ஒரு செல்லசிணுங்கல்போல….

11

மிக எளிமையாகச் சொல்லப்போனால் கவிதையென்பது ஒரு குறிப்பிட்ட வகையான மொழிவெளிப்பாடு மட்டுமே. நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைத்தையும் மொழியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். பொருட்கள் நிகழ்வுகள் உணர்வுகள். இந்த நிகழ்வையே உளம் என்கிறோம். உள்ளும் புறமும் என ஓடும் பிரக்ஞையினூடாக இவற்றை இணைத்து முடைந்து பேருரு ஒன்றை உருவாக்குகிறோம். அதுவே நம்மைச் சூழ்ந்திருக்கும் மொழியென்னும் இப்பெருவெளி. அது நாம் பிறந்து திளைத்து வாழும் கடல். பல கோடிபேரால் பலகோடி முறை பேசப்படுவதனாலேயே அது முடிவிலாத நுட்பங்களைக் கொண்டுள்ளது. புரிந்து கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே மாறாத வடிவங்களையும் மறுகணம் அடைந்துகொண்டுள்ளது.

கவிதை இவ்விரு எல்லைகளுக்கு நடுவே முன்பிலாத ஒரு புதிய இணைப்பை உருவாக்கும் முயற்சி எனலாம். மொழியின் மாறாத தன்மையை அது மீற முயல்கிறது. பழைமையே தன் வடிவெனக்கொண்ட மொழியிலிருந்தே புதியவற்றை எடுத்து முன்வைப்பதே அதன் வழியாகும். மாபெரும் கவிதைகள் பலவும் சற்றே மாறுபட்ட பிறிதொரு மொழியில் சொல்லப்பட்டுவிட்டவை என்பதனாலேயே அழியாத்தன்மை கொண்டவை. ”அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்” எனத் தொடங்கும் பாரிமகளிரின் கவிதை அதன் உள்ளடக்கத்தினால் அல்ல, மிக இயல்பாக ஒரு துயரத்தை சொல்லிவிட்டதனால், அச்சொல்லல் முறை வழக்கத்திற்கு சற்றே மாறுபட்டதாக எப்போதுமே ஒலித்துக் கொண்டிருப்பதனால்தான் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து இங்கு வந்திருக்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இக்கூறுமுறையை சற்றே மாற்றுவதற்கு கவிஞர்கள் முயல்கிறார்கள். அதை எப்படி அடைகிறார்கள் என்பது விந்தையானதுதான். மிகத்தீவிரமான் கவிதைகளை எழுதும் தேவதேவன்

”கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்?

ஒரு காபி சாப்பிடலாம் வா”

என்று எழுதும்போது வேறொரு உளநிலையில் நின்று மொழியின் பெரும்போக்குக்கு சிறிய ஒரு மாற்றை அமைக்கிறார். அந்த புள்ளியிலிருந்து நீண்டு வளர்ந்தவை என்று இசை, வெயில், லிபி ஆரண்யா போன்றவர்களின் கவிதைகளைச் சொல்ல முடியும். அவற்றில் உள்ள இயல்பான ஒழுக்கும் மொழியை சற்றே இடம்மாற்றி வைக்கும் நுட்பமும் தான் அவற்றை கவிதையாக்குகிறது.

ஆரம்பகட்டக் கவிதைகளில் இசை படிமங்களையும் சித்தரிப்புகளையும் அதிகமாக பயன்படுத்தியிருந்தார். கூடவே அவருடைய தனித்தன்மை கொண்ட மொழி அதாவது வழக்கமாகச் சொல்லப்படும் ஒன்றை சற்றே வேறொரு கோணத்தில் சொல்லும் விலக்கக்கோணம் அமைந்திருந்தது. இவருடைய முந்தைய தொகுதிகள் இன்னும் அதிகமான வாசக ஈர்ப்பை அடைந்ததற்கு காரணம் ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த கவிதை முறைகளில் எழுதப்பட்ட சில கவிதைகள் அதில் இருந்தன என்பதுதான்.

