறேன். துயரப்பாடலுக்கு துள்ளல்தாளம் பொருந்துமா என்று பார்க்கிறேன்.”
சிறு எரிச்சலுடன் “நான் தேடிச்செல்வது அந்த மலரை மட்டுமே” என்றான் பீமன். “அவ்வினாக்களைக் கடந்து சென்றாலொழிய அந்த மலரை அணுகமுடியாது. அதை நீங்களே உணர்வீர்கள்” என்றான் முண்டன். பீமன் “எந்த வினாக்கள்?” என்றான். “நான் பிறர் உளம்புகும் கலையறிந்தவன், பாண்டவரே” என்றான் முண்டன். உடனே குரல் மாற்றி “ஆனால் அதை என் உள்ளத்துடன் குழப்பிக்கொள்வதனால் என்னால் எதையுமே சொல்லமுடியவில்லை” என்றான். “சரி, இத்திசையை எப்படி தேர்ந்தீர்கள்? அதைச் சொல்லுங்கள்!”
“நான் கிளம்புவதற்கு முன் ஒரு கனவு கண்டேன்” என்றான் பீமன். “ஒருநாழிகைப்பொழுது துயின்றிருப்பேன். மலர்தேடிக் கொண்டுவருவதாக தேவியிடம் சொல்லியிருந்தேன். ஆனால் எங்கென்றும் எப்படி என்றும் அறியாதிருந்தேன். குழப்பத்துடன் புரண்டுபடுத்துத் துயின்றபோது அந்த மலர்மணத்தை கனவில் உணர்ந்தேன். அது என் கையில் இருந்தது. என்னைச் சூழ்ந்து ஐந்து தேவியர் நின்றிருந்தனர்.” முண்டன் நின்று, ஆவலுடன் “ஐவரா?” என்றான். “ஆம், ஐவருமே திரௌபதிதான் என என் உள்ளம் அறிந்திருந்தது. ஆனால் முகங்கள் தெளிவுறத் தெரியவில்லை” என்றான் பீமன்.
முண்டன் “நன்று” என்றபடி கண்சிமிட்டினான். அவன் எதையாவது எண்ணும்போது அந்தச் சிமிட்டல் எழுவதை பீமன் கண்டிருந்தான். குட்டிக்குரங்கிலிருந்து கற்றுக்கொண்டது அந்த விழியசைவென்று எண்ணினான். “நான் நின்றிருந்த இடம் ஒரு மலர்ச்சோலை. கொடிகளும் செடிகளும் தழைத்த பச்சை இருளுக்குள் மிக அண்மையில் ஒரு சிறு ஆலயம் இருந்தது. அச்சோலையில் தென்கிழக்கு மூலையில் நின்றிருந்த மரத்தில் பல்லாயிரம் மலர்கள் செறிந்திருந்தன. ஆனால் தரையில் ஒரு மலர்கூட உதிர்ந்திருக்கவில்லை. என் கையிலிருந்த மலர் அப்போதுதான் அலர்ந்ததுபோலிருந்தது.”
“வெண்ணிற மலர்” என்றான் பீமன். “வெண்பட்டு, பால்நுரை, அன்னக்குஞ்சு. விழித்தபின் நான் அதற்கு ஒப்புமை கொண்டவை இச்சொற்கள். அப்போது இயல்பாக என் கையில் இருந்தது அது. அந்த தேவியரிடம் சென்றுவருகிறேன் என்றேன். அவர்கள் நன்று என்றார்கள். நான் திரும்பி நடக்கையில்தான் திசையறிந்தேன். தென்கிழக்காக வந்திருந்தேன், ஆகவே வடமேற்காக மீண்டு செல்லத் தொடங்கி விழித்துக்கொண்டேன்.” முண்டன் “அதனால்தான் தென்கிழக்கு” என்றான். பீமன் “ஆம், நான் கொண்ட ஒரே திறப்பு அதுமட்டுமே” என்றான்.
