‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2

2. கதிர்முன் நிற்றல்

அறைவாயிலில் காலடியோசை கேட்டு தருமன் திரும்பினார். விரைவாக உள்ளே வந்த திரௌபதி கையிலிருந்த மரக்குடுவையை அவரருகே பீடத்தில் வைத்துவிட்டு “பால்” என்றபின் ஆடைநுனியால் ஈரக்கையை துடைத்தபடி திரும்பிச் செல்லப்போனாள். அவர் எட்டி அவள் கையைப்பற்றி “என்ன விரைவு? சற்று நில்… உன்னிடம் பேசவேண்டுமென்றாலே அடுமனைக்கு வரவேண்டியிருக்கிறதே!” என்றார். அவள் திரும்பி அடுமனையை நோக்கியபின் “சொல்லுங்கள்…” என்றாள். “என்ன?” என்று அவர் கேட்டார். “ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே? நான் செல்லவேண்டும். உலையேற்றும் நேரம் இது” என்றாள்.

எரிச்சலுடன் அவள் கையை விட்டு “செல்!” என்றார் தருமன். “ஏன்? என்ன சொல்லவந்தீர்கள்?” என்றாள் அவள். “வேதங்கள் நான்கு, ரிக் யஜூர் சாம அதர்வம். அதைச் சொல்லவந்தேன்” என்று அவர் சொல்ல அவள் அரைச்செவியுடன் கேட்டு “ஆம்… இன்று உலையேற்ற பிந்திவிட்டது. பெருங்கலம் ஏற்றவிருக்கிறேன்” என்றபடி “நான் செல்லவா?” என்றாள். அவர் சினத்துடன் “செல்! போ… இனி உள்ளே வராதே. ஏதாவது வேண்டுமென்றால் நானே வருகிறேன்” என்றார். அந்த உரத்த குரல் அவளை திகைக்கச் செய்தது. “என்ன ஆயிற்று? ஏன் கூச்சலிடுகிறீர்கள்?”

அவர் மெல்ல தணிந்து “ஒன்றுமில்லை. செல்!” என்றார். “எப்போதும் இப்படித்தான் இருக்கிறீர்கள். நிலையமைவதே இல்லை” என்றபின் “பால் அருந்துக! சுக்கும் மிளகும் போட்டிருக்கிறது” என்றவள் மீண்டும் வெளியே செல்லத்திரும்பினாள். “எடுத்துக்கொண்டு போ!” என்று தருமன் கூவினார். “ஏன்?” என அவள் கேட்க “எடுத்துக்கொண்டு போடி… எடுத்துக்கொண்டு போகச்சொன்னேன். போ…” என்றார். “என்ன ஆயிற்று உங்களுக்கு?” என்றாள் அவள். “போ வெளியே… உன்னை போகச் சொன்னேன்.” அவள் அவரை புதிராக நோக்கியபின் பாலை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

மூச்சிரைத்தபடி அவர் குனிந்து அமர்ந்திருந்தார். முடியிழைகள் முகத்தில் சரிய எரிச்சலுடன் அவற்றை பின்னால் தள்ளி நிமிர்ந்தார். பின்னர் கூரையின் மூங்கில்வேய்வை நோக்கிக்கொண்டிருந்தார். சற்றுநேரம் கழித்து மீண்டு வந்து ஓலையை எடுத்து விழியோட்டலானார். ஆனால் சொற்கள் பொருளென்றாகவில்லை. அதை மூடி கட்டிவைத்துவிட்டு கைகளைக் கட்டியபடி கீழே தெரிந்த காட்டை நோக்கிக்கொண்டு வெறுமனே இருந்தார்.

கொடுவேரிப் புதர்களுக்குள் செம்போத்துகள் இரண்டு எழுந்து சிறகடித்து புதைந்துகொண்டிருந்தன. கிளைகளில் ஒரு சிறு குரங்கு மட்டும் அரைத்துயிலில் அமர்ந்திருந்தது. அது காணும் கனவுகளை அதன் வால்நுனியில் அசைவுகளாக அறியமுடிந்தது. பின்காலையின் வெயில் நீராவியை எழுப்பத் தொடங்கிவிட்டிருந்தது. காடெங்கும் அதன் மென்மயக்கம் பரவியிருந்தது. காட்டின் உணர்வுநிலைகளை அதிலெழும் பறவையோசையே காட்டிவிடுவதை அவர் உணர்ந்திருந்தார். காலையில் கொப்பளிக்கும் அவ்வோசை வெயிலெழுகையில் மெல்ல தொய்வடைந்து உச்சியில் அமைதியாகி முன்மாலையில் மயங்கியெழுந்து முன்னந்தியில் மீண்டும் அலையடிக்கும். இருள் எழுகையில் புதைந்து மறைந்து இரவுக்குள் ஆங்காங்கே சில வினாக்களும் விடைகளுமாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

