முதற்சுவை:கடிதங்கள்

அன்புள்ள திரு. ஜெயமோகன்,
‘பூதம்,’ ‘முதற்சுவை’: இரண்டையும் வாசித்து முடித்த பின்னும் மனம் நெகிழ்ந்தபடியிருக்கிறது. ‘பூதத்தைப்’ பற்றித் தனியாக எழுதுகிறேன்.
 
‘முதற்சுவை’ முதலில்.
சீதையின் கதையை ராமாயணமாக உங்கள் அம்மா சொல்லிய போது பெண்கள் கண்ணீர் விட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வகைவகையான ராமாயணங்கள் தழைத்தோடியபடி நம் மண் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்ட புராணக் கதைக்கட்டங்களில் அவைக்கேற்ற உணர்ச்சிகளை நாம் வெளிப்படுத்த பழகியிருக்கிறோம் என்பதையும் தாண்டியது அந்தக்கண்ணீர் என்று நினைக்கிறேன்.  இங்கே வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சீதையைப் பற்றிய வகுப்பொன்றை சென்ற வருடம் நான் நடத்துகையில் இதேபோன்ற அனுபவம் நேர்ந்தது. வால்மீகியிலிருந்து, துளசிதாசரிடமிருந்து, கம்பனிடமிருந்து, அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று கலந்துகட்டிச் சொல்லிக்கொண்டிருந்தேன். சீதையின் அக்னிப்பிரவேசம்தான் அன்றைக்குப் பாடம். மாணவர்கள் நிழற்படமாக என்றைக்குமில்லாத அமைதியோடு கவனித்துக்கொண்டிருந்தார்கள். எப்போதும் நான் பேசி முடிக்கும் முன்பே விவாதத்தை வைப்பவர்கள் என் மாணவர்கள்.  ஏன் பேசாமல் இருக்கிறார்கள் என்ற குழப்பத்தோடேயே தொடர்ந்தேன். வகுப்பு முடிந்தவுடன் வெள்ளைப்பலகையைத் துடைத்துவிட்டு திரும்பிப்பார்த்தபோது, ஒரு அமெரிக்கப் பெண் தன் இரு கைகளுக்குள் முகத்தைப் புதைத்தபடி அழுதுகொண்டிருந்தாள். எனக்குப் புரியவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்து அவளைக்கேட்டபோது, கண்கள் சிவந்து குமுறி, “ஏன் சீதாவுக்கு இப்படி நடந்தது?” என்று கேட்டாள். “இல்லை, இல்லை, இது அநியாயம்,” “ராமன் நல்ல அரசன், நல்ல ஆண்மகன் இல்லை,” அழுகையை இடையிட்டு இன்னும் ஏதேதோ சொன்னாள். “ஆமாம், அநியாயம் தான்” என்றேன். வேறென்ன சொல்ல முடியும்? சீதையின் கதை இந்தியக் கலாச்சார அறிமுகம் இல்லாத ஒருவரை இந்த அளவுக்கு கலங்கடிக்கும் என்பது எனக்கு வினோதமாக இருந்தது. நான் அதை எதிர்பார்க்கவில்லை. அடுத்த வார வகுப்பில், புதுமைப்பித்தனின் சாபவிமோசனத்தை படித்தோம். அகலிகை மீண்டும் கல்லாகி ராமனைப் பழிவாங்கிவிட்டது அந்தப் பெண்ணுக்கு நிம்மதி தந்திருக்கும். அன்றைக்கு வகுப்பு முடிந்தபின் அந்தப் பெண் முகம்மலர்ச்சியோடு எனக்கொரு தழுவலைத் தந்துவிட்டுச் சென்றாள்.
அன்புடன்
பெருந்தேவி

அன்புள்ள பெருந்தேவி,

நலம்தானே? நாம் ஒருமுறை சந்தித்துக் கொண்டதும் நீங்கள் கன்யாகுமரி நாவல் சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொன்னதும் ஞாபகம் வருகிறது. சீதையை ஒரு கதாபாத்திரம் என்பதை விட ஓர் ஆழ்படிமம் என்று சொல்வதுதான் சரி. சொல்லிச் சொல்லி வளர்த்தெடுத்த கதாபாத்திரம் அது. சீதையை காவியகர்த்தர்கள் மட்டுமல்ல எளிய மக்களும் செதுக்கி வளார்த்திருக்கிறார்கள். எத்தனையோ பேரின் கண்ணீர் கலந்த ஓவியம்போல. என்னால் அம்மாவையும் சீதையையும் பிரித்துப் பார்க்க முடியாது– கடைசி அக்னிப்பிரவேசம் வரை. பொதுவாக ஆழ்படிமங்களுக்கு  ஓர் உலகளாவிய தன்மை உண்டு என்பது என் எண்ணம். காரணம் அவை மானுட வாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்றை தீண்டுகின்றன அல்லவா?
ஜெ

