ஜல்லிக்கட்டு -கடிதம்

 

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..ஜல்லிக்கட்டு பற்றிய பதிவுகளை படித்தேன்..பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னால் சூடு பிடிக்க ஆரம்பித்த போது என் முதல் எண்ணம் ” மாட்டுப்பொங்கல்வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கொதிப்பார்கள், அதன் பின் அடுத்த பொங்களுக்கு 4 நாட்கள் முன் மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பிப்பார்கள்..இடைபட்ட நாட்களில் இதற்க்காக கடந்த வருடம் முழுவதும் உழைத்துக்கொண்டிருந்த சிறு எண்ணிக்கையில் உள்ள அமைப்பினர் உழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று தான் இருந்தது.. ஆனால் கடந்த ஒரு வாரம் நடந்தது ஆச்சரியபட, பெருமை பட வைத்த போராட்டம், போராட்ட முறை… தொலைக்காட்சி, நண்பர்கள், வீட்டு உரையாடல்கள் எல்லாம் சிந்திக்க வைத்து மேலெழுந்த எண்ணங்களை பதிவு செய்ய தூண்டியது தங்கள் பதிவும், எதிர் வினைகளும்.. சரியா தவறா தெரியவில்லை..

ஜல்லிக்கட்டு பற்றிய என் எண்ணங்கள்

தீர்ப்பு:

சுப்ரீம் கோர்ட் 2016ல் அளித்த தீர்ப்பை படித்ததில், ஜல்லிகட்டு தடை செய்யப்படவேண்டும் என்று வழக்கு தொடுத்த அமைப்புகள், கீழே வரிசை படுத்தப்பட்ட காரணங்களுக்காக இந்த தடையை கோருகின்றன.

  1. காளைகள் வாடிவாசல் திறப்பதற்க்கு முன் காக்க வைக்கப்பட்டிற்கும் இடம் மிக மிக சிறியதாக இருப்பதும், அந்த சிறிய இடத்தில் பல காளைகள் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும்.
  2. மேல் கூறிய இடத்தில் இருந்து வாடிவாசல் திறந்து காளைகள் ஜல்லிக்கட்டு வழியில் ஓட விடும் முன், காளைகளின் வால்களை கடித்து, காளைகளை கத்தி, அருவாள் (sickle) ஆகிய ஆயுதங்களால் குத்தி அவை துன்புறுத்தப்படுவதும், அவற்றிற்க்கு மிரட்சி ஏற்படுத்தப்படுவதும்.
  3. காளைகள் நிற்கும் இடங்களிலேயே அவை சாணம், சிறுநீர் கழிக்கின்றன. இவ்வாறு பெரும் அளவில் கழிக்கப்படும் சிறுநீர், சாணம் அகற்றப்பட்டு, அந்த இடம் சுத்தப்படுத்தப்படாமல், அந்த சிறுநீர், சாணம் அடங்கிய அசுத்தங்களின் மேலேயே காளைகள் நாள் முழுவதும் நிற்ப்பதும், அதனால் நோய்கள் வர வாய்ப்பிருப்பதும்.
  4. காளைகளுக்கு வெறி ஊட்டுவதற்க்காக மது சாராயம் போன்றவைகளை கட்டாயப்படுத்தி காளைகளை குடிக்க வைப்பது

மேலே வரிசை படுத்தப்பட்ட காரணங்கள் , உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதிபதிகள் விவரித்த காரணங்கள். தடை கோரும் அமைப்புகள் தங்கள் வாதங்களில் மேலும் காரணங்கள் கூறியுள்ளார்களா என்று தெரியவில்லை.

விளையாட்டு:

தீர்ப்பை படித்த வரை, தடையை நீக்க வாதாடிய தமிழ் நாட்டின் தரப்பு எந்த புள்ளிகளை வைத்து வாதாடப்பட்டது என்று தெரியவில்லை. இந்த பிரச்சனையில், மற்றுமோர் வாதம், ஜல்லிக்கட்டை தடை செய்தால், நாட்டு மாடுகள் முற்றிலுமாக அழிந்து, விவசாயம், பால் வர்த்தகத்தில் ஜெர்சி வகை பசுக்கள் முழுவதுமாக ஆக்ரமிக்கும். இதனால், நம் விவசாயிகள், இந்த ஜெர்சி பசுக்களை இஅக்குமதி செய்யும் மேல் நாட்டு நிறுவனங்களின் விலைகளுக்கு கட்டுப்பட்டு, முழுவதுமாக அவர்களை சார்ந்து இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது. இந்த கருத்து, தீர்ப்பில் கோடிடப்படவே இல்லை.

