ஜல்லிக்கட்டு இரு கருத்துக்கள்

index

 

ஜெ,

 

 

நண்பர் Rajkumar Rathinavelu ஜல்லிக்கட்டு மற்றும் அது சார்ந்த அறிவியல்,வணிக,சமூக மற்றும் கலாச்சார பரிமாணங்களை ஆய்ந்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். எளிமையாகவும் தெளிவாகவும் பலவிஷயங்களை அக்கட்டுரை விளக்குகிறது.  (Tamil translation by Mathi)

 

A1 மற்றும் A2 , அவற்றின் விளைவுகள் :

 

இன்று மிகப்பரவலாக பேசப்படும் , பசுவின் பாலிலுள்ள A1 மற்றும் A2 வகை புரதங்களின் அறிவியலை சற்று அறிந்து கொள்வோம்.அவை அடிப்படையில் , பாலிலுள்ள பீட்டா( β) கேசின் புரதங்களின் இரண்டு திரிபு(mutant) வகைகள். அவை தம்மை நிர்ணயிக்கும் அடிப்படை கட்டமைப்புகளில் 67வது இடத்தில் உள்ள அமினோ அமிலத்தின் வகைகளால் வேறுபடுகின்றன. A1 வகை புரதம் தன் கட்டமைப்பில் 67வது இடத்தில் ஹிஸ்டிடின் எனும் அமினோ அமிலத்தையும் A2 வகை புரதம் ப்ரொலைன் எனும் அமினோ அமிலத்தையும் கொண்டுள்ளது.

 

இதில் A1 வகை புரதம் அல்லது A1 வகை பீட்டாகேசின் உட்கொள்ளப்படும் போது ஏழுவகை அமினோஅமிலங்களின் தொகுப்பான BCM7 எனும் பெப்டைடுகளை உருவாக்குகிறது. இந்த BCM7 ஆனது மனித உடலுக்கு ஊறு விளைவிக்கும் அபாயங்கள் கொண்டதென கருதப்படுகிறது. குறிப்பாக நரம்புகள், சுரப்பி நாளங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளை பாதிக்கும் சாத்தியங்கள் வாய்ந்தது. தீய கொழுப்புகளை ஆக்சிஜனேற்றம் செய்வதன் மூலம் திசுச் சேதங்களை உண்டாக்குவதிலும் பங்குவகிக்கிறது

 

நாட்டுவகை பசுக்கள் (ஜெபு இனம்) மற்றும் எருமைகளையும் , அயல்வகை பசுக்களையும்(டாரின் இனம் ) வைத்து நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வுகள், அயல்வகை கால்நடைகளில் A1ஆக உருப்பெறும் மரபணுக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாகவும், ஆனால் இந்திய வகை பசுக்களிலும், எருமைகளிலும் A2 வகையை உருவாக்கும் மரபணுக்கள் மட்டுமே இருப்பதாகவும், ஆகவே அவை பாதுகாப்பான பாலை உருவாக்கும் மூலாதாரங்களாக இருப்பதையும் வெளிக்கொணர்ந்தன. A2 வகை பீட்டாகேஸினால் ஆன பாலைப் பருகும் மக்கள்தொகைக்கு இருதய மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஆளாகும் சாத்தியங்கள் மிக்க குறைவு என்பதையும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

 

A1 உருவான விதம்:

 

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய இடப்பெயர்வின்போது அங்கு கொண்டுசெல்லப்பட்ட கால்நடையினங்களில் மரபணுசார் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன்விளைவாக, அம்மாடுகள் A1 மற்றும் A2 வகை புரதங்களை சம அளவில் கொண்ட அல்லது A1 வகையை அளவில் மிக அதிகம் கொண்ட பாலை சுரக்கத்துவங்கின. ஆகவே , ஐரோப்பா, அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடையினங்கள் A1 வகை புரதம் நிறைந்த பாலை சுரப்பவையாக இருக்கையில் , இந்திய மற்றும் ஆப்ரிக்க கால்நடைகள் A2 வகை புரதம் நிறைந்த பாலை உற்பத்தி செய்கின்றன.