 

அன்புள்ள ஜெ,

உங்கள் அம்மாவைப்பற்றி நீங்கள் தொடர்ச்சியாக எழுதி ஒரு முழுமையான பார்வையினை அளித்துள்ளீர்கள். அம்மாவின் இலக்கிய ஞானமும் உணர்ச்சிவசப்பட்ட தன்மையும் மட்டுமல்லாமல் பிள்ளைகள் குடும்பம் எல்லாவற்றின் மீதும் அவர்கள் ஒருவகையான விட்டேத்தியான மனநிலையுடன் இருந்திருப்பதும் இதன்மூலம் தெரியவருகிறது. அதேசமயம் அப்பா உணர்ச்சிபூர்வமான முரடராக இருக்கிறார். எப்போதும் சண்டைக்குத்தயாராகவும் அதேசமயம் அன்புக்குக் கட்டுப்பட்டவராகவும் காணப்படுகிறார். ஒரு பெரிய நாவலில் உள்ள கதாபாத்திரங்களை வாசிப்பதுபோல இருக்கிறது. எல்லா நாவல்களிலும் கதாசிரியனின் சுயசரிதை உண்டு என்று சொல்வார்கள். அது உண்மை என்று எண்ணுகிறேன், ஆனால் உங்கள் கதைகளில் அம்மாவைப்பற்றிய சித்தரிப்புகள் இருப்பதுபோலவே தெரியவில்லை. ஏற்கனவே வாழ்க்கையிலெ ஒரு முறை என்ற கட்டுரை தொகுதியில் கன்யாகுமரியில் என்ற கதையில் அம்மாவை நன்றாக சித்தரித்திருந்தீர்கள். அதையும் இந்தக்கட்டுரைகளுடன் சேர்த்து வாசித்துக் கொண்டேன்.

மஞ்சுளா
சென்னை

அன்புள்ள ஜெயமோகன்

எனக்கு உங்களை தனிப்பட்ட முறையிலே பழக்கமில்லை என்றாலும் உங்கள் கட்டுரைகளையும் கதைகளையும் படிப்பதன்வழியாக நீங்கள் மிகவும் நெருக்கமானவர் என்ற எண்ணம் ஏற்பட்டது. உங்கள் அம்மா அம்மா தங்கை எல்லாரையும் நன்றாக தெரியும் என்று இப்போது தோன்றுகிறது. நல்ல எழுத்தின் வலிமையே இதுதான் என்று நினைக்கிறேன். கொஞ்ச நாளாக அடிக்ட் போல உங்கள் எல்லா எழுத்துக்களையும் படித்துக்கொண்டு வருகிறேன். தினமும் அலுவலகம் வந்ததும் செய்கிற முதல்வேலையே உங்கள் கட்டுரைகளைப் படிப்பதுதான். அம்மாவைப்பற்றி நீங்கள் எழுதியவை எல்லாமே மிகச்சிறப்பானவை

 

55

அன்புள்ள ஜெ,

மனிதர்களை நாம் புரிந்துகொள்ள அவர்களை இழக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணம் உங்களுடைய பூதம் போன்ற கட்டுரைகளை வாசிக்கும்போது தோன்றிக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நம்முடன் வாழும்போது நாம் அவர்களை நம்முடைய தேவைகளைச் சார்ந்து மட்டும்தான் நினைக்கிறோம். நாம் அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறோம், அவ்வளவுதான். இப்போது என் அம்மாவையும் அப்பாவையும் பற்றி எண்ணிக்கொன்டேன். அவர்கள் என் மீது வைத்திருந்த பிரியம் மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. அந்த பிரியத்துக்கு அப்பால் அவர்கள் யார் எப்படிப்பட்ட்டவர்கள் என்பதே எனக்குதெரியவில்லை. அவர்களின் விருப்பு வெறுப்புகள், அவர்களின் நட்புகள் எதுவுமே தெரியவில்லை. நாம் அனைவருமே இப்படி நம்முடைய பெற்றோர் விஷயத்தில் குருட்டாகவே இருக்கிறோம் என்ற எண்ணம் உங்கள் கட்டுரையை படிக்கும்போது ஏற்பட்டது. அவர்களை நாம் சென்ற காலத்தைச் சேர்ந்தவர்களாக எண்ணி புறக்கணித்துவிடுகிறோம். மிக்க குற்றவுணர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உங்கள் கட்டுரைகளைக்கொன்டு அடைந்தேன்

 ‘சுவை’ராஜ்

துவாரபாலகன்

முதற்சுவை

வேராழம்

பூதம்

தீ

 

ராஜ்கண்ணன்

முந்தைய கட்டுரைகல்வித்துறை ஓரு விவாதம்
அடுத்த கட்டுரைதீ: மேலும் கடிதங்கள்