ஆனால் தடைக்கான மேலே உள்ள காரணங்கள் அனைத்தும், ஒரு முழுமையான தடை விதிக்க போதுமான காரணங்களாக எடுத்துக் கொள்ள போதுமானதா? என்ற கேள்விக்கு “இல்லை” என்றே கூறுவேன். நான்கு குற்றச்சாட்டுக்களுமே, ஜல்லிக்கட்டு நடைமுறை படுத்தப்படும் வகை பற்றியே. இவை யாவும் சுலபமாக ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் சில கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் விதிப்பதன் மூலம், முற்றிலுமாக தடுத்து விட முடியும். உதாரணமாக

  1. காளைகள் காத்து நிற்க்கும் இடம் குறைந்த பட்சம் அளவு கொண்டதாய் விதி நிறுவலாம். அல்லது, காளைகளின் எண்ணிக்கை கொண்டு இடத்தின் அளவை நிறுவலாம். ஒவ்வொரு காளைக்கும் குறைந்த பட்ச இடம் என கட்டுப்பாடு கொண்டு வரலாம்.
  2. துன்புறுத்தலை தடுக்க, கண்கானிப்பு காமராக்கள், காளைகள் நிறுத்தும் இடத்தில் காவல், கண்கானிப்பு குழு போன்ற வரைமுறைகள் கட்டாயமாக்கப்படலாம்
  3. காளைகளை அடக்கும் போது அடக்கும் வீரர்களுக்கு உயிர் பாதுகாப்பு, தீவிர காயம் ஏற்படுவதை குறைக்க, அனுபவம் உள்ள, பயிற்சி பெற்ற வீரர்களை மட்டுமே விளையாட அனுமதிக்கலாம்..

இந்த பிரச்சனையை, தமிழர் பண்பாடு, நாட்டு மாடுகளின் அழிவை தடுப்பது என்ற கோணங்களை விடுத்து, குதிரை பந்தையம், போலோ போன்று மற்றுமொரு “விளையாட்டு”  என்ற நோக்கில் கட்டுப்பாடுடன் கூடிய அனுமதி என்ற கோணத்தில் உச்ச நீதி மன்றத்தை அனுகலாமே ?

அவசர சட்டம்:

இப்போது, இளைஞர்கள் எழுச்சியால் அவசர சட்டம் மூலம் தடையை நீக்கும் தீர்வை அரசு எடுத்து இருக்கிறது. இது சரியான பாதை இல்லை என்று தோன்றுகிறது. என் வரையில் ஜல்லிக்கட்டை முழுதுமாக தடை செய்வது தவறு என்றே கூறுவேன். அதில் மிருக வதை அந்த காளைகள் விளையாட்டு முடிவில் கொல்லப்படுவது இல்லை. ஆம், வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ பதிவில், முதலில் கூறிய துன்புறுத்தல் அனைத்தும் காட்டப்படுகின்றன. சமூக வலைதளங்களில், திரும்ப திரும்ப கூறப்படும் விளக்கங்கள் – அவை பொய்யான வீடியோ, பழைய வீடியோ, இப்போது அது போல் நடப்பதில்லை என்பது போன்ற பதிவுகள். நடந்ததோ, நடக்கவில்லையோ எதுவானாலும், உரிய கட்டுப்பாடுகளுடன், நடப்பதை தடுக்க முடியும். அனைத்து கட்டுப்படுகளையும் கண்கானிக்க, அரசு, ஜல்லிக்கட்டு நிர்வாகிகள், மிருக ஆர்வலர்கள், காவல் துறை அனைவரும் உள்ள ஒரு கண்கானிப்பு அமைப்பு உருவாக்கி , இந்த அமைப்பு அனைத்து விதிகளும் மதிக்கப்பற்றிருக்கின்றனவா என உற்திப்படித்து விட்டு, அனுமதி அளித்த பின்னரே ஜல்லிக்கட்டு நடை பெறும் என அனைத்து தரப்பும் புரிந்துணர்வுக்கு வரலாம்.

