சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’

 

CSK

சி. சரவண கார்த்திகேயன், இணைய ஊடகங்களில் எழுத ஆரம்பித்து அங்கிருந்து அச்சு ஊடகங்களுக்கு சென்று எழுத்தாளராக அறியப்பட்டவர். இணைய ஊடகங்களில் எழுதுபவர்களின் முக்கியமான சிக்கல் என்னவென்றால், அங்கு தரப்படுத்தப்பட்ட வாசகர்கள் இல்லை என்பது. சிற்றிதழ்களுக்கோ இடைநிலை இதழ்களுக்கோ அவர்களின் வாசகர்களுக்கோ அந்த இதழ்களாலேயே தரப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களாக இருப்பார்கள். இணையம் அனைவரும் வந்து செல்லும் ஒரு பொதுவெளி போலிருக்கிறது.

 

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அழைக்கப்பட்ட விருந்தினர் நடுவே மூடிய அறையில் ஆற்றும் உரைக்கும் முச்சந்தியில் ஆற்றும் உரைக்குமான வித்தியாசம். எவர் கவனிக்கிறார்கள் அவர்களின் தகுதி என்ன அவர்களுக்கு என்ன புரிகிறதுஎன்பதே தெரியாமல் ஆற்றப்படும் உரை .இக்காரணத்தால் இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களால் எதிர்வினைகளால் செதுக்கப்படுவதும் மேம்படுத்தப்படுவதும் அரிது. பல ஆண்டுகள் இணையத்தில் எழுதிய போதும் கூட எவ்வகையிலும் தங்களது எழுத்தை மேம்படுத்திக் கொள்ளாதவர்களாகவே எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

 

அச்சு ஊடகங்களில் சென்ற உடனேயே எழுத்தாளர்களின் தரம் சற்று மேம்படுவதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருக்கீறேன். புது எழுத்தாளரின் எழுத்து அச்சுஊடகங்களுக்குச் செல்லும் போது அதைப்பரிசீலிக்க அங்கு ஆசிரியர் என்று ஒருவர் இருக்கிறார். அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டியிருக்கிறது. வாசக எதிர்வினைகளும் ஓரளவேனும் வர ஆரம்பிக்கின்றன. சமீபகாலமாக அறிமுகமான இணைய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கான காரணம் இதுவே.

 

சி.சரவணகார்த்திகேயனின் இத்தொகுப்பின் சாதகமான அம்சமென்பது இவரது கதைகள் பல்வேறு கதைக்களங்களை நோக்கிச் செல்கின்றன என்பதுதான். அணுகுண்டு குறித்த வெண்குடை சிறுகதைக்கு அடுத்ததாக தாஜ்மகாலுக்கும் ஔரங்கசீபுக்குமான உறவைப்பற்றிய கறுப்பு மாளிகை, பிணத்துடன் புணர்பவனைப்பற்றிய கிராமத்துக் கதையான இறுதி இரவு தொடர்ந்து  நவீனப்பெண்ணின் வாழ்க்கைப் பின்புலம் உள்ள மதுமிதா சிலகுறிப்புகள் என்னும் கதை என இக்கதைகள் தொடர்ந்து களம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

 

இது தொகுப்பை வாசிக்கும் சலிப்பை  பெருமளவுக்கு இது குறைக்கிறது. ஆனால் தமிழ் நவீன இலக்கியத்துக்குள் இந்த அம்சம் எதிர்மறையாகத்தான் பார்க்கப்பட்டது. உதாரணமாக பூமணியின் கதைகளை எடுத்துக் கொண்டால் அவர் நன்கு அறிந்த கரிசல் காட்டு வாழ்க்கையை மட்டுமே அவர் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். கி.ராஜநாராயணனையோ கண்மணி குணசேகரனையோ சு.வேணுகோபாலையோ சுப்ரபாரதிமணியனையோ கூட அப்படிதான் வரையறுக்கமுடியும். ஒர் எழுத்தாளன் அவன் பிறந்து வளர்ந்து உளம் உருவான சூழலை தன்னியல்பாக நுட்பமாக வெளிப்படுத்துவதுதான் கலை என்பது சிற்றிதழ்ச்சூழல் உருவாக்கிய ஒரு மரபு. வெவ்வேறு கதைப்புலங்களுக்கு செல்வதும், கதைக்களச்சோதனைகளை மேற்கொள்வதும் வணிக எழுத்தாளர்களுக்குரிய குணங்களாகத்தான் கருதப்பட்டது. தமிழில் அத்தகைய முயற்சிகளை பி.வி.ஆர், சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களே அதிகமும் செய்தனர்.

