மாலிரும்மொழிச்சோலை

c03113mb

 

இனிய ஜெயம்,

நாடி ஜோதிடக்காரன் சுவடிக்கட்டில் கயிற்றைப் போட்டுப் பிரித்து, வரும் பகுதியில் என்ன வருகிறதோ அதை வாசிப்பதைப் போல, சங்க இலக்கிய நூல்களுக்குள் உழன்றுகொண்டு இருக்கிறேன்.

கணியன் பூங்குன்றனாரின் குரல் ”மானுடம் வென்றதம்மா” போன்றதொரு எழுச்சிக் குரல். அதன் மறு எல்லையை இன்று பரிபாடல் மூன்றாம் பாடலில் கண்டேன்.

தீயினுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ,

கல்லினுள் மணியும் நீ,சொல்லினுள் வாய்மை நீ,

அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ,

வேதத்து மறை நீ, பூதத்து முதலும் நீ,

வெஞ்சுடர் ஒளியும் நீ, திங்களுள் அளியும் நீ,

அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ…

திருமால் தலைப்பின் கீழ் வரும் பாடல். காணும் அனைத்திலும் சாரமான ஒன்றினை [வேதம் போன்ற கெனான் உட்பட] கண்டு, அதை முற்ற முழுதான ஒன்றுடன் இணைக்கும் தத்துவ நோக்கு, கவித்துவமாகவும் துல்லியமாகவும் உருவாகி வந்த கவிதை.

பிரபந்தப் பாடல் ஒன்றின் வரிகளை வாசிப்பது போலவே இருக்கிறது. பக்தி இலக்கியங்கள் வடிவத்தாலும், [ஒரு உணர்ச்சியை நேரடியாக தொட்டு அதை உச்சத்துக்கு கொண்டு செல்லும்] வெளிப்பாட்டாலும், அவைகள் சங்க இலக்கியத்தில் வேர் பிடிக்காத தனி ஜானர் என்றே புரிந்து வைத்திருந்தேன். புரட்டிப் போட்டு விட்டது. அறத்தினுள் அன்பு நீ.

இனிய ஜெயம், சங்க இலக்கியத் தொகுதிகள், என்பதை அதன் அழகியலை தத்துவ நோக்கை கொண்டு பார்த்தால். பரிபாடல் வகைமை ” தனித்து” இருக்கிறதே ஏன்?

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு

இந்தியாவை ஆக்கிய கருத்தியல்பெருக்கு என்றால் அது பக்தி இயக்கம்தான். கிபி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்கள் உருவாக்கியது வைணவ பக்தி அலை. நாயன்மார்களால் சைவ பக்தியலை உருவாக்கப்பட்டபோது அது ஒரு சமூக இயக்கமாக ஆகியது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அது பரவிச்சென்றது.

பக்தி எப்போதும் உள்ளது. அது ஓரு சமூக இயக்கமாக ஆனதே பக்தி இயக்கம் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. முதன்மையாக பக்தி இயக்கம் இலக்கியம் சார்ந்தது. இசை, நிகழ்த்துகலைகளை இணைத்துக்கொண்டது. சாராம்சத்தில் வேள்விகள், ஆசாரங்கள், சடங்குகள் ஆகியவற்றுக்கு மாற்றாக தூய பக்தியை நிறுத்தும் தத்துவநோக்கு கொண்டது. கொள்கையடிப்படையில் ஞானமார்க்கத்தைவிட பக்தியை மேலாக எண்ணுவது. பக்தி என்றால் இறைக்கு முழுமையான தன்படைப்பு செய்வது என்பதே அதன்பொருள்.

சமூகவியல் அடிப்படையில் பக்தி இயக்கம் குடியானவர்கள் கைவினைஞர்கள் போன்ற அடித்தளத்தினரின் எழுச்சியை உருவாக்கியது. வேள்விகளைச் சார்ந்த வைதிகமதங்கள் பிராமணர் மற்றும் ஷத்ரியர்களின் மேலாதிக்கம் கொண்டவை என்றும் சமண, பௌத்த மதங்கள் வைசியரின் மேலாதிக்கம் கொண்டவை என்றும் சொல்லலாம். ஏழாம் நூற்றாண்டு வாக்கில் சமண, பௌத்த மதங்கள் இந்தியாவை முழுமையாகவே ஆண்டிருந்தன.

சமண, பௌத்த மதங்களின் கொள்கைரீதியான பாதிப்பினாலும், அவற்றுக்கு எதிராகவும் உருவானதே பக்தி இயக்கம் அதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மதச்சித்திரத்தை இவ்வாறாக உருவகிக்கலாம். உயர்குடிகள் வேதவேள்விகள், ஆலயவழிபாடு மற்றும் தத்துவக்கல்வியை அடிப்படையாகக் கொண்ட வைதிகமதங்களில் ஈடுபட்டிருந்தனர். அவை இந்திரன், விஷ்ணு, சிவன் போன்ற பெருந்தெய்வங்களை மையமாகக் கொண்டவை.

பெரும்பான்மையினரான அடித்தள மக்கள் நாட்டார் தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வழிபட்டனர். அவர்கள் கொள்கையளவில் அரசர் மற்றும் உயர்குடிகளின் பெருந்தெய்வ மதங்களை ஏற்றுக்கொண்டு அவற்றில் அமைந்திருந்தாலும் நடைமுறையில் தங்கள் சிறுதெய்வங்களையே வழிபட்டனர். இன்றுகூட இந்த இரட்டை மதநம்பிக்கையே மிகஅடித்தளங்களில் நிலவுகிறது.