முண்டன் “மாமல்லரே, நீங்கள் அந்த மலரை அவர்களில் எவருக்கும் அளிக்கவில்லையா?” என்றான். “இல்லை, அவர்கள் அதை கோரவுமில்லை” என்றான் பீமன். “அவர்கள் முன்னரே அதைச் சூடியிருந்தனரா?” என்றான் முண்டன். “இல்லை, அவ்வண்ணம் தெரியவில்லை” என்று பீமன் சொன்னான். “நான் விழித்துக்கொண்டதுமே அடுமனைக்குச் சென்று அங்கு நின்றிருந்த தேவியிடம் உடனே மலர்தேடிக் கிளம்பவிருப்பதாக சொன்னேன். திகைத்து அவள் எங்கே என்றாள். தென்கிழக்கே என்றேன். அவள் புருவம் சுருக்கி நோக்க நான் சிரித்தபடி கன்னிமூலை என்றேன்.”
“அவளை சற்று முன் கனவில் பார்த்தபோது இருந்த அதே உடலருகமைவுணர்வை அடைந்தேன். அப்போது அவளை ஐந்தெனக் கண்டதை மறந்துவிட்டிருந்தேன். எனக்கிருப்பது ஒரு திசை மட்டுமே என்றேன். அப்போதுதான் அந்த மலரை நான் கண்டதும் நினைவுக்கு வந்தது. தேவி, அந்த மலர் அல்லிபோன்ற வடிவம் கொண்டது, வெண்ணிற இதழ்கள் நடுவே வெண்புல்லி குவிந்தது என்றேன். அல்லியா என்றாள். இல்லை, அது மரத்தில் மலர்ந்திருந்தது. அதன் இலைகள் மானின் காதுகள்போல பெரியவை என்றேன். என்னை திகைப்புடன் நோக்கி என்ன சொல்கிறீர்கள் என்றாள். ஒரு கனவு கண்டேன். அதுபோதும் என்றேன்.”
“தென்கிழக்கு சரியான திசையா என்று அறியேன். ஆனால் என் கனவை அணுகிக்கொண்டிருக்கிறேன் என்று உள்ளம் சொல்கிறது. அடுத்த திறப்பும் எனக்குள் இருந்தே நிகழுமென நம்புகிறேன்” என்றான் பீமன். “ஆம், அந்த மலரையும் நீங்கள் அங்கேயே கண்டடையலாம்” என்று முண்டன் சொன்னான். “இல்லை, அந்த மலர் மண்ணில் மலர்ந்துள்ளது. எங்கோ, அதன் நறுமணத்தை நானறிந்தது மண்ணில் என் புலன்கள் படர்ந்திருக்கையில்தான்” என்றான் பீமன்.
முண்டன் நின்று “பாண்டவரே, அரசிக்கு எதற்காக அந்த மலர்?” என்றான். அவன் “ஏன்?” என்றான். “தலையில் சூடிக்கொள்வாரா என்ன?” என்று முண்டன் மீண்டும் கேட்டான். அவன் சொல்வதை உணராமல் பீமன் “ஏன், மலர்சூடிக்கொண்டால் என்ன?” என்றான். “அவர் குழலை பசித்த வேங்கையின் நாக்குபோல் குருதிவிடாய் கொண்டு காத்திருப்பது என்கின்றனர் கவிஞர்” என்றான் முண்டன். பீமன் திடுக்கிட்டவன்போல நின்றுவிட்டான். சில கணங்கள் கடந்தே அவனால் நிலைமீள முடிந்தது. பின்னர் “அவள் அவ்வஞ்சங்களைக் கடந்து நெடுந்தொலைவு வந்துவிட்டாள்” என்றான்.
