‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8

8. குருதிக் குமிழிகள்

ஊர்பவன் அடையும் உணர்வெழுச்சிகளை புரவிகளும் அவன் உடல் வழியாகவே அடைந்துவிடுகின்றன. ஜயத்ரதனின் குதிரை அஞ்சி உடலெங்கும் மயிர்க்கோள் எழுந்து, அனல்பட்டதுபோல உரக்கக் கனைத்தபடி புதர்கள் மேல் தாவி காட்டுக்குள் புகுந்து மரங்கள் நடுவே வளைந்து திரும்பி மலைச்சரிவில் பாய்ந்தோடியது. பீமனும் அர்ஜுனனும் அதைத் தொடர்ந்து காட்டுக்குள் பாய்ந்தபோது சென்றவழியில் இலைகள் அசைவழிய அவன் முழுமையாக மறைந்துவிட்டிருந்தான்.

ஆனால் பீமனின் புரவியும் ஊர்ந்தவன் உணர்வை தான் ஏற்றுகொண்டுவிட்டிருந்தது. முன்னால் ஓடிய புரவியின் மணத்தைப் பெற்றுக்கொண்டு அதுவும் தொடர்ந்து வந்தது. ஜயத்ரதனின் மேலே எழுந்த கிளைகளில் குரங்குகள் கைவீசி தாவித்தாவி வந்தன. இரு பெருங்குரங்குகள் உச்சிக்கிளைகளுக்குச் சென்று ஜயத்ரதன் செல்வதை நோக்கிவிட்டு திசைகூவிச் சொல்ல பீமன் புரவியை அரட்டிச் செலுத்தியபடி அவனைத் தொடர்ந்து வந்தான்.

தன்னைத் தொடர்ந்துவரும் குளம்பொலிகளை ஜயத்ரதன் கேட்டுக்கொண்டே இருந்தான். அவை வலுக்கின்றன என எண்ணியபோது உடல் கடுங்குளிர் கொண்டதுபோல சிலிர்த்தது. மேலும் மேலுமென புரவியை அடித்தும் குதிமுள்ளால் குத்தியும் கூச்சலிட்டும் துரத்தினான். அது தாவித்தாவி பாறைகளையும் முட்குவைகளையும் சிற்றோடைகளையும் சேற்றுக்குழிகளையும் கடந்தது. புரவியை மிகையாகத் தூண்டுவதனாலேயே அதை விரைந்து களைப்படையச் செய்கிறோம் என்பதை அவன் அவ்வச்சத்தில் உணரவில்லை.

அதன் வாயிலூறிய நுரை காற்றில் தெறித்து அவன்மேல் துளிசிதறியது. அதன் வியர்வையால் அவன் தொடைகள் வழுக்கின. அதன் உடலுக்குள் ஓடிய குருதியின் குமிழிகளை அவனால் உணரமுடிந்தது. “மேலும்! மேலும்!” என அவன் அதை உதைத்தான். பின்னால் புரவிக்குளம்படிகள் வந்துகொண்டே இருந்தன. உச்சிக்கிளைமேலிருந்து குரங்குகள் அவனை காட்டிக்கொடுக்கின்றன என அவன் உணர்ந்தான். இன்னும் சற்றுத்தொலைவுதான். அவனால் திரிகர்த்தர்களின் எல்லைக்குள் சென்றுவிடமுடியும். திரிகர்த்தனிடம் அடைக்கலம் என்று கூவியபடி முதல் படைக்காவலரணைக் கடந்துவிட்டால் போதும். அவர்கள் ஊருக்குள் நுழைய முடியாது. முதல் தெரு… அவனைக் காக்கப்போகும் முதல் ஊர்.

எண்ணியிராமல் எரி அணைவதுபோல புரவி விரைவழிந்தது. “செல்க! செல்க… கெடுமதியே செல்க!” என அவன் அதை சவுக்கால் அறைய அது தயங்கி நின்றுவிட்டது. வாயிலிருந்து நுரையுடன் குருதியும் வழியலாயிற்று. கால்களைப் பரப்பி வைத்து தலையை தரைதொடும்படி தாழ்த்தி அது கக்குவதுபோலவும் இருமுவதுபோலவும் ஒலியெழுப்பியது. உடல் அதிர்ந்துகொண்டே இருந்தது. அவன் அதன் கழுத்தை கைகளால் அறைந்தான். “செல்… செல்!” என்று கூவினான்.

புரவி வேல் பட்டதுபோல விதிர்த்தது. அவன் உய்த்துணர்ந்து கீழே குதிக்கவும் மறுபக்கம் சரிந்து பள்ளை நிலமறைய விழுந்து குளம்புகளை காற்றிலுதறி கால்களை உதைத்துக்கொள்ளத் தொடங்கியது. வால் புழுதியில் கிடந்து குழைந்து அலைந்தது. அதன் கண்கள் வெறித்து உருண்டிருந்தன. வாழைப்பூமடல் போல செந்நீலநிற நாக்கு நீண்டு வெளிவந்து தழைந்து கிடந்தது. அவன் சினத்துடன் அதை ஓங்கி உதைத்தான். பின்னர் ஓடி புதர்களுக்குள் பாய்ந்து மறைந்தான்.

