குறளுரை, கடிதங்கள் -5

maxresdefault

 

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் குறளினிது உரைகள் இணையத்தில் வெளிவரக் காத்திருந்தேன். தரவிறக்கிக் கேட்டேன். ஆங்காங்கே நிறுத்தி குறிப்பெடுத்துக்கொள்ள வசதி. முதல் நாள் உரை அறிவைத் தொட்டதால் அதிக குறிப்பெடுக்கவேண்டி இருந்தது. அடுத்த இருநாட்கள் குறள்களின் வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்து பேசியபோது மனந்தொட்டது, குறிப்புகளுக்கு அதிக தேவை ஏற்படவில்லை. வழக்கம் போல பல புதிய திறப்புகள் கிடைத்தன. நன்றி.

இங்கு குறள் சார்ந்த எனது சில அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பள்ளி பருவம் முதல் குறளை பலமுறை படிக்கத்தொடங்கி முழுதும் முடிக்காமல் நின்று போனது. சில சமயங்களில் சில குறள்கள் மனதில் சட்டெனத் தோன்றி துணை நின்றதுண்டு (‘காணாதான் காட்டுவான் தான் காணான்’, நன்றாற்றலுள்ளும் தவறுண்டு’, நீங்கள் குறிப்பிட்ட ‘யாதெனின் யாதெனின்’).

சில மாதங்கள் முன்பு அனைத்து குறள்களையும் படித்துவிடும் முடிவுடன் மீண்டும் படிக்கத் தொடங்கினேன் (மு வ உரையுடன்). 29 இல் இடறல். (குணமென்னுன் குன்றேறி நின்றார் வெகுளி/ கணமேயும் காத்தல் அரிது). மு.வ. உரையில் குணமென்னும் குன்றேறி நின்றார் கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும் என்று பொருள் தந்திருந்தார். நற்குணங்களின் உச்சத்தை அடைந்து அங்கே நிலை கொண்டவர்கள், அறவோர் நீக்கவேண்டிய மனமாசுக்கள் நான்கனுள் ஒன்றாகிய வெகுளியை கொள்வாரா, அதுவும் ஒருவரை கணத்தில் நிலைகுலையச்செய்யும் அளவிற்கு? நூலை மூடி வைத்துவிட்டு உங்கள் தமிழய்யா சொன்னதுபோல அசைபோட்டதில் மு.வ. வெகுளிக்குப் பின்னே போட்ட கால்புள்ளியை வெகுளிக்கு முன்னே போட்டால் வேறு பொருள் வருவது அறிந்தேன் – ‘குணமென்னுன் குன்றேறி நின்றார் வெகுண்டாலும் அது ஒரு கணம்கூட நீடிக்காது’. இந்த பொருள் எனக்குச் சரியெனப் பட்டது.

குறளை ஆழ்ந்து வாசிப்பது என்று மீண்டும் துவங்கினேன். சொல் பிரித்து, ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் அறிந்து, சில சொற்களுக்கு அகராதியில் (agarathi.com) அனைத்து பொருட்களும் அறிந்து, பலரது உரைகளையும் படித்து அசைபோட்டு எனக்கான உரையை (படித்தவற்றில் இருந்தோ அல்லது அவற்றைத் தாண்டியோ) கண்டடைவது. (உதவும் இணைய தளங்கள்: குறள்திறன் kuralthiran.com, திருக்குறள் விளக்கம் thirukkuralvilakkam.blogspot.in/). முதல் குறளே முடக்கிப் போட்டது. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற உவமை ஆண்டவனுக்குப் பொருந்தவில்லை. ‘ஆதி பகவன்’ பதவிக்குப் பல வேட்பாளர்கள். விரிந்த வாசிப்பிற்கு பிறகு அருக முதல்வர் ரிஷப நாதரே ஆதி பகவன் என்று தேர்வானார். இதற்கு குறள் உலகப் பொது மறை, மத வாசனை சற்றும் அற்றது, என்ற பிம்பங்களை நீங்கள் கூறியதுபோலக் கடந்து வரவேண்டியிருந்தது.

முன்பெல்லாம் வான்சிறப்பை ஒரு முழுமைக்காக படித்து கடந்து போய்விடுவேன். பெரிதாய் பொருள் கொண்டதில்லை. இம்முறை விசும்பும், அதிலிருந்து வீழும் அமிழ்தின் துளியும், அதிலிருந்து உயிர்த்தெழும் புல்லும் காணக்கிடைத்தன.