 

இந்திய சூழல் சந்திக்க இருக்கும் அபாயம்:

 

ஒரு காளை மற்றும் பசுவினை இனப்பெருக்கத்துக்கு உட்படுத்துகையில். அவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ A1 வகை புரதத்தை உருவாக்கும் கால்நடை ஒன்றின் சந்ததியாக இருக்கும் பட்சத்தில், அப்பசுவின் சந்ததிகள் A1 வகை புரதத்தை உருவாக்குபவையாகவே பிறக்கும். A1 வகை புரதத்தை உருவாக்கும் மரபணுவே ஓங்கு தன்மை கொண்டது என்பது அறிவியல் பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது இருக்கும் 37 வகை நாட்டு மாட்டினங்களில் ( ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இதில் 150 வகைகள் இருந்தது!!!) 36 வகை மாட்டினங்கள் A2 வகை புரதம் உருவாக்கும் மரபணுக்களை கொண்டிருக்கின்றன.மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மால்வி எனும் ஒரே ஒரு நாட்டு மாடுகளினத்தில் மட்டுமே A1 வகை புரதம் உருவாக்கும் மரபணுக்கள் இருக்கின்றன.ஆனால் இந்த மால்வி வகைக் காளைகள் பெரும்பாலும் ஏர் உழவும் , பசுக்கள் மிகக் குறைவான பால் தருபவையாகவும் இருப்பதால் கவலை கொள்ளத்தேவையில்லை. தமிழ்நாட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ள 6 வகை நாட்டு மாட்டினங்கள் அனைத்துமே A2 வகை புரதம் சுரக்கும் மரபணுக்கள் கொண்டவை, ஆகவே அவை பாதுகாக்கப் படுதல் மிகமிக அவசியமாகிறது .

 

உள்நாட்டு கால்நடைஇனங்களை பாதுகாக்க ஜல்லிக்கட்டு எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கும் முன் , நாட்டு வகை காளைகள் இல்லாமல் போனால் என்னாகும் என்று பார்ப்போம். அது நாம் செயற்கைமுறை இனப்பெருக்கத்தை சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும். அது நாமும் நம் சந்ததியினரும் A1 வகை புரதம் நிறைந்த பாலை உண்டு வாழ வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளும். விளைவாக நீரிழிவு மற்றும் ஆட்டிஸம் போன்ற நோய்கள் பெருகும் நிலை உருவாகும். செயற்கை இனப்பெருக்கத்தின் இன்னொரு தீய விளைவு அவை உருவாக்கும் கால்நடை சந்ததிகள் இயல்பிலேயே வலிவற்றவையாக இருக்கும். அவற்றின் மரபணு தொகுப்பு உள்ளூர் சூழலுக்கும் கால நிலை மாற்றங்களுக்கும் தம்மை தக்கவைத்துக் கொள்ளும் திறனற்றும் இருக்கும்.

 

PETA :

 

இங்குதான் அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் பால் விநியோகம் செய்யும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை அறிந்து கொள்ள வேண்டும். இந்த நிறுவனம், மாடுகள் A1 வகை புரதம் சுரக்கும் மரபணு கொண்டதா அல்லது A2 வகை புரதம் சுரக்கும் மரபணு கொண்டதா என்பதை நிர்ணயிக்கும் மரபணு சோதனைக்கான காப்புரிமை(PATENT)யை கையகப்படுத்தி உள்ளது. இன்னும் தொந்தரவுக்கு உள்ளாக்கும் விஷயம், A2 வகை மரபணுக்கள் கொண்ட மாடுகளை செயற்கைமுறையில் இனப்பெருக்கம் செய்ய உதவும் காளைகளின் உயிரணுக்களுக்கான காப்புரிமையும் அவர்களிடம் இருப்பதே. A2 மரபணுவை ஓங்கு தன்மை பெறச்செய்யும் முறைமைக்கான காப்புரிமையும் அவர்களிடமே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் உள்நாட்டு கால்நடையினங்கள் ஒரு கட்டத்தில் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டால், ஒன்று இங்கு நாம் A1 வகை புரதம் நிறைந்த பாலையே உருவாக்கும் நிலை வரும்.அன்றி A2 வகை மரபணுக்கள் கொண்ட கால்நடைகளை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யவேண்டுமெனில் மிகப்பெரிய தொகையை நாம் அந்நிறுவனத்துக்கு ராயல்டியாக வழங்க வேண்டி வரும். இதுவே இன்று தமிழகத்தில் நாட்டு மாடுகளை வளர்ப்பவர்களின் பெருங்கவலை. இன்று நம்முன் உள்ள கேள்வி என்னவெனில், A2 வகை மரபணுக்கள் கொண்ட கால்நடைகளை நாமே தலைமுறை தலைமுறையாக போற்றி பாதுகாத்து வந்து கொண்டிருக்கும்போது, அவற்றை இழந்துவிட்டு எதிர்காலத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு ராயல்டி செலுத்தும் அவல நிலையை நோக்கி நம்மை நாமே ஏன் தள்ளிக்கொள்ள வேண்டும் என்பது தான். அப்பன்னாட்டு நிறுவனம் பீட்டா (PETA ) அமைப்புக்கு பெரும் நிதியளிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது , ஆனால் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இப்பன்னாட்டு நிறுவனம் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் பீட்டா அமைப்பின் கிளைகளுக்கு நன்கொடைகளை அள்ளி அள்ளி வழங்கி வருவது பெரும் ஐயங்களை தோற்றுவிக்கிறது. ஆனால் இந்தியாவில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைக்குப்பின் இவர்களின் கரங்கள் இருப்பதான ஐயங்கள் இருக்கிறது;இன்னும் ஆதார பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை.

