தலையல்லால் கைமாறிலேன்- கடிதம்

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

 

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் ,

நலமாக இருக்கிறீர்களா? நீண்ட இடைவெளிக்கு பின் தங்களுக்கு எழுதும் கடிதம் . இதற்கு முன்பாக மூன்று கடிதம் எழுதியிருந்தேன் . என்ன காரணத்தினாலேயோ அதற்கு தங்களிடமிருந்து பதில் இல்லை.கடைசிக் கடிதம் நான் சிங்கப்பூரில் இருந்த போது உங்களின் சிங்கப்பூர் சந்திப்பு குறித்த கடிதம் கண்ட பின் எழுதியது. நீங்களும் அப்போது அங்குதான் இருந்தீர்கள்.என் பயணத்திட்டத்தை அதை ஒட்டியே ஒருங்கமைத்திருந்தும் ஏமாற்றமே.

விஷ்னுபுரம் விவாதப் பகுதியை ஆழ்ந்து படிக்க முற்படும் போதுதான் எனக்கு ஒருவிஷயம் புரிபட ஆரம்பித்தது. அது எனக்கு ஒரு மின்னலின் பொறி எனவும் அதே சமயம் புரியாமை என்கிற ஆயாசத்தையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்தியது. சிக்கலான கோட்பாடுகளை புரிந்து கொள்ள அது தன் உள் அடுக்குகளிலில் துழாவத் தொடங்கியது ஆழ்படிமங்களில் அது இருப்பதாக உணர்த்திய பின் அது அகப்பையில் இருந்தும் புறப்பைக்குவர மறுத்தது.அது ஒரு வகையான வதை. நானே இரண்டாக பிளந்தது போல ஒரு உணர்வு.

தங்களை சந்திக்க நினைத்தது முதல் செல் என்றும் செல்லாதே என்றும் இரட்டை நிலைபாடு விவாதித்து கொண்டே இருந்தது.உங்களை சந்திக்கும் அந்த கணம் வரை படுத்தி எடுத்தது.ஆனால் நான் கோவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தேன்.இறுதியாக எதற்கான இந்த தயக்கம், எதனை எது எதற்கு அஞ்சுகிறது என கேள்விகளுக்கு பின் தீர்க்கமாக தங்களை சந்திக்க வேண்டிய அவசியத்தை அனுமானித்த பிறகே உங்களை கோவையில் சந்தித்தேன்.

ஒரு கணம் அதனின்று வெளிவராமல் போயிருந்தால் பெரும் இழப்பையும் அந்த இழப்பின் இழவை அறியாதே போயிருப்பேன்.தங்களின் இந்து ஞானபரபின் கருத்துகள் ஏதாவதொரு வடிவத்தில் தங்கள் ஆக்கங்களிலும் பதிவுகளிலும் இருந்து கொண்டே இருக்கிறது.தங்களின் வெண்முரசின் ஆக்கத்திற்கு பின் உங்கள் மனநிலை என்னவாக இருக்க கூடும் என யூகித்துப் பார்க்கிறேன்.அனைத்தையும் கொட்டி விட்ட நிம்மதியா? அல்லது சொல்லாதே விட்டவை இதைவிட அதிகம் என்கிற குறையா? தெரியவில்லை.

தீவிரமான ஶ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த எவருக்கும் உள்ள அகவய அபிப்ராயம் அதைத் தொடர்ந்த புறவயமான பேச்சினால் ஏற்பட்ட ஒற்றை சிந்தனை என வளர்ந்தாலும்,ஓயாத ஒவ்வாமையும் சேர்ந்தே வளர்ந்தது.அது எங்கும் எவர்மத்தியிலும் ஒத்துபோகாத மனநிலையை எப்போதும் அளித்துவந்தது. இயற்கையான சுபாவம் அதைப் பற்றிய பேசும் திடத்தை கொடுக்கவில்லை.எங்கோ ஏதோ சரியில்லை என்னும் புரிதலையும் மட்டும் அது உள்ளே பொதிந்து வைத்தது.

விசிஸ்டாத்துவைத சித்தாந்தத்தை எம்பெருமானார் தரிசனம்என்பது ஶ்ரீவைஷ்ணவத்தில் பிரசித்தி.அது சம்பந்தமாக புத்தகங்களை இருபது வருடங்களாக படித்ததினால் ஏற்பட்ட பாதிப்பு அது பற்றிய சிந்தனை ஓட்டத்தில் வெண்முரசைபுரிதலுக்கு எடுக்க என்னிடம் நிறைய குறைபாடுகள் உள்ளதாக தோன்றியது. அதுவே என்தேடலை அதிகப்படுத்தியது.

