தேங்காயும் சில தத்துவச்சிக்கல்களும் -பாலா

index

டார் எஸ் ஸலாமில் பணி துவங்கி, சில நாட்களில் வீடு பார்த்துக் குடியேறி விட்டிருந்த காலம். குறைந்த பட்ச சமையல் நிபுணன் நான். மின் பாத்திரத்தில் சோறு ஆக்கிக் கொள்வேன். சாம்பாரும், கோழிக்கறியும் செய்ய வரும். இது போதும் இப்பிறவிக்கு என்னும் ஞான நிலையில் உள்ளவன். அரிசியைக் கழுவி, மின் பாத்திரத்தில் வைத்து விட்டு, பேரங்காடியில் வாங்கி வந்த சிக்கனைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சக்திக் கோழிக்கறி மசாலாப் பொடியைத் தடவி வைத்து விட்டு, வெங்காயம் தக்காளி நறுக்கி விட்டு, தேங்காயை எடுத்த போது தான் உணர்ந்தேன் –

எப்படி உடைப்பது? உடைக்கக் கல் இல்லை. அரிவாளும் இல்லை. சிறு தேக்கரண்டி மட்டும் தான் இருந்தது. கொஞ்சம் தேடியதில், ஒரு முள் கரண்டி தென்பட்டது. வாசல் படியில் உடைத்தால், பதித்த சுடுகல் தளம் உடைந்து விடும். எடுத்துக் கொண்டு போய், சாலையில் ஏதேனும் கல் இருந்தால் உடைக்கலாம் என்னும் யோசனை வெட்கமாக இருந்தது. அக்கம் பக்கம் யாரிடத்திலும் கேட்கவும் முடியாது. தான்ஸானியர்களின் சமையலில் தேங்காய் இருப்பதில்லை. அப்போதுதான் திரு. ஐசக் நியூட்டன் நினைவுக்கு வந்தார். தேங்காயைத் தலைக்கு மேலிருந்து, புவியீர்ப்பு விசைக்குக் கொடுத்தேன். டொம் என விழுந்து பல துண்டுகளாகச் சிதறியது, தரைக்கு ஒன்றும் ஆக வில்லை. இப்படியாக என் முதல் நாள் சமையல், பள்ளிபாளையம் கோழிக்கறியுடன் ஜோராகத் துவங்கியது. பின்னர் என் சாரதி ம்ஷாங்காவின் உதவியோடு, ஒரு காங்க்ரீட் கல் பொறுக்கி வந்தேன்.

அதன் பின்னும் தேங்காயுடன் பெரும் சிக்கல் ஒன்று இருந்தது. அது அழுகல். மிகப் புதிதாக வாங்கி வந்தால் கூட உள்ளே அழுகல் இருந்தது. இங்கே தேங்காய்களை, முழுக்க மொட்டையடித்து, விக்கு விநாயக் அவர்களின் கடம் போல வைத்திருப்பார்கள். இந்த இடத்தில் இன்னொரு சோகக் கதையையும் சொல்லியாக வேண்டும். ஒரு நாள் சாலையில் நடந்து கொண்டிருந்தோம் – நானும் அவனும். ஓரத்தில் இளநீர் விற்றுக் கொண்டிருந்தவர் – ‘வழுக்கேய்’ எனக் கூவினார். ‘அப்பா. உன்னியக் கூப்பிடாறார்பா’ என்றான் என் வீட்டில் வளரும் தீவிரவாதி :(. ஒரு நாள் இல்லையெனில் ஒரு நாள் எச்.ராஜாவிடம் பிடித்துக் கொடுக்கப் போகிறேன்.

பல நாட்கள் செய்த தீவிர அழுகல் ஆராய்ச்சியின் பலனாக, அழுகல் ஏன் எனக் கண்டுபிடித்தேன். பிடித்ததன் பலன் மயிர்க் கூச்செறிய வைத்தது (புனைவுதான்). – தமிழர்கள் ஏன் தேங்காய்க்குக் குடுமி வைக்கிறார்கள் என்னும் அறிவியல் உண்மையை அன்றுதான் அறிந்தேன்.

