‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6

6. ஐம்பொருட் சாறு

வெயில் மூத்துக்கொண்டிருந்த பின்காலையில் அர்ஜுனனும் சகதேவனும் தோட்டத்தில் மலர் நோக்கிக்கொண்டிருந்தனர். அப்பால் நகுலன் மண்வெட்டியால் பாத்தி வெட்டிக்கொண்டிருந்தான். “இங்கு மலர்கள் மட்டும்தானா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இங்கே காட்டில் காய்கனிகளுக்கு குறைவே இல்லை” என்றான் சகதேவன். “மலர்களும் குறைவில்லையே!” என்றான் அர்ஜுனன். “ஆமாம், ஆனால் அனைத்து மலர்களையும் ஓரிடத்தில் காணமுடியவில்லை. ஆகவே இங்கே இத்தோட்டத்தை அமைத்தோம். ஒருமுறை விழியோட்டினால் நூறுவகை மலர்களை பார்க்கமுடியும்.”

அர்ஜுனன் “விந்தைதான்… எங்கும் நாம் சமைக்கும் அழகு நமக்குத் தேவைப்படுகிறது” என்றான். “இங்கு தேவல முனிவர் வந்திருந்தபோது இதையே சொன்னார். இத்தோட்டம் ஒரு காவியம் என்றார். காடு எனப் பூத்திருப்பவை நாவளர் பாடல்கள்.” ஏணிப்படிகள் முனக பீமன் கீழிறங்கி வருவதைக்கண்டு இருவரும் திரும்பிநோக்கினர். புயங்களில் தசையுருளைகள் எழுந்தமைய கைகளை தலைக்குமேல் தூக்கி சோம்பல்முறித்தபடி வந்த பீமன் “நன்கு துயின்றுவிட்டேன், இளையோனே. காலை வந்ததை அறியவில்லை” என்றான்.

“இது காலையல்ல, உச்சி அணுகிக்கொண்டிருக்கிறது” என்றான் அர்ஜுனன். கோட்டுவாயிட்டபடி “அதைத்தானே நானும் சொன்னேன்” என்றான் பீமன். “நேற்று நீங்கள் உறங்கியபின் நான் காட்டுக்குள் சென்றேன். கோமதியில் அவ்வேளையில் யானைகள் நீராடும். உடன்நீந்துவது இனிது.” அர்ஜுனன் “ஆம், நீங்கள் இரவுகளில் குடிலில் இருப்பதை விரும்புவதில்லை என அறிந்தேன்” என்றான். “பகலில் இருக்க குரங்குகள் விடுவதுமில்லை” என்றான் சகதேவன்.

“நீங்கள் உணவருந்திவிட்டீர்களா, மூத்தவரே?” என்றான் அர்ஜுனன். “எழுந்ததுமே அடுமனைக்குத்தான் சென்றேன். எளிய உணவுதான். பல்தேய்த்து குளித்துவிட்டு மீண்டும் முறையாக உண்ணவேண்டும்” என்றபடி பீமன் அருகேவந்து குந்தி அமர்ந்தான். சகதேவனிடம் “அடேய், தள்ளிப்போ. நான் இளையோனிடம் சில அரசமந்தணங்கள் பேசவேண்டியிருக்கிறது” என்றான். “என்ன அப்படி?” என்று சகதேவன் கேட்க “செல்கிறாயா இல்லையா?” என்றான். சகதேவன் “அரசியலுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?” என முணுமுணுத்தபடி நகுலனின் அருகே சென்று நின்றான்.

பீமன் தாழ்ந்த குரலில் “இளையோனே, உண்மையில் நான் நேற்று காட்டுக்குள் சென்றது இன்தேறல் கொண்டுவருவதற்காக” என்றான். அர்ஜுனன் “தேறலா? எங்கிருந்து?” என்றான். “காட்டில் வைத்திருக்கிறேன். நானே வடித்தது. மேலே ஒரு குகையில் புதைத்து வைத்திருந்தேன். நேற்றிரவு எடுத்து மூடியைத் திறந்தேன்” என்றான் பீமன். “நறுமணத்தால் காடே மயங்கிவிட்டது. ஆயிரம் மரமானுடர் அந்தப் பாறையருகே நின்றிருக்கிறார்கள். நாகபுச்சனையும் சுகர்ணனையும் காவலுக்கு நிறுத்திவிட்டு வந்தேன். அவர்களை பிறர் அஞ்சுவார்கள்.”

“பழத்தேறலா?” என்றான் அர்ஜுனன் ஐயத்துடன். “ஆம், இங்கே மரமானுடர் உதிர்ந்த பழங்களைச்சேர்த்து பாறைக்குழிகளில் இட்டு நொதிக்கச்செய்து மேலே தெளிந்துவரும் கடுந்தேறலை இலைகளால் அள்ளி அருந்தி மயங்குவதைப் பார்த்தேன். அதன்பின் காடே காதலும் பூசலுமாக ஒலிக்கும். அவர்களிடமிருந்துதான் உரிய கனிகளைத் தெரிவுசெய்ய கற்றுக்கொண்டேன். நீ வந்து பார். ஒரு நாழிகை தொலைவிலேயே அதன் மணத்தை உணர்ந்துகொள்வாய். அறிந்திருப்பாயே, சான்றோரின் புகழ் பரவுவதைப்பற்றி ஒரு பாடலில் சொல்லப்பட்டுள்ளதுபோல…”

அர்ஜுனன் “அது மலர்மணம்” என்றான். “இது அதைவிட கூரிய மணம்” என்றான் பீமன். அர்ஜுனன் “வேண்டாம் மூத்தவரே, நான் மதுவருந்தி நீணாள் ஆகிறது” என்றான். “நீ தவமுனிவர் போலிருக்கிறாய். உலகுக்குத் திரும்பு. எங்களைப் பார், நாங்கள் சொல்வளர்காடுகளினூடாக இங்கே வந்தோம். இது சொல்லில்லா காடு. இங்குதான் இனிதாக வாழ்கிறோம்.” அர்ஜுனன் “வேண்டாம்” என்றான். “ஏன்?” என்றான் பீமன். அர்ஜுனன் “மூத்தவர் இருக்கிறார்” என்றான். “அவருக்கும் கொடுப்போம்” என்றான் பீமன். “விளையாடாதீர்கள், மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

“உண்மை, அவர் இப்போது மூதாதையருள் ஒருவர். ஆகவே முறையாக படைக்கவேண்டும். நான் புதியதேறல் எடுத்ததும் இங்கு கொண்டுவந்து தேவியிடம் கொடுப்பேன். அவள் கொடுத்தால் அவர் அருந்துவார். அதைப்பற்றி எதுவும் தெரியாததுபோல் நாம் இருந்துவிடவேண்டும் என்பது மட்டுமே நெறி” என்று பீமன் சொன்னான். “இளையோரை தவிர்த்துவிடுவோம். அவர்கள் முன் நாம் அருந்தினால் நமக்கு மதிப்பிருக்காது.” அர்ஜுனன் தத்தளிப்புடன் “இது முறையா என தெரியவில்லை” என்றான்.

“மூத்தவரின் ஆணைக்குக் கட்டுப்படுவது முறையா அல்லவா?” என்றான் பீமன். “அது முறைதான்” என்றான் அர்ஜுனன். “அப்படியென்றால் இது என் ஆணை. வருக!” என்றான் பீமன். “இளையவனே, முனிவராக இருந்தது போதும். நாம் வெல்வதனைத்தையும் வென்றுவிட்டோம். இனி மெல்ல எளிதமைந்து கனிவோம்.” அர்ஜுனன் “மெய்யாகவே நாம் மூத்தவருக்கும் கொண்டுவந்து கொடுக்கப்போகிறோமா?” என்றான். “ஆம், ஐயமென்ன? மிகச்சிறந்த பகுதி அவருக்குரியது. அதன்பின் நாம் மகிழ்வோம்.” அர்ஜுனன் புன்னகைத்து “அப்படியென்றால் நன்று” என்றான்.

பீமன் சகதேவனிடம் “இளையோனே, நாங்கள் காட்டுக்குள் சென்று ஒரு சிறு அரசியல்பணி முடித்து மீள்கிறோம்” என்றான். அவன் அருகே வந்து “நானும் வருகிறேன்” என்றான். பீமன் “இது பெரியவர்களுக்கானது” என்றான். “நானும் பெரியவனே. மேலும் உங்களுக்கு துணைநிற்பேன்” என்றான். சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் பீமன் “எப்படி அறிந்தாய்?” என்றான். சகதேவன் “நான் வாயசைவை நோக்கக் கற்றவன்” என்றான். அர்ஜுனன் சிரித்து “சரிதான்… இவன் பெரும்பாலான நிமித்தக்குறிகளை அவனை அணுகுபவர்கள் தொலைவில் பேசிக்கொண்டு வருவதிலிருந்தே உய்த்தறிந்து சொல்கிறான்” என்றான்.

“நான் மதுவருந்தி நீண்டநாளாகிறது” என்றான் சகதேவன். “சென்ற வாரம்தானே கொண்டுவந்தேன்?” என்றான் பீமன். “அதைத்தான் நானும் சொன்னேன்” என்றான் சகதேவன். பீமன் “சரி, ஓசையிடாதே” என்றான். நகுலனிடம் “நாங்கள் ஒரு சிறு வேட்டைக்கு சென்றுவருகிறோம், இளையோனே. உன் பணி தொடரட்டும்” என்றான். நகுலன் மண்வெட்டியை வைத்துவிட்டு மேலேறி வந்து “எங்கே தேறலிட்டிருக்கிறீர்கள், மூத்தவரே?” என்றான். “உனக்கும் வாயசைவு கேட்டுவிட்டதா?” என்றான் பீமன். நகுலன் “நான் இவன் உடலசைவை நோக்குவேன். புரவிகளின் உடல்மொழிபோலவே தெளிவானது” என்றான்.

“பிறகென்ன? கிளம்புவோம்” என்றான் அர்ஜுனன். நகுலன் “ஓசையின்றி கிளம்புவது நன்று. மூத்தவரும் உடன்வரக்கூடும்” என்றான். “பேசாமல் வா!” என்றான் பீமன் எரிச்சலுடன். “நேற்றிரவு மூத்தவர் படிப்படியாக மலர்ந்தார். அத்தனை நடிப்புகளையும் துறந்து சிரித்தார். பின்னிரவில் நடனம் கூட ஆடினார்” என்றான் அர்ஜுனன். “நடனமா?” என பீமன் நின்றுவிட்டான். “ஆம், துரியோதனன் இந்திரப்பிரஸ்தத்தில் வழுக்கியதை நடித்துக்காட்டினார்” என்றான் சகதேவன். “மூத்தவரா?” என்றான் பீமன் திகைப்புடன்.

“ஆம் மூத்தவரே, அவரும் சற்று இளக வேண்டுமல்லவா? நேற்று அதற்கான தருணம். முதலில் இரவுணவுக்கு சேர்ந்து அமரவே தயங்கினார். தேவி சென்று தனியாகப் பேசியபின் கிளம்பிவந்தார். கைபற்றி உடனமர்த்தவேண்டியிருந்தது. உண்ணும்போது இறுக்கமாகவே இருந்தார். ஊன் துண்டு ஒன்றை பார்த்தருக்கு எடுத்துவைத்தபோது விழி ததும்பினார். அதன்பின் அழுகை. அழுது முடித்ததும் முகம் மலர்ந்துவிட்டது. அவர் அழுததை அவரே கேலி செய்தார். சிரிப்பு தொடங்கியது.”

“மூத்தவர் வாய்விட்டுச் சிரித்து நான் பார்த்ததையே மறந்துவிட்டேன்” என்றான் பீமன். நகுலன் “நம் அன்னை கருவுற்றிருக்கும் செய்தி அறிந்ததும் தந்தை தலையில் தேன்தட்டுகள் நிறைந்த கூடையைச் சுமந்தபடி உடலெங்கும் தேன் வடிய வந்தாராம். அதை சேடியர்கதைகளிலிருந்து அவர் அறிந்திருக்கிறார். நேற்று நீங்கள் வந்ததும் அதைப்போல என்று சொல்லி சிரிக்கலானார். அப்படியே தந்தையை பகடி செய்தார். பின் அன்னையை. பின்னர் அனைவரையும். சிரித்துச் சிரித்து ஒரு தருணத்தில் நான் அப்படியே சுருண்டு படுத்துவிட்டேன்” என்றான்.

“இன்று அவர் கண்முன்னாலேயே செல்லக்கூடாது என்று தேவி சொன்னாள்” என்றான் சகதேவன். “காலை எழுந்ததுமே அவர் நடனமிட்டதுதான் அவருக்கு நினைவுக்கு வரும். சினம்கொண்டு சிடுசிடுவென்றிருப்பார் என்றாள்.” பீமன் நகைத்து “ஆம், ஓரிரு நாட்கள் அது நீடிக்கும். ஆனால் தேறல் அவரை சற்று இளகச்செய்யக்கூடும்” என்றான். அர்ஜுனன் “அவர் குருகுலத்துப் பாண்டுவாக ஆகிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியதுண்டு எனக்கு” என்றான். “அவர் கடந்துசென்று பிரதீபரும் யயாதியுமாககூட ஆகிக்கொண்டிருக்கிறார்” என்றான் சகதேவன்.

 imagesவர்கள் காட்டுக்குள் நடந்துசென்றபோது தலைக்குமேலும் முன்னாலும் பின்னாலும் குரங்குகள் சூழ்ந்து வந்தன. ஆனால் அவை ஓசையேதும் எழுப்பவில்லை. ஆர்வமிகுதியால் அவ்வப்போது சில குரங்குகள் “ஹு?” என்று கேட்க மூத்த குரங்குகள் “ர்ர்” என அதட்டி அமைதியை மீட்டன. “நெடுந்தொலைவு வந்துவிட்டோம் போலும்” என்றான் அர்ஜுனன். “அண்மைதான்…” என்றான் பீமன். “குரங்குகள் இங்கிருந்து இரண்டே நாழிகையில் குடிலுக்கு சென்றுவிடும்.”

“நாம் நான்கு நாழிகைக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறோம்” என்றான் அர்ஜுனன். “அண்மைதான்” என்று பீமன் சொன்னான். இலைத்தழைப்புக்குமேல் கரிய பாறையின் கூன்வளைவு தெரிந்தது. “சற்று குத்தான பாறை. நீர் வழிந்து மென்மையாகிவிட்டிருக்கிறது, வழுக்கவும் கூடும்” என்றான் பீமன். குரங்குகள் மரங்களிலிருந்து குதித்து கைகளை ஊன்றி பாய்ந்தேறி மேலே சென்றன. “கைகளை ஊன்றிக்கொண்டால் விரைந்தேறலாம்” என்றான் பீமன்.

அவர்கள் கைகளை ஊன்றி தொற்றி மேலேறினர். மூன்று அடுக்குகளுக்கு மேலே சென்றதும் அவர்கள் மேல் உருகிய வெள்ளியென உச்சிவெயில் பொழிந்தது. நகுலன் வியர்வை வழிய கையூன்றி அமர்ந்தான். மழைக்காலத்தில் நீர்விழுந்து சுழித்தோடிய இடங்களில் உரல்குழிபோல மென்மையாக பள்ளம் விழுந்து அதில் நீர் தேங்கியிருந்தது. அள்ளிக்குடித்து உடல்மேலும் வீசிக்கொண்டனர். “வந்துவிட்டோம், அண்மைதான்” என்றான் பீமன்.

மேலேறிச்சென்றதும் பீமன் சுட்டிக்காட்டி “அங்குதான்” என்றான். அங்கே பாறைக்குழிகளிலமைந்த சுனைகளுக்குமேல் பாளைகளையும் ஓலைகளையும் கொண்டு நெய்த பரிசல்போன்ற பெரிய கூடைகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. அணுகியதும் இன்தேறல் மணமெழுந்தது. “இங்கா வைத்திருக்கிறீர்கள்?” என்றான் அர்ஜுனன். “நோக்குக!” என பீமன் ஒரு கூடையை எடுத்தான். உள்ளே வட்டமான கற்குழியில் கரிய சேறுபோல பழக்கூழ் அழுகிநொதித்து குமிழிகள் வெடித்துக்கிடந்தது. அதன்மேல் கவிழ்க்கப்பட்ட கூடையின் உட்புறத்தில் அதிலிருந்து ஆவியாகிப் படிந்த தேறல் குளிர்ந்து துளித்து வழிந்து அதன் சரிவில் ஓடி வந்து சற்று கீழே அமைந்திருந்த பிறிதொரு குழியில் சொட்டி நிறைந்தது. அதன்மேல் பெரிய தட்டைக்கல்லை வைத்து மூடியிருந்தான் பீமன்.

“இந்த நொதிக்கூழை பானையிலிட்டு மெல்லிய அனலில் ஆவியெழச் செய்வார்கள். ஆனால் இங்கே பழங்கள் பேரளவில் உள்ளன. கலங்களும் இல்லை. ஆகவே இம்முறையை கண்டுபிடித்தேன். வெயிலின் மென்வெம்மையில் ஆவியெழும் தேறல் மிக உயர்வானது” என்றான். கல்லைப்புரட்டி குழியில் தெளிந்த எண்ணைபோல கிடந்த தேறலை காட்டினான். அதன் அடியில் கரிய காய்கள் சில கிடந்தன. “அவை என்ன?” என்றான் அர்ஜுனன். “கதலிப்பழங்கள். நறுந்தேறலுக்குள் இவற்றை போட்டு வைத்தால் சாற்றை தேறல் உறிஞ்சிஎடுத்து கருகிச்சுருங்கச்செய்து அடியில் தங்கவைக்கும். தேறலில் இன்மணம் இருக்கும்” என்றான்.

“அதோ, அந்தக் குழியில் நெல்லிக்காய் போட்டுவைத்திருக்கிறேன். அது பிறிதொரு சுவை. தேன் சேர்த்து அருந்தும் தேறல் அதோ, அந்தக் குழியில் இருக்கிறது. மலரிட்டு வாற்றப்பட்ட தேறல்களும் உள்ளன. இளையோரே, பதினெட்டுவகை தேறல்சுவைகளை இங்கு இப்போது உருவாக்கியிருக்கிறேன். இன்னும் நூறுவகையில் உருவாக்க முடியும்” என்றான் பீமன். சகதேவன் “முதலில் மூதாதைக்கு படைப்போம். எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கப்போகிறார்” என்றான்.

“ஆம், அதை முதலில் செய்வோம்” என பீமன் குகைக்குள் சென்று நான்கு சுரைக்குடுவைகளை எடுத்துவந்தான். ஒவ்வொன்றிலும் தேறலை இலைக்கோட்டலால் மெல்ல அள்ளிநிறைத்து மரக்கட்டையால் இறுக அடைத்து தேன்மெழுகையும் அரக்கையும் கலந்து விளிம்பை மூடி கயிற்றில் கட்டினான். அவன் அழைத்ததும் நான்கு குரங்குகள் வந்து நின்றன. அவன் அளித்த குடுவையை வாங்கி முகம் சுளித்து முகர்ந்தபின் ஒரு குரங்கு “ர்ர்” என்றது. பீமன் அதே மொழியில் அவற்றிடம் ஆணையிட்டான். அவை கிளைகளுக்குமேல் ஏறிக்கொண்டன.

“இன்சுவை நான்கு மூத்தவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இனி நாம் அருந்துவோம்” என்றான் பீமன். அவர்கள் மேலிருந்த பாறையின் நிழலில் அமர்ந்துகொண்டனர். பீமன் ஏழு சிறிய இலைத்தொன்னைகளில் மதுவை அள்ளி தெற்கு மூலையில் வைத்து மூதாதையருக்குப் படைத்து கைகூப்பி வணங்கினான். அதன்பின் மூங்கில்குடுவைகளில் தேறலை அள்ளிக்கொண்டுவந்து அவர்களுக்கு அளித்துவிட்டு பெரிய சுரைக்குடுவை நிறைய மதுவுடன் தானும் அமர்ந்தான்.

“முதலில் இனிப்புத்தேறல். தேன் கலந்தது. அதுவே முறை” என்றான். “குடுவையை சற்றுநேரம் கையில் வைத்து அதிலெழும் ஆவியை முகர்ந்தபின் சுவைக்கவேண்டும். வாயில்நிறையும் மணத்தை மூக்கினூடாக வெளிவிடவேண்டும்” என்றான். அர்ஜுனன் “நான் அருந்தியவற்றிலேயே சிறந்தது” என்றான். பீமன் “இவற்றைவிடச் சிறந்தது இங்கு உண்டு… இந்தக் காற்றில், ஒளியில், மண்ணில், மலர்களில் தேனாக அவை எழுகின்றன. கனிகளில் ஊறுகின்றன. அவற்றை நான் வாற்றி எடுப்பேன்” என்றான். அவன் ஏப்பம்விட்டு உடலை உலுக்கியபின் மீண்டும் அருந்தினான்.

மெல்ல அவர்கள் உடல்தளர்ந்து கண்கள் சிவந்தனர். வியர்த்த தோல்மேல் குளிராக காட்டுத்தென்றல் தழுவிச்சென்றது. “இந்தக் காட்டை நான் இன்னும் அறியவில்லை. இது எனக்கு அப்பால் உள்ளது இன்னமும். நூறாயிரம்முறை புணர்ந்த பின்னரும் உளம்காட்ட மறுக்கும் கன்னியின் மாயம்…” மீண்டும் அருந்தி “இந்தத் தேறல் எங்கிருக்கிறது? இளையோனே, இது எங்குள்ளது?” என்றான். “சொல்லுங்கள்” என்றான் அர்ஜுனன். “இதோ, இந்த மண்ணில்… மண்ணுக்கு அடியிலுள்ள குளிரூற்றுகளில். அதற்கும் அடியிலுள்ள அனலூற்றுகளில். அங்கிருந்து வேர்களால் உறிஞ்சி எடுக்கப்படுகின்றது. தளிர்களில் ஒளிகொள்கிறது. மலர்களில் இனிக்கிறது. கனியில்…”

MAMALAR_EPI_06

அவன் தன் சுட்டுவிரலைத் தூக்கி ஏதோ சொல்ல முயன்று கண்களை மூடித்திறந்தான். வேறு எண்ணம் ஊடுகலந்தபோது சொல்லவந்ததை மறந்து மீண்டும் குடுவையை எடுத்து அருந்தினான். “இனி நாம் புளிப்புக்குச் செல்வோம்” என்றபடி எழுந்துசென்றான். சகதேவன் “அவர் நினைவழிந்து விழுந்தபின்னர்தான் நிறுத்திக்கொள்வார்” என்றான். எஞ்சியதைக் குடித்தபின் “ஆனால் அதற்கு நெடுநேரமாகும்” என்றான் நகுலன். பீமன் மீண்டும் வந்து அவர்களுக்கு தேறல் பரிமாறிவிட்டு அமர்ந்து தன் குடுவையை கையில் எடுத்துக்கொண்டான். “நான் என்ன சொன்னேன்? இந்த மது எங்கிருக்கிறது? நான் சொல்லவா?”

“சொல்லுங்கள்” என்றான் அர்ஜுனன் புன்னகையுடன். “வானில்… இடிமின்னலின் கொந்தளிப்பில். விழிகூசும் வெயிலொளியின் எரிதலில். விண்மீன்கள் அளிக்கும் கனவில்” என்றான் பீமன். “இளையோனே, அதைத்தான் இந்த மலர்கள் அள்ளிக்குடிக்கின்றன. கனிகளுக்குள் கொண்டுசென்று தேக்குகின்றன. இதோ, பறக்கும் தேனீக்களும் வண்டுகளும் தங்கள் சிறகுகளால் அறிந்த மது. அவை மலர்தோறும் தேடிச்சென்று அவற்றை குடிக்கின்றன. ஆனால்…” அவன் மீண்டும் கைதூக்கி இல்லை என அசைத்து மந்தணப்புன்னகை பூத்து “ஆகவே…” என்றான்.

அவர்களைச் சூழ்ந்து குரங்குகள் வந்து இருகால்களில் அமர்ந்திருந்தன. ஒரு மூத்த குரங்கு அணுகி வந்து எரிச்சலுடன் பீமனிடம் ஏதோ சொல்ல அவன் “ஆ, மறந்துவிட்டேன்” என எழுந்துசென்றான். குரங்கும் சலிப்புடன் அவனுடன் சென்றது. பீமன் கலங்கிய பழநொதிப்பை பாளைத்தொன்னையால் அள்ளி பாறைமேல் வைக்க பெருங்குரங்கு அதை அணுகி குனிந்து முகர்ந்து முகம் சுளித்து தும்மியது. வால்நெளிய எழுந்து தாவி அமர்ந்து மீண்டும் முகர்ந்து குமட்டலுடன் குதித்து உடல் உலுக்கியது. மீண்டும் அருகே சென்று நுனிநாக்கால் நக்கி திடுக்கிட்டதுபோல பின்னால் பாய்ந்தது. நாக்கை நீட்டி வாயை நக்கியபடி குழிந்த கன்னங்கள் உப்பி விரிய சிறுமணிக்கண்கள் சிமிட்ட பீமனை நோக்கியது.

பீமன் நகைத்தபடி “தேறலாடுபவர்களில் இவனே முதல்வன்… இவன் பெயர் சாமரபுச்சன்” என்றான். குரங்கு மீண்டும் காலெடுத்துவைத்து எதிரியை அணுகுவதுபோல மதுவருகே சென்று தயங்கி ‘அய்யோ’ என சலிப்பதுபோல முகம் வலித்து பின் சட்டென்று குனிந்து உறிஞ்சிக் குடித்து குளிர்நீர் பட்டதுபோல உடல் குறுக்கி உறைந்தது. ஃபுக் என ஏப்பமிட்டு கழுத்தை வலிப்புகொள்வதுபோல இழுத்தபின் மீண்டும் குனிந்து குடித்தது. எழுந்து நாக்கைச் சுழற்றி பீமனை நோக்கி இளித்தபின் மீண்டும் குனிந்து ஒரே இழுப்பில் குடித்தது.

“ர்ர்ர்ர்” என அது உறுமியதைக் கேட்டு பீமன் நகைத்தான். மீசையில் துளிகள் நிற்க எழுந்து உடலை உலுக்கிக்கொண்டு கண்களை மூடியது. திடுக்கிட்டு விழித்தெழுந்து மீண்டும் குனிந்து உறிஞ்சி இழுத்தது. விலாவைச் சொறிந்துகொண்டு என்ன நடக்கிறது என எண்ணுவதுபோல கண்களை மூடித்திறந்தபின் அய்யோ என பதறி மீண்டும் குனிந்து குடித்தது. பீமன் அத்தனை குரங்குகளுக்கும் ஊறலை அள்ளி அள்ளி வைத்தான். ஒரு பெரிய குழியில் குடுவையால் அவன் அள்ளி மொண்ட ஊறலை அவை கூடி தலைகள் முட்டிக்கொள்ளும்படி குனிந்து குடித்தன.

ஒரு குட்டி அன்னை இடையிலிருந்து திமிறி அதற்குள் விழுந்து ரீச் என அலறியபடி எழுந்து கரையேற முயன்று வழுக்கி மீண்டும் அதிலேயே விழுந்தது. அதை அன்னை வாலைப்பிடித்து தூக்கி அப்பாலிட்டுவிட்டு குனிந்து குடித்தது. தேறலில் ஊறிய குட்டி எண்ணையில் நனைந்த எலி போலிருந்தது. அதை இரு குட்டிகள் நக்கின. அது வால்சொடுக்கி பாய்ந்தோடி அமர்ந்து தன் உடலை தானே நக்கிக்கொண்டது.

பீமன் தேறலின் அடியில் கிடந்த கருகிய பழங்களை எடுத்து அன்னையருக்கு அளித்தான். அவை அக்கனிகளை பிதுக்கி கூழாக்கி குட்டிகளுக்கு அளித்தன. ஊறல் மாந்திய குரங்குகள் ஸ்ஸ்ஸ் என உறிஞ்சின. ர்ர்ர் என உறுமி உடலை சொறிந்துகொண்டன. ஒரு குரங்கு எழுந்துநின்று உடலை உலுக்கிக்கொண்டு “ஹிஹிஹி’ என்றது. ஒன்று தன் நெளியும் வாலைக்கண்டு திடுக்கிட்டு பாய்ந்தது. ஒன்றை ஒன்று பிடித்து தள்ளிக்கொண்டு அவை ஊறல் அருந்தின.

முதலில் ஊறல் அருந்திய பெருங்குரங்கு கொட்டாவிவிட்டு விழிசொக்கியது. மெல்ல ஆடி பக்கவாட்டில் விழுந்தது. எழுந்து திகைத்து நெஞ்சில் படபடவென அறைந்து “ரேரேரே” என ஓசையிட பிற குரங்குகள் ஆவலுடன் திரும்பி நோக்கின. இன்னொரு தாட்டான் குரங்கு தன் நெஞ்சில் அறைந்தபடி அதனுடன் மல்லுக்குச் சென்றது. ஆனால் இருவருக்குமே கால்கள் நிலைக்கவில்லை. கட்டிக்கொண்டபடி அவை தள்ளாடி உருண்டு எழுந்து பற்களை இளித்து உறுமின. அவற்றை பிடிக்கப்போன இரு குரங்குகள் வேறு திசையில் உருண்டன.

நகுலனும் சகதேவனும் சிரித்தபடியே இருந்தனர். பீமன் குடுவையில் இருந்து அருந்தியபடி “நல்ல களிமயக்கு… இந்தக் களி எங்குள்ளது என எண்ணுகிறீர்கள்?” என்றான். “சொல்லுங்கள்” என்றான் அர்ஜுனன். “காற்றில்… மரங்களை வெறிகொள்ள வைக்கிறது காற்று. சருகுகள் பொருளிழந்து பறக்கின்றன. சுனைகள் அலைகொந்தளிக்கின்றன. அனைத்தின்மீதும் தூசு படர்ந்து மூடுகிறது. மலர்கள் அனைத்தும் உதிர்கின்றன. ஆனால்…” அவன் சுட்டுவிரலைத் தூக்கி பின் அதைக்கண்டு நாவால் நக்கியபின் “ஆனால் தென்றலாகி வந்து அது மலர்களை… ஆகவே…” என்றான்.

நாலைந்து பெருங்குரங்குகள் வானிலிருந்து விழுந்தவைபோல மல்லாந்து வாயிளித்தபடி துயின்றன. ஒரு குட்டிக்குரங்கு பாய்ந்து அவ்விசையில் உருண்டு கீழே செல்ல மற்றவை கூச்சலிட்டபடி பின்னால் சென்றன. ஓர் அன்னை பக்கவாட்டில் படுத்து துயில அதன் மேல் அமர்ந்த குட்டி விழிகள் சொக்கி துயிலில் விழுந்தது. குரங்குக்கூட்டமே கீழே செறிந்திருந்த காட்டுக்குள் சென்று மரங்களின் மேல் ஏறிக்கொண்டது. காடு அலையிளகிக் கொந்தளிப்பது தெரிந்தது. பீமன் சகதேவனிடம் திரும்பி “நான் என்ன சொல்கிறேன் என்றால்…” என்றான்.

சகதேவன் சிரித்துக்கொண்டே இல்லை என்பதுபோல தலையசைத்தான். நகுலன் “நாம் அதை பிறகு பேசலாம்” என்றான். பீமன் “இந்த மயக்கு… இது உண்மையில்…” என்றான். சகதேவன் மீண்டும் தலையசைக்க நகுலன் “நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்றான். அர்ஜுனன் விழிகளை மூடி முகவாய் மார்பில் படிய பாறையில் சாய்ந்து அமர்ந்தான். பீமன் “நாம் இன்னும் ஒரு வகை தேறலை அருந்துவோம். இதில் சற்று சுக்கு உண்டு. மூச்சுக்கு நல்லது” என்றபடி எழுந்து சென்று மொண்டுவந்தான்.

பாறைப்பரப்பு முழுக்க குரங்குகள் களம்பட்ட படைபோல சிதறிக்கிடந்தன. ஒரு சின்னஞ்சிறு குட்டி மட்டும் சிறிய உருளைக்கல்லை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தது. பீமனைக் கண்டு ஆவலுடன் பின்னால் வந்தபின் நினைவுகூர்ந்து மீண்டும் கல்லுக்கே திரும்பிச்சென்றது. சகதேவன் “எனக்கு சற்று தேறல்” என குழறியபடி சொல்லிவிட்டு பீமனை நோக்கி கைசுட்டிச் சிரித்தான். “நாம் பிறகு பேசலாமே” என்றான் நகுலன். அர்ஜுனன் மீண்டும் தேறலை வாங்கி அருந்தினான். சகதேவன் ஏதோ சொல்லப்போக “நாம் நாளை பேசுவோம்” என்றான் நகுலன்.

கீழே குரங்குகள் மரங்களிலிருந்து உதிர்ந்தன. விழுந்த குரங்குகளுக்கு மேல் மேலும் குரங்குகள் விழுந்தன. வெயில் வண்ண அலைகளாக மாறியது. செவிகள் நன்றாக அடைத்து காட்டின் ஒலிகள் தலைக்குள் எங்கோ ஒலித்தன. இடவுணர்வும் காலவுணர்வும் அழிந்தன. அர்ஜுனன் தன் மார்பில் எச்சில் சொட்டுவதை உணர்ந்தான். ஆனாலும் தலையை தூக்கமுடியவில்லை. உடற்பொருத்துக்கள் தளர்ந்து தசைகள் ஊறிப்பரவி நீர்ப்படலமாக பாறைமேல் படர்ந்தான். தொலைவில் காட்டின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. அது கடலோசையாகியது. அதன்மேல் நாவாய்கள் சிறகு விரித்தன. ஒரு நாவாயில் இளைய யாதவர் நின்று “இருண்டிருக்கிறது” என்றார். “என்ன?” என்று அவன் கேட்டான். “நல்ல இருள்” என்றார் இளைய யாதவர்.

அவன் விழித்துக்கொண்டபோது பேச்சுக்குரல் கேட்டது. துயின்றுகொண்டிருந்த பீமனை முண்டன் “பேருடலரே” என கூவி எழுப்பிக்கொண்டிருந்தான். “என்ன?” என்றபடி அர்ஜுனன் எழுந்தமர்ந்து அவ்விசையிலேயே வில்லையும் அம்பையும் எடுத்தான். முண்டன் அவனருகே ஓடிவந்து “அங்கே… அங்கே…” என்றான். “என்ன?” என்றான் அர்ஜுனன். “சொல்… என்ன ஆயிற்று?” என்றான். முண்டன் “அரசியை யாரோ தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்கள்!” என்று சொன்னான். அர்ஜுனன் திரும்பி நகுலனை உதைத்து “எழுக… உடனே எழுக!” என்றான்.

நகுலன் பாய்ந்தெழுந்து வாயைத்துடைத்து “என்ன?” என்றான். சகதேவனை உலுக்கியபடி “எழுக… இளையோனே, எழுக!” என கூவினான். “இளவரசே, அரசர் மதுவருந்தி துயின்றார். அரசி நீராடுவதற்காக கோமதிக்கு சென்றார். நெடுநேரமாகியும் திரும்பவில்லை. நானும் சற்று தேறல் மாந்தி துயின்றுவிட்டேன்… விழித்துக்கொண்டு நெடுநேரமாகிவிட்டதை உணர்ந்து நேராக கோமதிக்கு சென்றேன். அரசியின் ஆடைகள் நாணலில் சிதறிக்கிடந்தன. கரைச்சேற்றில் ஏராளமான புரவிக்குளம்படிகளை கண்டேன்” என்றான்.

“இளையோனே, மூத்தவரை எழுப்பி கூட்டிக்கொண்டு வருக!” என்றபடி அர்ஜுனன் குரங்குகளை மிதிக்காமல் தாவிக்கடந்து ஓடினான். முண்டன் உடன் ஓடியபடி “ஐம்பது புரவிகள்கூட இருக்கும்… ஆகவே அரசர்கள் எவரோதான். ஐயமே இல்லை” என்றான். நகுலன் பீமன் காதில் குனிந்து “மூத்தவரே! எழுக, மூத்தவரே!” என்று கூவினான். பீமன் ஆழ்கனவுக்குள் “தொலைதூரம்…” என்றான். சப்புக்கொட்டியபடி “நறுமணம்” என்று சொல்லி உடனே விழித்துக்கொண்டு எழுந்து வாயைத்துடைத்தபடி “என்ன? யார்?” என்று கேட்டான்.

முந்தைய கட்டுரைமாமங்கலையின் மலை -5
அடுத்த கட்டுரைஅரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்