நைஜீரியா என்னும் அறிவிப்பு

1

 

நைஜீரியா : டிரம்புக்கு ஆதரவாக பழங்குடியினர் மேற்கொண்ட பேரணியில் வன்முறை போகிறபோக்கில் தமிழ் ஹிந்து நாளிதழில் இச்செய்தியை வாசித்தேன். இச்செய்திக்கு எந்த வகையான முக்கியத்துவமும் ஒரு பொதுவாசகனின் உள்ளத்தில் தோன்றமுடியாது. ஆனால் இதன் பின்னணி சற்று புரிந்தால் இது அளிக்கும் திறப்புகள் பல.

பையாஃப்ரா குடியரசு என்பது என்ன? நைஜீரியாவும் இந்தியாவும் சமானமான வரலாறு கொண்டவை. நம்மைப்போலவே அவர்களும் பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்தனர். நாம் 1947ல் சுதந்திரம் அடைந்தோம். நைஜீரியா 1960ல்தான் சுதந்திரம் அடைந்தது. பிரிட்டிஷார் செல்வதற்கு முன் நைஜீரியாவை ஒட்டச்சுரண்டிவிட்டனர்.

1947ல் நாம் பெற்ற சுதந்திரம் வேறுவழியில்லாமல் பிரிட்டிஷார் நம்மை விட்டுச்சென்றதனால் வந்தது என்றும் காந்திக்கோ காங்கிரஸுக்கோ அதில் பங்கேதுமில்லை என்றும் ஒரு கும்பல் இங்கு சொல்லிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நைஜீரியா மிகச்சிறந்த உதாரணம். உலகப்போருக்குப் பின்னால்தான் தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. கனிவளங்களுக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்தது. ஆகவே நைஜீரியாவின் மாபெரும் எண்ணைக்கிணறுகள்மேல் முழுமையான ஆதிக்கத்தை பெற்றபின்னர் போதிய அளவில் அடிமைப்படுத்தும் ஒப்பந்தங்கள் போட்டுவிட்டுத்தான் பிரிட்டன் வெளியேறியது.

அந்த ஒப்பந்தங்களால் இன்றும் நைஜீரியா பிரிட்டிஷ், ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. பெருமளவு எண்ணையை உற்பத்திசெய்யும் இந்நாடு இன்னமும் வறுமையின் கீழ்மட்டத்திலேயே உள்ளது. உண்மையில் எண்ணையை எடுப்பதற்கு நிறுவனங்கள் அளிக்கும் உரிமைத்தொகையை அப்படியே அவர்களுக்கு திருப்பி அளித்து தன் உபயோகத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணை வாங்கிக்கொண்டிருக்கிறது நைஜீரியா.

பிரிட்டிஷார் வருவதற்கு முன் நைஜீரியாவில் இருந்தவை பழங்குடி மதங்களும் இஸ்லாமும். பிரிட்டிஷார் பெருமளவு மதமாற்றங்களைச் செய்து வலுவான ஓர் கிறித்தவச் சிறுபான்மையினரை உருவாக்கினர்.  நைஜீரியாவின் இக்போ,யோரூபா பழங்குடியினர் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தனர். பிரிட்டிஷார் வெளியேறியபோது அவர்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டுமென போராட ஆரம்பித்தனர். அந்த கிறித்தவநாடே பையாஃப்ரா குடியரசு என அழைக்கப்பட்டது

1

1960 முதல் ஏழாண்டுக்காலம் இந்தக் கிளர்ச்சி நடைபெற்றது. 1967ல் அது உள்நாட்டுப்போராக வெடித்தது. பயங்கரவாதச் செயல்களில் ஏராளமான நைஜீரியத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் இறந்தனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஆதிக்கத்திலிருந்த, கிறித்தவப் பெரும்பான்மை கொண்ட சில ஆப்ரிக்க நாடுகள் பையாஃப்ராவை ஆதரித்தன. நைஜீரியா மேல் உச்சகட்ட அழுத்தம் விழுந்தது. அது ஐரோப்பா போட்ட எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு எண்ணை வயல்களை அவர்களுக்குத் திறந்து கொடுத்தது. பதிலுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொண்டு பையாஃப்ரா போராட்டத்தை நசுக்கியது.

1970 ல் பையாஃப்ரா போராட்டம் சரண் அடைந்தது. அதன்பின்னரே நைஜீரியா மெல்ல வளர ஆரம்பித்தது. சென்ற இருபதாண்டுகளாக அது பொருளியல் வளர்ச்சி அடைந்து வருகிறது. எண்ணைவயல்கள் மீதான தன் உரிமைகளைப்பற்றிப் பேச ஆரம்பிக்கிறது. உடனே அதன் ஒருமைப்பாடு மீதான தாக்குதல்கள் ஆரம்பித்தன. பையாஃப்ரா போராட்டம் மீண்டும் தூண்டிவிடப்பட்டது.