 

பேசிற்றே பேசலல்லால்,”ஏகக்கண்டர்கள்என்று சொல்மாறாது அர்த்தம் மாறாதே பேசுதல் சம்பிரதாயம் என்றிருக்கும் போது அதில் நவீன சிந்தனை பற்றி பேசுதலை தான்தோன்றிஎன குற்றமாக பார்ப்பது வழக்காரு.நான் இந்த பொதுச் செயளாலர் பதவிக்கு வரும்போது சம்பிரதாயப்படி கடமைகளை ஆற்றிய பிறகு என்தேடலுக்கு வடிகாலாக பார்த்தது திறந்த மன்றம்அதில் நவீன பார்வைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்கிற ஆவலில் பல திக்குகளுக்கு ஓடி நின்றது, உங்களை சந்தித்த பிறகுதான்.

முந்தைய சிந்தனைகளின் பிந்தைய தொகுப்புத்தான் புதுமை என்பது. முந்தைய சிந்தனைகளை தொகுத்திருக்கின்ற தொகுப்பு முறையும் அவற்றில் காணப்பட்ட இடைவெளிகளைத் புதிய தொகுப்பினால் விளக்கக்கூடிய நிரவல்களை கொண்டதுஎன்கிற உங்கள் எழுத்து பல அடுக்கு திறப்புகளைக் கொண்டாதாக இருந்தது.என்னை தெளிவு படுத்தியது.பல வருட மண்டை குடைச்சல் ஒழிந்து தெளிவென சிந்திக்க இயலுகிறது.

பகவத் சங்கல்பம் என்றே தயங்காது கூறுவேன்.எனக்கு வெண்முரசுகிடைத்ததற்கு.ஆனால் அதை தொடர்வது எளிதானதாக இல்லை.ஒவ்வொரு கருத்திற்கும் என் உள்ளே ஒன்று எழந்து எழுந்து மறுத்து மறுத்து முரண்டு அடித்தது,அதனுடனான ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் வரை. அதன் பிறகே அது என்னை வெண்முரசைபடிக்கவிட்டது.

வெண்முரசுபடிப்பது ஒரு தொடர் ஓட்டம் போல.விடாது பின் தொடருதல் பெரும் ஆயாசத்தையும் அதை ஒட்டிய வேகத்தையும் இணைத்தே கொடுத்தது. தங்களின் வெவ்வேறு ஆக்கங்களையும் ஏக கால வாசிப்புகளுக்கு பிறகு உற்று நோக்கினால் அவற்றின் ஊடுபாவாக உங்கள் ஆழ்மனப் படிமங்கள் வாழுதல்என்கிற பரிணாமம் கொண்டு எழுந்து வருவதாகப் புலப்படுகிறது.இத்தனை வருடங்களாக ஊற்றாக பெருகிய எண்ணப்பெருக்கு மதகு உடைப்பெடுக்கும் முன் பல ஆக்கங்களின் வழியாக அது பெருகி வழிந்தாலும் , வெண்முரசு ஆக்கம் உங்களை வற்ற அடிக்கும் முயற்சியாக தெரிகிறது.அது என்னை என்னவோ செய்கிறது.அது பற்றி தனியாக எழுத வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் எழுத்துக்களையே படித்துவருகிறேன்.இதுலிருந்து வெளிவர ஜெயகாந்தன் கல்கி நா.பா என பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கத்தை படிக்க முயற்சித்து ஏனென்று தெரியவில்லை அனைத்தும் தடைபற்றி நிற்கிறது.

நம் அறிவுச்சூழலில் இந்து மெய்ஞான மரபு குறித்துக் கடுமையான துவேஷம் கொண்டவர்கள் ,மற்றும் மிகப் பெரிய பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர் இருசாராருக்குமே இம்மரபு குறித்து போதுமான அளவு தெரியாது இவர்கள் வெறும் மனப்பதிவுகளையும் ஒற்றைப்படை புரிதல் மட்டும் உள்ளவர்களே.வெறுப்பவர்களுக்கும் வழிபடுபவர்களுக்கும் இடையே வியக்கதகு ஒற்றுமை.இந்து ஞான மரபு என்பது முற்றிலும் ஆன்மீக மரபுதான் என்றும் , அது தவிற்கவியலாத மதச்சடங்குகளுடனும் நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது என நம்புவதுதான்“.என்றீர்கள்.

இதில் நான் இரண்டாவது வகை

இந்நூல் இந்த இருவகைச் சிறுமைப்படுத்துதல்களுக்கும் எதிரான தரப்பை தெளிவாக முன்வைக்கிறதுஎன்கிற வரி ஆழ்ந்த திகைப்பை ஏற்படுத்தி அதுவரை நான் கொண்டிருந்த முன் முடிவுகளை கலைந்து விட்ட பிறகே அது தன் நிஜமாகவே முகத்தை காட்டத்தொடங்கி பின் என்னை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டது.

என்னுடனான என் ஒப்பந்தம். உங்கள் கருத்துக்களை இரண்டாக பிறித்துக்கொள்ளவது ஒன்று;அனைத்தையும் அது சொல்லும் வகையில் புரிந்து பொதிவது. இரண்டு;ஏற்கவியலாததை தனியாக வைத்துக்கொள்வது.