அணுகிவரும் குளம்படிகளை காலடியில் நிலமதிர்வதிலிருந்தே உணர்ந்தான். ஓடுவதைவிட முழுமையாக எங்கேனும் பதுங்கிக்கொள்வதே உகந்தது என எண்ணி விழிகளால் தேடிக்கொண்டே சென்றான். புதர்களுக்குள் ஒளிவதைப்பற்றி எண்ணியதுமே குரங்குகளும் வரும் என்பது நினைவுக்கு வந்தது. அவை நாய்களைவிட மோப்பம் கொண்டவை. ஒரு கணம் அங்குமிங்கும் நோக்கியபின் அருகே ஓடிய கோமதியை நோக்கி சென்றான். அங்கே ஆற்றுநீர் வளைந்து அரைவட்ட அலைகள் கரைச்சேற்றில் படிய சுனையென்றாகியிருந்தது. அதன் மேல் தாமரைகளும் நீலங்களும் மெல்ல அசைந்துகொண்டிருந்தன.

சதுப்பின் மேல் விழுந்துகிடந்த மட்கிய மரங்களிலும் மத்தகம் காட்டிய பாறைகளிலும் மட்டும் கால்வைத்து ஆற்றை நோக்கி சென்றான். மரம் ஒன்றின் மேல் தொற்றி ஏறி கிளைகள் வழியாகவே மேலும் மரங்களுக்குச் சென்று நீர்மேல் கவிழ்ந்திருந்த மரத்தின்மேல் ஏறி கிளையிலிருந்து நீருக்குள் குதித்தான். நீந்தி ஆழத்திற்குச் சென்று அங்கே எழுந்து மேலே வந்திருந்த தாமரை ஒன்றை அடிவேருடன் பிழுதெடுத்தான். அதன் மலர்க்குவைக்கு நடுவே கடித்து துப்பி தண்டிலிருந்து காற்றுவழியை உருவாக்கினான். அந்த மலரை மேலே நின்றிருந்த இலைகளுடனும் மலர்களுடனும் பின்னி மிதக்கவிட்டபடி கொடியின் மறுமுனையை வாயில் கவ்விக்கொண்டு நீருக்குள் மூழ்கினான்.

நீருக்குள் செறிந்து நின்றிருந்த தாமரைக்கொடிகளில் தன் உடலை பிணைத்துக்கொண்டபோது ஆழம் மேலே உந்தியதை எதிர்கொண்டு உடல்அலைவை நிலைகொள்ளச்செய்ய முடிந்தது. மேலே மலர்கள் நடுவே அந்தத் தாமரை மலர் எழுந்து நின்றிருந்தது. அதன் மையத்துளை வழியாக வந்த காற்றை வாயால் உறிஞ்சி வாய் வழியாகவே வெளிவிட்டுக்கொண்டு நீருக்குள் மூழ்கிக் கிடந்தான். ஆழம் அலையடங்க அவன் மேல் நீர்ப்பாசிகள் வந்து மூடிப்படிந்தன. நீர்க்குமிழிகள் சில எழுந்து உடலை மீன்குஞ்சுகள் போல வருடி மேலே சென்றன.

மீன்கள் அச்சம் நீங்கி விழித்த கண்களுடன் அவனை நோக்கி வந்து சிறகுலைய அசைவற்று நின்றபின் வால்சுழற்றி திரும்பிச்சென்றன. தலைக்குமேல் ஒளியாக அலைசுழன்று அசைந்துகொண்டிருந்தது. ஓரிரு குமிழிகள் மட்டும் மேலெழுந்துசென்று வெடித்தன. நெஞ்சத்துடிப்பு விலக அவன் உடலுக்குள் குருதி குளிர்ந்து சீரமையலாயிற்று. எண்ணங்கள் கூர்கொண்டபோது அவன் வெளியே நிலம் அதிர புரவிகள் வந்து நிற்பதை கேட்டான். சேற்றை மிதித்தபடி அவை சுழன்றன. மேலே கிளைகளிலிருந்து குரங்குகள் குதித்தன.

சில கணங்களுக்குள் காதுகளே புலன்கள் அனைத்தையும் நிறைக்க அவன் அனைத்தையும் காணலானான். இரு வெண்புரவிகளில் வந்த அர்ஜுனனும் பீமனும் விழிகளை ஓட்டியபடி புரவியைச் சுழற்றினர். அர்ஜுனன் இறங்கி தரையில் பதிந்திருந்த அவன் காலடிகளை கூர்ந்து நோக்கினான். விழிகளைத் தூக்கி அவன் ஆற்றைப் பார்த்தபோது ஜயத்ரதன் நெஞ்சதிர்ந்தான். ஒரு குமிழி மூச்சு வெளியேறி மேலெழுந்தது.

