மாமங்கலையின் மலை -4

கொல்லூர் செல்லும் வழியில் ஒரு சிற்றூரைக் கடக்கும்போது என் கண்ணில் ஒரு காட்சி பட்டது “அந்த பள்ளியின் சுவரிலிருந்தவை என்ன படங்கள் பார்த்தீர்களா?” என கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் கவனிக்கவில்லை. “எழுத்தாளர்களின் படங்கள்” என்றேன். வண்டியை திருப்பும்படி கூவினார். திரும்பிச்சென்று பார்த்தோம். ஞானபீடப்பரிசுபெற்ற கன்னட எழுத்தாளர்களின் படங்கள் அச்சுவரில் வரையப்பட்டிருந்தன.

இதுவரை எட்டு எழுத்தாளர்கள் ஞானபீடப்பரிசு பெற்றுள்ளனர். குவெம்பு, [கே.வி.புட்டப்பா] டி.ஆர். பேந்ரே, சிவராம காரந்த், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், வி.கே.கோகாக், யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கர்நாட், சந்திரசேகர கம்பார் ஆகியோர். அந்த எட்டு முகங்களும் வண்ணத்தில் வரையப்பட்டிருந்தன. மிகச்சிறிய ஊர். ஆரம்பப்பள்ளியின் சுற்றுச்சுவர். இந்தியாவில் வேறெங்கும் இதைக் காணமுடியாது.

தமிழகத்தில் எழுத்தாளர்கள் என சிலர் உள்ளனர் என்பதை அறிந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களே பத்துசதவீதம்பேர் கூட இருக்கமாட்டார்கள். ஞானபீடப்பரிசு இரண்டுதான், அகிலன் ஜெயகாந்தன். அசோகமித்திரனுக்கு கொடுக்க ஞானபீடப்பரிசுக்குழு முயல்கிறது. ’பார்ப்பனருக்கு’ அதை கொடுக்கவிடமாட்டோம் என்கிறது தமிழ் கல்வியுலகம். பெற்றுக்கொள்ள தமிழர்தலைவர்களும் கவிப்பேரரசுகளும் முண்டியடிக்கிறார்கள். கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.

மதிய உணவுக்குப்பிறகு கொல்லூரை அணுகினோம். கொல்லூர் மூகாம்பிகை கோயில் புகழ் பெற்றது. தமிழகத்தில் இன்றிருக்கும் புகழை அது அடைந்தது தன் கை செயலற்றிருந்தபோது எம்.ஜி.ஆர் இங்கு வந்து மூகாம்பிகை அன்னைக்கு ஒரு வாள் காணிக்கையாக்கியபோதுதான். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மூகாம்பிகைக்கு வந்தது அன்று பெரிதாக பேசப்பட்டது. ”அன்னை மூகாம்பிகை வடிவில் என் தாய் சத்யாவைக் காண்கிறேன்”  என்று எம்.ஜி.ஆர் சொன்ன பதிலும் அன்று பெரும்புகழ் பெற்றது.

எம்.ஜி.ஆர் இங்கு வந்ததற்கு முதன்மையான காரணம் அவர் மலையாளி என்பது தான். அனைத்து மலையாளிகளுக்கும் இரண்டு அன்னையர்கள் முதன்மை தெய்வங்கள். கொல்லூர் மூகாம்பிகை மற்றும் கன்னியாகுமரி தேவி. இருவருமே மங்கலத் தோற்றம் கொண்டவர்கள். கொல்லூரின் அரசி உலகன்னை. குமரியின் இளவரசி நித்யகன்னி. இருவருமே படைக்கலம் ஏதுமின்றி இருப்பவர்கள். கனிவு மட்டுமே கொண்டவர்கள். பாலக்காட்டு மேலங்கத்து கோபாலமேனனின் மகனாகிய எம்.ஜி.ஆர் அவரது தந்தை வழியில் ஆற்ற வேண்டிய கடன் மூகாம்பிகைக்குச் சென்று வருவது என்று சோதிடர்கள் கூறியதனால் இங்கு வந்தார் என்பது வெளிப்படை.

அதன் பின் இளையராஜா மூகாம்பிகையை தமிழகத்தில் புகழ்பெறச்செய்தார். அவருடைய “ஜனனீ ஜனனீ அகம் நீ ஜகத் காரணி நீ” என்னும் புகழ் பெற்ற பாடல் மூகாம்பிகை என்றவுடனேயே தமிழர்கள் நினைவில் வருவதாக இருக்கிறது கேரளத்தில் அதற்கிணையான பாடல் என்று “குடஜாத்ரியில் குடி கொள்ளும் மகேஸ்வரி குணதாயினி சர்வ சுபகாரிணி” என ஜேசுதாஸ் பாடிய பாடலைக் குறிப்பிடலாம்.