மேலும் ஏற்கவியலாததை இரண்டாக பிரித்துக்கொள்வது.ஒன்று;அவற்றை அக்கால சூழல் உணர்ந்து புரிந்து கொள்வது, அல்லது தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையை அனுமானிப்பதின் வழியே அவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பது.இரண்டு; மற்றவற்றை கடக்கவியலும் காலம் வரை விட்டு வைப்பது.ஆனால் உங்களின் ஆறு தரிசனம்ஆக்கம் வாசிப்பிற்கு பிறகு இந்தப்பகுதியில் தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையாக அனுமானிப்பதின் வழியே அவற்றை கடப்பது என்கிற ஒரு பொது புத்தி எழுந்து வந்துள்ளது.அவற்றை நியாயப்படுத்த தொடங்கினேன்.

உங்கள் ஆறு தரிசனம் ஆக்கத்தை வாங்கி பல மாதங்களாகி இருந்தது .அதை படிப்பதற்கு ஏற்ற மனநிலைக்கு காத்திருத்தேன்.தங்களின் கிராதம்முற்றிய பிறகு இந்த இடைப்பட்ட காலத்தில் ஆறு தரிசனம் வாசிக்க துவங்கினேன்.கிராதத்தில் அர்ஜூனனின் ஸ்வர்காரோகணப் பகுதியில் அர்ஜூன பாலிவிவாதம் மின்னெளென பொறிதட்டியதாக உணர்ந்ததை வார்த்தையில் வடிக்க இயலாமை என்பது மற்றொரு வதை.

இன்று என் சிந்தனை வெளிப்பாடாக நான் நினைக்கும் எல்லாம் என் ஆழ்மன எண்ணங்களாக உங்கள் எழுத்திலிருந்தே எடுத்து தொகுத்தபடி முன்நகர்கிறேன்.எனக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள் உங்களை சுத்த அத்வைத கொள்கைகளை கடைபிடிப்பவன்என கூறியிருந்தீர்கள்.அது அப்போது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.இன்றைய சூழலில் அது சாத்தியமானதா என நினைத்தேன் ஆனால் வெண்முரசு மற்றும் ஆறு தரிசனங்கள் இன்றைய காந்தி போன்ற ஆக்கத்தின் வாசிப்பிற்கு பிறகு அதை முழுவதுமாக புரிந்து கொள்வதுடன் உங்களை மிக அனுக்கமாகவும் உணர்கிறேன்.

இன்றைய காந்திவாசிப்பு ஒரு ஈடு இணையற்ற ஆக்கம்.நான் ஆரசியலை ஒரு அனுபவமாக பார்த்திருக்கிறேன் என்னால் அதற்குள் இந்தளவு பிரவேசிக்க இயலும் என நினைத்துப்பார்க்க வில்லை.கால மடிப்புகளை நீவி தட்டையாக்கியது உங்கள் எழுத்து.எனவே என்னால் அந்த காலகட்டத்தை பார்க்க முடிந்தது காந்தியை புரிந்து கொள்ளமுடிவதுடன் நானும் அங்கு ஒரு நபராகவே நின்றிருந்தேன் என்றால் மிகையல்ல.

அம்பேத்கார் பற்றிய குறிப்பில் அவரை பற்றிய எதிரும் புதிருமாக ஆர்பரிக்கும் கடல் போன்ற தரவுகளின் இடையே எதிலும் படாத பயணத்திற்கு பாதை காட்டி விளக்கியது பிரம்மிப்பைக் கொடுத்தது.

என்ன சொல்ல தலையல்லால் கைமாறிலேன்என்பதைத் தவிற .என்னை எனக்கே அடையாளம் காட்டி எனக்கென ஒரு உலகலளாவிய கருத்தும் நேரான பார்வை,பாதை இருப்தாக நினைக்க வைத்ததற்கும்.எனக்கென ஒரு எழுத்து உருவாவதற்கும் காரணமான உங்களை வாழ்நாளில் மறக்க இயலாது.ஏறக்குறைய இரண்டு வருங்களாக நிறுத்தி வைத்திருந்த இயக்க விஷயங்களை தடையற தொடர முடியும் என நினைக்கிறேன்.

அரிகிருஷ்ணன்

பாண்டிச்சேரி

***

அன்புள்ள அரிகிருஷ்ணன்

உங்கள் பயணத்தைப்பற்றிய சித்திரம் எனக்கு அணுக்கமானதாக இருந்தது. நான் வாசித்ததும் இப்படித்தான் என்றுதான் சொல்லவேண்டும். முரண்படுதல், குழம்புதல், மேலும் சற்று முன்னகர்தல் என்றுதான் நானும் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் உடன்வரும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது

பணிகள் உங்கள் இயல்புக்குரியவை என உணர்ந்தால் அதை தீவிரமாகச் செய்வதே சரியானது. அனைத்தையும் அதனூடாகவே கண்டுகொள்ளமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைகுறளுரை, கடிதங்கள் -8
அடுத்த கட்டுரைசி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’