ஜல்லிக்கட்டு தடை -எதிர்வினைகள்

 

jallikattu1_3119276f

நண்பர்களே ,

 

 2 ஆண்டுகளுக்கு முன் வந்த தீர்ப்பு மற்றும் அதையொட்டிய பதிவு .

 

தற்போது தமிழகத்தில் நிகழ்வது ஒரு பேரெழுச்சி, இந்த அளவில் முன்னெப்போதும் இருத்திராதது. இது ஒரு குறிப்பிட்ட அமைப்பினாலோ தலைமையாலோ ஒருங்கிணைக்கப் படுவதில்லை, வழிநடத்தவும் படுவதில்லை. அதேபோல ஒரு பயன்பாட்டு நோக்கை முன்னிறுத்தியதும் அல்ல, ஒரு கலாச்சார அடையாளத்தை முன்னிறுத்தி ஒரு ஒருங்கிணைவு. இந்த வகையில் இது இந்தியாவுக்கே முன் மாதிரி. இறுதியில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இத்துடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும்.

 

சமீபத்தில் இதற்கு முன் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் தமிழகம் முழுக்க பரவி சுமார் 2 மாதங்களுக்கு நீடித்தது, அண்ணா ஹசாரே உண்ணா நோன்பு ஆதரவு போராட்டம் தமிழகம் முழுவதும் நிகழ்த்தப்பட்டது. சசி பெருமாள் ஆதரவு போராட்டமும் ஓரளவு தமிழகம் முழுக்க நிகழ்ந்தது. கூடங்குளம் போராட்டம் ஓராண்டு நீடித்தது. இந்த அளவில் தொடர்ந்து வேறெந்த மாநிலத்திலாவது நடைபெற்றிருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை.

 

இந்திய அளவில் தில்லி நிர்பயா ஆதரவு போராட்டம் போல அவ்வப்பொழுது  நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் இந்த அளவில் இல்லை, எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது போகப் போக தான் தெரியும். இன்றைய தேதி வரை நமது அரசு மாணவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது, கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கவில்லை, இந்த இரு காரணங்களும் மிகப் பெரிய பலம். அரசு இதை ஒடுக்க நினைத்தாலோ  அல்லது விடுமுறை அறிவிக்கப்பட்டாலோ போராட்டம் பிசுபிசுக்க வாய்ப்புண்டு. ஒரு தலைமை இல்லாததும் ஒரு பின்னடைவே.

 

சமூக ஊடகங்களின் பங்களிப்பை அறிவு ஜீவிகள் எப்போதும் குறித்து மதிப்பீட்டுக்கு கொண்டேதான் இருக்கிறார்கள், சென்னை வெள்ளத்தில் அது தனது பொறுப்பையும் பலத்தையும் காட்டியது இப்போது இந்த விஷயத்தில். இது இந்திய அளவில் தமிழகத்தின் மதிப்பை உணர்த்தும் எனவே நான் எண்ணுகிறேன்.

 

நான் மேலே கண்ட தீர்ப்பை முழுமையாகப் படித்துள்ளதால் கொள்கை ரீதியாக அத்தீர்ப்பு சரி என்றே நினைக்கிறன். உயிர் வதை எவ்வடிவத்தில் வந்தாலும் அது தடுக்கப் படவேண்டும், பௌத்த சமண மதங்களின் தாக்கம் நமது சிந்தனைக்குள் உண்டு.

 

இந்தியாவெங்கும் பசுவதைக்கு எதிரான சிந்தனை சராசரி மனிதர்களிடையே உண்டு. அதே போல உயிரின வதைக்கு எதிரான சிந்தனையும். தத்துவாரதமாகப் பார்த்தல் உணவுக்காக உயிர்கள் கொல்லப் படக்கூடாது, நாம் உயிருடன் இருக்க இன்றியமையாத குறைந்த பட்ச சுரண்டலையே இப்புவி மீது நாம் செலுத்தவேண்டும். உயிரினம் எவ்வகையிலும் வதைக்கப் படக் கூடாது. இது நமது இந்து மதமும் ஏற்றுக் கொள்கிறது. அதே சமயம் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் தொன்மையான கலாச்சார அடையாளம்.