அதிகாரத்தினுள் வைப்புமுறை, ஒரு குறள் முன் குறளுக்கு விளக்கமாய் அமைவது குறித்து விளக்கியிருந்தீர்கள். இன்னொன்று, ஒரு குறளிலிருந்து அதிகாரத்திற்கு வெளியேயும் விரிதல்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.”

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ எனக்குப் பிடித்த ஒரு குறள் தொடர். உங்கள் உரைக்குப் பின் மனதில் ஒடிக்கொண்டிருக்கிறது. ஓரு சிறு எரிச்சல் ஏற்பட்டபோது அந்த தொடர் மேலெழுந்து அதைத் துடைத்துச் சென்றதை உணர்ந்தேன்.

நீங்கள் குறிப்பிட்டதுபோல அடுத்த குறள் மனமாசுக்களை பட்டியலிடுகிறது:

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.”

இக்குறளிலிருந்து அழுக்காறாமை, வெஃகாமை, அவா அறுத்தல், இனியவை கூறல் என்ற அதிகாரங்களுக்கு விரியலாம். அங்கிருந்து அவ்வாறே மேலும் விரியலாம்.

மேலும் அறம், அறன் என்னும் சொற்கள் வரும் மற்ற குறள்களை எல்லாம் பயிலலாம் (35). அவற்றிலிருந்து மேலும் விரியலாம். (முனைவர் திரு ப பாண்டியராஜாவின் ‘தமிழ் இலக்கியத் தொடரடைவு’ http://tamilconcordance.in/ பெரும் உதவி)

இவ்வாறு விரிந்து ஆழ்ந்து உணரமுடியுமாயின், ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ பேராலின் சிறு விதையாய் நெஞ்சத்தகத்தில் விழக்கூடும்.

நன்றி!

பா ராஜேந்திரன்.

***

ஜெ

குறளுரைகளை கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். முதல்நாள் உரையைக்கூர்ந்து கேட்டு அதன் கட்டமைப்பைப்புரிந்துகொண்டோம் என்றால் மற்ற நாள் உரைகளை உள்வாங்குவது எளிது என நினைக்கிறேன். முதல் நாள் உரையில் எப்படி ஒரு நல்ல வாசகன் அறிவைக் கடந்து சென்று கவிதையை அடைவதென்று சொல்கிறீர்கள். நரசிம்மத்தைப் பிடித்து கொடியில் கட்டி இழுத்துவந்த காட்டுமிராண்டிபோல மூலநூலாக ஆக்கப்பட்ட குறளை அணுகலாம் என்று சொல்கிறீர்கள். குறளை எப்படி தனிப்பட்ட முறையில் அந்தரங்கமான தியானமாக ஆக்கலாமென்று சொல்கிறீர்கள். அதையே பிறநாள் உரைகளில் அனுபவங்கள் வழியாகச் சொல்லிவிட்டீர்கள். சிறப்பு

சத்யமூர்த்தி

***

அன்புள்ள ஜெ

திருக்குறள் உரைகளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அற்புதமான ஒரு கட்டமைப்பு. அறியாமலேயே அதெல்லாம் வந்திருக்குமென நினைக்கிறேன். குறளின் முதல்நாள் உரையிலே கட்டமைப்பு அழகாக உள்ளது. குறளின் அடிப்படையான வேர்ப்பற்று என்பது இந்தியா முழுக்க உள்ள பழங்குடிவாழ்க்கையிலிருந்தே என்று சொன்னீர்கள். அடுத்தநாள் உரையில் செல்விருந்து பற்றிய இடம் வந்தபோது குறள் டார்ஜிலிங் கூர்க்கா வாழ்க்கையில் கொண்டிருக்கும் இடம் தெரியவந்தது. அப்படியே விரிந்துசென்று ரஷ்யா பற்றிச் சொன்னபோது உலகளாவியதாக அது ஆகியது. மேலும் விரிந்துசென்று விசும்பு பற்றிச் சொல்லி முடித்தீர்கள்.

மகாதேவன்

***

ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண

குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M

முந்தைய கட்டுரைஜல்லிக்கட்டு இரு கருத்துக்கள்
அடுத்த கட்டுரைஹொய்சாள வழியில்…