சபரிமலை ஒரு பெரும் மோஸ்தராக எழுந்தபோது பல்வேறு ஆலயங்கள் வழியாக சபரி மலை வரை செல்லும் தீர்த்தாடனப் பயணம் புகழ்பெற்றது. முன்பெல்லாம் சபரி மலைக்குச் செல்வதே ஒரு கடும்பயணமாக இருந்தது. ரயிலில் ஆலப்புழா அல்லது கோட்டயம் வந்திறங்கி நடந்து மலைகடந்து சபரிமலைக்குச் செல்வார்கள். எண்பதுகளுக்குப்பிறகு கார்கள் பயன்பாட்டில் அதிகமாக வரத் தொடங்கியதும் சபரி மலைப்பயணம் பல்வேறு கோயில்களை இணைத்துக் கொண்டு செல்லும் ஒரு ஆன்மீகச் சுற்றுலாப்பயணமாகியது.

வடக்கிலிருந்து வருபவர்கள் மூகாம்பிகை அம்மனைத் தரிசித்துவிட்டு அங்கிருந்து சபரி மலைக்கு வரத் தொடங்கினர். சபரி மலை வழிபாட்டுக்குப்பிறகு தெற்கிறங்கி சக்குளத்து பகவதியையும் ஆற்றுகால் பகவதியையும் பார்த்துவிட்டு கன்னியாகுமரி பகவதியை தொழுது திரும்பும் ஒரு வழக்கம் தமிழர்களிடம் வந்தது. சபரி மலை பருவத்தில் மூகாம்பிகை சாலைகள் பக்தர்களால் நிறைந்திருக்கும்.  மூகாம்பிகை சன்னிதியிலேயே சரணகோஷம்தான் ஓங்கிக் கேட்கும்.

மூகாம்பிகை கோயிலுக்கு பதினைந்து கிலோமீட்டர் முன்னால் திரும்பி குடஜாத்ரி செல்லவேண்டும். இன்றிருக்கும் மூகாம்பிகை அம்மனின் ஆலயம் பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கேரள மன்னர்களால் கட்டப்பட்டது. அதற்கு முன்பு குடஜாத்ரி மலையின் உச்சியில்தான் மூகாம்பிகை அம்மனின் ஆலயம் இருந்தது இதை மூல மூகாம்பிகை என்கிறார்கள். முன்பு இங்கு கல்லால் ஆன ஒரு சக்தி பீடம் மட்டுமே இருந்தது. அதை ஆதிசங்கரர் நிறுவியதாக தொன்மம் சொல்கிறது. அங்கிருந்து மக்கள் வழிபடுவதற்காக அம்மனை கொண்டுசென்று கொல்லூரில் குடிவைத்தனர்.

இன்றும் அது ஒரு குடஜாத்ரி மூலமூகாம்பிகை சன்னிதி சிறிய கோயில்தான். பல ஆண்டுகளுக்கு முன் நான் சிவராமகாரந்த் அவர்கள் எழுதிய பித்தனின் பத்துமுகங்கள் என்ற சுயசரிதை நூலில் அவர் இளமையில் நடையாகவே மலையேறி குடஜாத்ரி வரைக்கும் வந்த அனுபவத்தை எழுதியிருந்ததை படித்தேன். தெற்கு கர்நாடகத்தில் மூன்று அற்புதமான மலைகளில் ஒன்று என்று இதைச் சொல்கிறார்கள். குதிரைமூக்கு, குமார பர்வதம் ஆகியவை பிற.

இப்பகுதி அன்றுமுதல் மலைநாடு என்றே அறியப்படுகிறது. மலைநாட்டின் வடஎல்லையாக குடஜாத்ரி கருதப்பட்டது. அடர்பசுமையின் ஆயிரம் அழுத்தமாறுபாடுகள் என காடுகள் அலையலையாகச் சூழ்ந்து தெரியும் இந்த மலை ஒரு கனவுநிலம். 1986- அக்டோபரில் மழைபெய்து கொண்டே இருந்த ஒரு நாளில் குடஜாத்ரி வரைக்கும் நான் வந்திருக்கிறேன். அன்று என்னுடன் பாலசந்திரன் என்ற நண்பரும் உடன் இருந்தார். காலையில் மலையடிவாரத்தில் இருந்து ஏறத்தொடங்கி அந்தியில் மேலே வந்து சேர்ந்தோம். மழைநீர் ஓடி வழுக்கிய பாதையில் நான் இருமுறை விழுந்து எழுந்தேன்.

