சங்க இலக்கியத்தில் பக்தி பற்றி சீனுவின் கடிதமும் அதற்கு உங்கள் பதிலையும் பார்த்தேன். சடங்குகள் நிறைந்திருந்த காலகட்டம், ஞானத்திற்கு முக்கியத்துவமளித்த காலகட்டம். பக்தி மிகுந்திருந்த கால கட்டம் என்று ஆன்மீக வரலாறை பிரித்தறிய அது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இம்மூன்றும் எவ்வொரு கால கட்டத்திலும் கலந்து இருந்திருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. வேள்விகள் சடங்குகளுக்கு முக்கியம் அளித்து, ஞானம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், பக்தியில் உருகி வழிபடாமல் என இருப்பவர்கள் எந்தக் காலத்திலும் இருந்திருப்பார்கள்.
இக்காலத்திலே கூட கோயில்களில் பூசை நியமனங்களில் ஈடுபட்டிருக்கும் பூசகர்கள் இத்தகையவர்களாக எனக்குத் தோன்றுகிறார்கள். தினமும் தெய்வத் திருவுருவை அலங்கரித்து பூஜைகளை நியமம் தவறாமல் செய்பவர்கள் அதை ஒரு இயந்திர கதியில் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கடவுளைப்பற்றிய கதைகளை சொல்வார்களே தவிர அதன் அடிப்படையில் இருக்கும் ஞானத்தை அவர்கள் அறிந்திருப்பதில்லை. அதில் ஆர்வம் காட்டுவதுமில்லை. அத் தெய்வத்தை அவர்கள் உணர்ச்சிபூர்வமாக வழிபடுவதற்கான எவ்வித பாவனையும் அவர்கள் உடல்மொழியில் தென்படுவதில்லை.
தொலைக்காட்சியில் ஒரு இந்து மதப் பெரியவர் நிறைய விக்கிரங்களை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் பூஜை செய்வதை காண்பிப்பார்கள். ஒரு தச்சுத் தொழிலாளி கவனமாக பணி செய்வதைப்போன்றுதான் எனக்கு தோன்றும். அவர் செய்கையில் பக்தி சிறிதுகூட வெளிப்படாதிருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். எப்போதாவது கோயிலுக்கு வரும் பக்தனில் தென்படும் பக்திகூட பூசகரில் வெளிப்படுவது குறைவுதான். அதே நேரத்தில் அவருக்கு அவர் செய்யும் சடங்குகளில் நியமங்களில் நம்பிக்கையோடுதான் இருக்கிறார்.
ஆனால் பக்தர்கள் என்பவர்கள் மனமுருகி கடவுளை ஒரு ஆண்டானாக, காதலனாக, உறவாக, வழிகாட்டியாக என பலவாறு உருவகித்து அந்த உருவகத்தை உளப்பூர்வமாக நம்பி நேசித்து வழிபடுகிறார்கள். இது சடங்குகள் செய்வதை விட உயர்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. சடங்குகள் என்பவை குறியீடுகள். ஒருவேளை அச் சடங்குகளைச் செய்பவர்களின், காண்பவர்களின் ஆழ்மனதில் விளைவுகளை ஏற்படுத்தலாம். நிர்க்குண பரப்பிரம்மத்தை சகுண பிரம்மமாக உருவகித்து வழிபட்டு பக்தியில் உருகி அதன் மூலமாக பரப்பிரம்மத்தை அறிந்துகொள்ளும் வழிமுறை எப்போதும் இருந்து வந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். பரப்பிரம்மம் என்ற ஒரு பிரம்மாண்ட ஆலமரத்தின் விழுதுகளே சகுண பிரம்ம வழிபாடுகள். அதில் ஒரு விழுதினைப் பற்றிக்கொண்டு ஏறி பரப்பிரம்மத்தை அடைவது பக்தி நெறியில் இறுதி இலக்காக இருக்கிறது.
சடங்குகள் மூலம் வழிபடுவது நியமங்களை கடைபிடிப்பது பொது மக்களால் முடியாத ஒன்றாக இருந்திருக்கும். ஞானத்தின் பாதை என்பது அறிவுக் கூர்மையுடையோருக்கான வழி மற்றும் அவ்வழி எப்போதும் இகத்தை துறத்தலை முதல் படியாக கொள்வது. ஆகவே குடும்பத்தில் வாழ்பவர்கள் சாதாரண பொதுமக்கள் பெரும்பாலும் பக்தியின் வழியே ஆன்மீகத்தில் ஈடுபட்டு வந்திருப்பார்கள். ஆகையால் ஆன்மீகத்தில் எப்போதும் பக்திவழியே பெரும்பான்மையினரால் பின்பற்றப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். அவர்களே ஒரு பக்கம் வேள்விகள் போன்ற சடங்குகளை பின்பற்றுபவர்களையும், மறுபக்கம் பல்வேறு தத்துவங்கள வழி செல்லும் ஞான யோகிகளையும் புரந்து இருப்பார்கள். அப்படியென்றால் பண்டைய நூல்களில் இலக்கியங்களில், பக்திவழிபாடு குறைவாகவே சொல்லப்பட்டிருப்பது ஏன் என தெரிய வேண்டியிருக்கிறது. வேள்விகள் சடங்குகள், அவற்றுக்கான நியமங்கள் பிழையில்லாமல் பின்பற்றப்படவேண்டியவை. ஆகவே அவை வேதங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. தத்துவங்கள் ஞான அறிதல்கள் அறிவியல் உண்மைகள் போல மிக அரிதான நபர்களால், கண்டுபிடிக்கப்பட்டு வெகு சிலரால் படித்து புரிந்து பின்பற்றப்பட்டவை. அவை கால ஓட்டத்தில் மறைந்துபோகாமல் இருக்க அவை எழுதிவைக்கப்பட்டு, சீடர் பரம்பரைகள் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
ஆனால் உளம் நெகிழ்ந்து உருகும் பக்தி என்பது ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க உணர்ச்சி என ஒவ்வொருவருக்கும் தனித் தனியானது. இப்படி பலரின் பக்தி ஒன்றிணையும்போது அது கூட்டு வழிபாடு என மாறுகிறது. அவர்களின் கூட்டுபக்தி ஆடல் பாடல் போன்ற கலைகளின் மூலம் அப்போது வெளிப்படுகிறது. அவையே பக்தியின் ஆவணமாக ஆகின்றன. கலைகள் வளர்ந்து நுண்மையடையும்போதுதான் அதில் சட்டகங்கள் உருவாகி அவை வழிவழியாகப் பயிலப்பட்டு நீடித்து நிற்கின்றன. அந்நிலை வரும் வரை அவை நாட்டார் கலையாக இருக்கின்றன.