ஆனால் பீமன் தொலைவில் எதையோ சுட்டிக்காட்டினான். குரங்குகள் தரையை முகர்ந்து நோக்கி மூக்கு சுளித்து ஏதோ பேசிக்கொண்டன. குழப்பத்துடன் எழுந்து வயிற்றை சொறிந்து வாயை நீட்டின. பின் ஒரு பெரிய குரங்கு அவன் வந்த வழியிலேயே சரிந்த அடிமரங்கள் வழியாக வந்து அவன் ஏறிய மரத்தில் தொற்றி ஏறிக்கொண்டது. கிளைகள் வழியாக வந்து அவன் நீரில் குதித்த கிளை வரைக்கும் வந்தது. அவன் “தெய்வங்களே! மூதாதையரே!” என்று நெஞ்சுக்குள் கூவினான்.

பெருங்குரங்கு கிளைமுனையில் நின்று எக்களிப்பு போல ஓசையிட்டுக் கூவியதும் மற்ற குரங்குகளும் அங்கே வந்தன. “இவ்வழியேதான் சென்றிருக்கிறான்” என்றபடி அர்ஜுனன் அங்கே வந்தான். “ஆனால் சேற்றில் கால்தடங்கள் இல்லை. படகு ஒன்று நீரில் வந்திருக்கக்கூடும். அதை கரையணையச் செய்யாமல் அங்கேயே நிறுத்திவிட்டு கிளைகள் வழியாகச் சென்று அதில் ஏறியிருக்கிறான்” என்றான் பீமன்.

“இதற்குள் அவன் மறுகரை சென்றிருக்கமுடியாது” என்றான் அர்ஜுனன். “ஆம், நீரொழுக்கு கடினமானது” என்றான் பீமன். “அவன் தப்பிச் சென்றிருக்கிறான் என்றால் ஒரே வழிதான். ஒழுக்கினூடாக சென்றிருக்கக்கூடும். மெல்லிய தக்கைப்படகு. அதை இங்கே ஒளித்துவைத்திருக்கிறான். அல்லது குகன் ஒருவன் கொண்டுவந்திருக்கிறான்” என்றான் அர்ஜுனன். “நெடுந்தொலைவு சென்றிருக்க வாய்ப்பில்லை. ஒழுக்கிலேயே விரைந்து சென்றுகொண்டிருக்கிறான். நாம் காணலாகாதென்று கரைமரங்கள் சரிந்த தழைச்செறிவுக்குள்ளாகவே செல்கிறான்.”

“ஆம், கிளம்புவோம்” என்றபடி பீமன் புரவியை தட்டினான். அர்ஜுனன் எஞ்சிய ஐயத்துடன் திரும்பி நோக்கியபடி அவனைத் தொடர்ந்து சென்றான். ஜயத்ரதன் மெல்ல இயல்படைந்து நீருக்குள் கால்களை நீட்டினான். தாமரைத் தண்டுகளுக்குள் இருந்து இரு மீன்கள் வெளிவந்து அவனை நோக்கின. ஒன்று வாலை அறைந்து திரும்பி மேலெழுந்து அவன் கண்களை நோக்கி வந்தது. அவன் இமைகளை மூடிக்கொண்டான். அது அணுகி அவன் கன்னத்தையும் கழுத்தையும் வழுக்கியபடி சென்றது. அவன் விழிதிறந்து நோக்க பிறிதொன்று அவன் கண்களை நோக்கி வந்தது. அவன் கையால் அதை தட்ட உடல் அசைந்தது.

நீருக்கு மேல் குமிழிகள் எழுந்தன. இரு மீன்கள் துள்ளி விழுந்து அலைகிளப்ப குரங்குகள் அனைத்தும் சேர்ந்து ஓசையிடத் தொடங்கின. கிளைகளில் எம்பிக் குதித்து இலைத்தழைப்பை உலுக்கியபடி அவை குதித்துக் கூச்சலிட்டன. பீமன் திரும்பி அவற்றை நோக்கினான். குரங்குகளை கைசுட்டி ஏதோ சொன்னான். பின்னர் இருவரும் அவனிருந்த சுனைச்சுழி நோக்கி புரவிகளில் வந்தனர்.

images

பீமன் நீர்ச்சுழிகளை நோக்கினான். மீன்கள் துள்ளித்துள்ளி விழுந்தன. “மீன்கள்” என்றான் அர்ஜுனன். “இல்லை, அங்குதான் இருக்கிறான் என்கின்றன குரங்குகள். அவை அறியும்” என்றபின் பீமன் அருகே சென்று கூர்ந்து நோக்கினான். “இளையோனே, தாமரைத்தண்டை மூச்சுக்குழாயாக வைத்துக்கொண்டு மூழ்கிக்கிடக்கிறான்” என்று கூவியபடி நீரில் இறங்கப்போனான்.