தேங்காயின் மூன்று கண்கள், மிகப் பலவீனமான சுவற்றைக் கொண்டவை. அவை, வெளிச் சூழலை நேரடியாகச் சந்திக்கும் போது, உள்ளிருக்கும் நீர், அந்தப் பலவீனமான சுவற்றின் வழியாக, வெளியிருக்கும் காற்றுடன் உறவாட, காற்றில் இருக்கும், பூஞ்சைக் காளான் உட் புகுந்து கள்ளக் காதலில் ஈடுபடுகிறது என. நம் ஊரில், அந்தக் கண்களைத்தான் குடுமி வைத்துக் காக்கிறார்கள்.பர்தா போல. கள்ளக் காதலின் சாத்தியக் கூறுகள் குறைந்து, நீண்ட நாள் தேங்காய் பத்திரமாக இருக்கிறது. ஆகா. என்னே தமிழனின் தீர்க்கதரிசனம். அறிவியல் அறிவு. வைகோ விடம் சொல்லி, அடுத்த முறை, மேடையில். கிரேக்க நாகரீகமும், தேங்காய்க் குடுமியும் என்னும் பொருளில் பேருரையாற்றச் சொல்ல வேண்டும். இல்லையெனில், அரவிந்தன் நீலகண்டன், அது ரிக் வேத காலத்தில் இருந்த ஒரு அறிவியல் உண்மை என நிறுவி விடும் அபாயம் இருக்கிறது.

கண்டுபிடித்தவுடன், “இது பொறுப்பதில்லை தம்பீ. அரிவாள் எடுத்து வா. தேங்காய்க்குக் குடுமி வைப்போம்” என அங்காடிக்கு விரைந்தேன். பேரங்காடியில் கை விரித்து விட்டார்கள். அருகில் உள்ள சிற்றங்காடிக்குச் சென்றேன். அங்கே சிறு சிக்கல். நானும் அவளும் (அங்காடிக்கார தான்ஸானியா மாம்மா) உரையாடிக் கொள்ள ஒரு பொது மொழி இல்லை.

வேறு வழியில்லை. ஆங்கிலத்தில், மிக மெதுவாகச் சொன்னேன். பொறுமையாகக் கேட்ட அந்த மாம்மா சொன்னாள் “ஹம்னா” – எனக்குப் புரிந்த வரையில், முடியாது என அர்த்தம். ஆனால், உண்மையில் நான் சொல்வது அவருக்குப் புரியாது என்பது புரிந்தது.

எடுத்தேன் அடுத்த அம்பை. வாய் மொழி பயனிலாப் பொழுதில், உடல்மொழி பயனுடைத்து என வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே.(எப்ப?)

நான், இது நாள் வரை கண்டு களித்திருந்த, பத்மா சுப்ரமணியம், அலர்மேல் வள்ளி, லீலா ஸேம்ஸன் போன்றோரை மனதில் பரத நாட்டிய பாணியில் வணங்கி விட்டு, நயன, ஹஸ்த பாவங்களைப் பிரயோகித்தேன். அந்தம்மாள், கொஞ்சம் ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, திரும்பி, தலையில் மஞ்சள் நிறக் குடுமி (விக்) வைத்திருந்த பணிப் பெண்ணிடம் ஏதோ சொல்லி கெக்கே பிக்கே எனச் சிரித்தாள். (பழந்தமிழர் பாணியில் அவள் விழுந்து விழுந்து சிரிக்க வில்லை. விழுந்தால், தரை சேதமாவதோடு, சிறு பூமியதிர்வு நிகழும் வாய்ப்பு உள்ளதால். தான்ஸானியா மாம்மா ஒரு சூழியல் போராளி) தமிழனுக்கு இப்படி ஒரு மானக்கேடா எனச் சினந்து, ‘தலையில் முடி இல்லாததற்கு, செயற்கைக் குடுமி வைத்துக் கொள்ளும் உங்களுக்கு, தேங்காய் பழுதாகாமல் இருக்க, இயற்கைக் குடுமி வைக்கும் நுட்பம் தெரிய வில்லையே. அற்பப் பதர்களே’ என மனதுக்குள் திட்டி விட்டு, சோகமாக வந்து விட்டேன்.

யார் வருவார் தேங்காய்க்குக் குடுமி வைக்க? பாரதிராஜா பட நாயகி, இண்டர்வெல்லில், மைல்கல் மீது அமர்ந்து காத்துக் கொண்டிருப்பது போல உணர்கிறேன்.

தளபதி பாஷையில் சொல்வதெனில் ‘ I am waiting’

பாலா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
அடுத்த கட்டுரைவெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்