பறவையோசையை செவிகூர்வது எப்போதும் உள்ளத்தை அமைதியுறச்செய்கிறது. அவர் எழுந்தபோது உள்ளம் தெளிந்து முகம் இயல்புகொண்டிருந்தது. வெளியே சென்றபோது குடிலின் பேரறையில் எவருமிருக்கவில்லை. நகுலனின் மேலாடை மட்டும் மூங்கில் வளையத்தில் கிடந்தது. குனிந்து நோக்கியபோது மலர்த்தோட்டத்தின் தென்மூலையில் அவன் மண்வெட்டியால் வெட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவன் மூச்சொலியும் மண்வெட்டி விழும் ஒலியும் காட்டில் பட்டு எதிரொலித்து வேறெங்கோ என கேட்டன. அவனருகே இரு குரங்குகள் வேடிக்கை நோக்கியபடி அமர்ந்திருந்தன. ஓர் அன்னைக்குரங்கு மடியிலிருந்த சிறுபைதலின் தலையை வருடி பேன் நோக்கிக்கொண்டிருந்தது.

மூங்கிலால் ஆன பாதை வழியாக தருமன் இணைக்கப்பட்டிருந்த அடுமனைக்குச் சென்றார். அங்கே திரௌபதியின் பேச்சுக்குரலும் உடன் சகதேவனின் குரலும் கேட்டது. அவர் காலடிகளை நன்கு தேய்த்தபடி உள்ளே நுழைந்தார். அவர்கள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். சகதேவன் கீழே மணையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்க அவள் அப்பால் குனிந்து அடுப்பில் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய மண்பானையில் நீரை ஊற்றிவிட்டுத் திரும்பினாள். அவள் விழிகள் மாறுபட்டன. “பால் கொண்டுவரவா?” என்றாள். அவர் “இல்லை. அதற்காக வரவில்லை” என்றார்.

“உணவு ஒருங்க இன்னும் பிந்தும். இன்று சற்று கூடுதலாகவே சமைக்கவேண்டும்” என்றாள். “ஏன்?” என்றார் தருமன். “இன்று மூத்தவர் உணவுக்கு வரக்கூடும் என்று எண்ணுகிறாள் தேவி” என்றான் சகதேவன். “அவருக்கு உகந்த ஊன்சோறு சமைக்கலாமென எண்ணினோம். புல்லரிசி நிறையவே இருக்கிறது. காலையிலேயே இரு காட்டுப்பன்றிகளை வேட்டையாடி கொண்டுவந்தோம்.” தருமன் திரௌபதியின் இடைக்குமேல் எழுந்திருந்த மண்பானையை நோக்கிவிட்டு “ஆம், அவனுக்கென்றால் இப்பெருங்கலமே போதாது” என்றார்.

“கலமல்ல சிக்கல், மூத்தவரே. பெருமளவில் சமைக்கையில் சேர்வைமுறை கைநிற்பதில்லை. உப்போ புளியோ எரிவோ மிஞ்சிப்போகிறது. ஆகவேதான் ஊனுணவு. இதில் உப்பு மட்டுமே இடர். அதை வேண்டுமென்றால் கூட்டிக்கொள்ளவும் ஆகும். ஊன் மிகுந்தாலும் பழுதில்லை” என்றான் சகதேவன். திரௌபதி விறகைச் சரித்து எரியை எழுப்புவதை தருமன் ஆர்வத்துடன் நோக்கி “வேள்வியேதான்” என்றார். “வேள்வியில் எரி நம் உணவை உண்ணும் விருந்தினன். இங்கு அது விருந்து சமைக்கும் அடுமடையன்.” சகதேவன் சிரிக்க திரௌபதியும் உடன் சிரித்தாள்.

“என்ன?” என்றார். “இல்லை, நீங்கள் வரும்போது உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான் சகதேவன். “என்னைப்பற்றியா?” என்றார் தருமன். “ஆம், நீங்கள் சினம்கொண்டதை தேவி சொன்னாள். நீங்கள் சினம்கொண்டால் அதன் பொருள் மெய்மையை அணுகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் என்றேன். வெகுளி கணமேனும் காத்தல் அரிது என்றல்லவா தொல்நூல் கூற்று?” அதிலிருந்த நுண்ணிய அங்கதத்தை உணர்ந்ததும் தருமன் சிரித்தார். “உண்மையில் நான் சினந்தது தேவியிடம் பேசமுடியவில்லையே என்பதனால்தான். வெறும் அடுமனையாட்டியாகவே இங்கு வந்தபின் மாறிவிட்டாள். நாங்களிருவரும் சேர்ந்தமர்ந்து சொல்லுசாவி எத்தனை காலமாயிற்று தெரியுமா?”

