ஊழிற்பெருவலி

 

C360_2016-05-06-12-37-25-417

 

இனிய ஜெயம்,

 

வண்ணக்கடல் நாவலில்,  ஏகலைவன் நோக்கில்  அவமானத்தில் தகித்தபடி அவனை கடந்து செல்லும் கர்ணனைக் குறித்த வர்ணனை வரும். மிக அருகே கடந்து செல்லும் அந்த வெம்மையை உள்ளே கிளர்த்தியது அந்த வர்ணனைகள். எழுத்து மொழியாகி , மொழி உள்ளே கற்பனையைத் தூண்டி, கண்டு, தொட்டு, நுகர்ந்து, உணர்ந்து  அனுபவிக்கும் அனைத்தையும் பதிலீடு செய்கிறது.  இந்த வரிசையில்  பெரு வலி தனித்துவமானது.  மொழி வழியே நாம் வலியை உணர, பெரு வலியை  உணரச் செய்யும் மாயத்தை நிகழ்த்துகிறது அக் கதை.

 

வலியின் கணம் எப்படி இருக்கும்? இக் கதையை உள்வாங்க அவரவர்க்கு அவரவர் அடைந்த வலியே  வழிகாட்டி.  துடிக்கும் இளமையில் எனக்கு பிடித்த பல விளையாட்டுகளில் ஒன்று.  இறங்கி வலதுபுறம் நடந்தால் கட்டக் கடைசியாக நிற்கும் [கருமகாரியங்கள் நடக்கும்] தனித்த மண்டபத்தின் உச்சியில் ஏறி, அந்த மண்டபத்தை மோதி சுழித்து செல்லும் [சுழிக்கும் இடத்தில் நல்ல ஆழம் இருக்கும்]  தாமிரபரணியில் குதிப்பது. நீச்சல் தெரியாது பலமுறை  துவைக்கும் ஆச்சிகள் வீசிப்போடும் சேலை பற்றி கரை சேர்ந்திருக்கிறேன். அப்படி குதித்த ஒரு முறையில், அடிக் கணக்கு தவறி, சுழிப்புக்கு பதிலாக, அது வந்து தொடும் இறுதிப் படியில் சென்று  விழுந்தேன்.  இடது கை மணிக்கட்டு, முழங்கை மூட்டு, தோள்பட்டை மூன்று இணைப்புகளும் மூன்று திசைகளில் திருக்கிக் கொண்டன.

 

விழித்த முதல் கணம் அறிந்தது ஒரு பெரிய வலிக்குமிழ் உள்ளே நான் சிக்கி இருப்பதை. நேரத்தின் ஒவ்வொரு வினாடியும் நீண்டு நீண்டு வலியாக என் மேல் கவிவதை. நாட்டு வைத்தயர் வந்து, [அறுக்கப்போகும் உயிர்க் கோழியை பிடிப்பது போல என் அத்தை என்னை பிடித்துக் கொண்டார்] எதோ எண்ணெய் தடவி அழுத்தி நீவி , காரில் கியர் மாற்றுவது போல என் இடது கையை எதோ வாகில் சுழற்றினார். சில கணம்  பொற்கணம் . ஆசுவாச கணம். காலாதீத கணம்,  வலிக்குமிழில் இருந்து வெளியில் நின்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டேன். பின் மெல்ல மெல்ல மற்றொரு வலி.  இரவுகளில் அந்த வலி, உள்ளிருந்து வீங்கும் குமிழாகி என்னை கிழிக்கப் பார்க்கும்.

 

வலியின் போது முதன் முதலாக [பின்னர் எனது கோரஷ்டை தியான பொழுதுகளிலும் கண்டது] கண்டது. ஒவ்வொரு கணம் துடிக்கும் வலியை . அந்த வலிக்கு வெளியே விலகி நின்று பார்க்கும் ”தான்”  எனும் நிலையை. இதன் அடுத்த கட்டம்தான் பீதி அளிப்பது .. இந்த வலியையும் ,அதை விலகி நின்று பார்க்கும் தானையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒன்று. பித்து நிலை, மரண பீதி, காய்ச்சலில் ஏதேதோ புலம்பிக்கொண்டு இருந்தேன்.

 

அந்த பொழுதுகளும், கடந்துவந்த கிராதமும், இன்று மீண்டும் வாசிக்கையில் பெரு வலி கதைக்கு, வேறு ஒரு ஆழத்தை அளிக்கிறது. கணம் கணமாக வலி கொண்டு கொல்லும் முதுகுத்தண்டு கேன்சருடன் , கைலாயம் கண்டு மீளும் ஆளுமை, அந்த அனுபவத்தை எழுத்தாளர் ஒருவருடன் பகிர்ந்து கொள்கிறார் [எழுத்தாளர் மட்டுமே உணரமுடிந்த ஒன்று பொதிந்த அனுபவம்]

 

சிறு வயதில், அப்பா முதன் முதலாக என்னை எங்கள் குலதெய்வம் இருக்கும் [திருச்செந்தூர் அருகே சிறிய கிராமம்] தாய்விளை கிராமத்துக்கு அழைத்து சென்றார். வெம்மை நீராவியாக உளமயக்கு அளித்து அலையும் மெல்லிய செந்தூர வண்ண நிலவிரிவு. தூரத்தில் புழுதி வண்ண ஓட்டு ,கூரை வீடுகள், புழுதி வண்ண சர்ச், புழுதி வண்ண வெறுமை, ஒன்றுடன் ஒன்று ஒட்டாத விசித்திர மணல் துளிகள், அருகே மிக அருகே  தனித்து நின்று ,வெயிலில் தகித்து முனகும் பனை ,வெறுமை வெறுமை கண்குளிரும் வெம்மையின் வெறுமை. அழுதேன். ”என்னாலே பொடி சுடுதோ ” என்றபடி அப்பா என்னை தூக்கிக் கொண்டார்.