 

தீவிர இலக்கியப் புலத்திற்குள் அத்தகைய முயற்சிகள் மிக அரிது. ஓரளவேனும் செய்துபார்த்தவர் மிகத் தொடக்க காலத்தில் எம்.எஸ்.கல்யாணசுந்தரம். அதனாலேயே அவருடைய கதைகள் இலக்கியவிவாதங்களில் தவிர்க்கப்பட்டன. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் பொன்மணல், மீன் சாமியார் போன்ற கதைகள் தமிழ்வாசகச்சூழல் அறியாத கதைக்களங்களுக்குள் செல்கின்றன. அவரது நாவலான இருபது வருடங்கள் ஒரு சராசரி தமிழ் எழுத்தாளனின் கற்பனைக்குள் அடங்காத ஒரு புதிய அனுபவப் புலத்தைமுன் வைக்கின்றது.

 

கறாரான எதார்த்தவாதமே இலக்கியத்தின் முதன்மை அழகு என்ற அளவுகோல் உருவான பிறகு இத்தகைய எழுத்துக்கள்மேல் ஒரு நிராகரிப்பு சிற்றிதழ்ச் சூழலில் உருவாகியது. ஒருபக்கம் கைலாசபதி முன்னெடுத்த முற்போக்கு எழுத்து அதைத்தான் சொன்னது. மறுபக்கம் அவர்களுக்கு நேர் எதிரான நிலைபாடு கொண்ட க.நா.சுவும் அதையே சொன்னார். ஆர்.சண்முகசுந்தரத்தை ஒரு அடையாளமாக முன்வைத்து எழுத்தாளன் நன்கறிந்த ஒரு வாழ்க்கைப்பின்புலம் கதையில் அமைய வேண்டும் என்பதையே அடிக்கோடிட்டபடியே இருந்தார் க.நா.சு. சுந்தர ராமசாமி அதை வலியுறுத்தினார்.

 

எளிமையான சுவாரசியத்திற்காக வெவ்வேறு கதைப்புலங்களுக்கு செல்வதென்பது எழுத்தாளனின் தரத்தை குறைக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். எழுத்தாளனின் அந்தரங்கத்தேடல் அவனை வழிநடத்த வேண்டுமே ஒழிய மேலோட்டமான ஆர்வங்களும் வாசகனின் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கட்டாயமும் அல்ல. புதிய கதைக்களங்களை எடுத்துக்கொள்ளும்போது நேரடி அனுபவத்தால் அடையப்படும் நுண் அவதானிப்புகள் இல்லாமலாகின்றன. பிற நூல்களைச் சார்ந்து எழுதும் இரண்டாம்தள சித்தரிப்பு வந்துவிடுகிறது.

 

ஆனால் வெவ்வேறு கதைப்புலங்களை எடுத்து எழுதிய மேதாவி, மாயாவி போன்ற எழுத்தாளர்கள் அவர்களின் சமகாலத்தவராகிய எம்.எஸ். கல்யாணசுந்தரத்திடமிருந்து வேறுபடுகிறார்கள். எம்.எஸ்.கல்யாணசுந்தரம் கதைச் சுவாரசியத்திற்காக அந்தக் கதைப்புலங்களை பயன்படுத்தவில்லை தன் அடிப்படையான வாழ்க்கைத் தேடல் சார்ந்துதான்  புதிய கதைப்புலங்களைஅவர் தேர்ந்தெடுத்தார். அவரது கதைகள் அனைத்திலும் நேர்நிலை நோக்கு கொண்ட அவருடைய அணுகுமுறை அதற்கான சான்றுகளை தேடிச்செல்வதைத்தான் நாம் காண்கிறோம்.

 

அதன் பின்னர் அத்தகைய இலக்கியத்தகுதிகொண்ட மாறுபட்ட கதைப்புலங்களைத் தேடிச் செல்லும் எழுத்து என்றால் அ.முத்துலிங்கத்தை சொல்ல வேண்டும். தொழிற்சூழல், வணிகச்சூழல் என்றும் ,ஆப்ரிக்கா அரேபியா அமெரிக்கா என்றும் அவருடைய கதைகளின் புலங்கள் விரிந்து பரவிக் கிடக்கின்றன. ஆனால் வெறும் கதைச் சுவாரசியத்திற்காக அவர் ஒருபோதும் கதைக்கருக்களை எடுத்துக் கொள்வதில்லை. அவருக்கென்று ஒரு வாழ்க்கைத் தேடலும் அவர் அவற்றைக் கண்டடையும் தருணங்களும் உள்ளன. அவற்றுக்குத்தான் இந்த மாறுபட்ட கதைப்புலங்கள் பின்னணியாகின்றன.