“நில்லுங்கள்!” என்றபடி அர்ஜுனன் வில்லை எடுத்து அம்பு தொடுத்தான். தாமரைகள் அறுபட்டு மிதந்தன. “ஒரு தாமரையில் நடுவே புல்லி இல்லை” என்றபடி அதை வெட்டினான். துண்டாகி அலைகளில் கவிழ்ந்தது. சிறகுகள் சரிந்த பறவைக்குஞ்சுபோல நீரில் பாதிமூழ்கி விலகியது. அவர்கள் இடையில் கைவைத்து நோக்கி நின்றனர். குரங்குகள் கூச்சலிடத் தொடங்கின. ஜயத்ரதன் மேலெழுந்து வந்து கையால் முகத்தில் வழிந்த நீரை வழித்துக்கொண்டு “நான் போர்நிறுத்திப் பணிகிறேன். சிந்துவின் அரசன் நான்… இந்திரப்பிரஸ்தத்திடம் அடைக்கலம் புகுகிறேன்” என்றான்.

“வருக!” என்றான் அர்ஜுனன். ஒரு கணம் தயங்கிவிட்டு அர்ஜுனன் கண்களை நோக்கியபின் கைவீசி ஜயத்ரதன் நீந்தி அணுகினான். சேற்றுக்கரையை அவன் அணுகி ஆடையை அழுத்தியபடி எழுவதற்குள் “இழிமகனே…” என்று கூவியபடி பீமன் அவன் மேல் பாய்ந்தான். அவனை தன் பெரிய கைகளால் பீமன் அறைந்த ஓசை கேட்டு இரு புரவிகளும் உடல் விதிர்த்தன. குரங்குகள் கிளைகளில் தாவி பின்னால் சென்று ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு நோக்கின. பீமன் அவனைத் தூக்கி தரையில் அறைந்தான். சேற்றிலிட்டு மிதித்தான்.

“மூத்தவரே… மூத்தவரே!” என அர்ஜுனன் பதறினான். “விலகு…” என பீமன் உறுமினான். ஜயத்ரதனின் வாயிலேயே மிதித்து அனைத்துப் பற்களையும் உதிரச்செய்தான். அவனைத் தூக்கி அறைந்து கைகளையும் கால்களையும் ஒடித்தான். எலும்புகள் தசைக்குள் ஒடியும் ஒலி கேட்டு அர்ஜுனன் பதறியபடி “மூத்தவரே, வேண்டாம்… வேண்டாம்” என்று கூவினான். சிவந்த விழிகளுடன் “விலகு… அணுகினால் உன்னையும் கொல்வேன்” என்றான் பீமன்.

ஜயத்ரதன் அடிபடும் நாய்போல ஊளையிட்டான். சேறுடன் சேர்ந்து உடல் குழைய அவன் குரல் கம்மலாகி ஊளையாக அலறிக்கொண்டே இருந்தான். அவன் வாய்க்குள் சேறு நுழைந்தது. குருதியுடன் அதை கக்கினான். பீமன் அவன் கால்களை விரித்து ஆண்குறியை மிதிக்கப்போனான். “மூத்தவரே, வேண்டாம்… வேண்டாம்” என ஜயத்ரதன் கைகளை நீட்டி கெஞ்சி அழுதான். “வேண்டாம், மூத்தவரே…” என்று அர்ஜுனன் கூவினான்.

பீமன் காலை ஓங்க அவன் தன் இடைப்பகுதியை பொத்திக்கொண்டு சுருண்டுகொண்டான். அவன் கால்களைப் பிடித்து இழுத்து சேற்றிலிட்டு ஆண்குறியை மிதிக்கத்தொடங்கினான். மிதித்து மிதித்து கூழாக்கி அவனை சேற்றில் பாதி புதைத்தான். பீமன் சற்றே மூச்சிடைவெளிவிட அர்ஜுனன் பாய்ந்துசென்று அவனை பிடித்துக்கொண்டான். “வேண்டாம், மூத்தவரே. நாம் கொல்லும் உரிமைகொண்டவர்கள் அல்ல. இவனை தண்டிக்கவேண்டியவர் மூத்தவர்” என்றான் அர்ஜுனன். நெஞ்சு விரிந்தமைய “உம்” என பீமன் மூச்சிளைத்தபடி சொன்னான். தலையை உலுக்கி முடியைத் தள்ளி பின்னாலிட்டபின் பற்களை கடித்துக்கொண்டு திரும்பி நோக்கினான். காறி அவன் முகத்தில் உமிழ்ந்தபின் திரும்பி நடந்தான்.