“ஆம், துகில்தொட்டுரிந்தவனின் நெஞ்சுபிளக்க வஞ்சமுரைத்தவர் கைபற்றி இழுத்துத் தேரிலேற்றியவனை பொறுத்தருளினார்” என்றான் முண்டன். “ஆனால் அங்கு அஸ்தினபுரியில் விரிகுழல் முடியாது விழிநீர் ஒழியாது அணையாத வஞ்சத்துடன் காத்திருக்கிறாள் அவர் நிழல்.” பீமன் உடல்சிலிர்த்தான். “நிழல்களிலிருந்து எவருக்கும் மீட்பில்லை, பாண்டவரே” என்று முண்டன் சொன்னான். “உங்கள் நிழல் உங்களுக்கு முன்னரே பிறந்துவிட்டிருந்தது. உங்களுக்காகக் காத்திருந்தது.” பீமன் தோள்தளர்ந்தான். கைகள் தொடைகளை உரசியபடி விழுந்தன.
“அதுவும் அங்குதான் இருக்கிறது, அஸ்தினபுரியில். அவர் நிழல் நீங்கள். நிழலுருவை இரும்பில் சமைத்து கைமுன் நிறுத்தி நாளெல்லாம் போர் பழகிக்கொண்டிருக்கிறது அது” என்றான் முண்டன். “அவர் தோள்கள் திரண்டு புடைத்தெழுகின்றன. அவர் நெஞ்சு விரிகிறது. விழிகள் கசப்புகூர்கின்றன. நிழலைப்போல் ஆவது எளிதல்ல, கணம்தோறும் வளர்ந்தாகவேண்டும் என்று அவர் உணர்கிறார். நிழலை வெல்வதும் எளிதல்ல என்று ஒவ்வொருநாளும் அறிகிறார். நாம் அடைந்தவை அனைத்தையும் நிழலும் அடைகிறது.”
“அங்கு அந்த நிழல் நின்றெரிவதுவரை இங்கு உங்களிலும் அனல்வெம்மையே கூடும்” என்றான் முண்டன். “மென்மலரைக் கொண்டுசென்று எரியழல்மேல் வைக்கலாகுமா, பாண்டவரே?” பீமன் இடையில் கைவைத்தபடி நின்று அவனை நோக்கினான். “சொல்லுங்கள், குருதிபடிந்த கையால் எடுத்து முகரக்கூடுமா அதை?” என்றான் முண்டன். பெருமூச்சுடன் பீமன் தலைதிருப்பி விடியல்சிவப்பெழுந்த வானை நோக்கினான். “நாம் மீள்வதே முறை” என்றான் முண்டன். “அறிக, உங்களுக்குரியதல்ல அந்தத் தண்மலர். அதற்கென்று பிறிதனைத்தையும் உதறுபவர்களுக்கு மட்டுமே உரியது அது.”
மன்றாடுவதுபோல “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் பீமன். மேலும் தாழ்ந்த குரலில் “எதைச் செய்யவும் சித்தமாக உள்ளேன்” என்றான். “இந்த மலர் அரசிக்குரியதல்ல, அவர் குழலில் அமைந்த கணமே இது வாடும்” என்றான் முண்டன். “இது எனக்காக” என்று பீமன் சொன்னான். “அந்த மணத்தை அறிந்தபின் நான் அதை கைக்கொள்ளாமலிருக்க இயலாது.” “உங்களுக்கு அது எதற்கு, மாவலரே? நீங்கள் காட்டில் கரையத் தெரிந்தவர். இங்குள்ளன உங்கள் இன்பங்கள் அனைத்தும்.”
பீமன் தலையை அசைத்தான். “பறக்கக் கற்கும் குஞ்சுகளில் சில விழுந்து இறப்பதுண்டு. அன்னை பறந்தெழுந்து வருக என அழைக்கையில் சிறகை விரித்து கால்களின் பிடியை முற்றிலும் விட்டுவிடுபவையே வானை அறிகின்றன. அஞ்சி உகிர்பற்றை விடாதவை சிறகு குலைந்து நிலம் பதிகின்றன” என்று முண்டன் சொன்னான். “மிக மிக எளிது. முற்றிலும் இயல்பானது. விட்டுவிடுங்கள். அதுவன்றி நீங்கள் செய்வதற்கு உகந்ததாக ஏதுமில்லை.”
