வெண்முரசின் கார்வை

Thandapani_Duraivel.png

 

அரி கிருஷ்ணன் எழுதிய கடிதத்தை ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன்.  மிக நன்றாக இருந்தது. பெரும்பாலும் நமக்கு வெளிமுகமாக பார்ப்பதுதான் அதிகம். வெளியில் என்ன நடக்கிறது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்கிறார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதையே அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் பார்வையை உட்புறமாக செலுத்தி நான் என்ன நினக்கிறேன்,  ஏன் இப்படி நினைக்கிறேன் எப்படி என் சிந்தனை நிகழ்கிறது என காண்பது அரிது.  தான் உள்ளூர கொண்டிருக்கும்  ஆன்மீகக் கருத்தில் வந்துதாக்கும் தத்துவக் கருத்துக்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது மிக முக்கியமானதாகும்.

 

வெளி தத்துவங்கள் உள்ளே  நுழைய விடாமல் மனதை இறுக மூடிக்கொள்ளுதலையே பெரும்பாலும் செய்கிறோம்.  அது எளிதானது. அதனால் பலரும் தெரிந்தோ தெரியாமலோ தாம் முதலில் கொண்டிருந்த கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை. அது அவர்களே அறியாமல் நடந்தால் தான் உண்டு.   ஆனால் ஒரு வயதுக்கு மேல் அதுவும் நடப்பதில்லை. அதனால் நிறைய பேர் தான் கொண்ட கருத்து,  நம்பும் தத்துவத்தை மாற்றிக்கொள்வதில்லை. விவாதங்களில் பேசுகிறார்களே தவிர மற்றவர்கள் சொல்வதை கேட்பதில்லை.  பிறர் பேசும்போது  அது எப்படி தவறானது என சொல்வதற்கான சொற்களையே அப்போது   தேடிக்கொண்டிருக்கிறோம்.  அதையெல்லாம் விடுத்து தன் மனதை திறந்து வைத்து வெளிக்கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி ஆய்தலும், அதன் விளைவாக தன் கருத்துக்களை விரித்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ செய்தல் என்பது அபூர்வமாக நடைபெறுகிறது.

 

அரிகிருஷ்ணன் இப்படி தன் சிந்தையில் வெளிக்கருத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளுதலை கவனித்து அழகாக எழுதியிருக்கிறார். அதுவும் அவருடைய வைணவ மனதை வெண்முரசின்  கண்ணன் எப்படி தாக்கியிருப்பான் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

 

தண்டபாணி துரைவேல்

 

அன்புள்ள துரைவேல்

 

எல்லா நல்ல வாசிப்புகளும் ஒருவகை நிலைகுலைதல்தான். இடித்துச்சரித்தல் நிகழாத வாசிப்பு ஆழமானது அல்ல. மீண்டும் கட்டி எழுப்புவது அவரவர் விழைவு. வெண்முரசின் நாவல்கள் நம் மரபான மதமனநிலையை இடித்து புரட்டுபவை. அதை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்பவர்களாகவே பெரும்பாலான வாசகர்கள் இருக்கிறார்கள். விதிவிலக்குகள் உண்டு. அவர்கள் பின்னர் கண்டடைவார்கள் என நம்பவேண்டியதுதான்

ஜெ

 

u

 

அன்புள்ள ஜெ

 

கிராதத்தில் இருந்து விடுபட்டு மாமலருக்குள் நுழைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கிராதம் என்னை அலைக்கழித்துவிட்டது. உக்கிரமான சைவத்தை நான் அறிந்திருந்தபோதிலும்கூட அதன்நேர்க்காட்சி நிலைகுலையைச் செய்வது. வேதங்களின் மோதலை விட என்னை பதற்றமடையச்செய்தது அந்த சைவமரபினை காணும் வாய்ப்புதான்

 

சத்யமூர்த்தி

 

அன்புள்ள சத்யமூர்த்தி

 

நான் இன்னும் கிராதத்தில் இருந்து விடுபடவில்லை. இதுவரை மாமலர் எழுதவில்லை. நாளைக்குள் எழுதியாகவேண்டும். எழுதுவேன் என நினைக்கிறேன். இன்றுதான் கொல்லூர் மூகாம்பிகையைப் பார்த்துவிட்டுத் திரும்பிவந்தேன். சொற்கள் அமையவேண்டும். அதற்குமுன் உள்ளம் அமைதிகொள்ளவேண்டும்

 

ஜெ

முந்தைய கட்டுரைஊழிற்பெருவலி
அடுத்த கட்டுரைபயணக்கட்டுரை