 

மாறுபட்ட கதைப்புலங்களின் தேவை என்ன? ஏன் ஒரே நிலப்பின்னணியையும் வாழ்க்கைப்புலத்தையும் படைப்பாளி எடுத்துக் கொள்ளுகிறான் என்றால் அவன் அவற்றில் பிறந்து வளர்ந்த காரணத்தினாலேயே அவை அவனுள்ஆழமான பாதிப்பைச் செலுத்தி அவன் கனவுக்குள் புகுந்து படிமத்தன்மை கொண்டிருக்கின்றன என்பதனால்தான். வண்ணதாசனின் புனைவுலகில் அவர் திரும்பத் திரும்பச் சொல்லும் நகர்ப்புற மரங்கள் ஒருவகையான அந்தரங்கப் படிமங்கள் ஆ.மாதவனின் சாலைத்தெரு அவருக்கு உலகியல் கொந்தளிப்பு நிகழும் சமகால வாழ்க்கையின் குறியீடேதான் .

 

ஒரே கதைப்புலத்துக்குள் எழுதும் எழுத்தாளர் அவர் எழுதும் அனைத்தையும் எப்படியோ படிமங்களாக மாற்றுவதன் வழியாக அவரது புனைவுக்கு மேலும் மேலும் ஆழத்தை கொண்டுவருகிறார். தன் ஆழ்மனம் சென்று படியாத புதிய கதைக்களங்களை அவர் தேடும்போது வெறும் சுவாரசியச் சித்தரிப்பாகவே அவற்றை நிறுத்திவிடும் அபாயம் உள்ளது. ஆகவே தான் அவற்றை இலக்கியம் தவிர்க்க வேண்டும் என்று கோரப்பட்டது.

 

ஆனால் ஒரு எழுத்தாளனுடைய தேடல் தத்துவார்த்தத் தன்மை கொண்டிருந்ததென்றால் , புதிய சிந்தனைகளைச் சார்ந்தது என்றால் அவனுக்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் வாழ்க்கை உருவாக்கும் ஆழ்படிமங்கள் மட்டும் போதாது. தத்துவத் தேடலின் நுட்பமான பல தருணங்களை விளக்கும் புதிய படிமங்களுக்காக அவன் தேடுகிறான். அவற்றை வரலாற்றிலோ அறிவியலிலோ பிற நிலங்களின் வாழ்க்கையிலோ அவன் கண்டடையக் கூடும். இந்தக் கட்டாயம் தான் அறிவியல் புனைகதைகளுக்கு இலக்கிய மதிப்பை அளிக்கும் அடிப்படையாகும்.

 

காலம் என்றால் என்ன என்ற வினாவை எழுப்பிக்கொள்வதற்கு ஒரு கிராம விவசாய பின்புலம் போதாது.  உள்ளமும் மூளைநரம்பமைப்பும் வேறுவேறா என்று ஆராய குடும்பச்சூழல் போதாது.அதற்கு நுண்துகள் அறிவியலின் ஒரு படிமம் தேவையாக ஆகலாம். ஒரு அறுவைசிகிழ்ச்சைச்ச்சூழல் தேவைப்படலாம். அல்லது வரலாற்றுச்சூழல் தேவைப்படலாம். அதே போல ஆன்மீகமான தேடல்களை முன்வைப்பதற்கும் எளிமையான வாழ்க்கையின் பின்புலம் போதாமலாகும். மதம் சார்ந்தும், தொல்குடி வாழ்க்கை சார்ந்தும், இங்குள்ள தொன்மங்களையும் நம்பிக்கைகளையும் கலைவடிவங்களையும் அவன் தேடிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்

 

