ஷிமோகா செல்லும் வழியில் தலக்காடை பார்த்துவிட்டு போகலாம் என்று கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். தலக்காடு பற்றி நான் தி.ஜானகிராமனின் நடந்தாய் வாழி காவேரி நூலில் முன்னால் படித்திருக்கிறேன். காவிரியின் பிறப்பிடம் முதல் கடலணைவிடம் வரை சிட்டியுடன் சேர்ந்து ஜானகிராமன் நடத்திய பயணத்தின் பதிவு அது. தமிழில் பயண இலக்கிய நூல்களில் முக்கியமான ஒன்று.
தலக்காடு ஒரு பாலைவனத்தை நினைவுறுத்தும் நிலப்பகுதி என்று ஜானகிராமன் வர்ணித்திருக்கிறார். மாபெரும் மணல் மேடுகள், அதில் ஒரே ஒரு கோவிலின் மேல்நுனி மட்டும் தெரிகிறது. மேலும் பல கோவில்கள் மணலில் மூழ்கிக் கிடக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது ஒரு தொன்மமாக மட்டுமே கூட இருக்கலாம் என்று ஜானகிராமன் குறிப்பிடுகிறார். அதன் பிறகு சென்ற நாற்பதாண்டுகாலத்தில் அனேகமாக அனைத்துக் கோயில்களும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுவிட்டன.
தலக்காட்டுக்கு மதியவேளையில் சென்று சேர்ந்தோம். இளமழை தூறிக்கொண்டிருந்தது. வளையோடுகள் வேய்ந்த பழைய வீடுகள் கொண்ட தெரு ஒரு காலமயக்கத்தை அளித்தது. திண்ணைகள் தூண்கள் இடைநாழிகள். கார்கள் நிறைய நின்றன. நீள்விடுமுறைநாட்கள். அங்கு ஒரு பழையபாணி கட்டிடத்தில் இயங்கிய உணவகத்தில் கர்நாடகச் சுவை கொண்ட வீட்டுச்சாப்பாட்டை உண்டோம். இப்பயணம் முழுக்கவே சாதாரண விடுதிகளில்கூட சோறு சுவையாக இருந்தது. நாம் தமிழகத்தில் பொன்னியரிசி சாப்பிடுவதை ஒரு உயர்குடித்தனமாக எண்ணி சுவையற்ற சக்கையான வெண்ணிறச் சோற்றை உண்டுகொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது
ஒரு வழிகாட்டியை அமர்த்திக்கொண்டோம். தலக்காட்டில் பெரும்பாலான கோயில்கள் தரை மட்டத்திலிருந்துமுப்பதடி ஆழத்தில் அமைந்துள்ளன. மிகப்பெரும் பொருட்செலவில் மணலை அகற்றி ஆலயங்களை மீட்டு செப்பனிட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடியும்போது பெரும்பாலான ஆலயங்கள் பாதி வரை மணலில் மூழ்க மீண்டும் அகழ்ந்து அவற்றை எடுக்கிறார்கள்.