”ஆட்டுதி அமுதே” இசையின் புதிய தொகுதி. முழுக்க முழுக்க மொழியின் கோணமாற்றம் உருவாக்கும் அழகியல் சாத்தியங்களை நம்பி மட்டுமே எழுதப்பட்ட கவிதைகள் இவை. இக்கவிதைகளிலிருந்து படிமங்களையோ தீவிரமான நுண்புனைவுத் தருணங்களையோ எடுக்க முடியவில்லை. அனைத்துக் கவிதைகளுமே புன்னகையுடன் கலந்த அவருடைய விலக்க மொழியில் அமைந்துள்ளன.

’’உற்சாகம் தாளாத நடனக்காரன்

பாட்டுச் சத்தத்தை கூட்டுவதைப்போல

இந்த இரவில்

இன்னும் இன்னுமென

நிலவைத் திருகுகிறான் ஒருவன். ’’

”இன்னிரவு” என்னும் கவிதை. எப்போதும் கவிதையில் சொல்லப்பட்ட அந்த மனஎழுச்சிதான். ஆம், ”அற்றைத் திங்கள்”. அக்கவிதையிலிருந்து அத்துயரம் மிக்க உவகை அதன் உருக்கம் இவ்வண்ணம் ஆகியிருக்கிறது. “நிலவின் ஊளை” என்று எழுதிய பிரமிளின் கொந்தளிப்பு. ஆனால் இக்கவிதை வெளிப்படுவதற்கு இதுவரை இல்லாத ஒரு வடிவத்தையும் ஒரு பார்வைக் கோணத்தையும் கொண்டிருக்கிறது. இது ஒரு படிமம் அல்ல. எதையும் மேலதிகமாகக் குறிக்கவில்லை இது. இக்கவிதையிலிருந்து பெரிதாக வளர்ந்து செல்வதற்கு எண்ணமோ தரிசனமோ ஏதுமில்லை. அறிந்த அத்தருணம் முற்றிலும் எதிர்பாராத சொற்கோவையாக நிகழ்ந்திருக்கிறது. இவ்வியல்பே இசையின் கவிதைகள் ஆகும் அடிப்படை.

111

இவ்வியல்பை மட்டுமே நம்பி இத்தொகுப்பில் உள்ள ஏறத்தாழ அனைத்து கவிதைகளையுமே எழுதியிருக்கிறார். ஒரு நீண்ட கவிதையின் அலகுகள் போல இத்தொகுதியின் அனைத்து கவிதைகளுமே இந்த மொழியால் இணைக்கப்பட்டிருக்கின்றன.

*

வீடு

அப்பா தியாகி

அம்மா சாமி

கணவனும் மனைவியும் உடனொருபாகம்

தங்கை நறுமணத்தி

அண்ணன் துப்பாக்கிக் குண்டுக்கு குறுக்கே விழுபவன்.

குழந்தைகள் தெய்வப்பிரசாதம்.

தாத்தா உழைப்பில் உயர்ந்த உத்தமர்

பாட்டி உத்தமரின் உறுதுணை

மாமா மாமருந்து சித்தி குளிர் தரு

ஆனாலும் வீட்டை நெருங்குகையில் மூக்கைப் பிடித்துக் கொள்ள வேண்டும்’

*

தமிழ் நவீனக் கவிதையில் வீடு வெவ்வேறு வகையில் எப்போதும் சொல்லப்படுவதே.  விடுவதற்குரியது. அதை எப்போதும் பற்றிக்கொண்டிருக்கிறது உலகியலான் உள்ளம்.

வீடுகள் யாவும் வாயிளித்து

ஆபாசமான பசியைப் போன்று

நிற்கக் கண்டவனாயினும்,

வீடு

ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.