இத்தகைய அனைவர் தரப்பும் கருத்தில் கொண்டு  உருவாக்கப்படும் தீர்வை விடுத்து, அவசர சட்டம் மூலம் ஏற்படும் தீர்ப்பு, மேலும் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என தோன்றுகிறது. மிருக ஆர்வலர், இந்த அவசர சட்டத்திற்க்கு ஒரு தடை என்று செல்லலாம். மீண்டும் வெறுப்பு பிராச்சாரங்கள் ஆரம்பமாகும்… ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் “காலம் காலமாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் பாரம்பரிய நிகழ்வுக்கு, திடீரென்று நாம் ஏன் ஒரு வெளி நாட்டு அமைப்பு எதிர்பதற்க்கு பயந்து இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என கூறலாம்..ஆனால், அனைத்து வேறுபாடுகளுக்கு அப்பால், ஜல்லிக்கட்டு ஆதர்வாளர்கள், மிருக ஆர்வலர்கள் இரு தரப்பும் ஒன்று படும் கருத்து, களைகளை துன்புறுத்தலுக்கு ஆளாக்க கூடாது என்பது தான். இந்த கருத்தை மனதில் கொண்டு புரிந்துணர்வுக்கு வரலாம் தான் ?.

இளைஞர்கள் எழுச்சி:

இந்த பிரச்சனையில் எந்த தரப்புக்கு வெற்றி பெற்றாலும், உண்மையான வெற்றி தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு தான். எப்படி இந்த எழுச்சி ஒரு வலுவான தலைமை இல்லாமல் இவ்வளவு கட்டுப்கோப்பான , வன்முறை, முறைமீறல்கள் இல்லாத போராட்டமாக , தமிழ் நாடு முழுவதுமாக நடை பெறுகிறது என்று பிடி படவில்லை… கண்டிப்பாக சமூக வளைதளங்கள் பெறும் பங்களித்திருக்கின்றன… சுப்ரமணிய சுவாமியின் கடும் வார்த்தைகள் ( அவை, அனைத்து போராளிகள் பற்றி இல்லாமல், அவரை ட்விட்டரில்  தாக்கல் செய்த சிலரை குறித்தாலும்), PETA அமைப்பின் தலைவர், கூறியதாக வலம் வந்த கருத்துகள், தமிழர் பண்பாடு, தமிழர் பெருமை பற்றிய memes அனைத்தும் பங்களித்தன எனலாம்.

இரண்டு நாட்கள் நான் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள இரு கல்லூரிகளின் மாணவர்கள், சாலையின் ஒரு பக்கத்தில் அமர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள்.  முக்கியமான சாலை ஆதலால் போக்குவரத்து அதிகம். சரியாக கட்டுப்படுத்தாதிருந்தால், பெரிய போக்குவரத்து குழப்பமாகியிருக்கும். ஆனால், மாணவர்களின் ஒரு பகுதியினரே,  களமிரங்கி சாலை நடுவில் வரிசையாக நின்று ஒரு பக்க சாலையை இரு பகுதிகளாக பிரித்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க வழிவகுத்தனர். மெரினா சாலையிலும் இதே பங்களிப்பை பற்றியும், குப்பைகளை மாணவர்களே அப்புறப்படுத்தியதையும் பற்றி படித்தேன்.. உண்மையிலேயே உலக அளவில் பேசப்பட வேண்டிய உதாரண போராட்டமாகவெ இது பார்க்கப்பட வேண்டும்..

இப்படி பட்ட போராட்டங்களில் போராட்டத்தின் வீரியம், தேவை இல்லாத இதர எதிர்ப்பு கோஷங்களால் போராட்டத்தின் முக்கிய கூறிக்கோள் நீர்த்து போக செய்யலாம். பீட்டா அமைப்பு பற்றி, பெப்சி, கோக் நிறுவனங்கள் குறித்த கோஷங்கள் உதாரணம்…திரு கார்திகேயன் சேனாபதி மெரினாவில் தன் உரையிலும் இந்த கருத்தை கூறினார். மேலும், உண்மையில், பீட்டா போன்ற அமைப்புகளுடன் தங்களை சேர்த்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக்க்கணக்கான மக்களும், பிரபலங்களும் உணர்வுப்பூர்வமாக மிருகங்களின் நலனுக்காக தான் பீட்டாவுடனோ, மற்ற அமைப்புகளுடனோ சேர்ந்த்திருக்கின்றன..உணர்ச்சி வேகத்தில், இந்த அமைப்புகள் மீதோ, அமைப்பில் பங்கெடுக்கும் மக்கள் மீதோ வெறுப்பு எழுப்புவதால், போராட்டத்தின் உண்மையான அற எழுச்சி திசை திரும்ப வாய்ப்புள்ளது..