பீமன் பெருமூச்சுவிட்டான். “இல்லை, என்னால் அது இயலாது” என்றான். “நீ சொன்னதைப்போல நான் இங்கு முற்றிலும் கரையவில்லை.” திரும்பி காலையொளி புகுந்து உயிர்கொண்ட காட்டை நோக்கினான். “இங்கு வந்தபோது நான் இக்காடென்றாகக் கூடியவன் என்றே உணர்ந்தேன். பெருங்காதலுடன் இதில் திளைத்தேன். ஆனால் நான் இதை அணுகுந்தோறும் என்னுள் ஓர் ஆழம் அகன்று அகன்று செல்வதை உணர்ந்தேன். என்னுள் நான் அறிந்த அந்த விலக்கமே என்னை மேலும் பித்துகொள்ளச் செய்தது. ஒரு கணமும் வெளியே இருக்க ஒண்ணாதவனாக என்னை ஆக்கிக்கொண்டேன். ஆனால்…”
குரல் தழைய சில கணங்கள் மொழியிலாதவன் ஆனான். பின்னர் “எந்த விலங்கும் சிந்துநாட்டரசனிடம் நான் நடந்துகொண்டதை ஆற்றாது” என்றான். முண்டன் நிமிர்ந்து நோக்கினான். துயர்கொண்ட நெஞ்சுடன் பீமன் சொன்னான் “நான் அதைச் செய்ததனால் என்னை விரும்புகிறாள். ஏனென்றால் அது விலங்கியல்பென்று எண்ணுகிறாள். அன்று அக்குரங்குகள் அஞ்சிப் பின்னடைந்து அமர்ந்திருப்பதை அவள் காணவில்லை. அவை கொலைக்கூத்தாடும். கிழித்து உண்டு களிக்கும். வஞ்சம் சுமப்பதில்லை.” முண்டன் “ஆம்” என்றான்.
“இச்சிலநாட்களில் காட்டுப்பசுமைக்குள் புதைந்துகிடந்து என்னை ஆராய்ந்தேன். விலங்கல்ல நான் என்றால் யார்? மானுடன் என்றால் என் பொருள் என்ன? மெய்மையென எதையோ இவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சொல்சூழ்கிறார்கள். வில் கொள்கிறார்கள். எதையும் நான் அறியேன். நானறிந்த மானுடத்தருணங்கள் எல்லாம் எளிய உணர்வுகளால் ஆனவை. அன்னையின் அருகமைவு. உடன்பிறந்தார் தோள்தழுவல். மைந்தர் மடிகொள்ளல்.”
அவன் சொல்வதற்காக முண்டன் காத்து நின்றிருந்தான். “அவையனைத்துக்கும் நிகரென என்னை ஆழ்ந்து திளைக்கச்செய்வது அவள்மேல் கொண்ட அணுக்கம். அதை காமம் என்றால், காதல் என்றால் அச்சொல் என்னை கூசவைக்கிறது. அவள் அண்மையைவிட கூர்ந்தது அவளை எண்ணிக்கொள்ளல். எண்ணி மகிழ்வதைவிட நுண்ணியது கனவில் அவள் எழல். அனைத்தையும்விட ஆழ்ந்தது அறியாக்கணமொன்றில் அவளென நான் என்னை உணர்வது.”
“பெருந்துயருடன் அன்று குடில்மீண்டேன். அவளுடன் இருக்கையில் பெருநீர் நதியொன்றில் நீந்துபவனாகவே உணர்வேன். அன்று அவள் சென்று விழுந்த அருவிப்பேராழத்தில் நானும் பொழிந்தேன். மீண்டு வந்தபோது எழுந்த வெறுமை. அதை குளிர்ந்த எடையெனச் சுமந்தபடி அவள் அருகே சென்றமர்ந்தேன். இறுதியில் இவ்வளவுதான் என காமம் தன்னைக் காட்டுகிறது. அனைத்தையும் இறுதியில் உடலென ஆக்கியாக வேண்டியிருக்கிறது. வெறும் உடலென. பிறிதொன்றும் இல்லை என. எஞ்சுவது இதுவொன்றே எனில் எதன்பொருட்டு எல்லாம் என.”