என்னும் பிரமிளின் வரி கவிஞனின் முடிவில்லாத வீடு தேடல் அலைதல் வீடுகளின் மீதான காதல். வீடுகளின் மூர்க்கமான மறுதலிப்பு. வீடுகளின் வாய்திறந்த புன்னகையை தஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகளில் எழுதியிருக்கிறார்

என்றாலும்
நான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன்

[மாற்றப்படாத வீடு ]

என்னும் கவிதை தேவதேவனின் கனவு வீட்டின் பதிவு. அதே உணர்வைத்தான் இக்கவிதை முற்றிலும் புதிய ஒரு மனநிலையுடன் சொல்கிறது. கண்டடைதலாக அல்ல துயரமாகவும் கசப்பாகவும் அல்ல ’அதெல்லாம் அப்படித்தானே’ என்னும் அறிந்த புன்னகையுடன்

இசை தனிப்பட்ட முறையில் எனக்கு அணுக்கமான கவிஞராக ஆவது இதனால்தான். ஒரு மூன்று தலைமுறைக்கால கவிதைமொழி அவருக்குப் பின்னால் உள்ளது. அத்தொடர்ச்சியில் வந்து இங்கு நிற்கும்போதுதான் அவரது கவிதைகளின் மொழிமாறுபாடு திசைக்கோணலின் அழகு அர்த்தப்படுகிறது. அதனூடாக அணுகுபவர்களுக்கு மட்டுமே இக்கவிதை கவிதையாகிறது

இக்கவிதைகளை மட்டும் வாசிக்கும் ஒரு புது வாசகன் இவை எதனால் கவிதையென்றே வியப்படைவான். பல கவிதைகள் மிக அன்றாட வாழ்க்கையின் தருணத்தை அப்படியே எழுதியது போல அவனுக்குத் தோன்றும்.

நான் பார்க்க எவ்வளவு காலமாய்

எந்தக் கதவையும் திறக்காமல்

எந்தப் பூட்டையும் உடைக்காமல்

இத்தனை சாவிகளை பரப்பிக்கொண்டு

இப்படி புதன் கிழமை சந்தையில் வீற்றிருக்கிறார்

இந்தக் கந்தலாடைக் கிழவர்

இக்கவிதையின் தலைப்பு ”நீதி நெறி விளக்கம்”. ஒர் எளிய விமர்சனமாக மட்டுமே தோன்றக்கூடிய கவிதை. இசையின் தனித்தன்மை கொண்ட மொழி இதுவரையுமான தமிழ் நவீனகவிதைக்கு அளிக்கப்பட்ட எதிர்வினை என்ற புரிதலுடன் படிக்கப்படுமென்றால் மேலதிக அழுத்தம் பெற்று இதைக் கவிதையாக ஆக்குவதைக் காணலாம்.

அப்படி வாசிக்கும் ஒருவனுக்கு ”இந்த நகரத்தின் சாக்கடையைப்போல சுழித்தோடுகிறதே இது எங்கள் கண்ணீர்” என் ஆரம்பிக்கும்  கவிதை [செல்வத்தை தேய்க்கும் படை] ஒரு புரட்சிக் கூவல் அல்ல என்று தெரியும். அதற்குள் உள்ள புன்னகைதான் அதைக் கவிதையாக்குகிறது என்று பிடிகிடைக்கும்..

’’இப்போது எனக்கு ஒண்ணுக்கு முட்டிக் கொண்டு வருகிறது உடனே அதை எங்காவது பீச்சி அடிக்கவேண்டும் மற்றதெல்லாம் அப்புறம் தான் சற்றைக்கேனும் மற்றதனைத்தும் மறக்கடித்த என் இனிய மூத்திரப் பிரச்னையே” [ வாழ்வில் ஒரு அர்த்தம்] என்பது எப்படி கவிதை ஆகிறது ? அந்த இறுதிவரியின் பிரியமான நையாண்டியால். மகத்தான கவிதை மகத்தான் உணர்வுகளை உருவாக்கவேண்டியதில்லை. எளிய புன்னகையே அதன் அடையாளமாக ஆகக்கூடும். பெருங்காதலைச் சொல்ல மொழி தேவையில்லை, ஒரு சின்னச்சிணுங்கலே போதுமானது

 

[ஆட்டுதி அமுதே. கவிதைகள். இசை. காலச்சுவடு பிரசுரம்]

 

இசை இணையப்பக்கம்

 

முந்தைய கட்டுரைமதம்
அடுத்த கட்டுரைமுன்னாளெழுத்தாளர் டாட் காம்