இங்கு இந்த மணல் மேடு உருவானதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். காவேரி இங்கே U வடிவில் ஓடுகிறது. அந்த வளைவின் நடுவே உள்ளது தலக்காடு. மண்ணுக்கடியில் உள்ள பாறைகளின் விரிசல்களால் இவ்வாறு நதிகள் வளைகின்றன. இது ஆழமான சுழிகளை நதிநீரில் உருவாக்குகிறது. இந்தியா முழுக்கவே எங்கெல்லாம் ஆறு தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறதோ அவ்விடமெல்லாம் புனிதத்தலமாகக் கருதப்படுவதைக் காணலாம். தலக்காடு வரலாற்றுக்காலத்திற்கு முன்னால் இருந்தே புனிதத்தலமாக இருந்து வந்தது
குடகில் பிறந்த காவேரி நீண்ட சரிவுநிலத்தில் ஒழுகி வருகிறது. இங்கே காவேரி தேங்கி சுழன்று விரைவு குறைந்தமையால் அதில் மணல்மேடுகள் உருவாயின. காலப்போக்கில் காவேரியின் மேல்பகுதியில் ஊர்கள் உருவாகி பாசனம்பெருகி ஆற்று நீரொழுக்கு குறைந்தது. மணல்மேடுகள் காற்றில்பறக்கலாயின. அவை இங்குள்ள காற்றுச்சுழிப்பால் தலக்காட்டில் பெய்து மூடின
இங்குள்ள தொன்மம் வேறுவகையானது. தலக்காடு கடைசியாக விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின்கீழ் இருந்தது. 1610 ல் விஜயநகரத்தின் பிரதிநிதியாக ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து திருமலைராஜன் என்பவர் இப்பகுதியை ஆண்டார். இவருக்கு ஸ்ரீரங்க ராயர் என்ற பெயரும் உண்டு. மைசூரின் ஆட்சியாளராகிய உடையார் குலம் அவர்களுக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்தது. திருமலைராஜா முதுகில் ராஜபிளவைக் கட்டி வந்து இறுதிக்காலத்தில் துன்புற்றார். ஆட்சிப்பொறுப்பை உடையாரிடம் கொடுத்துவிட்டு தலக்காட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் தங்கி வழிபடுவதற்காக வந்தார்.
உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தை கைப்பற்றி அரசரானார். அப்போது விஜயநகரமும் வலுவற்றிருக்கவே தனிநாடாக தன்னை அறிவித்துக்கொண்டார். திருமலைராஜனின் மனைவி அலமேலம்மா ஊர் திரும்ப முடியாமல் தலக்காட்டிலேயே மாலங்கி என்னும் சிற்றூரில் தங்கிவிட்டார். ஆட்சிக்கு வந்த உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தின் ரங்கநாதருக்கும் ரங்கநாயகிக்கும் பெரிய பூசையைச் செய்து அவ்விழாவில் அரசக்கொலு வீற்றிருக்கத் திட்டமிட்டார். ஆனால் ரங்கநாயகியின் நகைகளை அலமேலு அம்மா தன்னுடன் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
அந்நகைகள் இல்லாமல் பூசை நடக்கமுடியாது. பூசையில் கொலுவீற்றிருப்பவரே ஸ்ரீரங்கப்பட்டினத்தின் அரசர் என்பது மரபு. நகைகளைக்கோரி அலமேலம்மாவுக்கு தூதனுப்பினார் உடையார். அலமேலம்மா ஒப்புக்கொள்ளவில்லை. அவரைச் சிறைப்பிடிக்க படைகள் அனுப்பப்பட்டன. அலமேலம்மாவும் படைகளும் காவேரியைக் கடந்து மறுபக்கம் செல்லமுயல்கையில் உடையாரின் படைகளால் வளைக்கப்பட்டன. அலமேலம்மா நகைகளுடன் காவேரியின் ஆழ்சுழியில் குதித்து உயிர்துறந்தார் எனப்படுகிறது.
அலமேலம்மா “தலக்காடு மண் மேடாகப் போகட்டும். மலாங்கி நீர்ச் சுழியால் அழியட்டும். மைசூர் ராஜ பரம்பரை வாரிசில்லாமல் போகட்டும்” என்று சாபம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் தலக்காடு மணல்மூடியது என்று தொன்மம். இதையொட்டி கன்னடத்தில் பலகதைகள் எழுதப்பட்டுள்ளன.
