வேதாந்த வகுப்பு – அறிவிப்பு

Profile

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அடிக்கடி வரும் ஒரு கேள்வி, ‘நல்ல ஆசிரியரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?’ அதன் விடையாக ‘இப்போது அப்படி எவரேனும் இருக்கிறார்களா?” என்றும் அவர்களே இன்னொரு கேள்வியைச் சொல்வார்கள்

”அவர்கள் என்றும் இருந்தார்கள், இருப்பார்கள். அவர்கள் உங்களைத் தேடிவரமாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான அவசியமும் இல்லை, ஆர்வமும் இல்லை. உங்கள் தேடல்தான் அவர்களிடம் கொண்டுசெல்லும். தேடினீர்களா, எங்கெல்லாம் சென்றீர்கள்?” என்று நான் கேட்பேன். பெரும்பாலும் மழுப்பலான பதில்களாகவே இருக்கும்.

இன்று நித்ய சைதன்ய யதியைச் சந்தித்திருக்கலாமே என பலரும் சொல்வதைக் கேட்கிறேன். நித்யா இருபதாண்டுக்காலம் ஊட்டியில் இருந்தார். பல எழுத்தாளர்களுக்கு அவரை முன்னரே தெரியும். நானே ஏராளமானவர்களை அழைத்துச் சென்றிருக்கிறேன். அவரைத் தொடர்ந்து சந்தித்தவர்கள், அணுகவும் அறியவும் முயன்றவர்கள் மிகமிகச்சிலரே.

சந்திப்பதை ஒத்திப்போட நண்பர்கள் மிகச்சாதாரணமான காரணங்களைச் சொல்வார்கள். தேர்வுக்குப் படிக்கவேண்டும், குழந்தை பள்ளிக்குச் செல்கிறது – இவ்வாறு. உண்மையில் இந்த மனநிலைதான் தடை. அது இல்லாதவர் தன் வீட்டுக்கு அருகிலேயே தனக்கான ஆசிரியரைத் தேடிக்கொள்ளமுடியும்.

சென்ற சிலநாட்களுக்கு முன்பு ஊட்டிக்குச் சென்றிருந்தபோது சுவாமி வியாசப்பிரசாத்தை சந்தித்தேன். முற்றிலும் தனிமையாக அங்கே இருந்தார். எவருமே உடனில்லை. பல நாட்களுக்கு ஒருமுறைதான் எவரேனும் அங்கே வருகிறார்கள். அவர் தனிமையில் திளைக்க விரும்புபவர். சொல்லப்போனால் பத்தாண்டுக்காலம் எவரிடமும் அவர் பேசியதே இல்லை. நான் அவரைச் சந்தித்தபின் எட்டு ஆண்டுகளுக்குப்பின்னர்தான் முதல் சொல்லை அவரிடம் பேசினேன். இப்போதுதான் ஓரளவேனும் உரையாடுகிறார்

மேலை, கீழைத் தத்துவத்தில் ஆழ்ந்த அறிவுடையவர். வேதாந்தத்தை குறித்து ஆழ்ந்து அறியவிரும்புபவர்களுக்கு இன்றுள்ள மிகச்சிறந்த ஆசிரியர்கள் ஒருசிலரில் ஒருவர். தேவையான ஒருசிலரேனும் இருக்கக்கூடும், அவர்களுக்கு அவரை அறிமுகம்செய்யலாமே எனத் தோன்றியது

ஆனால் தயக்கமும் இருந்தது. என்ன காரணம் என்றால், இன்றைய சூழலில் வேதாந்தம் யோகம் மெய்ஞானம் குறித்த எளிய கருத்துக்கள் துண்டுப்பிரசுர தரத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டு அத்தனைபேரும் எதையாவது நான்குவரி தெரிந்து வைத்திருக்கிறார்கள். அத்தனைபேரும் பேசவும் காட்டிக்கொள்ளவும் மட்டுமே விரும்புகிறார்கள். மெய்ஞானத்தின் படியில் நின்றுகொண்டிருப்பவர்கள் பலகோடிப்பேர் தமிழகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கும் எவரையும் எரிச்சலைடயச் செய்ய அவர்களால் முடியும்

ஓர் ஆசிரியரை அணுகுவதென்பது எளிய செயல் அல்ல. முதலில் தன்னடக்கம் தேவை. அவர்முன் தன் முந்தைய அறிவுகளை ஒழித்து ’கல்விநீக்கம்’ செய்துகொள்ளவேண்டும். அவர் அளிப்பதைப் பெறவேண்டும் என்றால் அவர் எதை அளிக்கவேண்டும் என நாம் முன்னரே முடிவுசெய்துகொண்டிருக்கக்கூடாது. அவர் எவ்வாறு இருக்கவேண்டும், எப்படிப் பயிற்றுவிக்கவேண்டும் என்று நாமே தீர்மானிக்கக்கூடாது. நம்மை அவர் மாற்ற நாம் அனுமதிக்கவேண்டும். அவருக்குள் செல்ல நம்மை நாமே உருமாற்றிக்கொள்ளவேண்டும்.