“உண்மை, மூத்தவரே. இக்காடு சொல்லில்லாதது. நானே அவ்வப்போது திடுக்கிடலுடன் உணர்வதுண்டு, சொல்லாய்ந்து எத்தனை நாளாயிற்று என்று. ஓடிச்சென்று சுவடிகளைப் பிரித்துக்கொண்டு அமர்ந்தால் அனைத்தும் பொருளிழந்திருக்கும். நேற்றும் நாளையும் பின்னும் இன்றுகளின் தொடராக காலத்தை நோக்குகிறது நிமித்திகநூல். இன்று மட்டுமேயான காடு இது” என்றான் சகதேவன். உடனே சிரித்துக்கொண்டு “இதில் திளைக்க மூத்தவரால் மட்டுமே முடியும்” என்றான். திரௌபதி புல்லரிசியை எடுத்தபடி “ஏனென்றால் சோறு நேற்றிலும் நாளையிலும் இல்லை, இன்று கண்முன் இருந்தால் மட்டுமே பொருளுடையது” என்றாள்.

“அவன் வருவான் என எப்படி தெரியும்?” என்றார் தருமன். “தோன்றியது” என்றாள் திரௌபதி. “தேவி காலையில் கனவில் அவர் வருவதைக் கண்டாளாம்” என்றான் சகதேவன். “கனவிலா? என் கனவில்கூடத்தான் அவன் நாளும் வருகிறான்” என்றார் தருமன். “பசியுடன் வந்திருக்கிறார். அப்படி அவர் வந்தபோதெல்லாம் நேரிலும் வந்துள்ளார்” என்றான் சகதேவன். “நன்று” என்று சொல்லி புன்னகைத்த தருமன் “அந்தப் பாலை எடு… அதை அருந்தாமல் நிலைகொள்ளவில்லை” என்றார். “ஆறிவிட்டது…” என்றாள் திரௌபதி. “சூடுசெய்து கொடு… ஏன் வீணாக்கவேண்டும்?” என்றார் தருமன்.

“நீங்கள் முதன்மையாக எதையாவது சொல்ல விழைந்தீர்களா, மூத்தவரே?” என்றான் சகதேவன். தருமன் முகம் மலர்ந்து “நான் இப்போது வாசித்துக்கொண்டிருப்பது என்ன நூல் தெரியுமா?” என்றான். சகதேவன் “நூல் என்பதே அயலாகிவிட்டது, மூத்தவரே” என்றான். “வேதங்கள் பல, வகுத்த நான்கே நாடறிந்தது. அதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றார் தருமன். “அசுரர்களின் ஆசுரமும் நாகர்களின் மாநாகமும் தொல்வேதங்கள். அசுரதெய்வங்களாக இருந்த வருணனுக்குரியது வாருணம். இந்திரனுக்குரியது மாகேந்திரம். வருணனையும் திசையரசர்களையும் இந்திரன் வென்று முழுமுதலோனாக எழுந்தபோது உருவானது மகாவஜ்ரம். இடையே அசுரப்பேரரசன் இரணியன் அமைத்த தனி வேதம் ஹிரண்யம். அதை மீறி அவன் மைந்தன் பிரஹலாதனில் எழுந்தது மகாநாராயணம். இன்று பாரதவர்ஷத்தை ஆளும்பொருட்டு பரவிக்கொண்டிருக்கிறது அது.”

சகதேவன் காய்களை அரிவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். “இன்றிருக்கும் அனைத்து வேதங்களும் ஆசுரம் என்னும் அன்னையின் வயிற்றில் தோன்றியவையே. மாநாகம் எதனுடனும் இணையாமல் ஆழத்தில் கரந்து தனித்தொழுகுகிறது. அதன் துளிகள் அதர்வத்தில் உள்ளன” என்று தருமன் தொடர்ந்தார். “இங்கு வரும்வழியில் சௌரமதத்தினராகிய சுலபரைக் கண்டேன். அவர் அவர்களின் முதலாசிரியரான அர்வாவசு அமைத்த சௌரவேதத்தை எனக்களித்தார். மந்தணவேதம் என அது அழைக்கப்படுகிறது. பிற வேதமரபுகள் அனைத்தும் அதை ஒதுக்கிவிட்டன. முழுமுதல்தெய்வமாக சூரியனை முன்கொள்கிறது இது.”

“இது வேதம் பெருகிய நிலம்” என்றபடி சகதேவன் மீண்டும் காய்களை அரியத் தொடங்கினான். “மேலும் வேதங்கள் இம்மண்ணில் இன்னும் இருக்கக்கூடும். அகழுந்தோறும் இங்கு சிவக்குறிகள் கிடைக்கும் என்பார்கள். இம்மொழியை அகழ்பவர்கள் வேதங்களையே கண்டடைவார்கள்” என்றார் தருமன். “இன்று சௌரவேதத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். பல வரிகள் ரிக்வேதத்தில் சற்றே ஒலிமாறிய வடிவிலமைந்துள்ளன. இதுவே தொன்மையானது என எண்ணுகிறேன். இதிலிருந்து அங்கு சென்றிருக்கலாம்.” அக்கணம் தோன்றிய உள எழுச்சியால் அவர் திரௌபதியை அணுகி “கேள் தேவி, இந்த வேதம் கிழக்கே காமரூபத்திற்கு அப்பால் நாகர்களின் நிலத்திற்கும் அப்பாலிருந்து எழுந்தது. கிழக்கு இந்திரனுக்குரியது. சூரியனுக்கும் உரியது. இந்திரன் வேதமுதல்வனாக எழுந்தபோது இது அழிந்ததா?” என்றார்.