அர்ஜுனன் ஓடிச்சென்று ஜயத்ரதனை மெல்லத் தூக்கி நீரை அள்ளி முகத்திலறைந்தான். முனகலுடன் ஜயத்ரதன் விழித்துக்கொண்டு அக்கணமே அச்சம் கொண்டு உடல் உலுக்க சிறுவர்களுக்குரிய குரலில் “காப்பாற்றுக… இளவரசே, காப்பாற்றுக!” என்றான். உறுமலுடன் பாய்ந்து திரும்பி வந்த பீமன் அவனைப் பிடித்து இழுத்து நாணல்மேலிட்டு மீண்டும் மிதிக்கத் தொடங்கினான். அர்ஜுனன் எழுந்து பீமனை நரம்புப்பொருத்து ஒன்றில் அறைந்து அப்பால் தள்ளினான். விழுந்து பிளிறியபடி எழுந்த பீமன் விழிகளை நோக்கி “போதும்” என்றான் அர்ஜுனன். பீமன் “இந்த இழிமகன்… இவன்…” என கைநீட்டி கூவ “அவனை என்ன செய்வதென்று மூத்தவர் முடிவெடுக்கட்டும்” என்றான் அர்ஜுனன்.

பீமன் மீண்டும் காறி அவன் முகத்தில் துப்பினான். “காப்பாற்றுக! என்னை காப்பாற்றுக!” என்றான் ஜயத்ரதன். “நான் ஓர் அரசன்… என் தலைவராகிய மூத்த கௌரவரை மகிழ்விக்கவே இதைச் செய்தேன்.” பீமன் அர்ஜுனனின் அம்புத்தூளியிலிருந்து பிறையம்பை எடுத்துக்கொண்டு அருகே வந்தான். “வேண்டாம், மூத்தவரே!” என்று அர்ஜுனன் கைவிரித்து தடுத்தான். “இளையோனே, விலகு!” என்றான்  பீமன். “காப்பாற்றுக…” என்று ஜயத்ரதன் அர்ஜுனன் கால்களைப் பிடித்தான். “கொல்லமாட்டேன்… விலகு!” என்றான் பீமன்.

அர்ஜுனன் தயங்க பீமன் ஜயத்ரதனின் கையைப்பிடித்து இழுத்து தொடையை ஓங்கி உதைத்து குடப்பொருத்தை உடைத்து அவன் அலறியபடி துடிக்க திறந்த வாய்க்குள் கைவிட்டு நாக்கை கைகளால் பற்றிப் பிடித்து இழுத்து இறுக்கிக்கொண்டான். அவன் உடல் அதிர்ந்து அதிர்ந்து விழுந்தது. தலையை ஆங்காங்கே முடி எஞ்சும்படி மழித்தான். ஒற்றை மீசையை மழித்தான். காதுகளின் மடல்களையும் சீவி எறிந்தான். பின் அவனை இழுத்துக்கொண்டுவந்து அவன் ஆடையைக் கழற்றி அதைக்கொண்டே தன் குதிரையின் சேணத்துடன் கட்டிக்கொண்டு ஏறினான். “செல்வோம், இளையோனே” என்றான்.

“மூத்தவரே, இது பெருங்கொடுமை” என்றான் அர்ஜுனன். “ம்ம்” என யானைபோல் பீமன் உறுமினான். “நானும் இதைச் செய்தேன். இன்றும் அவ்வனலை என் உள்ளம் அணைத்துக்கொள்ளவில்லை. என்றேனும் நானும் போரில் பெருமையிழந்து குன்றி அமரும்போது மட்டுமே அது குளிரும்… வேண்டாம்! இவனை அரசனென நடத்துவோம். ஊழ் புறம் மாறி அமைகையில் எவர் எங்கிருக்கிறோம் என எவர் சொல்லமுடியும்?” பீமன் “சீ… கோழை… நாளையை அஞ்சி இந்த நாயை விட்டுவிடச் சொல்கிறாயா?” என அவன் முகம் மீது மீண்டும் காறி உமிழ்ந்தான். அர்ஜுனன் தளர்ந்து “மானுட எல்லைகளென சில உள்ளது, மூத்தவரே” என்றான்.

சிவந்த சிறிய விழிகளில் குருதி பரவியிருக்க திரும்பிய பீமன் சீறலென ஒலித்த குரலில் “மானுட எல்லைக்குள் மகளிர் வருவதில்லையா? அரசரங்கில் ஆடைகளைந்து நிற்கச்செய்கையில் சிறுமைகொள்ளாத மானுடம் ஒன்று உண்டென்றால் அது இங்கு வந்து கூசி நிற்கட்டும். அனைத்தையும் விட்டு ஓடிவந்து சிறுகுடிலில் புல்லரிசி சமைத்து வாழ்கிறாள் என் குலம்புகுந்த அரசி. இங்கும் வந்து அவள் குழல்பற்றி இழுத்துச் செல்கிறான் என்றால், இவனை…” என்றவன் அக்கணமே திரும்பி ஜயத்ரதனைத் தூக்கி நிலத்திட்டு மீண்டும் மிதிக்கத்தொடங்கினான். “மூத்தவரே, மூத்தவரே…” என அர்ஜுனன் கூவினான்.