ஆசிரியர்கள் வேறு மெய்யாசிரியர்கள் வேறு. ஆசிரியர்கள் கற்பித்தலெனும் தொழில் கொண்டவர்கள். கற்பிப்பதில் பயிற்சிபெற்றவர்கள். அதற்கான மொழியும் தோரணையும் கொண்டவர்கள். மெய்யாசிரியர்களிடமிருந்து நாம்தான் கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் கற்பிக்க முயல்வதில்லை. அவர்களின் மொழி, எண்ணம் ஆகியவற்றை நாம் சற்றேனும் பின் தொடர்வதற்கே சற்று முயற்சி தேவை.

நீண்ட தயக்கம் குழப்பங்களுக்குப் பின் வியாசப்பிரசாத் சுவாமியிடம் ஒருசிலர் அவரை வந்து சந்திக்கலாமா என்று கேட்டோம். அவருக்கு தயக்கம். மேலும் பேசியபின் தெரிவுசெய்யப்பட்ட பத்துபேர் மட்டும் அவரைச் சென்று சந்தித்து இருநாட்கள் உரையாட அவர் ஒத்துக்கொண்டார்,

ஆகவே இந்த பிப்ரவரியில் ஊட்டி நாராயணகுருகுலத்தில் வியாசப்பிரசாத் சுவாமியிடம் ஓர் உரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம் [நான் வரமாட்டேன்.அவர் மட்டுமே இருப்பார்] 10 பேர் மட்டும், ஏற்கனவே 5 பேர் உள்ளனர் [இடங்கள் முழுமையாகிவிட்டன. ஆர்வமுடையவர்களை பின்னர் சேர்த்துக்கொள்வோம்]

சுவாமி வியாசப்பிரசாத் ஊட்டி லவ்டேல் பள்ளியில் படித்து உடனடியாக வெளிநாடு சென்றவர். அவரால் ஆங்கிலம் மட்டுமே பேசமுடியும். ஆகவே ஆங்கிலம் பேசினால் புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு மட்டுமே இடம்

வேதாந்தம் குறித்து மட்டுமே உரையாடல். ஆகவே அறிதலில் ஆர்வமுடையவர்களுக்கு மட்டுமே இடம். உலகியல்கவலைகளுக்கான தீர்வுகள். உலகியல் கேள்விகள் சார்ந்து எவரும் வரவேண்டியதில்லை. ஊட்டி குருகுலத்தில் அத்தகைய அன்றாடவாழ்க்கை சார்ந்த அருள்புரிதல்கள், மாயங்கள் ஏதும் இல்லை

பூசைகள், தியானம்,யோகம் போன்றவையும் ஊட்டியில் இல்லை – அதாவது வருபவர்களுக்கெல்லாம். ஆகவே அத்தகையவர்களுக்குமான இடமும் அல்ல.

மாணவர்களாக அமர்ந்து கவனிக்கும் மனநிலை கொண்டவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறார்கள். தாங்களே பேசவிரும்புபவர்கள், தனிப்பட்ட பேச்சுக்கு விரும்புபவர்கள் தவிர்ப்பது நல்லது.

நான் முதலில் நித்யாவைச் சந்தித்தபோது “இங்கே என்ன கற்பிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். “எதுவுமில்லை. நான் என்னுடன் இருக்க இவர்களை அனுமதிக்கிறேன்” என்றார். ஒர் ஆசிரியனுடன் இருப்பதே முக்கியமானது. அவருடைய சிந்தனைகள் அல்ல, அவர் சிந்திக்கும் முறையே கற்றுக்கொள்ளவேண்டியது

ஆர்வமுள்ளவர்கள் தங்களைப்பற்றிய முழுத்தகவல்களுடன் கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு எழுதலாம். உகந்தவர்கள் என்று தோன்றினால் அழைக்கபடுவார்கள். ஐந்துபேர் மட்டும்.

ஜெ

=======================

தொடர்பு மின்னஞ்சல் :

[email protected]

விண்ணப்ப படிவம்:

***

வியாசப்பிரசாத் ஓர் உரையாடல்

வியாசப்பிரசாத் வகுப்புகள் காணொளிகள்

நாராயணகுருகுலம் பற்றி

====================================================================================

நாராயணகுருகுலம் நிதியுதவி

முந்தைய கட்டுரைமுகம்சூடுதல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9