வெண்முரசு நாவல்தொடரின் பதிமூன்றாவது நாவல் பெப்ருவரி ஒன்றாம் தேதி தொடங்கும். இன்னமும் எழுத ஆரம்பிக்கவில்லை. எழுதலாமென ஓர் எண்ணம் வந்துவிட்டது. ஒரு தோராயமான வடிவமும் உள்ளத்தில் எழுந்துவிட்டது. இதற்கான மொழிநடையை நான் அடைந்ததும் தொடங்கவேண்டியதுதான். நாலைந்து பொய்த்தொடக்கங்கள் நிகழ்ந்தன. சரியாக வரவில்லை. வழக்கம்போல சரியாக நாவல் வராதபோது உருவாகும் நம்பிக்கையின்மை, சலிப்பு, இனம்புரியாத சினம். தனிமை.
வரும் 26 ஆம் தேதி நண்பர்கள் சிலருடன் ஷிமோகா வழியாக கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் செல்கிறேன். குடஜாத்ரி மலை ஏறிச்செல்லலாம் என எண்ணம். கிராதம் இப்படி ஒரு தத்தளிப்பில் நின்றிருந்தபோது கேதார்நாத் சென்று மீண்டது மிகப்பெரிய அளவில் உதவியது. இந்த இடங்கள் அளிக்கும் மனநிலை ஓர் ஆழமான அகத்தூண்டலை அளிக்கிறது. அப்படி ஏதேனும் நிகழுமென நம்புகிறேன்
நாவல் பீமனைப்பற்றியது. கல்யாண சௌகந்திக மலர்தேடி பீமன் சென்ற பயணமே நாவல். அவன் தேடிச்சென்றது அழியாமாமலர். அடைந்தது என்ன என்பது நாவலில் கண்டடையவேண்டியது. கிராதம் சைவப்பின்னணி கொண்ட நாவல். இது சாக்தப் பின்னணியில் அமையலாம்.
கிராதம் ஒருகட்டத்தில் அன்றன்று எழுதுவதாக ஆகிவிட்டது. பலநாட்கள் இரவு ஒன்பது மணிக்குமேல்தான் வலையேற்றினேன். ஆகவே ஷண்முகவேல் ஒருசில நாட்கள் கடந்த பின்னர்தான் படங்கள் வரைய முடிந்தது. பெரும்பாலும் அத்தனை படலங்களுக்கும் அவர் வரைந்துள்ளார். அன்றன்று வாசிப்பவர்கள் பலர் அவருடைய அற்புதமான பல படங்களை பார்த்திருக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. இம்முறை அது நிகழலாகாது.
தெய்வம் ஆட்கொள்வதன் பரவசமும் அது விலகிச்செல்வதன் பெரும் சோர்வுமாகக் கடந்து சென்று கொண்டிருக்கின்றன இந்நாட்கள். இந்த பெருக்கே என்னை கொண்டு செல்லவேண்டும். நான் செய்வதற்கு ஒன்றுமில்லை, ஒப்புக்கொடுப்பதைத் தவிர.