தல, காடா என்று இரண்டு வேடர்கள் வாழ்ந்ததனால் இப்பெயர் வந்தது என்று ஒரு தொன்மம் உள்ளது. அங்கிருக்கும் வைத்தியநாதர் கோவிலின் வாசலில் தலன் காடன் இருவர் சிலைகளும் அமைந்துள்ளன. ஆனால் தலக்காடு என்பதற்கான மூலச்சொல் பழைய பிராகிருத மொழி வார்த்தையில் இருந்து வந்தது. தாலவனா என்றுதான் இந்நிலம் பழைய கல்வெட்டுக்களில் சொல்லப்படுகிறது. பனைமரக்காடு என்று அதற்கு நேரடியான பொருள். இப்பகுதியின் மணல் தன்மையை வைத்துப்பார்த்தால் இங்கு பனைமரங்கள் மட்டுமே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கிராத மன்னர்கள் அல்லது காடவ மன்னர்களிடமிருந்து இந்த நிலம் கங்கர்களால் வெல்லப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் ஒரு சிறு பனைக்காடாக இருந்த இப்பகுதி கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கங்க மன்னர் ஹரிவர்மனால் தனது இரண்டாம் தலைநகரமாக ஆக்கப்பட்டது. கங்க மன்னர்களின் முந்தைய தலைநகரம் ஈரோட்டுக்கு அருகே இருக்கும் கஜல்ஹட்டி என்னும் ஊரில் அமைந்திருந்தது. மோயாறுக்கும் பவானிக்கும் நடுவே உள்ளது அன்று அவ்வூரின் பெயர் ஸ்கந்தபுரா.
அப்போது தமிழகம் களப்பிரர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது. களப்பிரர்கள் களப்பிர நாடு என சொல்லப்படும் மைசூர்ப் பகுதியில் இருந்து வந்து தமிழகத்தை ஆண்டவர்கள். களப்பிரர்களிடமிருந்து எழுந்த ஒரு கிளை அரசு தன் கங்கர்குலம் என்று சொல்லப்படுகிறது. சோழர்கள் தலையெடுத்தபோது கங்கர்கள் பின்வாங்கி தாலக்காட்டில் தங்கள் தலைநகரை அமைத்தனர்
11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் தலக்காட்டைக் கைப்பற்றினர். அதற்கு ராஜராஜபுரம் என்று பெயரிடப்பட்டது. சோழர்களிடமிருந்து ஹொய்ச்சாளர் தலக்காட்டை பிடித்தனர். ஹொய்ச்சாள அரசர் விஷ்ணுவர்த்தனர் இங்குள்ள முக்கியமான ஆலயங்களைக் கட்டினார். பின்னர் 15 ஆம் நூற்றாண்டில் இது விஜயநகர பேரரசின் ஆட்சிக்குச் சென்றது. அங்கிருந்து மைசூர் உடையார்களின் ஆட்சிக்குச் சென்று மணல்மூடி மறைந்தது.
தலக்காட்டை சரியாகப் பார்க்க முழுநாள் தேவைப்படலாம். நாங்கள் இரண்டுமணிநேரத்தில் ஐந்து மைய ஆலயங்களை மட்டும் பார்த்தோம். வைத்யநாதீஸ்வரர் ஆலயம், பாதாளேஸ்வரர் ஆலயம், மறலீஸ்வரர் ஆலயம், மல்லிகார்ஜுனர் ஆலயம், பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம். பல ஆலயங்கள் தரைமட்டத்திலிருந்து இறங்கிச்செல்லவேண்டிய ஆழத்தில் உள்ளன.
தலக்காடு வைத்யநாதீஸ்வரர் ஆலயத்தின் முகமண்டபம் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது என்று கல்வெட்டு சொல்கிறது. இங்குள்ள முக்கியமான ஆலயம் இது. வைத்யநாதர்கள் எங்குமுள்ளனர். நம்மூர் வைதீஸ்வரன் கோயில் முதல் இமாச்சலப்பிரதேசத்தில் நாங்கள் பார்த்த பேஜ்நாத் ஆலயம் வரை. வைத்யநாத் மருவி பேத்யநாத் ஆகி பேச்சுவழக்கில் பேஜ்யநாத். நோய்தீர்க்கும் லிங்கம். நோய் என்பது உடலுக்கும் உள்ளத்திற்கு மட்டும் அல்ல. பிறவியே ஒருநோய்தான் சைவமரபில். பிறவிப்பிணி மருத்துவன் சிவன்.