சமணமும் பௌத்தமும் வந்தபோது அவையும் இதே இரட்டை நிலையைத்தான் பேணின. மக்கள் நாட்டார் தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வழிபட்டு கொள்கையடிப்படையில் சமணரோ பௌத்தரோ இரண்டுமோ ஆக திகழ்ந்தனர். சைவ வைணவப் பெருந்தெய்வங்களின் வழிபாடும் தொடர்ந்தது. இந்திரவிழா போன்றவை வைணவ மதத்தில் இருந்து அப்படியே சமணத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆனால் வைதிக மதங்களான சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவற்றை விட சமண, பௌத்த மதங்கள் அடித்தள மக்களுக்கு அணுக்கமானவையாக இருந்தன. அவை அவர்களுக்கு உணவு, கல்வி, அடைக்கலம், மருத்துவம், அறவுரை என ஐந்துமுறைகளில் சேவையாற்றின. அவை வணிகவலையில் ஊர்களை இணைத்தன. அதன்மூலம் ஊர்கள் வளர வழிவகுத்தன. ஆகவே அவை மக்கள் மதங்களாக இருந்தன.

இச்சூழலிலேயே பக்தி இயக்கம் எழுந்தது. அதுவே சமண, பௌத்த மதங்கள் இந்திய மண்ணில் பின்னடைவு கொள்ளக் காரணமாக அமைந்தது. முதன்மையாக அதன் போக்கு சைவ, வைணவப் பெருமதங்களின் மையத்தை நெகிழ்வாக ஆக்குவதாக இருந்தது. வேள்விகள், சடங்குகள், ஆகியவற்றுக்கு பதிலாக எளிய பக்தியை முன்வைத்தது. அத்தனை நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டுமுறைகளையும் உள்ளிழுத்தது. அவர்களின் அத்தனை கலைவடிவங்களையும் தன்னுள் கொண்டது. அவர்கள் பங்கெடுக்கும் மாபெரும் திருவிழாக்களை உருவாக்கியது. இவையனைத்துக்கும் மையமாக அத்தனைமக்களுக்கும் பங்களிப்புள்ள ஆலயவழிபாட்டு முறைமையை அமைத்தது.

பெருந்தெய்வங்களுக்கு பல சிறுதெய்வங்கள் உடன்அமைந்த கூட்டாலயம் முன்னரே இருந்ததை சிலம்பு காட்டுகிறது. இது கோட்டம் எனப்பட்டது. கோட்டம் என்றால் வளைவு [compound] என பொருள். மணிவண்ணன் கோட்டத்தில் கோவலன் வழிபட்டான் என காண்கிறோம். அவை புகார் போன்ற பெருநிலங்களில் இருந்தன. அந்த அமைப்பு சிற்றூர்களிலும் உருவானது. ஆறுமதங்கள் மூன்று பெருமதங்களாயின. அவற்றுள் பலநூறு வைதிக தெய்வங்களும் நாட்டார்ச் சிறுதெய்வங்களும் உள்ளடக்கப்பட்டன.

இந்தப் பக்தி இயக்கத்தின் உண்மையான ஊற்றுமுகம்தான் என்ன? பின்னுக்குப்பின்னாக தேடிச்சென்றால் நாம் சென்றடைவது இரு புள்ளிகளை. ஒன்று சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை. இன்னொன்று பரிபாடல். இவற்றில்தான் ‘தத்துவச்சுமை’ இல்லாததும் ‘சடங்குகளின் இறுக்கம்’ இல்லாததுமான தூயபக்தி கலைவடிவாக வெளிப்படுவதைக் காண்கிறோம்.

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்

இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி!

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்

ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி!

இதிலுள்ளது ஓர் அரிய இணைப்பு. ஆய்ச்சியர்குரவை என்பது ஒரு நாட்டார்பாடல் வடிவம். அதில் வைணவப் பெருமதத்தின் தத்துவமும் அழகியலும் இணைவுகொள்கின்றன. இதுதான் பரிபாடலிலும் நிகழ்கிறது. அந்த இணைவுதான் பக்தி இயக்கமாக சிலநூற்றாண்டுகளுக்குப்பின் எழுந்தது.

பரிபாடல் காலத்தால் மிகப்பிற்பட்டது. அது சங்கப்பாடலாக கொள்ளப்பட்டாலும் சங்கம் மருவியகாலத்தது என அதன் மொழியே காட்டுகிறது. சிலம்பும் அதுவும் ஒரே காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அப்போது சமணமும் பௌத்தமும் உச்சத்தில் இருந்தன. ஆனால் அவற்றுக்கு அடியில் தமிழகத்தின் நாட்டார்ப்பண்பாடு சைவ வைணவப் பெருமதங்களை சென்று தொட்டு இணையத் தொடங்கிவிட்டிருந்தது.

அதன்பின் முந்நூறாண்டுக்காலம் களப்பிரர் ஆட்சி நிலவியது. அது சமணம் ஓங்கிய காலம். ஆனால் அப்போது வைதிக மதங்கள் ஒடுக்கப்படவில்லை. அவை சமண பௌத்த மதங்களுடன் உரையாடி விரிவடைந்தன. பலநூறு ஞானசபைகளில் அந்த அறுபடா விவாதம் நிகழ்ந்தது என்பதையே மணிமேகலையின் அறமுரைத்த காதை காட்டுகிறது. மறுபக்கம் பரிபாடல் காட்டும் இணைவு வலுத்தபடியே வந்தது. ஏழாம் நூற்றாண்டில் களப்பிரர் வெல்லப்பட்டு அரச ஆதரவு பெற்றபோது பேரியக்கமாக ஆகியது. பக்தி இயக்கம் எனப் பெயர்கொண்டது.

ஜெ

முந்தைய கட்டுரைமலைக்கிராமம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாடு – பிரசன்னா