ஆகவே ஒரு புதிய கதைக்களம் தேடிச் செய்யப்படுவதற்கான காரணமாக அமைவது அந்த ஆசிரியனின் தேடல் எப்படிப்பட்டது என்பது மட்டும் தான். அந்தக் கோணத்தில் பார்த்தால் சி.சரவண கார்த்திகேயனின் பலகதைகள் வெறும் சுவாரசியம் சார்ந்தே எழுதப்பட்டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படுகிறது. இவ்வாறு கதைகளுக்கான களங்களைத் தேடுவது தனது  சிந்தனைத்தேடல் சென்று துழாவும் ஒரு வினாவுக்கான விடையாக அமைகிறதா அல்லது புதிதாக வெளிப்படவேண்டுமென்ற வெறும் விழைவு மட்டும் தானா என்பதை ஆசிரியர் பரிசீலித்துக்கொள்ள வேண்டும். இறுதி இரவு போன்ற கதைகளில் அவருடைய அடிப்படையான தேடல் வெளிப்பட்டுள்ளது.  கறுப்பு மாளிகை போன்ற கதைகளில் வெறும் ஆர்வம்தான் உள்ளது.

 

சரவண கார்த்திகேயனின் மிகப்பெரிய பலவீனம் என்பது அவருடைய மொழிநடை அது இன்னும் பயிலப்படாததாகவும், வார இதழ்களிலிருந்து பெற்ற தேய்வழக்குகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இது வாசிப்பில் ஒர் ஆழமின்மையை வாசகன் உணரச்செய்கிறது. ஒரு குறிப்பிட்ட தருணத்தைச் சித்தரிப்பதற்கான அனைத்து தேய்வழக்குகளையும் ஆசிரியன் தவிர்த்துவிடுவானென்றால் அவன் புதிதாக ஒன்றை சொல்லிவிடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். அங்குதான் நடை என்பது உருவாகும். தொலைந்துபோன ஒன்று திரும்பக் கிடைக்கும் போது ’வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது’ என்று எழுதுவது தான் இயல்பாக வரும். அத்தகைய சொல்லாட்சிகளை தவிர்க்கும்போது அந்த உணர்வை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற அறைகூவலை எழுத்தாளன் எடுத்துக் கொள்கிறான். அதுதான் அவனுடைய சுயமான அவதானிப்புகளையும் அவனுக்குள் இருக்கும் தனித்துவமான மொழியையும் வெளிக்கொண்டுவரும் எழுத்தாக அமையும்.

 

நல்லிரவின் பூரணை ஆக்ராவின் மீது வெண்ணமுதினை பொழிந்துகொண்டிருந்தது” என கறுப்புமாளிகை ஆரம்பிக்கிறது.  “ஷாஜகான் சிலமாதங்கள் வரையிலும் நடைபிணமாகவே ஆகிப்போனான். அவர் விழிகளிலிருந்து கண்ணீர் அவரை அறியாமலேயே சுரந்து உதிர்ந்துகொண்டே இருக்கிறது” என அதில் ஒரு சித்தரிப்பு வருகிறது. இதுதான் தட்டையான சித்தரிப்பு என்று சொல்லப்படுகிறது. இந்தத்தருணத்தில் எவராயினும் எழுதப்படும் சாதாரணமான வரிகள் இவை. சரவணக்கார்த்திகேயன் மட்டுமே எழுதும் வரிகள் இங்கு இருந்திருக்கவேண்டும்

cover3d

இந்தச் சாதாரண வரிகளைத் தவிர்த்தால் ஒரு பெருந்துயரத்திற்கு பின் அக்கதாபாத்திரம் என்னவாக மாறினான், எப்படி அவன் துயரம் வெளிப்பட்டது என்பதை தனித்தன்மையுடன் சொல்வதுதான் ஆசிரியனின் அறைகூவலாக இருக்கும். உதாரணமாக “அந்நிகழ்வுக்கு பிறகு ஷாஜகான் பேசுவதே நின்றுவிட்டது. ஆனால் அவர் உடல் உதடுகள் எப்போதும் ஒரு உச்சரித்து அசைந்து கொண்டே இருந்தன. கண்கள் நிலையற்றிருந்தன. விரல்கள் நடுங்கியபடி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு அசைந்தன” என்றொரு சித்திரம் வந்திருக்கிறது என்று கொள்வோம், வாசகன் அங்கொரு மனிதரைப்பார்க்கிறான். புறச்சித்தரிப்பு வழியாகவே அந்த துயரம் சொல்லப்படுகிறது. “நான்குபக்கமும் கல் அடுக்கி வாசலோ சாளரமோ இல்லாமல் கட்டி எழுப்பப்படும் ஒரு கல்லறைக்குள் அவன் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தான்” என்றால் ஒரு படிமம், அல்லது கனவு வழியாக அதே உணர்வு சொல்லப்படுகிறது. மேலே குறிப்பிட்ட தேய்வழக்குகள் மட்டும் வரும்போது எந்த உணர்வும் தொடர்புறுத்தப்படுவதில்லை.