 

அப்படி ஒரு நிலத்தில், அப்படி ஒரு வெறுமையில், தன்னுள் கறந்த வெறுமையை அறிகையில்  கோமல் கைலாய மலையை அட்டைப்படம் ஒன்றினில் காண்கிறார்..கைலாயம் சென்றுவந்த அனுபவத்தை எழுத்தாளருக்கு சொல்கிறார்.  வலி முதலில் ஒரு சேட்டை குழந்தையாக அவருடன் இருக்கிறது. வளர்த்து எடுக்கிறார். ”இப்போ அவ வளந்துட்டா” பெண் குழந்தை. அவள் அவரை அழைத்து செல்கிறாள் கைலாயத்துக்கு. இன்னும் சில கிலோ மீட்டர்களில் கைலாயத்தை கண்டு விடலாம். எனும் நிலையில் மனமும் உடலும் சோர்ந்து அமர்ந்து விடுகிறார் கோமல் . அவர்க்கு ஊக்கம் அளித்து உடன் நிற்கிறாள் ஒரு வடக்கத்தி அம்மாள் . மீண்டு எழுந்து நடந்து அந்த பொற்கிரீடத்தை சூடுகிறார் கோமல்.

கிராத அர்ஜுனன் நரகில் குதிப்பது போல , கோமலும் பயணத்தில் குதிக்கிறார், கிராத அர்ஜுனன் போலவே அவருக்கும் மீண்டு வருதல் குறித்த கவலை எதுவும் இல்லை.  கிராதத்துக்குப் பிறகு கோமல் உடன் வரும் வடக்கத்தி அம்மாள், சிவனைக் காண அழைத்து செல்லும் மலை மகளாகவே தோற்றம் அளிக்கிறார்.  எழுத்தாளரே ரொம்பப் பின்னால் அட்டைப் படத்தில் கண்ட காட்டெருதுக் குட்டி.  முகட்டில் அட்டைப்படத்தில் கண்ட அதே எருமைக் குட்டியை கோமல் பார்க்கிறார்.

 

இத்தனை வலியும் ஏன்?  எழுத்தாளன் மட்டுமே அறியக் கூடும் அந்தக் காரணம் என்ன? அதைத்தான் கோமல் கைலாயத்தின் முன் அறிகிறார்.  கண் முன் கண்ட  எத்தனையோ  அறப்பிழை தருணங்களில் அதை சபிக்காமல் வாளாவிருந்த நிலைக்கு  மாற்று இது.அவருக்கு உடல் வலிக்கு முன்னால் அறம்பிழைத்த தருணங்களில் அவரது கையறு நிலை அவருக்கு அளித்த வலிதான் பெரிது.ஊழிற்பெரு வலி அது.  எழுத்தாளனின் சொல்லில் எழும் அறச்சீற்றம் எல்லாம், எங்கோ என்றோ அவன் முன்  நிகழும் அறப்பிழை முன் அவன் மௌனமாக நின்றதன் பதிலீடுதானா?  அத்தனை கீழ்மைகளையும் தானே ஏற்றுக் கொள்கிறார். [எழுத்தாளன் வேறு என்ன செய்ய இருக்கிறது] அத்தனை கீழ்மைகளையும் மன்னிக்கிறார் [எழுத்தாளன் இதை தவிர்த்து வேறு எதையும் செய்வானா என்ன?]  இக் கணம் அந்த பொற்கிரீடம் தனக்கு வேண்டும் என விழைகிறார். கிடைக்கிறது. அக் கூட்டத்தில் அந்த கிரீடத்தை சிரத்தில் சூடும் தகுதி அவருக்கு மட்டுமே உண்டு. ஏன் எனில் எழுத்தாளன் மட்டுமே தாங்கிக்  கடக்கத் துணியும் ஊழிற்பெறுவலியை  தாங்கி கடந்தவர் அவர்.

 

இவற்றுக்கு வெளியே, தனிமையில் என் கற்பனைக்குள் எப்போதும் கதைகளை கலைத்துப் போட்டு விளையாடுவேன். கணம் கனமாக நின்று விண் விண் என தெறிக்கும் வலி என்பது என்ன? சிவம் தானே. சிவம் சிவம் சிவம். அங்கே வலி அற்ற அகாலத்தில் கோமல் உணர்ந்தது என்ன? சிவமே யாம்  தானே?    இந்தக் கதைக்குள் இதற்கான முகாந்திரம் இல்லாமல் இருக்கலாம். கிராதத்தையும் பெரு வலியையும் கலைத்துப் போட்டு விளையாடினால்  இங்கே வந்து சேர முடியும். நீங்கள் அறிவீர்கள். நீங்களும் உள்ளே கதைகளை கலைத்துப்போட்டு விளையாடுபவர்தானே.

 

கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைமுன்னாளெழுத்தாளர் டாட் காம்
அடுத்த கட்டுரைவெண்முரசின் கார்வை