மாமங்கலையின் மலை – 6

ஷிமோகாவிலிருந்து அதிகாலையிலேயே கிளம்ப வேண்டுமென்பது திட்டம். ஆனால் யானா குகையிலிருந்து வந்து சேர்வதற்கே பதினொரு மணி கடந்துவிட்டது. அதற்குப் பிறகும் ஒரு கும்பல் அமர்ந்து இந்தியாவை உய்விப்பதைப்பற்றிய ஆழமான விவாதங்களில் ஈடுபட்டிருந்தது எனக்கு மறுநாள் காலையில்தான் தெரியவந்தது. தூக்கத்தை வைத்து விளையாடக்கூடாது என்பது என் எண்ணம் என்பதால் நான் உடனே படுத்துத் தூங்கிவிட்டேன். இரு ஓட்டுநர்களும் இரவில் இரண்டு மணிநேரம் தான் தூங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் மறுநாள் காலையில் தான் தெரிந்தது.

வழக்கறிஞராகிய நண்பர் சக்தி கிருஷ்ணன் தூங்கும் வழக்கம் உடையவரா என்பதே எனக்கு சந்தேகம். ராஜமாணிக்கம் பகலில் அரசியலும் இரவில் இலக்கியமும் என்று வாழ்பவராதலால் அவருக்கும் தூக்கம் பெரிதாகத் தேவைப்படுவதில்லை. வழக்கமாக நாங்கள் ஓட்டுநர்களை வாடகைக்கு வைப்பதே வழக்கம். அவர்கள் பயணங்களில் ஓட்டுநர் வேலைமட்டுமே செய்யவேண்டும். மலையேறுவதற்கெல்லாம் வரக்கூடாது. அவர்கள் நன்கு துயில்வதையும் கவனத்தில்கொள்வோம். இப்போதெல்லாம் இந்த நெறிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கின்றன. உரிமையாளரே ஓட்டும் வண்டிகளில் செல்வதனால் செலவு குறைகிறது. ஆனால் ஆபத்து கூடுகிறது.

கிளம்பி, காரில் ஏறும்போது எட்டு மணியாகிவிட்டது. மணிகண்டனுக்கும் ஷிமோகா ரவிக்கும் மைசூரிலிருந்து மாலை மூன்றரை மணிக்கு ரயில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனக்கு ஈரோட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு இரவு பத்தரை மணிக்கு ரயில். போய்விடலாம், ஒன்றும் பிரச்னையில்லை என்றார் கிருஷ்ணன்.

ஓய்வாக வழியிலேயே காலை உணவை அருந்திவிட்டு காரில் சென்றோம். இசை பற்றியும் இலக்கியம் பற்றியும் விவாதங்கள். வழக்கமாக ஒரே வண்டியில் பயணம் செய்யும் போது விவாதங்களுக்கொரு தொடர்ச்சி இருக்கும். இரு வண்டிகள் என்னும்போது நான் வண்டிகளில் மாறி மாறி ஏறிக்கொண்டேன்.ஆகவே ஒரு தொடர்ச்சியின்மை எப்போதும் இருந்து கொண்டிருந்தது. எங்கள் விவாதங்கள் பெரும்பாலும் விளையாட்டுத் தன்மை கொண்டதாகவும், தன்னியல்பாகவே தீவிரமடைவதாகவும் இருக்கும். அதாவது ஏதாவது சொல்வதற்கிருந்தால் மட்டுமே தீவிரமான விவாதம் நிகழவேண்டுமென்பது விதி.

ஒரு முழு நாளும் காருக்குள் இருந்து கொண்டிருப்பது என்பது உண்மையில் ஒரு அரிய அனுபவம். அந்தக் கார் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம்தான் அங்கே அமரச்செய்கிறது. காரின் நான்கு சன்னல்களையும் நான்கு ஒளித்திரைகளாக அமைத்து அதை ஓரிடத்திலே நிறுத்தி அதற்குள் பகல் முழுக்க அமர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னால் நம்மால் முடியுமா என்ன?