ஜயத்ரதன் துணிப்பாவைபோல கிடந்தான். “போதும்… போதும்… உயிர் எஞ்சவேண்டும்” என்றான் அர்ஜுனன். “ஆம், என் மூத்தவரின் பெருமைக்காக மட்டும்” என்றபின் பீமன் புரவியைத் தட்டினான். அது விரைந்தோட தரையில் விழுந்து புழுதியிலும் முள்ளிலும் கற்களிலும் இழுபட்டபடியே சென்றான் ஜயத்ரதன். காடு முழுக்க அவனை இழுத்துச்சென்றான். சாலைப்புழுதியை அடைந்ததும் மேலும் விரைவுகொண்டான். அவன் மேல் கிளைவழி வந்த குரங்குகள் முற்றிலும் ஓசையடங்கிவிட்டிருந்தன.

imagesமுன்னரே சென்ற குரங்குகளின் பூசலும் குதிரைக்கனைப்புகளும் சேர்ந்து முனிவர்களின் இல்லங்களிலிருந்து அனைவரையும் வெளியே வந்து பார்க்கச்செய்தன. முதலில் அவர்கள் மண்ணில் புரண்டு சடலம்போல வந்த ஜயத்ரதனை பார்க்கவில்லை. உரித்தெடுக்கப்பட்ட மாட்டுத்தோல் என ஒருவர் எண்ணி “தோலா?” என்றார். இன்னொருவர் “ஏதோ உடல்” என்றார். பின்னர் ஒருகணத்தில் அனைவருக்கும் அது ஜயத்ரதன் எனத் தெரிந்தது. வியப்பொலிகளும் துயரக்குரல்களும் கேட்டன. பெண்கள் குழந்தைகளை கண்களைப்பொத்தி இழுத்துச் சென்றார்கள். முதிய பெண்கள் கைநீட்டி கதறியழுதனர்.

சுஃப்ர முனிவர் கைகளை நீட்டியபடி வந்து சாலையில் நின்று “என்ன இது? இறந்த உடலை சிறுமைசெய்ய மானுடனுக்கு உரிமையில்லை…” என்று கூவினார். பிரபாகரர் பின்னால் வந்து “அது தென்முதல்வன் கைக்கு சென்றுவிட்ட உயிர். எரியரசனுக்கோ மண்ணரசிக்கோ உரிய உடல்!” என்று கத்தினார். “அவன் இன்னும் சாகவில்லை” என்றான் பீமன். அவர்கள் திடுக்கிட்டு நோக்க அவன் கைகள் துடிப்பதைக் கண்டு “தெய்வங்களே!” என்று கூவினர். “என் குலமகள் மேல் கைவைத்தவன் இவன்… இவனை என்ன செய்யவேண்டுமென என் மூத்தவர் சொல்லட்டும். இனி இவ்வெண்ணம் எவ்விழிமகனுக்கு வருகிறதோ அவன் குழந்தைகளின் சங்குகடித்து குருதியைக் குடிப்பேன். இதோ, சுழலும் காற்றுத்தேவன் மேல் ஆணை!” என்றான்.

“பாண்டவரே…” என்று சொல்லி சுஃப்ரர் ஓர் அடி முன்னால் எடுத்து வைக்க பீமன் சவுக்கை ஓங்கி “எதிர்நிற்கும் எவரும் இவ்விழிமகனுக்கு உடன்நிற்பவர்கள் என்றே கொள்வேன். முனிவரோ தேவரோ தெய்வங்களோ ஆயினும் அவர்களின் குருதியாட தயங்கமாட்டேன்… விலகுக!” என்றான். அவர்கள் நெஞ்சைப்பற்றியபடி விலகிநின்றனர்.

குடிலை நெருங்கியபோது அர்ஜுனன் தளர்ந்திருந்தான். தாழ்ந்த குரலில் “சொல்லவேண்டியதை நீங்களே சொல்லிவிடுங்கள், மூத்தவரே. இவ்வுடலில் உயிர் உள்ளதா என்றே ஐயுறுகிறேன்” என்றான். “ஆம், நான் ஏற்கிறேன். நான் கொள்கிறேன் இப்பழியை… இளையோனே, குருகுலத்துக்கீழ்மக்கள் நூற்றுவரையும் கொன்று யுகப்பழி கொள்ளவிருக்கும் கைகள் இவை…” என்று பீமன் சொன்னான்.

குடில் முற்றத்திலிருந்து நகுலன் ஓடிவந்தான். “என்ன ஆயிற்று?” என்று கேட்டதுமே ஜயத்ரதனை கண்டுகொண்டான். “உயிர் இருக்கிறதா?” என்றான். “சாகவில்லை” என்றான் பீமன். மேலிருந்து சகதேவன் பாய்ந்திறங்கி வந்தபடி “என்ன செய்துவிட்டீர்கள், மூத்தவரே? அவன் நம் உறவினன். துச்சளை உங்கள் தங்கை” என்றான். தருமன் குடில்விளிம்பில் வந்து நிற்க அவர் அருகே திரௌபதி வந்து நோக்கினாள். அவள்தான் முதலில் ஜயத்ரதனை அடையாளம் கண்டுகொண்டாள். அஞ்சியவள்போல நெஞ்சில் கைவைத்தாள். அவள் கண்கள் கலங்கி நீரொளி கொள்வதை காணமுடிந்தது.

