கேள்வி பதில் – 33, 34

தினம் தினம் புதிதாகக் கவிஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதா? புதிதாதக் கவிதை எழுதுபவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயங்கள் என்ன என்ன?

— ஹரன்பிரசன்னா.

கண்டிப்பாக ஆரோக்கியமானது. ஒரு இயக்கநிலைச் சமூகத்தில் இலக்கியம் பலவகையிலும் வந்தபடியே இருக்கும். அவற்றில் மிகப்பெரும்பாலானவை சாதாரணமாக இருந்தாலும் அது அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான படைப்பூக்க நிலையைக் காட்டுகின்றது. அப்படிப்பட்ட ஏராளமான சாதாரணமான கவிதைகளின் பின்புலத்தில் அவற்றின் சாரத்தை உறிஞ்சிக் கொண்டு, அவை உருவாக்கும் படைப்பாக்கப் பின்புலத்தை சார்ந்துதான் நல்ல ஆக்கங்களும் உச்சகட்ட ஆக்கங்களும் உருவாக இயலும். ஒரு கபில்தேவ் உருவாக ஒட்டுமொத்த ஹரியானாவிலும் கிரிக்கெட் மோகம் பரவி, எண்ணற்ற இளைஞர்கள் ஆடிக் கொண்டேயிருக்கவேண்டியுள்ளது. கவிதை ஒரு சமூகத்தின் மூச்சாக இருக்கவேண்டும். எங்கும் எதிலும் கவிதை இருக்கவேண்டும். கொல்லனும் கணியனும் கவிபாடிய சங்க காலகட்டமே நம் மரபின் உச்சம்.

மேலும் பலசமயம் எழுத்தின் பல்வேறுவடிவைக் கையாளப்போகிறவர்கள் முதலில் கவிதை மூலம் மொழிக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது. சிலசமயம் சிறிய அளவில் வாழ்வின் சில துளிகளை மட்டும் வெளிப்படுத்தும் சாதாரண மக்கள் சில நல்ல கவிதைகளை ஆக்கக் கூடும். கவிதை அதன் உடனடித்தன்மை காரணமாக அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

கவிதையின் மூன்று விதிகள்:

1] கவிதையைச் ‘செய்யக் கூடாது’, அது நிகழக்கூடிய ஒன்று. எந்த இடம் உங்களை மீறி நிகழ்ந்ததோ அதுமட்டுமே நல்ல கவிதை. கவிதை தந்திரமான சொல்லாட்சியாக, சமத்காரமான கூற்றாக, மொழியலங்காரங்களாக, திட்டவட்டமான கருத்தாக இருக்காது. அது மொழியில் நிகழ்ந்த ஒரு நுட்பமான அந்தரங்க வெளிப்பாடாகமட்டுமே இருக்கும்.

2] கவிதை நேர்மொழியில் பேசுவதில்லை, கவிதைக்கான மீமொழியில் [meta language] பேசுகிறது. கவிதை அதன் நேரடிப்பொருளிலேயே தன்னை சொல்லிமுடித்துவிட்டதெனில் அது கவிதையே அல்ல. அப்படிச் சொல்ல முடியாதவற்றை சொல்வதற்கான ஊடகம் அது. கவிதை ஒரு கலாசாரத்தின் ஆழ்மனதில் உள்ள குறியீட்டுத்தளத்தால் அர்த்தப்படுத்தப்படும் ஒரு மொழிவெளிப்பாடு.

3] கவிதையின் அடிப்படை அலகு சொல். மற்ற மொழிவடிவங்கள் சொற்றொடர்களாக எழுதப்படுகின்றன, வாசிக்கப்படுகின்றன. கவிதை சொற்களாக நிகழ்வது. சொற்களுக்கு நடுவேதான் அதன் வாசக இடைவெளிகள் உள்ளன. நவீன கவிதை மட்டுமல்ல சங்கக்கவிதையில் கூட.

-*-
 

வேலை செய்வேன் ஆலையிலே
வாங்கிக் கொள்வேன் ஒரு சைக்கிள்
கழற்றி வைப்பேன் செயின் மட்டும்
ஒரு நாள் வருவேன் காரினிலே

– என்பது போன்ற வரிகளை இன்றைய கவிதை பற்றிய புரிதல்களின் அடிப்படையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?

— வாசுகி வில்வநாதன், சென்னை.

மேலேசொன்னவரி நேரடியாக சொல்லப்பட்ட எளிமையான ஒரு கருத்து மட்டுமே. கவிதை அல்ல.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 29, 30, 31, 32
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 35