அவள் புல்லரிசியைக் கழுவி நீரில் அள்ளி அள்ளிப் போட்டபடி “அர்வாவசு எந்த மண்ணைச் சேர்ந்தவர்?” என்றாள். “நாம் கந்தமாதனத்திற்கு வரும்போது வழியில் லோமசர் பல தூநீர்ச்சுனைகளின் கதைகளைச் சொல்லிவந்தார். அப்போது மதுபிலசமங்கம் என்னும் சுனையைப்பற்றி சொன்னார். அது காமரூபத்திற்கும் மணிபூரகத்திற்கும் நாகநிலத்திற்கும் அப்பால் மாமேருவின் கரையில் அமைந்திருக்கிறது என்றார். அதுதான் சௌரநெறியினரின் முதன்மை நீர். அச்சோலையில் ரைஃப்யர், பரத்வாஜர் என இரு முனிவர்கள் குருநிலை அமைத்து தங்கியிருந்தனர். அவர்கள் சௌரவேதத்தின் தொல்முனிவர்கள். அவர்கள் இயற்றிய எண்பத்தெட்டு பாடல்கள் இந்நூலில் உள்ளன.”

imagesரத்வாஜருக்கு யவக்ரீதன் என்னும் மைந்தன் பிறந்தான். ரைஃப்யரின் மைந்தர்களாகிய அர்வாவசுவும் பராவசுவும் மணம்புரிந்து அறமியற்றினர். அர்வாவசு சௌரவேதத்தின் செய்யுட்களைத் திரட்டி சொற்பழுதுபோக்கி ஒன்றாக்கினார். பராவசு அவற்றுக்கு சந்தம் வகுத்தார். பரத்வாஜரின் மைந்தனாகிய யவக்ரீதன் காட்டுக்குச் சென்று வேதமெய்மையை அறியவிழைந்து கடுந்தவம் புரிந்தான்.

பல்லாண்டுகள் தவம் செய்தும் சூரியதேவன் தோன்றி அருளவில்லை. ஏனென்றால் அறியவேண்டுமென்னும் பெருவிழைவே அறிதலுக்குத் தடையாக ஆவதை அவன் உணரவில்லை. அவன் உளம்தளர்ந்த பொழுதில் அவன் முன் தோன்றிய இந்திரன் அவன் விரும்பும் வரத்தை அருள்வதாகச் சொன்னான். மெய்யென இப்புவியிலுள்ள அனைத்தையும் அறியவேண்டும் என யவக்ரீதன் கோரினான். “இதோ உனக்கு மெய்யருளினேன்” என்றான் இந்திரன். அதன்முன் ‘என்’ எனும் சொல்லை நாவிலேயே மறைத்துக்கொண்டான்.

இந்திரமெய்மையாகிய பெருங்காமத்துடன் யவக்ரீதன் குடில் திரும்பினான். தன்னைச் சூழ்ந்து திகழ்ந்தவை அனைத்திலும் காமத்தையே கண்டான். உயிர்கள் காமத்திலாடின. அனலும் காற்றும் புணர்ந்தன. ஒளியும் வானும் ஒன்றாகி மகிழ்ந்தன. குடிலுக்கு வரும் வழியில் அர்வாவசுவின் துணைவி ரம்யையும் பராவசுவின் மனைவி பிரதமையும் வருவதைக் கண்டான். அவர்கள் சுனைநீராடி திறந்த தோள்களில் கூந்தலைப் படரவிட்டு ஒற்றை ஆடை அணிந்து வந்துகொண்டிருந்தனர்.

யவக்ரீதன் தன் கைகளை விரித்து அவர்களை அணுகி அள்ளிப்பற்றிக்கொண்டான். அவர்களின் ஆடைகளைக் களைந்து வீசி அருகே இருந்த புதர்களுக்கு இழுத்துச்செல்ல முயன்றான். அவர்களின் அலறல் ஓசை கேட்டு உள்ளிருந்து ஓடிவந்த அர்வாவசுவும் பராவசுவும் தங்கள் துணைவியரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் இந்திரவல்லமை கொண்டிருந்த யவக்ரீதன் தன் ஒற்றைக்கையால் இரு மகளிரையும் பிடித்தபடி மறுகையால் அவர்கள் இருவரையும் அறைந்து வீழ்த்தினான்.