எப்படி என்பது மேலும் சுவாரசியமானது. பையாஃப்ரா போராட்டம் பற்றிய ஆய்வுகளை செய்ய அமெரிக்கப் பல்கலைகழகங்கள் நிதிக்கொடைகளை அளித்தன. விளைவாக அப்போராட்டம் பற்றிய ஒற்றைப்படையான சித்திரம் உருவாக்கப்பட்டது. அதைப்பற்றிய செய்திக்கட்டுரைகள் நைஜீரிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதப்பட்டன. அதன்பின்னர் அதைச் சித்தரிக்கும் புனைவெழுத்துக்கள் அமெரிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டன. அவற்றை எழுதியவர்களில் முதன்மையானவர் சிமமெண்டா அடிச்சி.

அடிச்சி நைஜீரியப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் மகள். 19 வயதிலேயே அமெரிக்கப் பல்கலைகளில் கல்விகற்கச் சென்றார். அங்கே செய்தித் தொடர்பியல், புனைவெழுத்து பயின்றார். பையாஃப்ரா குடியரசு நசுக்கப்பட்டதைப்பற்றிய கொடூரமான சித்திரங்கள் அடங்கிய கதைகளையும் நாடகங்களையும் எழுதலானார். இவை ‘மனித உரிமைகளுக்காக வாதாடும்’ படைப்புகளாக அமெரிக்க பல்கலைகளாலும் ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டன.

அடிச்சி தொடர்ச்சியாக பல்கலைகளின் நிதிக்கொடைகள், உயர் விருதுகளைப் பெற்றுக்கொண்டே இருந்தார். அவரை இந்நூற்றாண்டின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் என அமெரிக்க விமர்சகர்கள் எழுதினர். ஒரு கீழைநாட்டுப் பொதுவாசகனுக்கு மிகச்சாதாரணமான பிரச்சார எழுத்தாகவே அவை தோன்றும். ஆனால் நாம் சொந்தமாக மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதில்லை. மேற்கே சொல்லப்படுவனவற்றை அப்படியே ஏற்பதே நம் வழக்கம். ஆகவே தமிழகத்தில்கூட எஸ்.வி.ராஜதுரை போன்ற இடதுசாரிகள் அடிச்சியை மாபெரும் மனிதாபிமானியாகச் சித்தரித்து கட்டுரைகள் எழுதினார்கள். அடிச்சியின் ‘இலக்கிய நுட்பங்கள்’ பரவசத்துடன் ரசிக்கப்பட்டன

எதிர்பார்த்ததுபோல 2009 முதல் பயாஃப்ரா கிளர்ச்சி மீண்டும் ஆரம்பித்தது. நாடுகடந்த பயாஃப்ரா அரசு உருவாக்கப்பட்டது. அமெரிக்க ஆதரவுடன் தொடர்ச்சியாக கிளர்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. ஒரு உள்நாட்டுப்போர் நிகழும் என நைஜீரிய அரசை தொடர்ச்சியாக அச்சுறுத்தி நினைத்ததை அடைந்துகொண்டிருக்கின்றன எண்ணை நிறுவனங்கள். நைஜீரியா முழுமையாக பணிந்து அத்தனை கனிவளத்தையும் அளிக்காவிட்டால் அந்நாடு உள்நாட்டுப்போரால் அழிக்கப்படும்.

மிகமிக எளிது இந்தப்போர். இதன் ராணுவமுகாம்கள் அமெரிக்காவின் டிரெக்ஸெல் பல்கலை, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை போன்ற கல்விநிறுவனங்கள். இதன் தளபதிகள் சிமெனெண்டா அடிச்சி போன்ற எழுத்தாளர்கள். பத்திரிகைகள் இதன் துருப்புகள். உலகமெங்கும் அறிவுஜீவிகள் என்னும் ஐந்தாம்படையினர்.

இந்தப்பின்னணியில் டிரம்ப்புக்கு ஆதரவாக பையாஃப்ரா போராட்டக்காரர்கள் நிகழ்த்திய பொது ஆர்ப்பாட்டத்தை கண்டால் தமிழ் ஹிந்துவின் அச்செய்தி எப்படிப் பொருள்படுகிறது? கிறித்தவ அடிப்படைவாதம் பேசும் டிரம்ப் பயாஃப்ராப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கிறார். அவர்கள் அவரை தங்கள் தலைவராக அறிவிக்கிறார்கள். அந்த கிளர்ச்சி அப்பட்டமான தேசத்துரோகம். ஆனால் அதன்மேல் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டதை மாபெரும் அடக்குமுறையாக அமெரிக்க ஊடகங்கள் சித்தரிக்கின்றன. டிரம்ப் நைஜீரிய அதிபருக்கு தனிப்பட்ட முறையில் கடும் எச்சரிக்கையை விடுக்கிறார்!

நைஜீரியா இந்தியாவுக்கு மிகப்பெரிய, முன்னுதாரணமான பாடம்

ஜெ

***

பையாஃப்ரா குடியரசு

சிமமெண்டா அடிச்சி

===================

முந்தைய கட்டுரைகள்

நைஜீரியப்படுகொலைகள்

தேவதை சிறுகதை

 

முந்தைய கட்டுரைமிருகவதை – கடிதம்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பதிமூன்று- ‘மாமலர்’