 

ஜல்லிக்கட்டு எவ்வாறு உதவுகிறது?

 

இன்று தமிழ்நாட்டில் காளை வளர்ப்பவர்கள் அவற்றை ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தற்காகவே முதன்மையாக வளர்க்கிறார்கள். இன்றைய சூழலில், தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் காளைகளை வளர்க்கும் பொருளாதார வசதி பெற்றவர்கள் அல்ல. நாட்டு மாடுகளின் கால்நடைப் பெருக்கத்திற்கு அவர்கள் ஒன்று ஜல்லிக்கட்டு காளைகளையோ, அல்லது அவர்கள் ஊரில் கோயில் காளைகள் இருந்தால் அவற்றையோ மட்டுமே நம்பியே உள்ளனர். ஜல்லிக்கட்டு இவ்வகையில் காளைகளை தொடர்ந்து பேணுவதற்கான ஒரு சந்தையை உருவாக்குகிறது.

 

இன்னும் சற்று முன் சென்று ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு, முன்னும் பின்னும் உள்ள கால வரிசை நிகழ்வுகளை பார்ப்போம். ஜல்லிக்கட்டு பொங்கலின்போது நடைபெறுகிறது (அதாவது தை மாதம்). அங்கிருந்து புதிய உழவுக்காலம் துவங்குகிறது.அதுவே கால்நடைகளின் இனப்பெருக்க காலமும். ஜல்லிக்கட்டில் வலிமையானவை என அடையாளம் காணப்பட்ட காளைகள் கால்நடை இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப் படுகின்றன. அவை வீர்யம் வாய்ந்தவையாக இருப்பதுடன் தயார் நிலையில் இருப்பதும் அவசியம். அவை தேவையான ஹார்மோன்களை சுரக்க வேண்டும், அவற்றின் அட்ரினலின் சுரப்பு அதிகரிக்க வேண்டும், இதயத் துடிப்பு வேகம் பெற வேண்டும். ஜல்லிக்கட்டு அதற்கான தயாரித்தலை நிகழ்த்துகிறது. வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு களத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை நோக்கி காளைகள் ஓடுகையில் அவற்றில் டெஸ்டோஸ்டரான் அளவு அதிகரிக்கறது. இதயத் துடிப்பு வேகம் பெறுகிறது. இது காளையின் வலிமையை அதிகப் படுத்துகிறது. தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறைக்கு இவை யாவும் அத்தியாவசியம்.

 

சரி, ஜல்லிக்கட்டு இல்லாமல் இவற்றை செய்ய இயலாதா ? செய்யலாம். ஆனால் மாடுகளின் இனப்பெருக்கத் திறன் வெகுவாகக் குறையும். மேலும் ,நாட்டு மாடுகளுக்கு செயற்கை இனப்பெருக்க முறை பெரும்பாலும் நடைமுறையில் நம் நாட்டில் இல்லாத நிலையில் , நாளடைவில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அவை இல்லாமலாகும்.