குடிலுக்குள் இருந்து ரைஃப்யர் ஓடிவந்தார். மைந்தர் குருதி கக்கிக் கிடப்பதையும் அவர்களின் துணைவியருடன் யவக்ரீதன் புதர்களுக்குள் சென்றுவிட்டதையும் கண்டு என்ன செய்வதென்றறியாமல் திகைத்தார். ஓடிச்சென்று சூரியன் முன் நின்று தன் சடைக்கற்றை ஒன்றைப் பறித்து வீசி “சூரியனே, உன்னை ஓதி நான் கொண்ட தவத்தின் பயன் இந்தச் செஞ்சடை. நீ தெய்வமென்றால் இங்கெழுக!” என்று கூவினார். “என் தவமனைத்தும் உருகி எழுக! என்னில் இனி வஞ்சமே திகழ்க! இக்கணமே வருக, இறைவா!” என்றார்.

சூரியவெம்மைகொண்டு அந்தச் சடை தீப்பற்றி எரிந்தது. தீ மூண்டெழுந்து புதர்களைச் சுற்றிப் படர்ந்தேறியது. வெம்மை தாளாமல் எழுந்த யவக்ரீதனை தீச்சுடர்கள் கவ்விக்கொண்டன. அவன் அலறியபடி ஓடி உடல்வெந்து விழுந்து மறைந்தான். அவன் பிடியிலிருந்த இரு தேவியரும் அவ்வனலிலேயே உடல் நீத்தனர். காடு பசுமை பொசுங்கி தழல்சூடி எரியலாயிற்று. எரிமணம் உணர்ந்து அலறலோசை கேட்டு பரத்வாஜர் தன் தவச்சாலையிலிருந்து ஓடிவந்தார். மைந்தன் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டார். “என் தவம் மெய்யென்றால் நீ உன் மைந்தனாலேயே கொல்லப்படுவாய். ஆணை!” என்றபின் தானும் எரியில் புகுந்தார்.

ரைஃப்யரும் இரு மைந்தரும் மதுபிலசமங்கத்தின் தெற்குக் காட்டுக்குச் சென்று குடியமர்ந்தனர். அங்கே அனைத்தையும் மறந்து மீண்டும் சௌரவேதமெய்மையில் மூழ்கலாயினர். கடும் வறுமையில் காட்டிலிருந்து தேனும் அரக்கும் சேர்த்து அருகே சிற்றூர்ச் சந்தையில் கொண்டுசென்று விற்று ஈட்டிய சிறுசெல்வத்தைக் கொண்டு அங்கே வாழ்ந்தனர். மீண்டும் துணைவியரைத் தேட இருவரும் விழைந்தாலும் கன்னிப்பொருள் அளிக்க செல்வமில்லாதிருந்தனர். ஒரு பொன்னேனும் ஈட்ட முடிந்தால் இருவரும் சேர்ந்து ஒரு பெண்ணை மணம்கொள்ளலாமே என்று எண்ணிக்கொண்டனர்.

ஒருநாள் மணிபூரகத்தைக் கடந்து பிருஹத்யும்னன் என்னும் அந்தணன் அவர்களிடம் வந்தான். வற்கடம் சூழ்ந்த காமரூபத்தின் அரசன் மழைமங்கலம் வேண்டி ஒரு சௌரவேள்வியை நிகழ்த்தும்பொருட்டு பெருஞ்செல்வத்தை அளித்திருப்பதாகவும் அவ்வேள்வியை இளையோர் இருவரும் வந்து நின்று நடத்தியளிக்கவேண்டும் என்றும் கோரினான். தெய்வச்சொல் என அதைக் கேட்டு ரைஃப்யர் மகிழ்ந்தார். இரு மைந்தரும் பொருள்கொண்டுவந்தால் மணம்புரிந்து மைந்தரைப் பெறக்கூடும் என்றும் புத் எனும் கீழுலகில் நீரும் அன்னமும் இன்றி தவிக்கும் நிலை தனக்கு வராது என்றும் அவர் கூறினார்.

அர்வாவசுவும் பராவசுவும் பிருஹத்யும்னனுடன் கிளம்பிச் சென்றனர். அந்த அந்தணன் இந்திரனால் அனுப்பப்பட்டவன் என்பதை இருவரும் உணர்ந்திருக்கவில்லை. எளிய அந்தணனை நம்பி அத்தனை பெருஞ்செல்வத்தை ஓர் அரசன் அளிக்கக்கூடுமா என்று எண்ணும் அளவுக்கு உலகியலறியாத மலைமக்களாக இருந்தனர் அவர்கள். சூரியமானசம் என்னும் சுனைக்கரையில் காட்டுக்குள் பந்தலிட்டு பிருஹத்யும்னன் எடுத்த வேள்வி பன்னிருநாட்கள் நீடித்தது. அர்வாவசுவும் பராவசுவும் தலைநிற்க நூற்றெட்டு அந்தணர் அதிலமர்ந்து வேதச் சொல்லோதி அவியிட்டனர்.