உண்மையில் கார் நவீனகாலகட்டத்தின் ஓர் அற்புதம். இத்தனை சிறிய உலோகக்கோளத்திற்குள் இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக அமர்ந்திருக்கும் வாய்ப்பு மனித குலத்தில் முன்னால் எவருக்கேனும் கிடைத்திருக்கிறதா என்பதே ஆச்சரியம் தான். இருக்கலாம், பெரிய கோட்டைகளில் காவல்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் சிறிய குமிழிகள் மூன்று நான்கு பேர் அமர்ந்து கொள்ளும் வசதி கொண்டவை. கார்ப் பயணங்கள் குடும்ப ஒற்றுமைக்கு இயல்பாக உதவக்கூடியவை. அத்தனை சிறிய பகுதிக்குள் ஒரு குடும்பம் முழுநாளும் அமர்ந்திருக்கையில் அவர்கள் ஒருவரை ஒருவர் மிக நெருங்கி வருகிறார்கள். யார் கண்டது? சில குடும்பங்களில் அப்படி நெருங்கி வருவதே மேலும் கசப்பை உருவாக்குவதாக அமையலாம்.

வழியில் அமிர்தேஸ்வர் ஆலயத்தை பார்த்துவிட்டு செல்லலாம் என்பது கிருஷ்ணனின் திட்டம். ஒருநாள் முழுக்க எதையுமே பார்க்காமல் செல்வது அளிக்கும் சலிப்பிலிருந்து தப்புவதற்காக. சிக்கமங்களூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அமிர்தபுரா கர்நாடகத்தில் ஒரு முக்கியமான ஆலயம். தமிழகத்தில் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் அறுபதாண்டு நிறைவுக்கும் எண்பதாண்டு நிறைவுக்கும் சென்று வழிபட வேண்டிய ஆலயமாக இருக்கிறது. அதைப்போன்ற ஒரு ஆலயம் அமிர்தேஸ்வரர்.

1196- ல் ஹொய்ச்சாள மன்னர் இரண்டாம் வீரவல்லாளரின் தளகர்த்தராகிய அமிர்தேஸ்வர தண்டநாயகரால் கட்டப்பட்டது இந்த ஆலயம் என்று சொல்லப்படுகிறது. இன்றும் புகழ் பெற்ற ஆலயம் என்று சொல்லும் போது சற்று புதிய ஆலயமாக இருக்கும் என்ற எண்ணம் எப்படியோ வந்து கொண்டிருந்தது. ஆனால் இறங்கி முதல் பார்வையிலேயே ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணமாகிய ஒரு ஆலயத்தின் முன் வந்து நிற்பதை அறிந்தோம். திரிகுடாச்சல வடிவமுடைய கோயில் இப்போது ஒரு கோபுரமே உள்ளது.

ஹொய்ச்சாள பாணி கோயில்களின் வழக்கப்படி மொத்தக் கோயிலும் ஒரு பெரிய நகை போல ஒவ்வொரு சிறு பகுதியும் நுணுக்கமான சிற்பங்கள் அடர்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஆலயம். சிற்பக்குவியல். சிற்பம் பூத்த மரம். பிற ஆலயங்களிலிருந்து உடனடியாக மாறுபட்டுத் தோன்றியது இதன் அடித்தளம் முழுக்க கோபுரங்கள் செறிந்திருப்பது போல் செதுக்கப்பட்டிருந்தமைதான். நூற்றுக்கணக்கான கோபுரங்களால் வானில் தாங்கி நிறுத்தப்படும் ஓர் ஆலயம் போல் அது தோன்றியது. கோபுரங்கள் நாகர திராவிட பாணி அமைப்பைச் சார்ந்தவை.

இவ்வாலயத்தின் சுற்றுச் சுவரில் மகாபாரதமும் ராமாயணமும் நுணுக்கமான சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அக்காலத்தைய காமிக்ஸ் நூலைப்படிப்பது போல இத்தகைய ஓவியங்களில் அந்த சிறிய பகுதியை அவர்கள் பயன்படுத்தியிருக்கும் விதம் ஆச்சரியமூட்டுவது. எந்த இடமும் வீணடிக்கப்படாமல் பிம்பங்கள் ஒன்றுக்குள் ஒன்று செருகப்பட்டு ஒரு படலமாக ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தனை சிற்பங்களிலும் உயிரசைவு ததும்பிக் கொண்டிருந்தது..புகழ்பெற்ற ஹொய்ய்ச்சாள சிற்பியான ரேவூரி மல்லித்தாமா செதுக்கிய தொடக்க காலக் கோயில் இது என்று சொல்லப்படுகிறது