என்ன நிகழ்கிறதென்றறியாமலேயே தருமன் உடல்நடுங்கிக்கொண்டிருந்தார். குரங்குகள் ஒவ்வொன்றாக இறங்கி வந்து ஓசையில்லாமல் வேலிமேல் குந்தி அமர்ந்தன. திடீரென்று அப்பகுதியெங்கும் பூசணப்பாசி படிந்ததுபோல் ஆயிற்று அவற்றின் சாம்பல்நிறத்தால். பதறிய குரலில் “இளையோனே, என்ன?” என்றார் தருமன். “இதோ கிடக்கிறான் நம் குலக்கொடிமேல் கைவைத்த கீழ்மகன்” என்றான் பீமன். கட்டியிருந்த துணியைப்பற்றித் தூக்கி ஜயத்ரதனை நிற்கச்செய்தான். “உங்கள் தீர்ப்புக்காக உயிருடன் கொண்டுவந்துள்ளேன்.”

ஜயத்ரதனால் நிற்க முடியவில்லை. கால்கள் தொடையிலும் மூட்டிலும் கணுக்காலிலும் எலும்புகள் உடைந்து துணிச்சுருளாக தொய்ந்தன. கால்களுக்கு நடுவே பெரிய பொதிபோல குறிக்காய்கள் வீங்கி நிறைந்திருந்தன. கையெலும்புகள் உடைந்து மணிக்கட்டு முழுமையாக பின்பக்கம் திரும்பியிருந்தது. பற்கள் உதிர்ந்த வாய்க்குள் நாக்கு வீங்கி நிறைந்திருக்க உடலெங்கும் தோல் உரிந்து சதைப்பூச்சு உரிந்து தெறிக்க பல இடங்களில் வெள்ளெலும்பு தெரிந்தது. குருதியூறிவழிய மண்ணும் சருகுத்துகள்களும் கரைந்து வழியலாயின.

“இளையோனே…” என வீரிட்டபடி தருமன் இறங்கி கீழே வந்தார். படியில் கால்தவறி விழப்போக அவரை சகதேவன் பற்றிக்கொண்டான். “என்ன செய்துவிட்டாய்… இளையோனே?” என்று கூவினார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. குரல் அடைத்து கைகள் பதறின. என்ன செய்வதென்று அறியாமல் அங்குமிங்கும் நோக்கி ததும்பி பதறி “இளையோனே… அவனுக்கு நீர் அளியுங்கள்… அவனை படுக்க வையுங்கள்” என்று கூச்சலிட்டார். திரௌபதி படிகளில் இறங்கி ஓடிவந்து “என்ன செய்தீர்கள்? இளையவரே, அவன் ஓர் அன்னையின் மைந்தன் அல்லவா?” என்றாள்.

சகதேவன் சென்று ஜயத்ரதனைப்பற்றி படுக்கவைத்தான். திரௌபதி அருகே அமர்ந்து அவன் தலையை மெல்ல தூக்கி குருதியில் ஒட்டிக்கிடந்த குழலை அள்ளி காதோரம் ஒதுக்கினாள். அவள் கண்ணீர்த்துளிகள் ஜயத்ரதன் முகத்தில் விழுந்தன. விம்மலில் கழுத்து குழிந்தெழுந்து அதிர்ந்தது. நகுலன் ஓடிச்சென்று நீர்க்குடுவையை கொண்டுவந்தான். திரௌபதி அதை வாங்கி அவனுக்கு கொடுத்தாள். வாய் வீங்கி நிறைந்திருந்தமையால் ஜயத்ரதனால் நீரை குடிக்க முடியவில்லை. திரௌபதி சிறுகுழவியை என அவனை தன் மார்பில் மெல்ல அணைத்துக்கொண்டு சுட்டுவிரல் விட்டு நாக்கை அகற்றி இடுக்கில் நீரை விட்டாள்.

நீர் பட்டதும் அவன் உள்வாய் தவித்து உடல் எழுந்து குடுவை நோக்கி வந்தது. அன்றுபிறந்த மகவென அவன் இழுத்து இழுத்து குடித்தான். இருமி குருதித்துண்டங்கள் அவள் முகத்திலும் கழுத்திலும் முலைகள்மேலும் தெறிக்க நெஞ்சக்கூடு உதறிக்கொள்ள உயிர்பிரிவதுபோல நெளிந்தான். கைகள் எலும்புடைந்து நாகங்கள்போல தரையில் கிடந்து புரண்டன. கண்ணீருடன் “என்ன செய்துவிட்டாய், மந்தா…? அவன் அரசன். நம் குலத்தில் பெண்ணெடுத்தவன்” என்றார் தருமன். “என் குலமகள்மேல் கைவைத்தவன்… அதையன்றி வேறெதையும் எண்ணப்போவதில்லை நான்” என்றான் பீமன் உரக்க.