வேள்வி முடிந்ததும் இருவரும் முதுகொடியச் சுமக்குமளவுக்கு பெருஞ்செல்வத்தை பிருஹத்யும்னன் அவர்களுக்கு அளித்தான். இருவரும் அச்செல்வத்துடன் மதுபிலசமங்கம் நோக்கி நடக்கத்தொடங்கினர். முதலில் அது பொன்னாக இருந்தது. பொழுது செல்லச்செல்ல அவர்களின் விழைவென்று அது மாறியது. பின்னர் அச்சமென்றாகியது. இறுதியில் ஐயமென்று இருண்டது. தங்கள் காலடிகளையே ஐயுற்றவர்களாக ஒருவரை ஒருவர் வேவு பார்த்தவர்களாக அவர்கள் காட்டுப்பாதையில் நடந்தனர்.

அவர்கள் வருவதை தொலைவிலேயே ரைஃப்யர் கண்டார். தன் புலித்தோல் மேலாடையை எடுத்து அணிந்தபடி உவகையுடன் அவர்களை நோக்கி வந்தார். புதர்களுக்குள் அவர் வரும் ஓசையைக் கேட்ட பராவசு அக்கணமே தன் வேலை எடுத்து வீசினார். “மைந்தா!” என்றலறியபடி ரைஃப்யர் விழுந்து துடித்தார். வேல் பாய்ந்த நெஞ்சுடன் மூச்சிரைக்க “அவன் சொன்னபடியே” என முனகி உயிர்விட்டார். இருவரும் திகைத்து உடல்பதற அவர் அருகே நின்றனர். ரைஃப்யரின் கால்களைப் பற்றியபடி பராவசு கதறி அழுதார்.

“நான் புலி என்று எண்ணினேன்… புலியைத்தான் கொல்லமுயன்றேன்” என்று பராவசு அழுதார். “இனி ஒன்றும் செய்வதற்கில்லை, இளையோனே. தந்தைக்குரிய இறுதிச்சடங்குகளை செய்வோம்” என்றார் அர்வாவசு. “உடலை இங்கே எரியூட்டுவோம். நீர்க்கடன்களை மூத்தவனாகிய நான் செய்கிறேன். நீ சென்று ஊரில் வாழும் அந்தணர்களிடம் நடந்ததைச் சொல். பிழைநிகர் சடங்கு செய்து அந்தணர் ஆயிரவருக்கு அன்னமூட்டுவோம். நாம் அறிந்து செய்தது அல்ல இது. மணம்கொண்டு மைந்தரைப்பெற்று நீர்க்கடன் செய்தால் தந்தை விண்நிறைவார்.”

“அவ்வண்ணமே” என்று சொல்லி வணங்கினார் பராவசு. அர்வாவசு காட்டுமரங்களாலும் அரக்காலும் தேன்மெழுகாலும் தந்தைக்கு சிதைகூட்டி அதில் அவரை படுக்கச்செய்து எரியூட்டினார். பராவசு செல்வக்குவைகளை அருகே ஒரு அரசமரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு கைப்பிடியளவு பொன்னுடன் ஊருக்குள் சென்றார். செல்லும் வழியிலேயே அவர் உள்ளம் மாறலாயிற்று. இந்திரவிழைவின் விந்துத்துளியென கையிலிருந்த பொன் தண்ணென்று எண்ணங்களைத் தொட்டுத் தூண்டியது. மூத்தவன் அகற்றப்படுவான் என்றால் முழுச்செல்வத்திற்கும் தலைவனாக முடியும் என்றும் மாளிகையும் மகளிரும் மைந்தரும் என அனைத்தும் கொள்ளமுடியும் என எண்ணம் ஓடியது.

ஊருக்குள் சென்ற பராவசு நெஞ்சிலறைந்து அழுதபடி மன்றில் நின்று “என் தமையன் தந்தையைக் கொன்று எரியூட்டிவிட்டான்… என்னையும் கொல்லமுயல்கிறான். நான் அஞ்சி ஓடிவந்தேன்” என்று கூவினார். ஊர்த்தலைவனிடம் “எந்தையைக் கொன்றவனிடமிருந்து என்னைக் காத்தருளுங்கள்… எனக்கு அடைக்கலம் கொடுங்கள்” என்று கண்ணீர்விட்டார்.

அவர் சொல்கேட்டுத் திரண்ட ஊரார் அவருடன் காட்டுக்குச் சென்றனர். அங்கே தந்தையின் சிதையருகே அமர்ந்திருந்த அர்வாவசு அவர்கள் திரண்டுவருவது தன் தந்தையின் சாவூட்டுச்சடங்குக்காகவே என எண்ணினார். எழுந்து அவர்களை முறைப்படி வணங்கி முகமன் சொல்வதற்குள்ளாகவே பாய்ந்து வந்த பராவசு தமையனை ஓங்கி அறைந்து வீழ்த்தினார். மேலே ஒரு சொல்லும் சொல்லமுடியாதபடி அவரை அவர்கள் தாக்கினர். கைபிணைத்துக் கட்டி தூக்கி நிறுத்தியபோது பற்கள் உடைந்து உதடுகள் வீங்கி சொல் எழாதவராக அர்வாவசு ஆகிவிட்டிருந்தார்.