நாட்டார்கலைகள் பெரும்பான்மையினரால் ரசிக்கப்பட்டாலும் அது காலத்தை வென்று இருப்பதில்லை. அவை செவ்வியல் கலைகளாக பரிணாமம் கொண்டபிறகுதான் அதன் வரலாறு ஆரம்பிக்கிறது. எப்போதும் இருக்கும் பக்தி முதலில் நாட்டார் கலைகளில்தான் பதிவாகிறது. அந்த நாட்டார் கலைகள் செவ்வியல் கலைகளாகியவுடன், பக்தி வரலாறில் பதிவாகிறது. அனைத்து நுண் கலைகளிலும் முதன்மையாக இருக்கும் பேசுபொருள் பக்திதானே இருக்கிறது. சிற்பம் ஓவியம் இசை நாடகம் என அனைத்திலும் பக்தியே முதன்மையானது. ஆனால் இலக்கியம் என்பது எப்போதும் அறிவு சார்ந்த நபர்களுக்கானது. பக்தியை இலக்கியம் கையில் எடுத்துகொண்டது பிற்காலத்தில் என்பதால் அதுவரை பக்தி மக்களிடம் பெருமளவில் இருந்திருக்கவில்லை எனச்சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன்.
மற்றொன்று பாரத நாட்டில் பொது மக்கள் பலதெய்வ வழிபாட்டில் எப்போதும் இருந்துவந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் என்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் இஷ்ட தெய்வம் என்றும் பலப்பல தெய்வங்கள் இருந்திருக்கின்றன. த்வைதம், அத்வைதம், தூய வைணவம், தூய சைவம், சமணம், புத்தம் போன்றவை பொது மக்களின் தலைகளுக்கு மேலாகவே இருந்திருக்கும். நாடெல்லாம் சமணம் அல்லது புத்தம் பரவிய காலத்திலும் சாதாரண மக்கள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் அவரவர் தெய்வத்தை வணங்கிக்கொண்டு தான் இருந்திருப்பார்கள். விவாதம் நடத்தி வேறு மத, தத்துவ பிரிவினரை வெல்லுதல் போன்றவை எல்லாம் அறிவு தேடல்கொண்ட வெகு சிலரிடம் மட்டுமே இருந்திருக்கும். ஒரு பிரிவிலிருந்து மறு பிரிவுக்கு மாறுவது எல்லாம் இத்தகையர்வகளிடம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். பொது மக்களின் இந்த பலதெய்வ பக்தி என்பது கடல் என்று கொண்டால் அதன்மேற்பரப்பில் தோன்றியும் மறைந்தும் மேலெழுந்தும் தாழ்ந்தும் இயங்கும் அலைகள் போன்றவையாக மதங்களின் எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் இருந்திருக்கும். அதனால் சமணர் எழுதிய பொதுமக்கள் பற்றிய சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் மக்கள் போற்றி வணங்கிய தெய்வங்களை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
தொகுத்துப்பார்த்தால், பக்தி என்பது எப்போதும் இருந்துகொண்டே வந்திருக்கிறது. ஞான வழியிலும் வேள்விகள் சடங்குகள் போன்ற கர்மவழியிலும் ஈடுபடுவோர் சிலர்தான். ஆனால் அவர்களின் ஆக்கங்கள் மட்டும்தான் வரலாற்றில் இடம் பெறுபவை என்பதால் இங்கிருந்து நாம் காண்கையில் அந்த காலங்களில் பக்தி என்பதே இல்லாதது போன்று தெரிகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றோர் பக்தியை இலக்கியத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தபிறகுதான் வரலாற்றின் கண்களில் பக்தி தென்படுகிறது என்பதால் அதுவரை பக்தி பொதுமக்களிடம் முதன்மையாக இருக்கவில்லை என்று சொல்லமுடியாது எனக் கருதுகிறேன்.
தண்டபாணி துரைவேல்