அன்று இங்கிருந்த அர்ச்சகரின் மிகச்சிறிய இல்லத்தில் தங்க இடம் கிடைத்தது. சூடான தேநீரும் பயறும் அரிசியும் போட்டு செய்த கஞ்சியும் உணவாகக் கிடைத்தது. அன்று இச்சாலை ஒற்றையடி பாதை . மழையுடன் அன்றி குடஜாத்ரியை பிரித்துப்பார்க்கவும் முடியவில்லை. பாசி படிந்த மலைப்பாறைகளும் நீரோடையும் பாதையும் ஒன்றேயான மலைச்சரிவும் என் கனவில் தங்கிவிட்டவை. இம்முறை அந்த கால்பாதையை ஜீப்புகள் செல்லும் சாலையாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். பெருங்கூட்டமாக கேரள மக்கள் வந்துசெல்கிறார்கள்.

கீழேயே ஒரு ஜீப்பை அமர்த்திக் கொண்டோம். அங்கிருந்தே அனைவரும் ஒரே ஜீப்பில் நெருக்கியடித்துக்கொண்டு ஏறினோம். ஓட்டி ஓட்டிக் கை தேர்ந்த ஓட்டுநர் சிலந்தி வலைச்சரடில் தொற்றிச்செல்வதுபோல் வளைவுகளும் ஒடிவுகளும் சரிவுகளும் நிறைந்த சாலையில் ஜீப்பை ஓட்டி மேலேற்றி சென்றார். நாங்கள் ஒரு அதிவேக நடன இசைக்கு கூட்டு நடனமிடுவது போல் அதில் அமர்ந்திருந்தோம். பேசும்போது குரல் துண்டு துண்டாக தெறிக்கும் அளவுக்கு விசை.முகத்திலறைந்த தூசு. கூடவே குளிர் காற்று. ஆனால் ஒருமணி நேரத்திலேயே மேலே அர்ச்சகர் இல்லத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.

குடஜாத்ரியில் தங்குவதற்கு இரண்டு இடங்கள். ஒன்று அரசு விடுதி அதை முன்னரே பதிவு செய்ய வேண்டும்.  அர்ச்சகரின் இல்லத்தை நம்பி பெண்களுடன் செல்ல முடியாது. அங்கு படுக்க மட்டுமே வசதி. அதாவது தட்டையான இடம் கிடைக்கும், அதை வசதி என எடுத்துக்கொள்ளலாம். முன்னால் அது ஓட்டுக்கூரைவீடு. இம்முறை அதை கான்கிரீட்டில் எடுத்து கட்டியிருந்தார். கட்டப்பட்ட பல அறைகள் சரியாகப் பேணப்படாமல் தூசும் குப்பையும் படிந்து கிடந்தன. ஒரு பெரிய கூடத்தை எங்களுக்கு அளித்தார்.

பொருட்களை அங்கு வைத்துவிட்டு மூல மூகாம்பிகையை தரிசனம் செய்தோம். சுதையாலான சுவரும் ஓட்டு கூரையும் கொண்ட சிறிய ஆலயம். மூகாம்பிகையின் அருகே சிவலிங்கமும் பிள்ளையாரும் பதிட்டைசெய்யப்பட்டிருந்தனர். அர்ச்சனை செய்வதற்கு பணம் கொடுத்து வணங்கிய பிறகு மலையேறிச் சென்று உச்சிப்பிள்ளையார் ஆலயத்தை அடைந்தோம். ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. இப்பயணத்தின் மலையேற்றம் என்பது இதுதான். பல கிலோ மீட்டர்கள் ஏறி கேதார்நாத்திற்கு சென்ற கால்களுக்கு இது ஒன்றும் கடினமாக இருக்கக்கூடாதுதான். ஆனால் ஒவ்வொரு பயணமும் புதியது. அதாவது ஒவ்வொரு வகையாக மூச்சு தளரவைப்பது.