அவரை ஊருக்கு இழுத்துவந்து மன்றில் நிறுத்தி விசாரித்தனர். அர்வாவசுவால் ஒரு சொல்லும் சொல்லமுடியவில்லை. அந்தணன் என்பதனால் அவரை அவர்கள் கொல்லவில்லை. முடியை மழித்து முகத்தில் புலையந்தணன் எனப் பொருள்படும் காகத்தின் படத்தை பச்சைகுத்தி காட்டில் துரத்திவிட்டனர். மீண்டும் மதுபிலசமங்கத்திற்கே வந்த அர்வாவசு அங்கே அமர்ந்து தான் அடைந்த பழிக்கு நிகர்செய்யவேண்டும் என வஞ்சினம் கொண்டார். சௌரவேதத்தை சொல்சொல்லெனத் தேர்ந்து பொருள்கொண்டு ஊழ்கத்திலமர்ந்து உணர்ந்தார்.

வேதத்தவம் முழுமைகொண்டபோது அவர் முன் ஆடியெனக் கிடந்த மதுபிலசமங்கச் சுனையில் அகலில் சுடர் என சூரியன் எழுந்து “விழைவதென்ன, மைந்தா?” என்றான். வேதமுழுமையை உணர்ந்தமைந்த அர்வாவசு “ஏதும் விழைகிலேன். இப்புவியில் எவரிடமும் கடனிலேன், எவருடனும் பகையுறவும் அற்றுள்ளேன். முழுமையன்றி கோருவது பிறிதில்லை” என்றார். அவ்வண்ணமே என்று சொல்லி சூரியன் மறைந்தான். சுனையில் இறங்கி அர்வாவசு நிறைவடைந்தார். அவர் தொகுத்த சௌரவேதம் அங்கே குடிலில் மரப்பேழையில் ஆயிரம் சுவடிகளில் எழுதப்பட்டு நூறு தலைமுறைக்காலம் காத்திருந்தது.

MAMALAR_EPI_02

பராவசு தன் பெருஞ்செல்வத்தைக் கொண்டு மதங்கமலை அடிவாரத்தில் பன்னிரு ஊர்களை அமைத்தார். பன்னிரு அரண்மனைகளில் பன்னிரு மனைவியரை குடியமர்த்தினார். அந்நிலம் சௌரவம் எனப்பட்டது. அவர் அதன் அரசரென ஆண்டார். அவருடைய மைந்தர்கள் அனைவருமே அவரைப்போல பொருள்விழைவு மிக்கவர்களாக இருந்தனர். மூத்தவனாகிய ராகு தந்தையைக் கொன்று தன் முதன்மையைப் பெற எண்ணினான். அதை அறிந்த பராவசு அவனைக் கொல்ல தன் இளைய மைந்தன் அர்வனிடம் ஆணையிட்டார். ராகுவை அர்வன் கொன்றான். அர்வனை ராகுவின் உடன்பிறந்தவர்களாகிய அனசனும் அக்ரனும் கொன்றனர்.

உடன்பிறந்தார் நடுவே பூசல் முற்றியது. அனசனும் அக்ரனும் மாறிமாறி போரிட்டனர். அனசனை அக்ரன் கொல்ல அக்ரனை பாரவன் கொன்றான். தன் மைந்தர் அனைவரும் மாறிமாறி கொன்று கண்ணெதிரே அழிவதைக் கண்டு நோயில் விழுந்து நொய்ந்து பராவசு மடிந்தார். அயல்நிலத்து கிராதர் படைகொண்டுவந்து சௌரவத்தை வென்று சூறையாடினர். அங்கிருந்த மக்கள் சிதறி பல ஊர்களிலாக பரவினர். அந்நிலம் புதர்மூடி மறைந்தது. அங்கு சேற்றுக்கு அடியில் அதன் மாளிகையிடிபாடுகள் மட்டும் எஞ்சின. மொழியில் சில கதைகளும் மிஞ்சியிருந்தன.