“அப்போதுதான் அந்த மணத்தை உணர்ந்தேன். அதுவே நான் அடைந்த உச்சநிலை. அதை அறிந்தால்தான் நான் எவரென நான் உணரமுடியும். அதை எண்ணியபின் எனக்கு இனி பின்னடிவைப்பில்லை” என்றான் பீமன். முண்டன் தலைகுனிந்து சற்றுநேரம் நடந்தான். பீமன் அவனை நோக்கியபடியே தொடர்ந்தான். பின் அவன் நின்று நிமிர்ந்து பீமனை நோக்கி “பாண்டவரே, முன்னோக்கி வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் அதுவரை வந்த தொலைவனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறோம் என உணர்ந்திருக்கிறீர் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் பீமன். “நான் உளம்புகு கலை அறிந்தவன். காலம் கடக்கக் கற்றவன். நான் உங்களை அங்கே இட்டுச்செல்கிறேன்” என்றான் முண்டன். “அதன்பொருட்டு என்றும் உம்மைப் பணிவேன். இனி நீர் என் அணுக்கனல்ல, ஆசிரியன்” என்றான் பீமன்.
“ஆனால் நேற்றுவரை நீங்கள் கொண்டிருந்த அனைத்தையும் உதறியாகவேண்டும். ஒவ்வொரு அடியிலும் அவற்றிலிருந்து நீங்கள் விலகிக்கொண்டிருக்கவேண்டும். முற்றிலும் விலகியபின் அடைவதே அம்மலர்” என்றான் முண்டன். “ஆம், விலகுகிறேன்” என்று பீமன் சொன்னான். “வருக!” என முண்டன் அவன் கைபற்றி பக்கவாட்டில் நடந்து நாணல்சரிவில் இறங்கி சுழித்தோடிய கோமதியின் கரையை அடைந்தான். சேற்றில் புடைத்திருந்த வேர்களில் கால்வைத்து அவர்கள் ஆற்றுவிளிம்பருகே சென்றனர்.
முண்டன் “வருக!” என்றபடி நீரில் இறங்கி நின்றான். அருகே சென்று நின்ற பீமனிடம் “முடிமலைகளில் உறைபவர்கள் மூதாதையர். தொல்நதியில் எழுபவர்கள் மூதன்னையர். இங்கு மூதன்னையர் தங்கள் கனிந்த விழிகளுடன் வருக. தங்கள் இனிய புன்னகைகளுடன் சூழ்க!” என்றான். குனிந்து கைப்பிடி நீரை அள்ளி பீமனிடம் அளித்து “என் பகைகள் அனைத்தையும் விடுகிறேன் என்க!” என்றான். பீமன் “என் பகைகள் அனைத்தையும் விடுகிறேன்” என்றான். பிறிதொரு கைப்பிடி நீரை அள்ளி “என் வஞ்சங்கள் அனைத்தும் அகல்க!” என்றான். பீமன் அவ்வண்ணமே சொன்னான். துயர்களை, ஐயங்களை, விழைவுகளை, பற்றுகளை, கடன்களை விட்டுவிடுவதாக அவன் நீருறுதி எடுத்தான்.
“ஏழு உறுதிக்கும் ஏழு முறை என நீரில் மூழ்கி நினைப்பொழிந்து அணிந்த ஆடையை நீரில் விட்டு அன்னையரை எண்ணி கரையேறுக!” என்றான் முண்டன். பீமன் நீரில் ஏழு முறை மூழ்கி இடையணிந்த ஆடையை நீரில் களைந்து வெற்றுடலுடன் கரையேறினான். முண்டன் புதிய ஆடையை பொதியிலிருந்து எடுத்து அளித்து “இன்று மீண்டும் பிறந்தீர்” என்றான். “ஆம் ஆம் ஆம்!” என பீமன் கைகூப்பியபடி சொன்னான்.