முகபாவனைகள் மிகக்கூரியவையாக அமைந்திருந்தன. ராவணனின் கம்பீரமும், அனுமனின் விரைவும், ராமனின் நிதானமும் இத்தனை சிறிய அளவுக்குள் எழுந்து வருவதென்பது சிற்பக்கலையில் ஓர் அற்புதமே. வானரங்கள் தாண்டும் கடல் நான்கு கணு அகலமே கொண்ட ஒரு பட்டையாக செதுக்கப்பட்டிருக்கும் கற்பனை. அதில் முதலைகளும் மீன்களும் நாவாய்களும் நீந்திக்கொண்டிருக்கின்றன.

அமிர்தேஸ்வரா ஆலயத்தில் பிரம்மாவின் சன்னிதி மிக முக்கியமானதாக பக்தர்களால் கருதப்படுகிறது. அங்குதான் ஆயுளுக்கான பூசைகள் நடைபெறுகின்றன. ஆனால் அதைவிட எனக்கு முக்கியமானதாகத் தோன்றியது. அங்கிருக்கும் சரஸ்வதியின் சன்னிதி. முதற்பார்வையில் ஒரு திடுக்கிடலை உருவாக்கியது அச்சிலை. சரஸ்வதிக்கு அத்தனை பெரிய அழகிய முதன்மைச் சிற்பத்தை நான் பார்த்ததில்லை.

 

கருவறையில் அமர்ந்திருக்கும் அன்னை கரிய பளபளப்புடன் தோன்றினாள். வழக்கமான சரஸ்வதி சிற்பங்களில் இருக்கும் நளினமும் மென்மையும் இதில் இல்லை. துர்க்கைகளுக்குரிய கம்பீரமும் நிமிர்வும் கொண்ட தோற்றம். அமுதகலமும் எழுத்தாணியும் படைக்கலங்களும் ஏந்திய கைகள். கலை இந்த நிமிர்வுடன் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. குழையும் கலை உலகை வளைத்து அள்ள முடியாது. நிமிர்ந்து வெல்லும் கலையே காலத்தை துளியென காலடியில் உணரும் ஆற்றல் கொண்டது.

உண்மையில் இப்பயணத்தில் எதைத் தேடி வந்தேனோ அதை இங்கு இந்த சாரதையின் முன்னால் நான் அடைந்தேன். மூகாம்பிகை அன்னையை சரஸ்வதியாகவும் வழங்கும் வழக்கம் கேரளத்தில் உண்டு. நாராயண குரு சாரதாம்பிகையை வர்கலாவில் பிரதிஷ்டை செய்திருக்கிறார். சாரதாஷ்டகம் என்ற பெயரில் அன்னையைத் துதித்து ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். கேரளத்தில் கல்வித் தொடக்கம் நிகழ்த்துவதற்கான முக்கியமான ஆலயமாக இன்று அது உள்ளது.

கல்விக்கும் கலைக்குமான அன்னை. மூன்று அன்னையரில் என் நோக்கில் அவளே முதன்மையானவள் ஆட்டுவிக்கும் மோகினி அரவணைக்கும் அன்னையும் பிரியாத் துணைவியும் ஆனவள். அங்கிருந்து தொடங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.

பெலவாடியை நினைவுறுத்துவது அமிர்தபுரியின் ஆலயம். பெலவாடியின் தனிச்சிறப்பே அதில் உள்ள அழகிய தூண்களின் பளபளப்புதான். ஹொய்ச்சாள கட்டிடக்கலை ஐந்து சிறப்பம்சங்களைக் கொண்டதென்று சொல்லலாம்.

