குறளுரை, கடிதங்கள் -8

 maxresdefault

அன்புள்ள ஜெயமோகன்,

முன்பொரு முறை தன்னறம் பற்றிய குறளின் திறப்பு பற்றி எழுதியிருந்தீர்கள் அதையொட்டி தங்களிடம் சங்க சித்திரங்கள் போல குறளையும் உணரும் முறை பற்றி எழுதுமாறு வேண்டியிருந்தேன். தற்போது உங்கள் குறளுரையை விசும்பின் துளியாக பெற்று கொண்டேன். நன்றி.

http://www.jeyamohan.in/70835#.WITQ1bYrI6g

http://www.jeyamohan.in/71288#.WITQ77YrI6g

அன்புடன்,

அருண்.

***

ஜெ

குறளினிது சிங்கை காவிய முகாமுக்குப் பிறகு நேரில் சென்று கலந்து கொள்ளக் கிடைத்த முதல் நிகழ்ச்சி. மீள மீள எண்ணி இன்னும் மீளாதிருக்கிறேன்.

இனி குறளினிதே. குறளை இவ்வளவு கவிதையாக, நம் மனச்சான்றை, கண்ணீரை, நோக்கிப் பேசும் கவிதையாக இதுவரை உணர்ந்த தருணங்கள் மிகக் குறைவு. ஒவ்வொரு குறளாய் மலர்ந்து கொண்டே இருக்கிறது.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து

வாசிக்கும்போது எழுத்தின் வாயிலாக வெளிப்படும் கருத்துகளை மட்டும் தொட்டெடுக்கும் கண்ணில், தெரியாமல் மறைந்துவிடும் எழுதுகோல் போல அவன் மீது அதுவரை நான் கொண்ட குறைகள் எதையும் அவனைக் கண்ட போதில் காணாது போகிறேன். அழகான செறிவான விளக்கம்.

பொதுவாக இக்குறளுக்கு, கண்ணுக்கு மைதீண்டும் போது அந்த அஞ்சனமிடும் கோலைக் காணாத கண்கள் போல எனப் பல உரைகளில் வாசித்திருக்கிறேன். பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்ட கருத்தென்பதாலேயே எழுதுகோல் என்பது மை தீட்டும் கோல் என உரை எழுதப்பட்டது போலும். அதிகாரத் தலைப்பு எனும் எல்லையால் குறுகிப் போகும் சில குறள்களைப் போல, அந்த உவமையால் உருவம் சுருங்கி நிற்கும் இக்குறள், ‘நூல் பல எழுதும் கோல்என்று பொருள் கொள்ளும் தருணம் மலரத் தொடங்குகிறது.

உணர்ச்சிகளைத் தொடும், சிந்தனையைத் தீட்டும் எழுத்து வெளிப்படும் கருவியே அதை எழுதிச் சென்ற எழுதுகோல். என்றாலும் தூரிகை புதிதெனில் சில கணங்கள் அதன்மேலும் நாட்டம் செல்லும். புதிய எழுதுகோல் எனில் அதைப் பழகும் வரை அந்தப் புதிய கோலும் கண்ணுக்குத் தெரியும். ‘இவனோ நான் உற்றறிந்து உடன் வாழும் தலைவன். அனைவரது கண்களுக்கும் பழி எனத் தோன்றும் தவறுகளெல்லாம்,

அதை ஆற்றி நிற்கும் என் தலைவன் எந்நிலையில் எதற்காக செய்தான் என்பதை உற்றறியும் என் கண்களுக்குப் பழியெனத் தெரிவதேயில்லை.’ – இவ்வாறு எண்ணும் அவளது அறிதலின் ஆழத்தையும் உறவின் நீளத்தையும் அக்கோல்காணாக் கண் சொல்கிறது.