சௌரவேதத்தை நூறு தலைமுறைகளுக்குப் பின் மதுபிலசமங்கத்திற்கு வந்த மெய்யுசாவியான சமதன் என்னும் அந்தணச்சிறுவன் கண்டடைந்தான். அவன் அர்வாவசுவை தன் முதலாசிரியராக உளம்நிறுத்தி அதைப் பயின்றான். அவன் அர்வாவசு மெய்மரபின் இரண்டாம் ஆசிரியன் என்று அழைக்கப்பட்டான். அவனும் பின்னர் வந்த மாணவநிரையும் அர்வாவசு என்றே பெயர்கொண்டனர்.

images“ஆனால் அர்வாவசு தந்தையைக் கொன்றவர் என்றே மக்களால் அழைக்கப்படுகிறார். எனவே அவரது வேதம் அந்தணரால் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது. எந்த வேள்வியிலும் அதன் ஒரு சொல்லும் ஓதப்படுவதில்லை” என்றார் தருமன். சகதேவன் புன்னகைத்து “அது ஏன் உங்களைக் கவர்கிறது எனத் தெரிகிறது, மூத்தவரே” என்றான். “ஏன்?” என்று தருமன் புருவம் சுளித்தபடி கேட்டார். “தோற்கடிக்கப்பட்டவர்களும் பழிசுமத்தப்பட்டவர்களும் மறக்கப்பட்டவர்களும் உங்கள் விருப்பத்திற்குரியவர்கள். அவர்களை நீங்கள் உங்கள் அகத்துள் மீட்டு எழுப்பிக்கொள்கிறீர்கள்” என்றான் சகதேவன்.

“மெய்தான்” என்றபின் தருமன் திரும்பினார். கீழே நகுலனின் குரல் கேட்டது. “ஊனை மேலே கொண்டுவருவதற்காக அழைக்கிறார்” என்றபடி அவன் எழுந்து தொங்கும் ஏணிவழியாக கீழிறங்கிச் சென்றான். “நகுலன் என்ன செய்கிறான்?” என்றார் தருமன் குனிந்து நோக்கியபடி. “பன்றிகளின் ஊன் எச்சத்தைப் புதைக்க குழிதோண்டுகிறார். அதன்மேல் நட்டால் குருக்கத்திகள் பெரிதாக மலர்கொள்கின்றன” என்றாள் திரௌபதி. நீர் புல்லரிசியுடன் தளதளவென கொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது.

“இந்தக் கதையை நான் ஏன் இப்போது சொன்னேன் என எண்ணிக்கொள்கிறேன்” என்றார் தருமன். திரௌபதி புன்னகைத்து “மீண்டும் போட்டிகளும் வஞ்சங்களும் வெற்றிதோல்விகளும் நிறைந்த உலகை விரும்புகிறது உங்கள் உள்ளம்” என்றாள். சினத்துடன் “என்ன சொல்கிறாய்?” என்றார் தருமன். “சலிப்பு. அதை வெல்ல மீண்டும் பகடை” என்றாள். தருமன் மெல்ல தளர்ந்து “மெய்யாக இருக்கலாம். நான் சொல்வதற்கொன்றுமில்லை. ஆனால் இன்று சௌரவேதத்தை வாசித்தபோது அதிலிருந்த விழைவைத்தான் என் உள்ளம் தொட்டறிந்தது” என்றார்.

சகதேவன் மேலே வந்து சகடையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுத்து வலைக்கூடையை மேலே தூக்கி வைத்தான். செந்நிறமான பிண்டிமரத் துண்டுகள் போல பன்றியின் ஊன் அதிலிருந்தது. தொடைகளை எடுத்து காய்களின் அருகே விரிக்கப்பட்டிருந்த ஈச்சம் பாயில் வைத்தான். தருமன் ஊனையே நோக்கிக்கொண்டிருந்தார். பன்றியூனில் குருதி எளிதில் உறைந்துவிடுவதனால் அவை ஆழ்செம்மை நோக்கி சென்றுகொண்டிருந்தன. சகதேவன் கீழே நகுலன் எடுத்து வைத்த ஊன்பாளங்களை எடுத்து அடுக்கினான்.

“இத்தனை ஊனையும் வெட்டித் துண்டுகளாக்குவதற்குள் அரிசி வெந்துவிடும்” என்றான் சகதேவன். ஐந்தாவது கூடை மேலே வந்தபோது உடன் நகுலனும் ஏறிவந்தான். அவன் உடலெங்கும் குருதியும் மண்ணும் வியர்வையில் நனைந்து வழித்தடங்களுடன் இருந்தன. “இன்று மந்தன் வரவில்லை என்றால் இவ்வுணவை என்ன செய்வது? ஐம்பதுபேர் உண்ணுமளவுக்கு இருக்குமே?” என்றார் தருமன். “தேவியின் கனவில் வந்தால் அவர் வராமலிருப்பதில்லை” என்றான் நகுலன்.

சிரித்தபடி “சரி, நிகழ்க!” என்றார் தருமன். “அவன் வந்ததுமே எனக்கு சொல்லுங்கள்” என்றபடி வெளியே சென்றார். பீமனை காட்டில் பார்த்ததை சொல்லலாமா என எண்ணியபின் தவிர்த்தபடி மையக்குடில் நோக்கி நடந்தார்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைமாமங்கலையின் மலை – 1
அடுத்த கட்டுரைஜல்லிக்கட்டும் மரபும் – கண்ணன்