அன்புள்ள ஜெ வணக்கம்.
குறளினிது உரைக்கு நன்றி.
ஜுலை 7 2014ல் வெண்முரசு விவாதம் கடிதத்தில் உங்களிடம் திருக்குறள் உரை எழுதவேண்டும் என்று ஒரு விண்ணப்பம் வைத்து இருந்தேன். இன்று உங்கள் குறள் இனிது உரையை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யதார்த்தமாக கீழ்கண்ட இணைப்பை திறந்தேன் அதில் திருக்குறளுக்கு உரைவேண்டிய விண்ணப்பம் உள்ளது. அது எழுத்தாக உள்ளது என்பதே மறந்துவிட்டது. கேள்வி கேட்டது ஒரு இனிய தருணம். உரைமுழுவதும் கேட்டு கடிதம் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு நல்லக்கடிதம் எழுதமுடியுமா? பார்ப்போம். மிகவும் சிறந்த ஒரு உரையை நிகழ்த்துகின்றீர்கள். இந்த உரை குறளுக்கு இனிது குறனிது என்பதை அறிவதற்கு. நன்றி
http://venmurasudiscussions.blogspot.com/2014/07/blog-post_4197.html
அன்புடன்
ரா.மாணிக்கவேல்.
***
அன்புள்ள ஜெ
உங்கள் திருக்குறள் உரையில் நீங்கள் ஒருவகை பட்டியல்களை அளிக்கிறீர்கள். அந்த உரையின் செறிவை அளிப்பது அதுதான். அது போகிறபோக்கிலே சொல்லப்படுவதாக இல்லாமல் ஒரு தேர்ந்த ஆய்வமைப்பை அளிக்கிறது அதனால்தான் என நினைக்கிறேன்.
ஜனநாயகத்தின் அடிப்படைகளாக மூன்று தன்மைகளைச் சொல்கிறீர்கள். .அதிகாரத்தில் பங்களிப்பு, சமத்துவம், மதச்சார்பின்மை.
குறளை நம்மவர்கள் ஒரு மூலநூலாக ஆக்கும்போது மூன்றுவிஷயங்களைச் செயற்கையாகச் செய்வதாகச் சொல்கிறீர்கள். தொன்மை, தூய்மை, மாறாமை.
பழைய நூல்களை பதிப்பிக்கும்போது மிதமிஞ்சிய பரவசம் உண்டானதுக்கு மூன்று காரணம் சொல்கிறீர்கள். 1. கல்வி பரவலாகி அனைவரும் வாசிப்பது 2. நடுக்காலத்தில் உருவாகியிருந்த வீழ்ச்சி 3 சமண மதங்கள் மறைந்துபோனது.
குறள் ஐந்து அடிப்படைகளை உருவாக்குகிறது என்கிறீர்கள். அரசு,குடும்பம்,காதல்,சான்றோன், அறம்
பட்டியலில் பெரும்பாலும் மூன்று மூன்றாகவே சொல்கிறீர்கள் என்பதைக் கவனித்தேன்
விஜயகுமார்
***
அன்புள்ள ஜெ
மூன்றாம்நாள் உரையை இப்போதுதான் கேட்டு முடித்தேன். ஒரே இரவில் ஐந்தரைமணிநேரம் தொடர்ச்சியாக உரைகளைக் கேட்டேன். மீண்டும் காலையில் இருந்து கேட்டு இப்போது முடித்தேன். உரைகள் தொழில்முறைப் பேச்சாளருடைய உரையாக இல்லை. ஆகவே அவை மொனோடொனஸ் ஆகத்தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் எவரோ நம்மிடம் பேசிக்கொண்டே இருப்பதுபோலத்தான் தோன்றியது. அதுதான் இந்த உரைகளின் கவர்ச்சி. நாம் அணுக்கமாக உணரும் ஒருவருக்கு நாம் அருகே இருந்து பேசிக்கேட்பது போலிருந்தது.
இலக்கியத்தை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்த உரை. சுந்தர ராமசாமி திருவள்ளுவர் என்னும் நண்பர் என ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சுமாரான கட்டுரைதான். ஆனால் அதன் மையக்கருத்து எனக்கு அப்போது பிடித்திருந்தது. குறளை வாழ்க்கையின் பகுதியாகவே பார்க்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். உங்கள் உரை குறள் உங்கள் வாழ்க்கையில் என்ன பொருள் அளிக்கிறது என்பதைச் சார்ந்தே இருந்தது.
மூன்றாம்நாள் உரையில் சான்றோரைப்பற்றிச் சொன்னீர்கள். சுந்தர ராமசாமியின் கதை சான்றோன் சாமானியரை நோக்கி எப்படிச் செல்கிறான் என்பதை காட்டியது.ஜெயகாந்தன் கதை சாமானியன் சான்றோனை எப்படிப்புரிதுகொள்கிறான் என்பதைக் காட்டியது
ஆர்.ரமேஷ்
***
ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண
குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist
https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M