“அவனை விட்டுவிடுக… இளையோனே. அவன் வீரர்களிடம் அவனை ஒப்படையுங்கள். அவர்கள் அவனை கொண்டுசெல்லட்டும். அவன் இறக்கலாகாது…” என்றார் தருமன். அருகே வந்து குனிந்து கைகூப்பி “சைந்தவரே… பெரும்பிழை நிகழ்ந்துவிட்டது. பொறுத்தருள்க… உங்கள் மூதாதையரும் குலதெய்வங்களும் என் குடிமேல் வஞ்சம் கொள்ளாதிருக்கட்டும்…” என்றார். ஜயத்ரதன் இமைகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. அவன் அச்சொற்களை கேட்கிறான் என்பது தெரிந்தது. திரௌபதி உதடுகளை அழுத்தி அழுகையை அடக்கிக்கொண்டிருந்தாள்.

“ஆவன செய்க… இளையோரே, ஆவன செய்க… நான் உடனே இவர் தந்தை பிருஹத்காயருக்கும் சிந்துவின் குலமூத்தாருக்கும் பொறுத்தருளக்கோரி ஓலை அனுப்புகிறேன்” என்றார் தருமன். அர்ஜுனன் “ஆணை, மூத்தவரே!” என்றபின் திரும்பி “அவரை முதலில் படுக்கவையுங்கள். புண்கள் மேல் பூச்சிகள் படியக்கூடாது” என்றான். நகுலனும் சகதேவனும் சேர்ந்து ஜயத்ரதனை தூக்கப்போக திரௌபதி ஓடிச்சென்று இரு வாழையிலைகளை வெட்டிவந்தாள். அவற்றை அங்கிருந்த மூங்கில் முடைந்த பீடத்தில் விரித்து அதன்மேல் குளியலுக்கான மூலிகைஎண்ணையை ஊற்றி அவனை படுக்கவைத்தனர்.

அர்ஜுனன் நகுலனிடம் “இளையோனே, செல்க! சிந்துவின் படைகள் அங்கே ஒருங்கிணைந்துவிட்டிருக்கும். அவர்களிடம் தேர்கொண்டுவந்து அரசனை கொண்டுசெல்லும்படி சொல்க!” என்றான். சகதேவனிடம் “விரைந்து சென்று முனிவர்களில் மருத்துவமறிந்தவர்கள் சிலரை அழைத்துவருக!” என்றான். அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு வெளியே சென்றனர். தருமன் கால்தளர்ந்தவராக அங்கிருந்த கூடை ஒன்றின்மேல் அமர்ந்து தலையை கைகளால் பற்றிக்கொண்டார். “இது பெரும்பழி… நம் குலத்திற்கும் பழி இது” என்றார். அர்ஜுனன் “நாம் இதை பின்னர் பேசுவோம், மூத்தவரே” என்றான்.

திரௌபதியும் அர்ஜுனனும் எண்ணையை பஞ்சில் முக்கி ஜயத்ரதனின் உடலில் உரிந்திருந்த தோலையும் தசைக்கிழிசல்களையும் ஒற்றி தூய்மைப்படுத்தினார்கள். பீமன் இடையில் கைவைத்து அவளை நோக்கியபடி நின்றான். கைபட்டபோது ஜயத்ரதன் உடலின் ஆழத்திலிருந்து மெல்லிய முனகல் எழுந்தது. அவள் உடலெங்கும் அவன் குருதி படிந்திருந்தது. மலரால் ஒற்றுவதைப்போல மிகமெல்ல அவள் கைகள் அசைவதை அவன் புரியாச்செயல் என நோக்கிக்கொண்டு நின்றான். அர்ஜுனன் நிமிர்ந்து “தாங்கள் செல்லலாம், மூத்தவரே” என்றான்.

பீமன் தரையில் துப்பிவிட்டு “இவனைக் கொல்லாது விட்டமைக்காக வருந்துகிறேன், மூத்தவரே” என்று தருமனிடம் சொன்னான். அர்ஜுனன் “மூத்தவரே, செல்க!” என சற்று எரிச்சலுடன் சொன்னான். “இளையோனே, நான் காட்டான். உங்கள் மெய்யறிதல்கள் எனக்கில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். இது ஊழின்கணம். ஆகவே இக்கருணை உங்கள் உள்ளத்திலெழுகிறது. இதன்பொருட்டு நீ எஞ்சிய வாழ்நாளெல்லாம் துயர்கொள்வாய்” என்றபின் தன் இடைக்கச்சையை அவிழ்த்து உதறி தோளிலிட்டபடி நடந்து குடிலை அடைந்து கயிறேணியில் தொற்றி மேலேறிச் சென்றான்.

முந்தைய கட்டுரைவெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்
அடுத்த கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல், சென்னை