‘சுகியன்’ ஆக கோவையில் வாழும் செல்வேந்திரன் ‘ஏறித்தான் ஆகணும் இல்ல?” என்ற பாவனையுடன் வியர்வை வழிய உடன் வந்தார். செல்லும்வழியில் ஒரு குகைப்பிள்ளையார் சன்னிதி இருந்தது. உச்சிப்பிள்ளையார் ஆலயம் மூலமூகாம்பிகை ஆலயத்தின் காலத்திலேயே கட்டப்பட்டது. கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். ஒருவகையில் அகத்தியர்கூடம், மங்கலாதேவி ஆலயம் போன்றவற்றை நினைவுறுத்தும் மிகச்சிறிய கல்ஆலயம். உள்ளே கணபதி அமர்ந்திருக்கிறார். சற்று இடிந்து போயிருந்தது.

செல்லும் வழியெங்கும் மோரும், எலுமிச்சை நீரும், வளையங்களாக வெட்டி உப்புபோட்டு தரப்படும் அன்னாசிப்பழமும், வெள்ளரிக்காயும் விற்பவர்கள் அமர்ந்திருந்தார்கள் இந்தப்பயணத்தின் இனிய அனுபவம் என்பது மூச்சு தளர நின்று இவற்றை குடித்து உண்பது தான். அந்தி சாயத் தொடங்கியிருந்தது. கோயிலருகே சற்றுநேரம் அமர்ந்திருந்தபின் மலையிறங்கிச் சென்று பிறிதொரு மலைமுடியின் விளிம்பில் அமர்ந்து தொலைவில் சூரியன் இறங்குவதைப்பார்த்துக் கொண்டிருந்தோம்.

நீலத்தின் வெவ்வேறு அழுத்தங்களால் ஆனது அம்மலைச்சூழ்கை. விழி தொடும் தொலைவு வரை மலைத்தொடர்கள். மாபெரும் நீலத்தாமரை ஒன்றுக்குள் அமர்ந்திருப்பது போல். மலைகள் மிக மெல்லிய மலரிதழாக ஆகும் விழிமாயம். உளமயக்கு தானோ பருப்பொருள் அங்கு இல்லையோ என்று ஐயுற வைக்கும். நீங்களெல்லாம் சொப்பனம்தானோ வெறும் தோற்ற மயக்கங்களோ? மலைகளினூடாக ஒளி ஊடுருவுகிறது. புகையா? பட்டுத்திரைசீலை மடிப்புகளா?

ஒவ்வொரு மலையாக கரைந்து வானில் புதைந்து மறைந்தது. காற்று சிவந்த திரவமென மாறி அதில் சூரியன் இறங்கி கரைந்தழிந்தது. குருதிவாள் என சூரியனின் மேல் விளிம்பு சுடர்ந்து மூழ்கி மறைந்தபோது விழியில் எஞ்சிய செந்நிற ஒளியை தக்க வைத்தது சித்தம். பின்னர் விழியொளியின் மங்கலாய் நீலமலைகள் அணைந்தன. அவை குளிரில் விரைத்து மறைய அனைத்திலிருந்தும் வாடைக்காற்று காற்று வந்து சுழன்றது.

பிள்ளையார் கோவிலைத் தாண்டி நடகக்த் தொடங்கும்போதே இருட்டு அடர்ந்து விட்டது. அங்கு கூடாரமிட்டு தங்க வந்திருந்த இளைஞர் குழு ஒன்று தங்கள் பணிகளைத் துவக்கியது. பெண்களும் ஆண்களும் உற்சாகக் குரல்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இருளுக்குள் செல்பேசியில் வாட்ஸப் பார்த்தனர். விற்பனையாளர்கள் கடைகளை தார்ப்பாய் கொண்டு மூடிக் கட்டி வைத்தனர். செல்பேசியின் வெளிச்சத்தை நம்பி மலையிறங்கிக் கீழே வந்தோம்.

எத்தனையோ ஊர்களில் எங்கெங்கோ நின்று சூரியன் அணைவதை பார்த்த நினைவுகள். அனைத்து சூரியன்களை இணைத்து ஒரு மாபெரும் செம்மணி மாலையை உருவாக்க முடியும். புடவியென விண்ணென நிறைந்திருக்கும் ஒன்றின் கழுத்தில் அதை மாட்டவேண்டும். நீ நான் என்று அதனிடம் சொல்லவேண்டும்.

Kollur-0479

 ஜனனி ஜனனீ ஜகம்நீ அகம்நீ பாடல்

குடஜாத்ரியில் குடிகொள்ளும் மகேஸ்வரி பாடல்

முந்தைய கட்டுரைபக்தி ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: க.சீ.சிவக்குமார்