அஞ்சலி: க.சீ.சிவக்குமார்

kasi

 

க.சீ.சிவக்குமார் [கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்] என்ற பெயரை நான் 1996 ல் இந்தியாடுடே நடத்திய ஒரு சிறுகதைப்போட்டியில் அவர் பரிசுபெற்றபோதுதான் கேள்விப்பட்டேன். அதுதான் அவருடைய இலக்கிய அறிமுகம் என நினைக்கிறேன். அவரும் பாஸ்கர் சக்தியும் சேர்ந்து இலக்கியத்திற்கு அறிமுகமானார்கள். இருவரின் எழுத்துமுறையிலும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அப்போது அவருக்கு ஒரு கடிதம்போட்டேன். பின்னர் நேரில் சந்தித்தபோது நன்கு தெரிந்தவர்களாக உணர்ந்தோம்.

க.சீ.சிவக்குமாரின் எழுத்து சுவாரசியமானது. அவர் எதை எழுதினாலும் பொதுவாசகன் ஆர்வத்துடன் வாசிக்கமுடியும். ஆனால் அந்தச் சுவாரசியம் தமிழின் பிரபல எழுத்தில் இருந்து பயின்று அடைந்தது. அதற்கான மொழிநடையும் மனநிலையும் அவருடைய எழுத்தை தீர்மானித்தன. குறிப்பாக சுஜாதாவின் நடை அன்றைய இளைஞர்கள் அனைவரையும் பாதித்தது, க.சீ.சிவக்குமாரையும்.

க.சீ.சிவக்குமார் அவர் பிறந்து வளர்ந்த கிராமச்சூழலின் தனித்துவமான பேச்சுமொழியையும் வாழ்க்கைக்கூறுகளையும் எழுதமுற்படவில்லை. மாறாக ஒரு வார இதழ் எழுத்தாளராக விலகி நின்று அந்தச் சூழலில் இருந்து சுவாரசியங்களை மட்டும் தொட்டுச் சேர்த்து எழுதமுயன்றார். வார இதழ்களில் எழுதத் தொடங்கியபின் அவை அவருடைய இலக்கையும் வெளிப்பாட்டையும் வடிவமைக்கலாயின.

அத்துடன் அவருக்கே உரிய எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத இயல்பும் அவருடைய எழுத்தின் அடையாளமாகியது. அவர் இலக்கியவாசிப்பையும் எழுத்தையும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இலக்கியவம்புகளில்கூட ஆர்வமற்றவர் என்பதைக் கண்டிருக்கிறேன். தமிழினி அவருடைய சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டபோது அவருடைய கூரிய அவதானிப்புகள் இலக்கியச்சூழலில் கவனிக்கப்பட்டன. ஆனால் அவருக்கே இலக்கியப்படைப்புகளை எழுதவேண்டுமென்ற ஆர்வமிருக்கவில்லை. மெல்லிய கிண்டலுடன் அனைத்தையும் கடந்துசெல்ல முயன்றார்.

க.சீ.சிவக்குமாரின் எழுத்தில் இருந்த சிரிப்பு கசப்பற்றது. விமர்சனங்கள் மென்மையானவை. அவரைப்போலவே என்று சொல்லலாம். அனைவருக்கும் பிரியமானவராக, பார்த்ததுமே தழுவிக்கொள்ளச் செய்பவராகவே இருந்தார். அவருக்குத் திருமணமாகி பெங்களூர் செல்லும்வரை எனக்கு அவருடன் தொடர்பிருந்தது. அவ்வப்போது பார்த்துக்கொள்வதும் கிண்டலும் கேலியுமாகப் பேசிக்கொள்வதும் வழக்கம். அதன்பின் புத்தகக் கண்காட்சிகளில்தான் பார்த்துக்கொண்டோம்.

க.சீ.சிவக்குமார் நேற்று [3-2-2016] மறைந்துவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த மனச்சுமையுடன் எதிர்கொண்டேன். இளைஞராகிய அவருடைய சிரித்தமுகமே என் நினைவில். சென்ற சில ஆண்டுகளாக சற்றுச் சோந்ந்திருந்தார் என்கிறார்கள். அம்முகம் என்னிடமில்லாததும் நல்லதே. மனிதர்களைப் பார்த்ததுமே இயல்பாகக் கண்கள்பூப்பது ஒருவரம். க.சீ.சிவக்குமாருக்கு அது இருந்தது.

பி.கு

.சீ. சிவக்குமார் பெங்களூரில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தார் என்று செய்தி. அவருடைய உடல் இன்று மாலை 3 மணி அளவில் சொந்த ஊரான கன்னிவாடிக்குக் கொண்டு வரப்படுகிறது. கன்னிவாடி திருப்பூர் மாவட்டத்தில், மூலனூரில் இருந்து எட்டு கிமீ தொலைவில் உள்ளது. மூலனூரிலிருந்து பேருந்தில் செல்லலாம். மறைந்த எழுத்தாளருக்கு அஞ்சலி செலுத்த வாசகர்கள் செல்லவேண்டுமென விரும்புகிறேன்.

முந்தைய கட்டுரைமாமங்கலையின் மலை -4
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5