கொண்கன் கண்ட இடத்து‘ – எனைக் கொண்டவன் எனும் சொல்லாட்சி என் கணவன் அல்லது என் தலைவன் என்பதினும் ஒரு மாத்திரையேனும் உரிமை அதிகம் தொனிக்கக் கனிந்திருக்கிறது. கண்ட இடத்துப் பழிகாணா பெண்ணின் கண் கண்ணோட்டம் உடையதாயிருப்பதில், வயலார் போல அந்தத் தலைவனின் ஏதோ ஒரு தனிச்சிறப்பும் தெரிகிறது. இவ்விதமாய் மலர்ந்து விரிகிறது இக்குறள்.

வயலார் மனைவி குறித்து, ‘அது அப்படித்தான், எந்த ஒரு தர்க்கத்தையும் தாண்டியதுஎன்று சொன்னது நினைவுக்கு வந்தது. பார்வைக்குக் கொல்வேல் கொற்றவை எனத் தெரியும் பல பெண்களிடமும், இன்றும் இக்குணமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவள் உள்ளுறையும் அன்னையெனும் ஊற்றை வற்றச் செய்யாத வரை, மனம் கொண்டவனின் (மனதையும் கொண்டிருப்பானெனில்)

பெருங்குறைகளையும் கண்ணோட்டத்துடன் காண்பவர்கள் இருக்கிறார்கள். எது குறித்து சிந்திக்கும் போதும் வெண்முரசின் ஏதோ ஒரு நாதம் அவற்றில் ஒலிக்காமல் இருப்பதே இல்லை.

பன்னிரு பகடைக்கள நிகழ்வுக்குப் பிறகு குளிர்ந்து இறுகியவள் போலிருக்கும் திரௌபதியின் கோபம் துவைதக் காட்டில் வெளிப்படும் தருணம் நினைவுக்கு வருகிறது. தான் கனிந்துவிடக்கூடும் என்று அச்சம் கொள்ளும் திரௌபதி அம்பையைப்போல அழலை அழியாது நிறுத்தவேண்டுமென்றே அனல் நிகர் வாழ்வுக்குள் புகுகிறாள் அழல் கொண்டு தழல் ஆகிறாள்.

தருமனின் உளப்போராட்டம் வெளிவரும் அளவுக்கு திரௌபதியின் மனநிலைக்குள் நாம் செல்லவில்லை. ஒருவேளை உட்புகுந்திருந்தால், ஐவரின் தவிப்பையும் தருமனின் துயரையும் கண்டு உளம்கசியும் அவள், கொண்கன் பழிகாணாத தன் உள்ளத்துள், தனது சினத்தை குன்றாமல் தக்கவைத்துக் கொள்ள படும்பாட்டை விரித்து உணரலாம் என்று தோன்றுகிறது.

ஊடல் கொண்ட போதும் நீடுவாழ்க என தும்மலுக்கு வாழ்த்தும் அதே பெண், எரிந்து சிதை மீண்ட கோலத்தில் வரும் கணவனை பொருளிழந்த வெறிப்புடன் அசைவற்றுப் பார்க்கவும் கூடும் அணங்கென ஆகுங்கால்.

எரிதழலும் பழிகாணாது மிச்சமின்றி அணைக்கும் அளிமிக்கதுவே.

மிக்க அன்புடன்,

சுபா

***

அன்புள்ள ஜெமோ

குறளுரை முதல்பகுதியைக் கடக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன். நிறைய தகவல்கள். அவற்றை நீங்கள் தயங்கும் குரலில் சொல்கிறீர்கள். இரண்டாம்பகுதிதான் ஒரு கிளாஸிக் உரையாக அமைந்தது. மூன்றாம் பகுதி அதையும் கடந்துசென்றது. மனமார்ந்த வாழ்த்துக்கள்

மாதவன்

 

ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண

குறளினிது ஜெயமோகன் உரை Playlist

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M

 

 

முந்தைய கட்டுரைபுரட்சி வரவேண்டும்!
அடுத்த கட்டுரைதலையல்லால் கைமாறிலேன்- கடிதம்