 

ஜல்லிக்கட்டு நடைபெறாத இடங்களில் பிறக்கும் கன்றுகள், காளைகளாக இருந்தால் அவற்றால் வேறு பயன் ஏதும் இன்றில்லை( ஏர் உழவுக்கென காளைகள் பயன்படுத்தப் படுத்தல் முற்றிலுமாக நின்று போய் இன்று இயந்திரங்களே பயன்படுத்தப் படுகின்றன). எனவே அவை கறிக்காக விற்பனை செய்யப்பட்டு கொல்லப்பட்டுவிடும் அவலம் மட்டுமே நேர்கிறது.

 

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் மட்டுமே காளைக்கன்றுகள் பேணப்பட்டு வலிவூட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன. அவ்விடங்களில் காளைகளை காட்சிப்படுத்துதலும் , கௌரவச் சின்னமாகக் கொள்ளுதலும் காரணிகளாய் அமைந்து காளைகள் பேணப்படுவதை ஊக்குவிக்கின்றன.

 

இவ்வாறாக, விளையாட்டு என்ற ஒன்றினை தாண்டி வீரிய கால்நடையினங்களை காலங்கள் தாண்டி எடுத்துச் செல்லும் திட்டம் ஒன்றையும் ஜல்லிக்கட்டினுள் நம் கலாச்சாரம் போற்றி பாதுகாத்து தலைமுறைகளின் வழியே முன்னெடுத்து செல்கிறது. யோசிப்போம்.

 

ஆய்வு மற்றும் ஆங்கில மூலக்கட்டுரை : Rajkumar Rathinavelu.

 

கடலூர் சீனு

 

 

ஜல்லிக்கட்டும் அதன் பின்னணியும்

 

நடேசன்

 

மிருகவைத்தியர் அவுஸ்திரேலியா

 

தாய்லாந்து போனபோது என்னுடன் வந்தவர்கள் யானையில் ஏறி சவாரி செய்தார்கள். நான் ஏறவில்லை. அதற்குக் காரணம் யானைகளை சவாரிக்குப் பழக்கும்போது அவற்றை அடிபணிய வைக்க துன்புறுத்துவார்கள். அதற்கான ஆதாரங்கள் யானைகளில் வெள்ளைத் தழுப்புகளாக அதன் உடலில் பல இடத்தில் இருக்கும். அதேவேளையில் ஆசிய நாடுகளில் யானைகள் பல்கிப் பெருகியுள்ளன. அதற்குக் காரணம் அவை மனிதர்களுக்கு வழிபாட்டிற்க்கும்; தொன்மக் கதையாடல்கள் அரசபடை மற்றும் கூலியற்ற வேலையாள் எனப் பல வகைகளில் பயன்படுகின்றன. ஆனால் ஆபிரிக்க யானைகள் மனிதரோடு சம்பந்தப்படாது காட்டுயானையாக வளர்வதால்; அவற்றின் தந்தத்திற்காக வேட்டையாடுகிறார்கள். யானைளைப் பழக்குதலில் புதிய விஞ்ஞான முறைகளைப் பாவிக்கவேண்டும். இப்படியான நடைமுறைகள் தற்போது நாய்களை குதிரைகளைப் பழக்குவதிலும் பயன்படுத்தபடுகின்றன

 

மிருகங்களை கொல்வதும் துன்புறுத்தப்படுவதும்; தடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியவர் புத்தர்
புத்தசமயத்தால் கவரப்பட்ட அசோகனே குதிரைகள் இளைப்பாறுவதற்கும் காயங்களுக்கு பச்சிலை கட்டுவதற்கும் முதலாவதாக வைத்திசாலையை கட்டியவன். இதனாலயே மிருகவைத்தியசாலை பணியின் அனுபவத்தை எழுதிய கற்பனையான நாவலுக்கு அசோகனின் வைத்தியசாலை எனப்பெயர் வைத்தேன்.