 

ஒரு பிராந்தியத்தின் அல்லது  ஒரு இனதின்  தனி  தனிக்கலாச்சாரம் இந்திய அல்லது இந்து கலாச்சாரத்திற்கு எதிராக இருந்தால் என்ன செய்வது எனபதே இங்கு முக்கிய கேள்வி.  இந்திய/இந்து  கலாச்சாரமே நவீன முற்போக்கு சிந்தனைகள் மேற்கில் இருந்து வந்ததை ஏற்றுக் கொண்டு தமதை கைவிட்டதை நாம் பார்க்கிறோம். சிந்தனை ரீதியாக எது உயர்ந்தது என்பதே நமது அளவுகோலாக இருக்க முடியும். ஜல்லிக்கட்டில் காளை வதைக்கப் படுகிறது, அச்சுறுத்தப் படுகிறது இது நிஜம்.  உணவுக்கும் உழவுக்கும் பயன்படுத்தப் படுகிறது இதுவும் நிஜம். உயிர்வதை செய்யாமை  உயர்ந்த கொள்கையே.  தத்துவார்த்தமாக அனைத்தையும்  எதிர்க்கவேண்டியது தான்.  இந்த இனமே (genetic pool) அதனால் அழியும் என்றாலும் கூட.

 

கொள்கை ரீதியாக ஜல்லிக்கட்டை எதிர்க்கவும், சமூக செயல்பாடு என்கிற இயக்கத்தின்  கண் இந்த கட்டுப்பாடான அறவழி  போராட்டத்தை பாராட்ட வேண்டிய நிர்ப்பத்திலும் நான் உள்ளேன். சில இலட்சியங்கள் சரியானவையாக இருந்து வழிமுறை தவறானவையாக இருந்ததை நாம் பார்த்துள்ளோம், இப்போது லட்சியம் தவறு வழிமுறை மட்டும் சரி.

 

இதுகுறித்து உங்கள் கருது என்ன ?

 

கிருஷ்ணன்

1

 

அன்பின் ஜெ..

கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஏறுதழுவுதல் தடைக்கெதிரான தானாக எழுந்த மக்கள் எழுச்சியைக் காண்கையில் மிகப் பரவசமாக இருக்கிறது. தமிழகத்தின் அரபு வசந்தம் என ஒரு நாளிதழ் தலைப்பிட்டிருந்தது.

இதன் பின்னர், சமூக ஊடகங்களின் பங்கும், இதில் ஈடுபட்டுள்ள சில முக்கிய மனிதர்களின் க்ரெடிபிலிட்டியும் இருக்கின்றன.

இதில் ஒரு சார்பு நிலை எடுக்கும் மனநிலை இல்லையெனக்கு.  “வெள்ளைப் புரட்சி” யின் பொருளாதார நன்மைகளை உணர்ந்தவன். ஆனால், அது மேலோங்கி, உள்ளூர் இனங்கள் ஒதுக்கப்பட்டதையும் வேதனையுடன் காண்கிறேன். எது சரி எனச் சொல்ல முடியவில்லை.

ஆனால், எனது பரவசத்தின் காரணங்கள் சில:

  1. எழுந்தது பெரும்பாலும் இளைஞர்கள்.
  2. எழுச்சி அமைதியானது. இந்தியாவெங்கும் நடந்த போராட்டங்கள் வன்முறையில் முடிவதே வரலாறு.
  3. பெண்களின் பங்கேற்பு அதிகம்.
  4. கீழ்மைத்தனத்தின் உச்சமாக,  மாலை விளக்குகள் அணைக்கப்பட்ட போது, பெண்களை ஒரு தொந்தரவும் செய்யாமல் நின்ற இளைஞர் சமூகம் மிகப் புதிது.
  5. ஒரு காவல் அதிகாரி, உங்களுடன் நாங்கள், சீருடையில் என முகநூல் நிலைத்தகவல் இடுகிறார். ஒரு நிறுவனத் தலைவர், தம் ஊழியர் இதில் பங்கு பெற அனைவருக்கும் ஒரு நாள் விடுப்பு தருகிறார். ஒரு நாள் வருமானம் உங்கள் உணர்வுகளை விடப் பெரியதல்ல என்கிறது அவர் நிலைத் தகவல்.
  6. பங்கேற்க முன் வந்த அனைத்து அரசியல் தலைவர்களையும் தவிர்த்திருக்கிறார்கள்.
  7. மிக மிக முக்கியமாக, தாங்கள் குழுமியிருந்த இடத்தின் குப்பைகளை தாமே அகற்றியிருக்கிறார்கள்..

இந்தப் பிரச்சினையில், எழுந்த நின்ற மக்களின் கண்ணியமும், அமைதியாக தம் எதிர்ப்பைச் சொன்னவிதமும்,  எல்லாத் தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது.

இந்த எழுச்சி சுட்ட வருவதென்ன என எனக்கு இதன் முழுப் பரிமாணமும் தெரியவில்லை. ஆனால், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகம் ஒரு சரியான தலைமை வேண்டி நிற்கிறது எனத் தோன்றுகிறது.

பாலா

 

index

 

ஜல்லிக்கட்டு தடை: விதையின் அழிவு.

 

 

நமது கூடாது கூடாது சட்டங்களில் முதல் சிக்கல், அது இயற்றப்பட்ட  உடனேயே  செத்துப் போய்விடுகிறது என்பதே.  பிரச்னைகள்  எரிந்துகொண்டிருக்க  கூடாதுக்கள் கூழாங்கற்கள் போல  குளித்து உறைந்து கிடக்கிறது.