 

இறுதிஇரவு அனைத்து வகையிலும் ஒரு நல்ல சிறுகதைக்கான முடிவைக் கொண்டிருக்கிறது. சிறுகதையின் முடிவென்பது வாசகனுடன் நிகழ்த்தும் ஒரு விளையாட்டாக அமையக்கூடாது. ’மயிரு’ கதையில் வருவது போல கதை படித்து முடிக்கும்போது எதிர்பாராத ஒரு சிறிய காய்நீக்கத்தை ஆசிரியன் நடத்திவிட்ட உணர்வை மட்டுமே வாசகன் அடைவான். சிறுகதையின் முடிவு ஒரு கருத்தை கதாபாத்திரம் சொல்வது போல் அமையக்கூடாது. கறுப்பு மாளிகை ஔரங்கசீப் தான் செய்த ஒரு செயலை தானே நியாயப்படுத்தி பேசுவது போல அமைந்துள்ளது. முடிவு அக்கதையின் கட்டுமானத்துக்குள் தன்னியல்பாக வரவேண்டிய ஒன்று. அக்கதை எழுப்பும் வினாக்களுக்கு தன்னியல்பான திருப்பம் வழியாக முன்னகர்வை அளிப்பது. அதுதான் சிறுகதைக்குரிய இறுதி.

 

அதற்கு உதாரணம் இறுதி இரவு கதையின் முடிவு. அதுவரைக்கும் சொல்லப்பட்ட மொத்தக் கதையுமே வேறொன்றாக திரும்பி மீண்டும் ஒரு கதையை உருவாக்கத் தொடங்குகிறது.  அப்போதுதான் வாசகன் ஆசிரியனூடாக தன்னுடைய சொந்த கதைப்புலத்துக்கு சென்று சேர்கிறான். அக்கதையை தன் வாசிப்பினூடாக விரித்து எடுக்க முயற்சி செய்கிறான்.

இன்னொரு குறிப்பிடத்தகுந்த கதை மதுமிதாசில குறிப்புகள். கதை சொல்லும் முறையில் புதுமையும் சமகால இளைஞர் வாழ்க்கையை குறித்த நுண்ணவதானிப்புகளும் உள்ளன. இதனாலேயே அக்கதை கூர்ந்து வாசிக்க வைக்கிறது. இக்கதையில் சரவண கார்த்திகேயன் வெற்றியும் தோல்வியும் அடைகிறார். வெற்றி என்பது ஒரு இளம் பெண் இன்றைய நவீன வாழ்க்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அனைத்து களங்களையும் கலைடாஸ்கோப்பை சுழற்றுவது போல மிக விரைவாக சித்தரித்துக் காட்டுவதிலுள்ள நுட்பம்.  ட்விட்டரில், முகநூலில், மின்னஞ்சலில், கடிதங்களில், ஸ்கைப்பில், கைப்பைக்குள் என ஒரு பெண் எங்கேல்லாம் எந்தெந்த வகையில் வெளிப்படுகிறாள் என்பது மிக ஆரவமூட்டும் ஒரு வாசிப்புக்குரியது.

 

உண்மையில் இந்த அளவுடன் நின்றிருந்தால்கூட இது நல்ல கதையாக அமைந்திருக்க கூடும். அப்பெண்ணின் ஒவ்வொரு வெளிப்பாடுகளுக்கும் உள்ளே இருக்கும் முரண்பாடும் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அந்த வடிவம் அவளிலிருந்து உருவாக்கி எடுக்கும் ஆளுமைகளுக்கு இடையே உள்ள வேறுபாடும் மிக முக்கியமானது. ஆனால் கதை அங்குமுடியவில்லை என்ற எண்ணத்தால் ஒருகொலை, வைரங்கள் என்று மிகச்செயற்கையான ஒரு திருப்பத்தைஇறுதியில் கொடுக்கிறார். நவீனச்சிறுகதையின் அறைகூவல் வாழ்க்கைத்தருணங்களில், மனிதர்களில் வெளிப்படும் வாழ்வின் புதிர்களையும் தத்துவங்களையும் முன்வைப்பதே ஒழிய திருப்பங்களை அளித்து மகிழ்விப்பதல்ல என ஆசிரியர் உணர்ந்திருக்கவில்லை என்பதனால் இது நிகழ்ந்துள்ளது.