 

இதற்கு மாறாக 10-12 ஆம் நூற்றாண்டில் அதாவது ஆதிசங்கரர் இராமானுஜர்கள் காலம் வரை இருந்த சனாதன மதம் அல்லது வேத பிராமணியம் உயிர்களை கொல்லுவது பாவமில்லை என்றது. மாட்டிறச்சியும் உணவாகியது. அதேபோல் மீன்கள் சாகரபுஸ்பமாக இன்னமும் வங்காளப் பிராமணரால் உண்ணப்படுகிறது.; பெரும்பான்மையான ஆதிவாசிகளும் தலித் மக்களும் சிறு தெய்வ மூதாதையினர் வழிபாட்டாளர்கள் அவர்கள் மிருகங்களை உயிர்பலி கொடுத்தும் மாமிசங்களை உண்பவர்கள். இதனால் இவர்களிடத்தில் மிருகங்கங்கள் சம்பந்தமான சிந்தனை உருவாகவில்லை.

 

ஆபிரகாமிய மதங்கள் மிருகங்களை வெட்டி அவர்கள் கடவுளுக்கு பலி கொடுப்பவர்கள். அதற்கான பல விடயங்கள் வேதாகமம் குரானில் உள்ளன.

 

13ஆம் நூற்றண்டில் பிராஸ்சிஸ் அசிசி Saint Francis Assisi) என்பவர் ஆண்டவனாலே மற்றைய உயிர்கள் படைக்கப்பட்டன அவை மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என்ற கருத்தை வைத்தவர். தனது காலத்தில் குருசுப்போரை நிறுத்த எகிப்திய சுல்தானை சந்தித்தவர். பிற்காலத்தில் அவர்(saint for ecology) எனப்பிரகடனப்படுத்தப்பட்டார். அவரை மதிக்க தற்போதைய பாப்பாண்டவர் பிரான்சிஸ் என்ற பெயரை எடுத்தார். பிரான்சிஸ் அசிஸ் புரட்டஸ்தாந்து மெதடிஸ்ட் என்ற மற்றைய மதப்பிரிவுகளாலும் கவுரவிக்கப்பட்டவர்.
அன்றில் இருந்து தொடர்ச்சியாக மேற்கு நாடுகளில் மிருகவதை பற்றிய எண்ணங்களில் மிகவும் சீரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவைகள் படிப்படியாக கிழக்கு நாடுகளிலும் செல்கின்றன.

 

நாய்களை உணவாக்கும் சீனா கொரியா வியட்நாம் போன்ற நாடுகளில் இப்பொழுது அதற்கு எதிரான உணர்வுகள் வளர்ந்து வருகிறது. தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அப்படியானதே. முக்கியமாக புளுக் குரஸ் (Blue Cross)செய்யும் விடயங்களால் முக்கியமாக நகரங்களில் நல்ல மாற்றங்கள் வந்துள்ளன. இளம்தலைமுறையினரிடம் அதிகமாகியுள்ளது. மேனகா காந்தி இந்த விடயத்தில் முக்கியமானவராக பலகாலமாக இருக்கிறார்.

 

தற்போது நாம் எதிர்கொள்ளும் மிருகவதைகளுக்கு எதிரான விடயங்கள் எல்லாம் மேற்கு நாடுகளில் 18 – 19 ஆம் நூற்றாண்டுகளில் உருவானவை. அவை பல தனிப்பட்டவர்களாலும் நிறுவனங்களாலும் போராடிப்பெற்றவை.

 

நான் தென்னமெரிக்கா சென்றபோது அங்கு காட்டுமிருகங்களை வைத்து சேர்க்;கஸ் நடத்;துவது தடைசெய்யப்பட்டதால் பல காட்டுமிருகங்கள் ஆபிரிக்காவில் உள்ள தனியார் காடுகளுக்கு செல்கின்றன. அங்குள்ள மக்களால் இந்தவிடயத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது.
அதேபோல் இலங்கையில் தெகிவளை மிருகக் காட்சிச்சாலைக்குப்போனபோது ஒரு குரங்கு தனது கழுத்தை தொடர்ச்சியாக ஆட்டியபடி இருந்ததை பார்த்தேன். அதேபோல் ஒரு யானையின் நடத்தையையும் பார்த்தபோது அவைகள் மிகவும் துன்பப்படுவதையும் அவதானித்தேன். இவைகள் எல்லாம் காட்டுமிருகங்கள். அவற்றை சிறிய இடங்களில் அடைக்கும்போது அவை துன்பப்படும்.

 

நாய்கள் ஆரம்பத்தில் காட்டுமிருகங்கள்தானே எனக்கேட்கலாம்…?

