க.சீ.சிவக்குமார்- ஒரு கடிதம்

kasi

 

அன்பு ஜெ ,

கா சீ சிவகுமார் மறைவு ஒரு அதிர்வு. நேரில் பார்த்ததில்லை என்பதால் மட்டும் அதிர்வு மெல்லிதா அல்லது வலியதா என்று தெரியவில்லை.

குழந்தையின் முகத்தில் நீர் துளிகளை விசிறும் போது வரும் ஒரு சிரிப்பு, மகிழ்ச்சி, குறும்பு மிளிரும் தன்மையான எழுத்துக்கள் பெரும்பாலும். குசும்பு என்ற பேர் அந்த பக்கங்களில் சொல்வார்கள். அனைத்திலும் ஒரு மென்சிரிப்பு கொள்ளும்படியான வர்ணனை நிறைந்தவை அவரது சிறுகதைகள். மது அருந்திய பின் வரும் மிளிர் உலகை, இறங்கும் அன்பின் சரிவை, கைகள் சிறகுகள் என பரவி அணைத்து கொள்ளும் யாவரும் அன்பர் எனும் உலகை மிக ரம்யமாக எழுதியவர். ஆனாலும் “கன்னிவாடி” என்ற ஒரு சிறு ஊரின் (கிராமத்தின்) கதை, விஷ்ணுபுராணம் முதல் பகுதியின் தொடக்கம் சோனா நதியின் தொன்மம் போல கொண்டு சென்றவர் கூட

நீங்கள் சொன்னது போல வார இதழ் வாடை அவரை தள்ளி நின்று சுவாரஸ்யங்களை மட்டும் முகர்ந்து பார்க்க வைத்து இருக்கலாம். ஆனால் வண்ணதாசனை போல அவரின் ஊரை, ஊரின் உலகை, அந்த மாந்தரை புரிந்து கொள்ள சிறிது உதவும் . இன்னமும் சொல்ல போனால் வண்ணதாசன் சொன்னது போலவே தெருவில் நின்று பேசி விட்டு போகும் மாந்தர் இல்லாமல் ஆகி வெறும் பாய்சாலாகி செல்லும் வாழ்வில் அவரது பார்வையின் பதிவுகள் அல்லது எழுத்துக்கள் கடைசியாக இருக்க கூடும். அவை “அந்த காலத்து” ஊரின், ஆண்களின், பெண்களின், வாழ்வின் பதிவுகள். இன்று அவைகளை வாய்ப்பு குறைவு.

எழுத்து கையில் வரும் போது நீங்கள் சொன்னது போல எழுதி தொலைத்து இருக்கலாம். அப்படி எழுத நிறைய உண்டு மூலனுருக்கு பக்கம். கூட்டம் கூட்டமாக மந்தை போல கந்து வட்டி தொழில் செய்ய கிளம்பியது அவரின் இளமை காலங்களில் தான். அதே மக்கள் “போல” இன்றும் உண்டு. நறுவிசும் காரும் பொன்னி சோறும், கேழ்வரகு களியை கல்யாண விருந்துகளிலும் சக்கரைக்கு கோவை மருத்துவமும் கொண்டு இருக்கும் வேறு வாழ்வு. குடும்பத்தில் ஒரு ஆளாக நின்று தங்கை தம்பி அக்காளுக்கு கல்யாணம் செய்து கொடுத்து வயது ஆகி தனித்து போன சில கட்டைகளையும் எழுதி இருக்கலாம். விட்டதும் தொலைத்ததும் போல இருந்த “கிருஷ்ணன் வைத்த வீடு” போல கதைகளையும் சமைத்து இருக்கலாம். உள்ளெ ஆழ அமிழ்ந்தாலும், கைபட தடவினாலும் நீர் தொடும் வாழ்வு அற்புதமே.

எழுத முடியும் ஆனால் வேண்டாம் எனும்படியான அசால்ட்டு (careless) என்று தோன்றுகிறது நீங்கள் சொன்ன தீவிரமாக எடுத்து கொள்ளாத தன்மை. அதனால் என்ன. இதுவும் ஒரு வாழ்வு தானே… தீவிரமாகி, ஓடிக்கொண்டு, பரபரவென்று இயக்கத்தில் ஆற்றுவது எல்லாம் காலம் எனும் காற்றை மீறி முயலும் “தன்னின் ” அகங்கார காலடியை தானே

எல்லோரும் இருந்த அவரவரின் இளமையின் ஊர்கள் காணாமல் போவது போல, நான் இருந்த தாராபுரம் எப்போதோ காணாமல் போயிற்று. முன்பு சென்னையில் இருந்த நாட்களில், இரவு ஏழு மணி அளவில் தாராபுரம் என்ற பெயர் பலகை கொண்ட பேருந்து செல்வதை பார்க்கும் போது ஒரு தனிமை மூடும். மீண்டும் சென்று சேரவே முடியாத ஊர் என.. அந்த துயர் மிக அழுத்தமாக மீண்டும் மூடி கொண்டது. தாராபுரம், மூலனூர், கன்னிவாடி என்ற ஊர் பகுதி கதைகளை தன்னோடு கொண்டு சென்று விட்டார்

அன்புடன்

லிங்கராஜ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
அடுத்த கட்டுரைநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி