ஷிமோகா ரவி கோவையைச் சேர்ந்த நண்பர் அவர் குடும்பத்திற்குச் சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று ஷிமோகாவில் அமைந்துள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்பு அது அரசியல் நிர்வாகக் காரணங்களால் மூடப்பட்டுவிட்டது. நீதிமன்ற வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அவ்வழக்கு முடிந்து இப்போது அந்த ஆலையும் அதைச் சார்ந்த நிலங்களும் விற்பனைக்கு உள்ளன. வழக்கை நடத்தி இவ்விற்பனையை முடிக்கும் பொருட்டு பல ஆண்டுகளாக ரவி பெங்களூரிலும் ஷிமோகாவிலும் தங்கியிருக்கிறார். ஆகவே நண்பர் வட்டாரத்தில் அவர் ’ஷிமோகா ரவி’ என்றே அழைக்கப்படுகிறார்.
எங்கள் சமண பயணத்தின் போதுதான் ரவி அறிமுகமானார். நாங்கள் அன்று ஷிமோகாவை அடைந்த போது எங்களை சந்தித்து அனைவருக்கும் கம்பளிப் போர்வைகளும் சட்டைகளும் பலநாட்களுக்குத் தேவையான உணவும் அளித்தார் அதன் பின் இன்று வரை விஷ்ணுபுர அமைப்பின் உள்வட்ட நண்பர்களில் ஒருவராக இருக்கிறார். ஆ.மாதவனுக்கு விருதளித்த விழாவின்போது நண்பர் கே.பி.வினோதை ரயில்நிலையம் சென்று காரில் அழைத்துவந்தார் ரவி. அறைக்கு பெட்டியையும் கொண்டுசென்று வைத்தார். வினோத் அளித்த ஐம்பது ரூபாய் டிப்ஸையும் ‘சரீங்’ என்று வாங்கிக்கொண்டார்.
ஷிமோகாவுக்கு நாங்கள் சென்று சேர்ந்தபோது இரவு பதினோரு மணி தாண்டிவிட்டிருந்தது. அவருக்குத் தெரிந்த உணவகம் ஒன்றில் சாப்பிட்டோம். பன்னிரண்டு மணிக்குத்தான் சர்க்கரை ஆலையின் விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். சென்றதுமே எனக்குத் தூக்கம் சுழற்றிக் கொண்டு வந்தது. மின்னஞ்சல்களைப்பார்த்துவிட்டு உடனே படுத்துவிட்டேன். அதன் பிறகு தான் நண்பர்களின் பேச்சுக் கச்சேரி ஆரம்பித்து இரவு இரண்டு மணிவரைக்கும் கூட தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜமாணிக்கம் அவரது தொழிலில் சந்தித்த மயிர்க்கூச்செரியும் பேய்க்கதைகளை சொன்னதாக கேள்விப்பட்டேன்.
பயணத்தில் பேய்க்கதைகள் மிக நல்ல விளைவைஉருவாக்கும். ஏனெனில் புதிய இடத்தில் சரியாக தூக்கம் வராது. புதிய அயல் ஓசைகள் கனவுகளாக வந்து கொண்டே இருக்கும் அடிமனதில் பேய்க்கதைகளும் இருந்தால் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமான கனவுகளை அடைய முடியும். மறுநாள் செல்வேந்திரனின் கண்கள் டாஸ்மாக் வாடிக்கையாளர் போல தெரிந்தன.’’தூங்கவே இல்லை ஜெ, ஒரே பேய்க்கனவு’’ என்று பீதியுடன் சொன்னார். ’’எஞ்சிய பேய்க்கனவை காண்பதற்கு உகந்த நிலத்திற்கு தான் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்று நான் சொன்னேன்.
காலையில் எழுந்து ஒரு வழியாகக் கிளம்ப ஏழரை மணி ஆகிவிட்டது. செல்லும் வழியிலேயே ஒரு உணவகத்தில் கர்நாடக பாணியிலான சிற்றுண்டி அருந்தினோம். ’பன்சு’ என்று இப்பகுதியில் சொல்லப்படும் உள்ளூர்ரொட்டி எனக்கு மிகப்பிடித்தமானது அரைத்தித்திப்புடன் இட்லியா, பழைய ரொட்டியா இல்லை சற்று நமத்துப் போன அதிரசமா என்றெல்லாம் சந்தேகம் வரும்படி இருக்கும். வழி நெடுகிலும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சென்றோம்.
ஷிமோகா – கொல்லூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது நகரா என்னும் ஊர். இங்குள்ள கோட்டை சாலையிலேயே எங்களை எதிர்கொண்டது. வரலாற்றில் இது பிடனூர் கோட்டை என்று அறியப்படுகிறது. கேளடி வம்சத்தின் தலைநகராக பிடனூர் இருந்திருக்கிறது. பிற்கால நாயக்கர் வரலாற்றில் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் பல்வேறு சிற்றரசர்களான நாயக்கர்குலங்கள் இருந்தன. 1565 ல் விஜயநகரம் அழிக்கப்பட்டுவிட்டபிறகு இந்த ஒவ்வொரு நாயக்கர் குலமும் தனியரசுகளாக மீண்டும் நூறாண்டுகள் நீடித்தன. தமிழகத்தில் செஞ்சி, மதுரை, தஞ்சை என மூன்று நாயக்கர் ஆட்சிகள் அப்போதிருந்தன. பிற இரண்டும் அழிந்து தான் மதுரை நாயக்கர்கள் 1736 ல் சந்தாசாகிப் ராணி மீனாட்சியை வெல்வது வரை நீடித்தது. கர்நாடகத்தில் அப்படி நீடித்த நாயக்க சிற்றரசுகளில் ஒன்று இக்கேரி நாயக்கர் குலம்.
இக்கேரியை 1645ல் பீஜப்பூர் சுல்தான் படைகள் தாக்கியபோது அவர்கள் அதை கைவிட்டுவிட்டு வந்து பிடனூரில் தங்கள் தலைநகரத்தை அமைத்துக் கொண்டனர். வீரபத்ர நாயக்கர் பிடன்னூரில் ஒரு மண்கோட்டையைக் கட்டினார். அதை அவருடைய மருமகனும் வாரிசுமான சிவப்ப நாயக்கர் இப்போதிருக்கும் வடிவில் கட்டினார். சாலையோரமாகவே அமைந்திருக்கிறது இந்த பெருங்கோட்டை. இப்போது கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
பிடன்னூரை நடுத்தர அளவான கோட்டைகளில் ஒன்று என்று சொல்லலாம். பீரங்கி வைப்பதற்குரிய வாய்கள், வீரர்கள் ஒளிந்திருக்கக்கூடிய விளிம்பிதழ்கள் கொண்ட கோட்டை இப்பகுதியில் வெட்டி எடுக்கப்படும் சேற்றுப்பாறைகளினால் ஆனது. அப்பாறை அதிகமாக கிடைத்ததனால்தான் இந்தக்குன்றின்மேல் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் என்றே தோன்றியது. உள்ளே நிலமும் அதே பாறையினால் ஆனது. மையமாக அனைத்து திசைகளுக்கும் திருப்பு வசதி கொண்ட பீரங்கியை நிறுத்தும் வட்ட வடிவமான மேடை ஸ்தூபி போல எழுந்திருந்தது. உள்ளே கட்டிடங்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு சிறு அனுமார் ஆலயம் மட்டுமே இருந்தது. நாங்கள் வருவதைக் கண்டு உள்ளிருந்து காதல் இணை ஒன்று முகங்காட்டாமல் கிளம்பிச் சென்றது.
காலையில் வரலாறு நிறைந்து கிடக்கும் ஒரு கோட்டைக்குள் செல்வது உகந்த மனநிலையை உருவாக்கியது. கழிவிரக்கமும் கனவும் கலந்த ஒரு நிலை. அன்றாட வாழ்க்கையின் அனைத்து சில்லறைக் கவலைகளிலிருந்தும் காலத்துயர் ஒன்றுக்கு கடந்து செல்ல அது வழிவகுத்தது. கோட்டையில் எங்களைத்தவிர அப்போது எவருமே இல்லை என்பதும் அக்கனவில் நீடிக்க வழிவகுத்தது.
மேற்கு கடற்கரைக்கு வரும் மலைப்பாதைகள் அனைத்தையும் படை நிறுத்தி பாதுகாத்தமையால் இப்பகுதியை சுதந்திரமாக ஆள நாயக்கர்களால் முடிந்தது. அன்றே இப்பகுதியின் பாக்கு புகழ் பெறத் தொடங்கியிருந்தது. அதை கழுதைப் பாதை வழியாக தெற்கே கோழிக்கோடு அருகில் போப்பூ என்னும் துறைமுகம் வரை கொண்டு செல்ல முடிந்தது. அது இக்கேரி நாயக்கர்களுக்கு நிதி ஆதாரமாக அமைந்தது.
இக்கேரி நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் தான் மேற்கு கடற்கரையின் இப்பகுதியில் உள்ள கோட்டைகள் அமைந்தன. மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் வரும் உயிரே என்ற பாடலில் காணப்படும் புகழ் பெற்ற கடல்கோட்டையாகிய பேக்கல் இக்கேரி நாயக்கர்களின் தெற்கு எல்லைக்கோட்டைகளில் ஒன்று. தன் பாக்கு வணிக வழிகளைப்பாதுகாப்பதற்கே பேக்கல் வரைக்கும் கோட்டைகளைக் கட்டி படைகளை நிறுத்தியிருந்தார். கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகாலம் கேளடி வம்சம் இப்பகுதியில் ஆட்சி செய்தது.
1763ல் மைசூர் சுல்தான் ஹைதர் அலி இக்கோட்டையைக் கைப்பற்றினார். இது ஹைதர் நகர் என்று பெயர் மாற்றப்பட்டது. காலப்போக்கில் வெறும் நகரா என்று அது அழைக்கப்பட்டது.
1672 முதல் 1697 வரை பிடன்னூரை ஆண்ட கேளடி சென்னம்மாஜி கர்நாடக வரலாற்றின் முக்கியமான அரசிகளில் ஒருவர். அவரது கணவர் சோமசேகர் நாயக்கர் குலப்பூசல்களில் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார் தொடர்ந்து சென்னமா ராணி ஆட்சிக்கு வந்தார். கால்நூற்றாண்டுக்காலம் ஆட்சி செய்த சென்னமாஜி பெருவீரமும் கருணையும் கொண்டவர். அவரைப்பற்றி நாட்டார் பாடல்கள் விதந்து பாடுகின்றன. பசவப்ப நாயக்கரை தன் வளர்ப்புமகனாக எடுத்து வளர்த்தார். அவரது இறப்புக்குப்பின் பசவப்ப நாயக்கர் அரசரானார்.
கேளடி சென்னம்மாஜி மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்கவர். சொக்கநாதரின் மறைவுக்குப்பின் ராணி மங்கம்மாள் பதவிக்கு வந்தாள். இன்றைய தென்தமிழ் நாட்டை உருவாக்கியவர் அவரே. உட்பூசல்கள் நிறைந்திருக்கும் ஒரு பெரிய அரசை சற்று முதிர்ந்த அரசி ஒருவர் சிறப்பாக ஆளமுடியும் என்பதை அவர் காட்டினார். பெரும்பாலும் சமரசங்கள் பேச்சு வார்த்தைகள் வழியாகவே நிகழ்ந்த அரசு அது. தென்தமிழ் நாட்டின் மாபெரும் சந்தைகளையும் வணிகப்பாதைகளையும் அமைத்து இன்றிருக்கும் சிவகாசி கோவில்பட்டி விருதுநகர் போன்ற பல நகரங்கள் எழுந்து வரக்காரணமாக அமைந்தவர் ராணி மங்கம்மாள் .இன்று வரை தெற்கத்தி நெடுஞ்சாலை மங்கம்மா சாலை என்று தான் அழைக்கபப்டுகிறது.
சென்னம்மாஜியும் மேற்கு கடற்கரைப்பகுதியின் வணிக வளச்சியிலேயே அதிகமும் கவனம் செலுத்தினார். உட்பூசல்களை பேச்சு வார்த்தை மூலம் தடுத்தார். படையெடுத்து வந்தவர்களை கப்பமோ லஞ்சமோ கொடுத்து திருப்பி அனுப்பினார். 1685ல் சிவாஜியின் மகன் ராஜாராம் ஔரங்கசீப்பின் படைகளிடமிருந்து தப்பி தென்னகம் வந்தபோது இந்தக் கோட்டையில் அவருக்கு சென்னம்மாஜி அடைக்கலம் கொடுத்தார்.
பெரும்பாலும் வணிக,நிர்மாண பணிகளில் ஈடுபட்டிருந்த அரசியைப்பொறுத்தவரை இது தற்கொலைக்கு நிகரான நடவடிக்கை. ஏனெனில் இஸ்லாமிய பெரும்படையின் சினத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் இக்கேரி நாயக்கர்களுக்கு அன்று இருக்கவில்லை. ஆனாலும் அரசியின் தாய்மையின் கருணையாலும் ராஜாராமைத் தவிர்க்க முடியவில்லை. ஔரங்கசீப்பின் படைகள் இந்ந்கரை கைப்பற்றின ராஜாராம் தப்பி தஞ்சைக்கு ஓடினார். சென்னம்மா ராணி பெரும் கப்பத்தை ஔரங்கசீப்பூக்கு கட்ட வேண்டியிருந்தது.
நாயக்க அரசுகளின் வரலாற்றில் குலப்பூசல்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. உண்மையில் விஜயநகரத்தை வீழ்த்தியதே குலப்பூசல்கள் தான், அந்தக்கால அரசியலை வைத்து இப்பூசல்களைப்புரிந்து கொள்ளலாம். நாயக்கர்கள் தொல் சிறப்பு கொண்ட அரசகுடியினர் அல்ல. மத்திய ஆந்திர நிலத்திலும் வடக்கு கர்நாடகத்திலும் வாழ்ந்திருந்த பல்வேறு மேய்ச்சல்நில மக்கள் காலப்போக்கில் போர்க்குலங்களாக மாறி சிறு அரசுகளை அமைத்தனர். அவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதே நாயக்கர்பேரரசு.
அதற்குக் காரணம் அன்றைய அரசியல்சூழல். 1311ல் மாலிக்காபூரின் பெரும்படை வந்து தெற்கு நிலத்தின் அனைத்து அரசுகளையும் அழித்து சூறையாடி ராமேஸ்வரம் வரைக்கும் வந்து மீண்டது. புகழ் பெற்றிருந்த அனைத்து மன்னர் குலங்களும் அழிக்கப்பட்டன. அந்த இடைவெளியை நிரப்பியபடி எழுந்து வந்தது நாயக்கர்களின் அதிகாரம். இஸ்லாமிய ஆட்சியின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக வேறு வழியில்லாமல் ஒருங்கிணைந்து அவர்கள் விஜயநகரத்தை உருவாக்கினர்.பொது எதிரி வலுவாக இருந்தவரைத்தான் அவர்கள் ஒற்றுமையுடன் இருந்தனர். நாயக்கர்களின் ஆட்சிமுறையே மையத்தில் பலவீனமான ஒர் இணைப்பும் தனியலகுகளின் சுதந்திரமும்தான்.
அவ்வொருங்கிணைப்பை நிகழ்த்தியதில் சிருங்கேரி மடத்தின் தலைவராக இருந்த வித்யாரண்யர் எனும் மாதவரின் பங்கு பெரும் முக்கியத்துவம் கொண்டது. துங்கபத்ரா கரையில் இருந்த ஆனைக்குந்தி என்னும் சிற்றரசின் ஆட்சியாளர்களான ஹரிஹரும் புக்கரும் துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தை அமைத்தனர். மெல்ல பிற நாயக்கர்களையும் சேர்த்துக்கொண்டு பேரரசாக ஆயினர்.
ஆனால் இத்தகைய பேரரசுகளில் முதன்மை அரசகுலம் மிகத் தொன்மையானதாகவும். பிறர் எவருக்குமில்லாத தொன்மங்களின் பின்புலம் கொண்டதாகவும் இருக்கும்நிலையில் மட்டுமே அதிகாரப் பூசல்கள் மிஞ்சிப்போனால் அக்குடும்பத்துக்குள் மட்டுமே நிகழும்படி இருக்கும். பிற சிறு அரச குலங்களைச் சேர்ந்த எவரும் பேரரசருக்கு எதிராக பூசலிடமாட்டார்கள். பிறரை மக்களும் மற்ற சிற்றரசர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே காரணம். ஆதிக்கப்பூசலைக்கூட ஒரு அரசகுல வாரிசை முன்வைத்தே செய்தாகவேண்டும்.
உதாரணமாக சோழ அரசகுலம் தொன்மப் பின்புலம் கொண்டது. முற்காலச் சோழர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே தமிழகத்தில் பூம்புகாரையும் உறையூரையும் தலைமையாகக்கொண்டு ஆண்டவர்கள். இருநூற்றைம்பது ஆண்டு காலம் களப்பிரர் ஆட்சியில் சோழர்குலம் சிதறடிக்கப்பட்டாலும் கூட சோழ அரசகுலம் அதன் குருதித் தூய்மையுடன் எப்போதும் பேணப்பட்டது. ஆகவே மீண்டும் விஜயாலய சோழன் வழியாகச் சோழ அரசகுலம் தமிழகத்தில் அரசியல் விசையாக எழுந்து வந்தபோது அவர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக எந்தக் குரலும் எழவில்லை. இறுதியாக 1279ல் பாண்டியர்களால் தோற்கடிக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்படும் வரை சோழ அரசகுலத்திற்கெதிரான பூசல்கள் எதுவும் சோழப்பேரரசுக்குள் வரவேயில்லை.
மாறாக ஹரிஹரர்- புக்கருக்குப் பின் புக்கரின் மைந்தர் குமார கம்பணரின் காலத்திலேயே அவருக்கெதிராக பிற நாயக்கச் சிறுமன்னர்களின் எழுச்சிகளும் உட்சதிகளும் நிகழத்தொடங்கின. நாயக்க அரசர்களில் மிகப்பெரும் வல்லமை கொண்டவராகிய கிருஷ்ணதேவராயருக்கெதிராகவே அவருடைய உயிர் நண்பராகிய நாகமநாயக்கர் அதிகாரக் கிளர்ச்சியை தொடங்கினார். கிருஷ்ண தேவராயரின் படைகளுடன் வந்து மதுரையைக் கைப்பற்றிய அவர் கிருஷ்ண தேவராயருக்கெதிராகவே மதுரையை தனி நாடாக அறிவித்தார். நாகம நாயக்கரின் சொந்த மகனாகிய விஸ்வநாத நாயக்கரை அனுப்பி கிருஷ்ண தேவராயர் மதுரையை வென்றார்.
விஸ்வநாத நாயக்கருக்கே மதுரையை அளித்து அவர் அதை தனி நாடாக ஆண்டு கொள்ளலாம் என்று கிருஷ்ண தேவராயர் அனுமதி அளித்ததாக வரலாறு சொல்கிறது. அதன்வழியாக அவர் மாபெரும் எதிரி ஒருவர் உருவாகாமல் தடுத்தார். கிருஷ்ண தேவராயரின் மகன் திருமலைராயர் அவருடைய அமைச்சராகிய சாளுவ திம்மராசுவால் கொல்லப்பட்டார். அக்கொலை விஜயநகர சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தையே அழித்தது.
நாயக்கர்கள் என்று நாம் பொதுவாக சொன்னாலும் கூட அவர்கள் ஒரு ஜாதியோ ஒரு குலமோ அல்ல. நாயக்கர்கள் என்றால் படை வீரர்கள் என்றே பொருள். உள்ளே காப்பு, கம்மா, கம்பளர் போல பல ஜாதிகளும் ஆரவீடு, கொண்டவீடு போன்ற குலங்களும் உண்டு. வெளியே இருந்து கொண்டு அந்தப்பெரும் தொகுதியின் உட்பிரிவுகளைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஓரளவுக்கு சு.வேங்கடேசனின் காவல் கோட்டத்தில் இவை விளக்கப்பட்டுள்ளன.
கோட்டைக்குள் சென்று வறண்டு செந்நிறம் இளவெயிலில் பூத்துக் கிடந்த மலைச்சரிவில் ஏறி பீரங்கி மேடையில் சென்று அமர்ந்தோம் இவ்வருடம் அனேகமாக மழையே இப்பகுதியில் பெய்யவில்லை. இந்தியாவில் அதிகமாக மழைபெறும் நிலங்களில் ஒன்று மேற்குக் கடற்கரை. நூறாண்டுகளுக்குப்பின்பு தான் இந்த வறட்சி வந்திருக்கிறது புற்கள் கருகி பாலைவன தோற்றம் காட்டியது. அனைத்து புகைப்படங்களிலும் பசுமையின் வெவ்வேறு அழுத்தங்களானதாக இந்நிலப்பகுதி பதிவாகியிருக்கிறது. ஒருவேளை இக்காட்சியை மீண்டும் காண இன்னொரு நூறாண்டுகள் ஆகக்கூடும்.
இருந்தும் தொலை தூரம் வரை தெரிந்த மரங்களும் காடுகளும் பசுமையையே காட்டின. இங்கு தொல் பொருட்கள் எதுவுமில்லை. தொல்லியல் துறையின் காவலோ பேணலோ இல்லை. ஒரு உடைந்த பீரங்கிமட்டுமே அக்காலத்தின் அடையாளமாகக் கிடக்கிறது. சென்ற காலத்தை அசைத்துப்பார்க்க முடியுமா என்று செல்வேந்திரனும் ராஜமாணிக்கமும் முயன்றனர். சற்று நேரத்தில் திரும்பி வந்து “ஒரு அணுகூட அசைக்க முடியவில்லை அண்ணா” என்றார் ராஜமாணிக்கம். என்னால் அசைக்க முடிந்திருந்தால் கூறுகெட்ட அரசர்களுக்கு பதிலாக சென்னம்மாஜியையும் ராணி மங்கம்மாளையும் ராணி ருத்ரம்மாவையும் மட்டும் இந்நாட்டை ஆளச்சொல்லியிருப்பேன் என்று எண்ணிக்கொண்டேன்.