 

ஆனால், காலம் காலமாக மனிதர்களோடு அவைகளால் தற்பொழுது காட்டில் வாழமுடியாது.

 

குதிரை கழுதை போன்ற மிருகங்களும் காலம் காலமாக மனிதரோடு வாழ்பவை. மேலும் அவர்களது உடலும் மனமும் தொடர்ச்சியான வேலைக்கும் பாரங்களைத் தூக்கவும் பரிமாணமடைந்தவை. ஆனால், இதே இனத்தைச் சேர்ந்த வரிக்குதிரையால் பாரமிழுக்க முடியாது. குதிரை மற்றும் கழுதை மீது அதிகம் பாரமேற்றுதல் அடித்தல் என்பன வதையாக கருதப்படுகின்றது.

 

உணவுக்கு வளர்க்கப்படும் மிருகங்கள் ஆடு, மாடு, பன்றி என்பனவற்றை மனிதர்கள் வளர்க்கும்போது அவைகளின் உணவும் வாழ்விடமும் அத்துடன் அவைகளை வாகனங்களில் கொண்டுசெல்லுவது முதலான விடயங்கள் மிகவும் கருத்திலெடுக்கப்படுகிறது. இப்படியாக உணவுக்கு பாவிக்கப்படும் மிருகங்களை கொடுமையாக நடத்துவதில் மத்திய கிழக்கு நாடுகளும் இந்தியாவும் இன்னமும் அதே நிலையில்தான் இருக்கின்றன.
இதற்குக்கு காரணம், மிருகங்கள் பற்றிய விஞ்ஞான அறிவு பரந்த அளவில் அங்கு இல்லாமையே. உணவுக்காக மிருகம் துன்புறுத்தப்பட்டால் அதனால் அது களைத்துவிட்டால் அதனது இறைச்சி கடினமாகும்.

 

இனி நான் சொல்ல வருவது தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிகட்டுக்கு எதிரான போராட்டம் பற்றியது. இதுவும் பல அடுக்குகளைக்கொண்டது. ஸ்பெயினில் நடந்த மாட்டோடு சண்டை என்ற பாரம்பரிய விளையாட்டை பார்க்கவேண்டும் என்று சென்றேன். ஆனால், என்னால் அந்தக்காட்சியை தொடர்ந்து பார்க்கமுடியாமல் இடையில் வெளியே வந்துவிட்டேன். அந்தளவுக்கு கொடுமையானது அல்ல ஜல்லிக்கட்டு என்பதைச் சொல்லிவிடவேண்டும்.

 
இதைத் தடைசெய்வதற்கு சொல்லப்படும் காரணங்கள்:- ஜல்லிக்கட்டு மாடுகளை இதற்குத் தயாராக்கும்போது அவற்றுக்கு மதுவைக் கொடுக்கிறரகள், வாலை பிடித்து முறுக்குகிறார்கள். மிளகாய்த்தூளை காளையின் ஆசன வாயிலில் திணிக்கிறர்கள். இக்காரணங்கள் உண்மை என்றே நம்புகிறேன்.

 

அவுஸ்திரேலியாவில் கிரேகவுண்ட் ரேசுக்கு (Greyhound Dog Race) நான் மிருகவைத்தியராக கடமையாற்றப் போயிருக்கிறேன். ஒவ்வொரு நாய்க்கும் ஏதாவது வலி காயம் இருக்கிறதா என அவற்றின் உடலின் அனைத்துப் பாகங்களையும் சோதித்துவிட்டே அனுமதிப்பேன். ஏதும் வலி காயம் இருந்தால் அந்த நாயை பந்தயத்தில் இருந்து விலக்கிவிடுவேன். ஆனால், தற்பொழுது அவுஸ்திரேலிய நியு சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இந்த ரேஸ் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

இதேபோன்றே ஜல்லிக்கட்டிற்கும் இந்திய மத்திய அரசாங்கம் ஒரு கண்காணிப்பு சபையை நியமித்து நடத்தியிருக்கலாம். இவ்வாறு கண்காணிப்பு சபைகளை உருவாக்கும்போது நன்மை தீமைகளை மக்களுக்குப் புரியவைத்து விழிப்புணர்வை தோற்றுவித்திருக்கலாம். சட்டங்களில் உள்ள நன்மை தீமைகளை புரியவைக்காமல் அதை நடைமுறைக்கு கொண்டுவரும்போது மக்கள் தங்களுக்கு எதிரானது எனத்தான் நினைப்பார்கள். அதுவே தற்பொழுது தமிழகத்தில் நடக்கிறது.