 

உதாரணம்  புலிகளை காக்க இயற்றியவை  அருகி வரும் அவ் இனத்தை காத்தது. நல்லது. இன்று பெருகி நின்று விவசாயிகளுக்கு தொல்லை தரும் மயிலை  இந்த நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்னைக்கு  உறைந்து கிடக்கும் கூடாதுக்களில்  சமரசம் இல்லை இதுவே நிதர்சனம்.

 

முப்புரி வேலில் செருகிய மனிதத் தலை, எலுமிச்சம் பழமாக மாற, [கூடாதுக்கள் உட்பட] எத்தனை மறுமலர்ச்சி அலகுகள் தேவையோ அத்தனையும் இங்கே ஜல்லிக்கட்டுக்கும் தேவை.

 

லட்சியவாதம் என்பது என்றென்றைக்குமான கனவு. நடைமுறையில் இங்கே இப்போது என்ன நிகழ்கிறதோ  அதற்க்கே  செயல்பாட்டு தாக்கம் அதிகம்.

 

பல்லுயிர் ஓம்புதல் வழியே மானுடம் ஜீவித்திருக்கும் அந்த அலகே இன்றைய உலக ஜீவ காருண்ய நோக்கின் சாரம். ஏரி மலை வாயில், கக்கும் லாவாக் குழம்பின்  எல்லைக்குள்ளும் உயிர் வாழும் நுண் உயிர்கள் உண்டு.  ஆக  எந்த சூழலிலும் இந்த பூமியில் உயிர் வாழ்தலின் தொடர்ச்சி அறுந்து விடாது. இது போதாதா?  போதாது  அந்த எல்லை வரையே இன்றைய மானுட ஜீவ காருண்யத்தின் பண்பாட்டு வளர்ச்சி நிற்கிறது.

 

கொல்லாமையை போதித்த இந்த நிலத்தில், வடக்கிருந்து உயிர் துறக்கும் காலாச்சாரமும் செயல்பட்டு இருக்கிறது. கருணைக் கொலைக்கு இடமற்ற,   கூடாதுக்கள் இன்னும் பண்பாடு வளர்ச்சி அடையாத ஒன்றே.

 

கொல்லும் க்ரோதமும், கொள்ளும் மோகமும், பரவும் காமமும் மனிதத்தின் ஆதார விசை. அதில் கட்டுப்பாடுகள் தேவை. ஆனால் அவை இல்லாமல் போக வேண்டும் என்பது மானுட குல விரோதம் .  மண்ணின் உப்பு போல. உப்பானது சாராமற்று போகச் செய்யும் அனைத்து கூடாதுகளும்  இங்கே கூடாதுதான்.  நடனமாடும் சிவனின் தத்துவம் போதும், சன்னதம் கொண்டு ஆடும் சாமியாடி தேவை இல்லை என்பதைப் போலானது இது.

 

ஜல்லிக்கட்டில் நிகழ்வது  மனிதனின் இயல்பில் உறையும் அடிப்படையான மீறல் ஒன்றினை கண்டு கொண்டு அதில் களிப்பு எய்தும் தருணம்.  இந்த விதை அழியாமல் காக்க, இங்கே ஜல்லிக்கட்டு தேவை. அதற்கான கடுமையான விதிகளுடன், அனைத்து அலகுகளிலும் அரசாங்கத்தின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நிகழ்த்தும் புதிய விதிமுறைகள்தானே அன்றி கூடாதுக்கள் அல்ல.

 

குடித்து சாகும் கிராமங்களை விட, வருடம் ஒரு முறை ஏறு தழுவ தயாராக்கிக் காத்திருக்கும் கிராமங்கள்  எல்லா நிலையியலும் மேம்பட்ட கிராமமே.

 

பொதுவாக வெளியில் இருந்து ஒரு அடி நமது கலாச்சாரத்தில் பண்பாட்டில் விழும் போது, பெரிய அளவில் ஒரு மறுமலர்ச்சி நிகழும் என்பது ஆசான் சூட்டிக் காட்டுவது.

 

நிகழ்கால சாதக பாதகங்களுக்கு அப்பால்,  அந்த  மறுமலர்ச்சியின் தலைவாயிலாக இன்று  சாலையில் நிற்கும் அனைத்து மனங்களுக்கு என் வந்தனம்.

 

கடலூர் சீனு

 

ஜல்லிக்கட்டு தீர்ப்பு

மிருகவதை என்னும் போலித்தனம்

ஜல்லிக்கட்டு பற்றி

ஜல்லிக்கட்டு ஒரு பேட்டி

 

முந்தைய கட்டுரைகுறளுரை கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைஒரு மலைக்கிராமம்