  1. சோப்புக்கல்லில் செதுக்கப்பட்ட நுண்சிற்பங்கள் இடவெளியின்றிசெ செறிந்த புறக்கட்டுமானம்.
  2. வட்ட வடிவமான உட்குடைவுக் கூரை கவிழ்ந்த முகமண்டபங்கள்.
  3. உருளையிலிட்டுச் சுழற்றி உருவாக்கப்பட்ட அடுக்கடுக்கான வட்டங்களால் ஆன பளபளக்கும் தூண்கள்.
  4. திரிகுடாச்சலம் என்னும் மூன்று கோபுர அமைப்பு கொண்ட கருவறை
  5. உயரமற்ற மேலே குடத்தில் சென்று முடியும் தட்சிண-நாகர என்று சொல்லப்படும் பணியிலான கோபுரங்கள்.

இவற்றில் விழிகளில் என்றும் தங்கி நிற்பது இத்தூண்களே. கல்லில் நீரை கொண்டு வந்திருக்கும் வித்தை என்று இவற்றைச் சொல்லலாம். கரிய சலவைக் கல் உருட்டி வழுவழுப்பாக்கப்பட்டு, கண்ணாடிக்கு நிகரான ஒளியேற்றப்பட்டு உருவான தூண்கள் இவை . அடுக்கடுக்காக  குளிரொளியுடன் நிறைந்த தூண்களின் நடுவே நின்றிருக்கையில் குளிர்ந்த நீர்ச்சுனை ஒன்றுக்குள் புகுந்துவிட்ட உணர்வை அடைந்தேன். நான்கு புறமும் சாய்மானங்கள் கொண்ட பெரிய திண்ணையில் அமர்ந்து இத்தூண்களைப்பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பெரிய தியான அனுபவம் போல்

 

111

அமிர்தேஸ்வர லிங்கத்தை வணங்கி அங்கிருந்து கிளம்பினோம். எண்ணியது போலவே மணிகண்டனும் ஷிமோகா ரவியும் மைசூரில் ரயில் பிடிக்கவில்லை. நாங்கள் உள்ளே நுழையும்போதே நான்கு மணி ஆகிவிட்டிருந்தது. மதிய உணவை உண்பதற்கு அவ்வளவு பிந்திவிட்டது. ஒர் அசைவ உணவகத்தில் சாப்பிட்டோம். வழக்கமாக எங்கள் பயணத்தில் அசைவ உணவு முழுமையாகத் தவிர்க்கப்படும் – செலவு கருதி. இம்முறை அசைவப் பிரியரும் உணவின்றி வாழ்வில்லை என்ற கொள்கை கொண்டவருமாகிய செல்வேந்திரன் ஒவ்வொரு முறையும் அசைவ உணவிற்காகத் துடித்துக் கொண்டிருந்தமையால் அனேகமாக எல்லா நாட்களிலுமே செலவேரிய அசைவ உணவுகளை உண்டோம்.

மைசூரிலிருந்து ஈரோடுக்கு சத்தியமங்கலம் வழியாக செல்ல வேண்டும். ”செல்ல முடியும். ஆனால் சாலை நெரிசலின்றி இருக்கவேண்டும்” என்றார் கிருஷ்ணன். ”இருக்க வாய்ப்பில்லை” என்று சேர்த்துக்கொள்ளாவிட்டால் அவர் கிருஷ்ணனே அல்ல. சத்தியமங்கலத்தை அணுகியபோது மகிழ்ச்சியுடன் “செல்ல முடியாது .சாலை நெரிசலாக இருக்கிறது” என்றார். சக்தி கிருஷ்ணன் காரிலேயே திருச்சி வந்து பேருந்தை பிடிக்கலாம் என்று திட்டமிட்டேன்.

unnamed

ஆனால் எண்ணியதை விட விரைவாக போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இரவு பத்து மணிக்கெல்லாம் ஈரோடு ரயில் நிலையம் வந்துவிட்டோம் கோவைக்கும் திருப்பூருக்கும் செல்லும் கும்பல் சத்தியமங்கலத்தை தாண்டிய உடனே பிரிந்தது. சக்தி கிருஷ்ணன் என்னை ஈரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். ரயிலில் ஏறி படுத்தவுடன் முதலில் விழிகளுக்குள் எழுந்து வரும் சித்திரம் எதுவென எண்ணினேன். எண்ணியது போலவே அது சாரதையின் கரிய புன்னகைதான்.

முந்தைய கட்டுரைஅரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7