 

இந்த விளையாட்டில் ஈடுபடும்போது மனித உயிர்களும் போவதைபற்றி எவரும் கணக்கெடுக்கவில்லை .

 

தமிழக அரசியல் அறிந்தவர்கள் இந்தப் போராட்டம் ஜல்லிகட்டு சம்பந்தப்பட்டது மட்டுமா எனவும் பார்க்கவேண்டும்.

 

தமிழகத்தில் காவேரித் தண்ணியில்லாமல் ஒவ்வொருநாளும் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். பல நகரங்களில் நிலத்தடி நீர் இல்லை. உலகத்தில் டெல்லி மாசுபடிந்த நகரமாக உள்ளது. சென்னையும் அப்படியான நிலைக்கு வருவதற்கு அதிக காலமில்லை. கடந்த வருடத்தின் வெள்ளம் வந்ததிற்கான காரணிகள் மாறிவிட்டதா…?

 

இப்படியான பல முக்கியமான விடயங்களை விட்டு விட்டு ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் கொந்தளிப்பது நியாயமானதா…?

தற்போது தமிழக எதிர்க்கட்சிகள், அரசியலில் ஜெயலலிதா மறைந்தபிறகு ஒரு வெற்றிடம் உள்ளது என நினைக்கின்றன. அதற்காக மக்களைத்திரட்ட ஜல்லிக்கட்டைப் பாவிக்கிறர்கள்.

 

பணநோட்டுக்களை இல்லாமல் செய்ததில் மக்களிடம் மத்திய அரசின்மேல் வெறுப்பு உள்ளது.; மத்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாகவும் சிலர் இதனைப்பார்க்கிறார்கள்.

 

இவர்களது கோசங்களில் உண்மையுள்ளதா…?

 

தமிழர்களின் பண்பாடு என்பது பலவீனமானது. தமிழ்நாட்டில் அரைவாசியினர் வேட்டியையும் சேலையையும் அணிவதை விட்டுவிட்டார்கள்.

 

காப்பி தேநீர் எல்லாம் எமது பாரம்பரியமா…?

 

சாதிக் கலவரம், உயிர்ப்பலி என்றும் கத்திவெட்டு, கன்னம் வைத்தல் , வழிப்பறி என எல்லாம் தமிழ்நாட்டில் அக்காலத்தில் நடந்தன. இவையெல்லாம் இன்றும் பாதுகாக்கப்படவேண்டுமா…?

 

ரோமர்கள், அடிமைகளை சிங்கத்தோடு மோதவிடுவதும் அமெரிக்கர்கள் அடிமைகளை வைத்திருந்ததும் வரலாற்றுக்கூறுகள் தானே…? பாதுகாக்க முடியுமா…?

 

அந்தக்காலத்தில் அதிக விளையாட்டுகள், கேளிக்கைகளாக இருக்கவில்லை.

 

நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை எந்த நாடுகளிலும் பார்க்க முடியாது. நீதியின் தீர்ப்புகளை விமர்சிக்க முடியாது. காரணம் ஜனநாயகம் சட்டங்களின் மீது உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டங்களில் நம்பிக்கை வைத்து நாம் வாழும்போது அந்தச் சட்டத்தை மதிக்கவேணடும். அந்தச் சட்டம் தவறாக இருந்தால், சட்டங்களை மாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் அதைச் செய்யவேண்டும். நீதிபதிகள் அமுலில் இருந்த சட்டத்தை மட்டும் பார்த்து தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

 

இந்த ஜல்லிக்கட்டுக்காக 7 கோடி மக்களது வாழ்வுகள் ஸ்தம்பிப்பதும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நட்டப்படுவதும் தமிழ்நாட்டிலே மட்டுமே நடக்கும். இந்தக் கேலிக்கூத்தை இலங்கையிலும் ஆதரிக்கும் நிகழ்வு நடந்தது என்பதை அறியும்போது என்னதான் செய்யமுடியும்…?

 

 

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பதிமூன்று- ‘மாமலர்’
அடுத்த கட்டுரைகுறளுரை, கடிதங்கள் -5