கேள்விகள்:

இந்த இளைஞர் எழுச்சி எப்படி இவ்வளவு வீரியம் பெற்றது , ஏன் ஜல்லிக்கட்டு பின்னனி, வரலாறு, வழக்கின் பின்னணி, விவரங்கள் ( ஒருவேளை, பார்த்தும் இருக்காத) முழுவதும் தெரியாத பலர், இவ்வளவு உணர்ச்சிபூர்வமான போரட்டத்தில் தங்களை இணைத்து கொண்டார்கள் (கடந்த 5 நாட்களில் பல முறை கேட்ட கேள்வி – காவிரி நீர் பிரச்சனையின் போதும், பங்களூரு பற்றி எரிந்த போதும் வராத போராட்டம்)?.. ஒரு எண்ணம் தோன்றியது..

சென்ற பல வருடங்களாக, கதைகளிலும், சினிமாக்களிலும், மீண்டும் மீண்டும் எடுத்தாளப்படும் ஒரு கருத்து, கார்ப்பரேட்களும், வெளி நாட்டு நிறுவனங்களும், அமைப்புகளும் நம் நாட்டு வளங்களையும், விவசாய வாழ்வாதாரங்களையும் சுரண்டி கொண்டிருக்கின்றன, தங்களின் சொந்த லாபங்களுக்காக மக்களை சூரையாடுகின்றன என்ற கருத்து மூலக்கதைகளிலோ, கிளை கதையாகவோ பார்ப்பவர் மனதில் பதியப்படுகின்றன.. இவ்வளவு நாள் கருத்தாகவோ, எண்ணமாகவோ இருந்த குமுறல், இன்று ஒரு தெளிவான எதிர்ப்பு சக்திகளாக ( பீட்டா, உச்ச நீதி மன்ற தீர்ப்பு, உரிய நேரத்தில் சட்ட மாற்றம் கொண்டு வராத மத்திய, மாநில அரசுகள்…) கிடைத்ததால் tipping pointஐ அடைந்து விட்டதோ என்று தோன்றியது..?

நாட்டு காளைகளின் வகைகள் 137 என்று இருந்த எண்ணிக்கை இப்போது 37 ஆக உள்ளது என்று ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள் கூறுகின்றன..ஏன் குறைந்தது என்று தெரியவில்லை..காரணம் முழுவதும் ஜல்லிக்கட்டு இல்லை என்றே தோன்றுகிறது. இப்போது இருக்கும் வகைகளை காப்பது ஜல்லிக்கட்டு மூலம் மத்தும் தான் சாத்தியமா ?. வேறு பராமரிப்பு வகைகளில் சாத்தியமில்லையா?.. ஜல்லிக்கட்டு நடந்த்தாலும், வருடத்திற்கு ஒரு நாள் ( ஒரு மாதம் ?) மட்டும் நடக்கும் விளையாட்டினால் இவற்றை காப்பாற்ற முடியுமா ?

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க, பால், பால் சார்ந்த பொருள்களின் தேவை கூடிக்கொண்டு தான் போகப்போகிறது. ஜல்லிக்கட்டு பரவலாக நடந்த்தாலும், பெருகும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க நாட்டு காளைகளை வைத்து சமாளிக்க முடியுமா ?  நாட்டு காளைகள் இருந்தால் ஜெர்சி பசுக்கள் வரவை முழுதுமாக தடுத்து விட முடியுமா ?…

இந்த துறை பற்றிய என் புரிதல் பூஜ்ஜியம் தான்.. அதனால் தான் இந்த கேள்விகள் மனதில் எழுகின்றன…

அன்புடன்

வெண்ணி

முந்தைய கட்டுரைமதுரை நிகழ்ச்சி ரத்து
அடுத்த கட்டுரைகுறளுரை கடிதங்கள் -4