மலைக்கிராமம் -கடிதங்கள்

1iis7d

 

சார் வணக்கம்

 

உங்களின் மலைக்கிராம பயணத்தை வழக்கம் போல பொறமையுடனேதான்  வாசித்தேன்.  மழை பெய்த  ஈரத்தில் இருக்கும் மாடும் கன்றுமான  கயிற்றுக்கட்டிலுடன் இருந்த அந்த கிராமத்து வீட்டில் தங்கும் தொடக்கமே அருமையாக இருந்தது. .மக்காச்சோள இலைகள் எண்ணை பூசப்பட்ட வாள்கள்// எத்தனை சரியென்று மீண்டும் இன்று மக்காச்சோள இலைகளை எங்களூரில் பார்த்ததும் ரசித்தேன். மலை ஏறுவது குறித்த விளக்கம் மிக உதவி சார்.  எனக்கு மலை ஏறுவது என்பது இந்த காதடைத்து, நெஞ்சடித்து வேர்த்துக்கொட்டும் பயங்கரத்தினாலேயே  பல சமயங்களில் கண்ணைக்கட்டும் அதி பயங்கர அனுபவமாகவே இருக்கிறது. இப்போது நீங்கள் சொல்லி இருக்கும் வழிமுறைகளை அடுத்த முறை பரீட்சித்துப்பார்க்கிறேன்.

 

பலமுறை காடுகளுக்கு செல்கிறேன். அப்போதெல்லாம் நான் வேறு ஒருத்தியாகவே இருப்பேன் சார்.  மாசுகளிலிருந்து  தப்பித்த அந்த சில நாட்களின் உற்சாகத்திலேயே மீதி பல நாட்களைக்கழிக்கிறேன் //மலையடுக்குகளில் உள்ள ஆழ்மௌனம் நம்முள் குடியேறும்போதுதான் நம் காட்டு அனுபவம் தொடங்குகிறது// இதை நீங்கள் சொன்னதும் தான் காடுகளில்   பயணிக்கையில் மாணவர்களின் பாட்டும் பேச்சுக்களும் என்னை ஏன் எரிச்சலையடைய  செய்கின்றது என்பதை  உணர்ந்தேன்.

 

ஏழு மலை ஏழு கடல் தாண்டியும் சென்றடையும் நம் தமிழ் குத்துப்பாட்டுக்களை என்னதான் சொல்வது சார்?நூறைக்கடந்த பாட்டியும் மூன்றே வயதில் குழந்தையுமாக உழைக்கவும், கர்ப்பிணிகளெல்லாம் சாதாரணமாக மலைஏறிக்கடக்கவும் காரணமான ஆரோக்யமும், சொற்ப சூரிய விளக்குகளும், சுத்தமான சுற்றுப்புறமும், பனி மூடிய குளிர்ந்த இரவுகளும், நீரோடைகளும், புன்செய் விவசாயமும், உழைக்கும் இளைஞர்களுமாய் அந்த மலைக்கிராமத்தையும், எந்நேரமும் அலைபேசியும்,  அதன்தொடர்புகளும் தொல்லைகளும்  கொசு விரட்டிகளுடனும் கரப்பான் விரட்டிகளுடனும் கழியும் இரவுகளும், பூச்சிக்கொல்லி மருந்துகளால் நாளும் கொல்லப்படும் நம்மையும் ஒப்பிட்டால் கட்டாயம் நாம்தான் சார் மிக மிக பரிதாபத்துக்கு உரியவரகள்.

 

ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எனக்கே உங்களின் இந்த பயண அனுபவம் இத்தனை மனமகிழ்ச்சியைத் தருமென்றால், சென்னை போன்ற பெருநகரத்தில் வசிக்கும் உங்கள் வாசகர்களுக்கு இது போன்ற அனுபவப் பகிர்வுகள் எத்தனை ஏக்கத்தை கொடுக்கும்? அவர்களெல்லாம் இன்னுமே பரிதாபத்திற்கு உரியவர்கள் சார்

அன்புடன்

லோகமாதேவி

 

 

அன்புள்ள ஜெ

 

நலமாக இருக்கிறீர்களா?

 

உங்கள் பயணக்கட்டுரைகளை விட நான் அதிகம் விரும்பியது நீங்கல் இங்கே தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் செய்த பயணங்கள்தான். காடுகளிலும் பச்சைப்புல்வெளிகளிலும் நீங்கள் நண்பர்களுடன் செய்த பயணங்களை மிகவும் லயித்து வாசிப்பேன். அக்காமலையின் அட்டைகள் என்ற கட்டுரையின் தலைப்பே அபாரமானது. கேரளத்தின் மழையைப்பார்க்க நீங்கள் சென்ற மழைப்பயணங்கள் மிக அற்புதமானவை

 

சமீபத்தில் நீங்கள் அப்படிப்பட்ட பயணங்கள் அதிகமாகச் செய்வதில்லை. ஆகவே இக்கட்டுரையை ஆவலுடன் வாசித்தபின்னர்தான் முன்பே வாசித்த கட்டுரை என்று தெரிந்துகொண்டேன். ஆனாலும் அந்தச் சின்ன ஊர் அற்புதமாக மனதில் இருந்தது

 

ஜெயராமன்

 

 

ஜெ

 

உங்கள் கட்டுரை மலைக்கிராமம் ஒரு அழகான சிறுகதை. அந்தச் சின்ன கிராமத்துக்கும் நம் நாகரீகத்துக்குமான தூரம், அங்கே உள்ள வாழ்க்கை, அங்குள்ள சுத்தம் எல்லாமே சொல்லப்பட்டு கடைசியில் இங்கிருந்து ஏறிச்சென்று அம்மக்களை கேஸில் சிக்கவைக்கும் போலீஸின் குரூரத்தைச் சொல்லி முடித்திருந்தீர்கள். காலகாலமாகப் பழங்குடிகள் மீது படையெடுத்து அழிப்பதுதான் நம்மைப்போன்ற நாகரீக மக்களின் மனநிலையாக உள்ளது இல்லையா?

 

ஆர் ராஜேஷ்

 

ஒருமலைக்கிராமம்

முந்தைய கட்டுரைநாகம்
அடுத்த கட்டுரைமாலிரும்மொழிச்சோலை