 

உண்மையில் அந்தத் திருப்பத்திற்காகத்தான் இத்தனை தகவல்கள் என்றால் இது சலிப்பூட்டக்கூடிய சித்திரமாக மாறிவிடும். அதற்கு இத்தனை நுண்தகவல்கள் எந்த வகையிலும் தேவையில்லை. ஒரு வார இதழில் கதை பிரசுரமாகவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முடிவு போல் இருக்கிறது. வாசித்து வரும்போது பல ஆடிகளுக்கு நடுவே நின்றிருக்கும் ஒரு பெண்ணை ஆடிகளினிடம் மட்டுமே பார்க்கும் ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு ஆடியும் இன்னொன்றை பிரதிபலித்து ஒரு முடிவின்மையை உருவாக்கியது. மிக முக்கியமான ஒரு கதை என்ற எண்ணத்தில் படித்து சென்று இறுதியில் கைவிடபப்ட்ட உணர்வை அடைந்தேன்.

 

அதே போல முக்கியமான முயற்சி ஆனல் நழுவவிடப்பட்டது என்று சொல்லவேன்டியது மண்மகள் என்னும் கதை. ராவணன் மண்டோதரி போன்றவர்களைச் சொல்வதில் நிகழ்ந்துள்ள தேய்வழக்குகளை தவிர்த்தால் ஆர்வமூட்டும் ஒரு கருவை எடுத்துக் கொண்டிருக்கிறது. சீதை ராவணனின் மகளாக இருக்கிறாள் பல நாட்டார் கதைகளில். அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் ஒன்றுடன் ஒன்று பொருத்தி வெவ்வேறு கோணங்களில் ஒன்றுடன் ஒன்று பொருத்தி ஒரு நவீனக் கதையை சொல்ல முயன்றிருக்கிறார்.

 

இத்தகைய கதைகளை எழுதும்போது ஆசிரியன் சீட்டுகளை புரட்டி புரட்டி வித்தை காட்டுவது போல் தோன்றாமல் தன்னியல்பான் ஒழுக்குடன் எழுதுவது முக்கியமானது. இந்தக் கதையை ஆசிரியர் கூற்றாக அல்லாமல் வெவ்வேறு முனிவர்களின் கூற்றாகவோ நூல்களின் கூற்றாகவோ சித்தரிப்புகளாகவோ சொல்லி ஒன்றுடன் ஒன்று இணைத்திருந்தால் தன்னியல்பான ஓட்டம் அமைந்திருக்கக்கூடும். அந்தந்த கதை வடிவுகளுக்குரிய மொழி நடையில் அமைக்கப்பட்டிருந்தால் கதை முழுமையடையும். இந்தக் கதையின் நவீனத்தன்மை காரணமாக இந்த சித்தரிப்புகள் அனைத்தும் ஒரு நவீன கணிப்பொறி  ‘ஆப்’ வழியாக விளையாடுவது போல சேர்க்கப்பட்டிருந்தால் கதையின் வாசிப்பு சாத்தியம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். எவ்வளவோ சாத்தியங்கள்

 

ஒரு தொடக்க எழுத்தாளனின் முதல்தொகுதி இத்தகைய நல்ல வாசிப்புத்தன்மையுடன் இருப்பது பாராட்டுக்குரியது. இன்றைய எழுத்தின் மாதிரி என்பதனால் பலவகையிலும் கவனத்துக்குரியது இந்ந்நூல். தனது கதைகளை நிறைகளையும் குறைகளையும் கூர்ந்து நோக்கி தனது வல்லமை என்ன என்று அடையாளம் கண்டு கொண்டு மேலதிக காலடி எடுத்துவைப்பதே சிறந்த எழுத்தாளனின் வழிமுறையாக இருக்கும். வலிமையான ஒரு காலடியோடுதான் சரவண கார்த்திகேயன் நுழைந்திருக்கிறார்.

 

இறுதி இரவு முன்னுரை

முந்தைய கட்டுரைதலையல்லால் கைமாறிலேன்- கடிதம்
அடுத்த கட்டுரைநாராயணகுருகுலம் நிதியுதவி