குறளுரை, கடிதங்கள்- 6

maxresdefault

ஐயா,

 

குறளினிது மூன்றாம் நாள் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அரங்கில் உம் அருகிருந்து கேட்கும் அனுபவம் நேர்கிறது. தாத்தாவின் சொல்லில் தந்தையின் அறத்தையும் மறத்தையும் காட்டும் பிள்ளை உரையில் நெகிழ்கிறேன்.

நன்றி,

டில்லி துரை

***

ஆசிரியருக்கு,

எந்த துறையிலயிலும் சிகரம் சென்றவர் நான் பார்த்த அளவில், அவங்க கைகள் இரண்டாவது மூளை. குறள் சொற்பொழிவு Youtube-இல் கண்டேன் .

எழுதி எழுதி, உங்க சொல் எழுவது கூடவே வலது கையும் எழுந்து ஆடுகிறது. மிக நன்று.

வெள்ளத்து அனைய மலர்நீட்டம்பற்றி ஏதும் வரவில்லை என்று சிறு வருத்தம். ஆனா எவ்வாறு குறள் பயில வேண்டும் என்று கற்றேன்.

ஓம்பிரகாஷ்

***

அன்புள்ள ஜே,

நீங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். திருக்குறள் வற்றாத ஜீவ நதி!! நீங்கள் சொன்ன சரஸ்வதி நதி போல் மானசீகமாக அங்கங்கு ஊற்றாக நம்மிடையே இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.சமணம், வைதீகம் என்ற பிரிவுகள் வள்ளுவருக்கு இருந்ததா என்பது தெரியவில்லை. அறத்துப் பாலும் பொருட்பாலும் பேசப்பட்ட அளவிற்கு புலவி நுணுக்கம் கூறும் இன்பத்துப் பால் பேசப்படவில்லை. அறவுணர்வுகள் சற்றே நெகிழும் தன்மையுடன் இருந்திருக்கக் கூடிய காலம் அது!!! எந்தக் காலத்தில் அறத்தை தீவிரமாக பின்பற்றியிருக்கிறார்கள்?

சித்ரா ரமேஷ்

***

அன்புள்ள ஜெ

குறளுரை கேட்டுக்கொண்டிருக்கிறேன். மிகப்பெரிய உரை. சிலமுறை கேட்டால் மட்டுமே தொகுத்துக்கொள்ள முடியும் போலிருக்கிறது. முதல்நாள் உரையை முதலில் தொகுத்துக் கொள்ளாமல் அடுத்த உரையைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்களே தொகுத்துத் தருவதனால் சிக்கலில்லை. நீங்கள் குறளை கவிதையின் நீதி அல்லது நீதியின் கவிதையாக எப்படி வாசிக்கலாமென்று சொல்கிறீர்கள். குறளை ஒரு மூலநூலாக ஆக்கி அது எனக்கு மட்டும் உரியது என்று உரிமைகொண்டாடி அதை இழந்துவிடவேண்டம் என்கிறீர்கள். அதுதான் உரையின் சாரம் என நினைக்கிறேன்

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ

குறளுரைகளை கேட்டேன். இன்னமும் கூட கேட்கவேண்டும். பென்னம்பெரிய உரைகளைக் கேட்கும்போது ஞாபகங்கள்: வேறு திக்குகளுக்குச் சிதறிப்போய்விடுகின்றன. மிகச்சிறப்பான உரைகள். குறளை கவிதையாக வாசிப்பதைப் பற்றியும் சொந்தவாழ்க்கையில் அந்தக்குறள் மேலெழுந்து வருவதை பார்ப்பதுபற்றியும் சொல்கிறீர்கள் சொந்த வாழ்க்கையில் இருந்து குறளுக்கான அர்த்தத்தை ஒவ்வொருவரும் அந்தரங்கமான உணரவேண்டும் என்ற அறைகூவல் என்று உங்கள் உரையைச் சொல்லலாம்

ராமச்சந்திரன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

குறளுரை முழுவதுமாக கேட்டேன். முதலில் உண்டான உணர்வு என்பது இவ்வளவு பேசியும் எழுதியும் இன்னும் சொல்வதற்கு புதியது உள்ளது என்ற மலைப்பு தான்.

இவ்வுரைகளின் முதன்மையான சிறப்பம்சமென நான் எண்ணியது சமணத்தின் வரலாற்றுப் பின்புலத்தையும், ஒவ்வொரு குறளிலும் மின்னும் இலட்சியவாத அம்சத்தையும் கேட்பவருக்கு கடத்தியதுதான். இலட்சியவாதமென்றால் நம் செவிகளில் அன்றாடம் விழும் பொது போதனைகள் அல்ல. வாழ்கையின் அனைத்து பக்கங்களையும் முழுமை செய்வதற்கான அறைகூவல் அது. குறளின் மேன்மையை நாம் உணர்வது அது தொட்டு உணர்த்தும் நுட்பங்கள் மூலம் தான்.

குறிப்பாக இந்த குறள்:

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு

(மறைப்பதை கனவிலும் எண்ணாதவரிடமிருந்து பெறும் இரத்தல் ஈதலுக்கு நிகர்)

இதைக் கேட்டவுடன் உண்டான அதிர்ச்சி. என் கோணத்தில் இதற்கு வேறொரு அர்த்தத்தை எடுத்துக்கொண்டேன்.

இங்கு இரு இடைவெளிகள் உள்ளன. ஒன்று, என்ன இரக்கப்படுகிறது? இன்னொன்ரு யார் இரக்கிறார்கள்?

எவ்வளவு ஈதல்கள் செய்தாலும் அதற்கு நிகரான வேறொன்று நம்மிடம் வந்து சேரும். அதை நுண்வடிவ ஆணவம் எனலாம். அது ஈதல் செய்கிறோம் என்னும் பெருமையின் மறுபக்கம். அது நுண்வடிவில் இருப்பதால் நனவுள்ளம் அதை அறிவதில்லை. அதை நாமே நம்மிடமிருந்து மறைத்துக் கொள்கிறோம். நனவுள்ளத்தில் இல்லையென்றாலும் கனவுள்ளத்தில் அது தங்கிக்கொண்டுதானிருக்கும். அதை ஒழிப்பதற்கு ஈதல் என்னும் நிலையிலிருந்து இரத்தல் எனும் நிலைக்கு வந்தே ஆக வேண்டும். பொருள் வேண்டியல்ல அருள் வேண்டி செய்யும் இரத்தல் அது. யாரின் அருள் வேண்டி? மறைப்பதை கனவிலும் எண்ணாதவரின் அருள் வேண்டி. அருளைப் பெற்று ஆணவத்தை இழக்கிறோம். அதுவும் ஈதலுக்கு நிகரே.

குறளை புதியதொரு வெளிச்சத்தில் நிறுத்தியதற்கு மிக்க நன்றி.

அன்புடன்,

பாலாஜி பிருத்விராஜ்

***

ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண

குறளினிதுஜெயமோகன் உரை – Playlist

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M

 

 

 

 

முந்தைய கட்டுரைஜல்லிக்கட்டு, விவாதங்கள்
அடுத்த கட்டுரைஅராத்து விழா -கடிதங்கள்