தலக்காட்டின் முக்கியமான ஆலயங்களில் ஒன்று கீர்த்திநாராயணர் ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் ராமானுஜரின் ஆணைப்படி ஹொய்ச்சாள அரசர் விஷ்ணுவர்த்தனரால் கட்டப்பட்டது. இங்கு ராமானுருக்குச் சிலை உள்ளது. 1991ல் தான் இவ்வாலயம் முழுமையாக மணலில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டது. ஹொய்ச்சாளக் கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று இவ்வாலயம். கல்லில் செதுக்கப்பட்ட ஒரு நகை.
மணலில் புதைந்த நகரம் எனக்கு விஷ்ணுபுரத்தின் முதல் அத்தியாயத்தை நினைவுறுத்தியது. சற்றுநேரத்திலேயே கிருஷ்ணன் அதைச் சொன்னார். காற்று சுழிப்பதனால் மணலும் சுழிக்கும் ஒரு சுழி ஸ்ரீசக்ரமாக ஆக அதற்கு அடியில் விஷ்ணுகோயில் அழிந்து புதைந்துவிட்டிருக்கும் அச்சித்தரிப்பில். நான் உடனே கோபோ ஆபின் மணல்மேடுகள் நடுவே ஒரு பெண் நாவலை எண்ணினேன். சற்றுநேரத்திலேயே கிருஷ்ணன் அதையும் குறிப்பிட்டார்.
மணல்மேடுகளினூடாக நடப்பதற்கு தகரக்கூரையிடப்பட்ட பாதை இருந்தது. வெயில்காலத்தில் அந்நிழல் இல்லாமல் அங்கே நடக்கமுடியாதென்று தோன்றியது. மணல்மேட்டின்மேல் நடக்கும்போது மேலும் பல ஆலயங்கள் காலுக்கடியில் புதைந்திருப்பதாக எண்ணிக்கொள்கையில் ஒருவகையான பதைப்பு உருவாகிறது. மணல்மேட்டில் நின்று கீழே தெரிந்த கீர்த்திநாராயணர் ஆலயத்தை ஒற்றைநோக்கில் பார்த்தபோது நிகழ்காலத்தில் நின்று இறந்தகாலத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. மணல்தரிகள் காலத்துளிகள். காலப்பெருக்கு. காலத்திரை.
தலக்காட்டில் இருந்து கிளம்பும்போது லோத்தலும் காளிஃபங்கனும் நினைவிலெழுந்தன. அவையும் மணல்மூடிக்கிடந்தவை. மேலே மேலே என மணல் மூடிக்கொண்டே இருக்கிறது என்று தோன்றியது. மெல்லிய தூசுப்படலமாக நம்மைச் சூழ்வதும் அசைவற்றிருந்தால் மூடுவதும் அதுவே.
மாலையில் காவேரிக்கரை வரைக்கும் சென்றோம். அங்கே காவேரி ஆழமில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே விடுமுறைநீராட்டுக் களியாட்டில் இருந்தனர். பெரும்பாலானவர்கள் மைசூர் பெங்களூர் நகர்களிலிருந்து காரில் வந்தவர்கள். பந்துவிளையாட்டு, சிரிப்பு, தற்படம் எடுத்தல் என கொண்டாட்டம். காவேரி ஒளியுடன் இருந்தது. இனிய மழைச்சாரல். சூழ்ந்திருப்பவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கையில் அறியாமலேயே உள்ளம் மலர்ந்துவிடுகிறது.
குறிப்பாகப் பெண்கள். இத்தகைய இடங்களில் அவர்களில் தெரியும் கொண்டாட்டம் ஆச்சரியமூட்டுவது. ஆண்கள் அப்போதும் பொறுப்பின் கவலையுடன் இருப்பார்கள். பெண்கள் அக்கவலைகளை ஆண்களுக்கு அளித்துவிட்டு விடுதலைகொண்டுவிடுகிறார்கள்.