நிழற்தாங்கல் என்ற பெயருக்கு குமரிமாவட்ட வரலாற்றில் ஒரு மேலதிகப்பொருள் உண்டு. இருநூறாண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தன் பக்தர்களிடம் ஊர்தோறும் நிழற்தாங்கல் அமைக்க ஆணையிட்டார். அவ்வாறு அமைந்த பலநூறு நிழற்தாங்கல்கள் இன்று ஆலயங்களாக அமைந்துள்ளன.
அந்நிழற்தாங்கல்கள் பழைய சமணத் தர்மசாலைகளுக்குச் சமானமானவை. பயணிகளுக்கு உணவும் தங்குமிடமும் அளிப்பவை அவை. சமணர்களின் அறங்களில் ஒன்றுதான் நிழற்தாங்கல். அதை பிறர் பின்னர் எடுத்துக்கொண்டனர். பழைய கிராமங்களில் அது ஒரு முதன்மையான அறக்கொடையாக அமைந்திருந்தது
அய்யா வைகுண்டர் அவற்றை ஏற்படுத்தியமைக்கு காரணம் உண்டு. வழிநடை வசதி என்பது அன்று மக்களைக் கட்டுப்படுத்திய ஒரு முக்கியமான அம்சம். உயர்சாதிகளுக்கு மட்டுமே ஊர் விட்டு ஊர் செல்ல வசதி அன்றிருந்தது. அவர்கள் பிறர் இல்லங்களில் தங்கலாம், சத்திரங்களும் இருந்தன. பிற சாtதியினருக்கு உணவு, தங்குமிட வசதி இல்லாததனால் அவர்கள் வாழுமிடத்திலேயே கட்டுண்டுகிடக்க நேர்ந்தது. அவர்கள் வணிகம் செய்யும் வாய்ப்புகள் இல்லாமலாகியது. நிழற்தாங்கல்கள் அந்தச் சிறையிலிருந்து அவர்களை விடுவித்தன. அது முக்கியமான ஒரு பாய்ச்சல்.
லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர் ‘படிகம்’ ரோஸ் ஆன்றோ உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பு இலக்கியத்திற்கானது. வீட்டுக்கு வெளியே எங்காவது சிலநாட்கள் அமைதியாகத் தங்கியிருந்து எழுதவேண்டும் என விரும்பும் எழுத்தாளர்கள் மற்றும் ஒதுங்கி இருந்து வாசிக்கவேண்டுமென விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கான ஒரு இல்லம் இது. அதேசமயம் இந்நோக்கத்திற்காக மட்டுமே வருபவர்களுக்கு உரியது. ஆகவே இதை நகரில் வைக்காமல் நாகர்கோயில் அருகே உள்ள பறக்கை என்னும் சிற்றூரில் அமைத்துள்ளார்.
பறவைக்கரசனூர் என அழைக்கப்படும் [வடமொழியில் பக்ஷிராஜபுரம்] பறக்கை தொன்மையான மதுசூதனப்பெருமாள் ஆலயம் அமைந்த அழகிய சிற்றூர். ஆனால் தமிழகத்தின் பிறசிற்றூர்களைப்போல வறுமையும் குப்பையும் கொண்டது அல்ல. குமரிமாவட்டச் சிற்றூர்கள் மிக வசதியான மக்கள் வாழ்பவை, தூய்மையானவை.. கோயில், குளம், ஏரி, பழையாறு என ஒரு சிறந்த சூழல் கொண்டது. நாகர்கோயிலில் இருந்து அரைமணிநேரப் பயணத்தொலைவு. புதிதாகக் கட்டப்பட்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் லக்ஷ்மி மணிவண்ணனும் ரோஸ் ஆன்றோவும்.
நிழற்தாங்கலின் திறப்புவிழா சென்ற 5 ஆம்தேதி காலை பறக்கையில் நடந்தது. நிழற்தாங்கலை கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. G . தர்மராஜன் I .P .S . திறந்துவைத்தார்.குளச்சல் மு. யூசூப், பாலபிரஜாதிபதி அடிகளார், அருட்பணி எம்.சி.ராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.முளைப்பாரிக்கு நீர் வார்த்து, அடுப்பில் பால் காய்ச்சியவர் திருமதி எம். பாலின் சகாய ரோஜா
பின்னர் நிகழ்ந்த இலக்கிய விழாவில் தி இந்து தமிழ் நிருபர் சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார். படிகம் நவீன கவிதை வரிசையின் நான்காவது நூலாக விக்ரமாதித்யனின் “சாயல் எனப்படுவது யாதெனின்…” கவிதை நூலை நான் வெளியிட்டு உரையாற்றினேன். எழுத்தாளர் சரவணன் சந்திரன் பெற்றுக்கொண்டார். நூல் குறித்து பாலா கருப்பசாமி விமர்சித்தார்.
படிகம் தொகை நூல் வரிசையின் முதல் நூலாகிய ஈனில் [தொகுப்பாசிரியர் : ரோஸ் ஆன்றா ] பதினொரு கவிஞர்களின் எழுபத்திநான்கு கவிதைகள் கொண்டது. அதை எழுத்தாளர் கோணங்கி வெளியிட்டார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்து லிபி ஆரண்யா விமர்சித்தார்.
நாஞ்சில்நாடன், குளச்சல் மு. யூசூப், பாலபிரஜாதிபதி அடிகளார், அருட்பணி எம்.சி.ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ரோஸ் ஆன்றா ஏற்புரை வழங்க க.அம்சப்பிரியா நன்றியுரை அளித்தார்.
நெடுநாட்களுக்குப்பின் கோணங்கியைச் சந்தித்தது நிறைவளித்தது. அதே சிரிப்புடன் அப்படியே இருக்கிறார். லிபி ஆரண்யா மதுரை நன்மாறனை நினைவுறுத்தும் மொழியுடன் அழகாகப் பேசினார். சரவணன் சந்திரன் கோயில்பட்டிக்காரர் என்று அறிந்தது ஓர் இனிய மகிழ்ச்சி. கோயில்பட்டி மரபு தொடர்வது ஆச்சரியமானதுதான்.
நிழற்தாங்கலை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் லக்ஷ்மி மணிவண்ணன் [ [email protected] ] ரோஸ் ஆன்றோ [ [email protected] ] ஆகியோரை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்
***