வணக்கம் ஜெ,
நல்லா இருக்கீங்களா? குறள் சார்ந்து அழுத்தமாய் ஒலித்த, இன்னும் பல நாட்களுக்கு மனதில் எதிரொலிக்கும் ஆழமான குரல் தங்களின் மூன்று நாள் உரை. ‘கொடுப்பதழுக்கறுப்பான் சுற்றம்’ என்ற வரி என் வாழ்வில் ஏனோ அவ்வப்போது மனதில் வந்து செல்லும். ஏனென்று தெரியாத, ஆனால் எதுவோ குறித்து உணர்த்தும் விதமாக அமைந்த கணங்கள் அவை.
தங்கள் வாழ்வின் ஊடாக குறள் தன்னை வெளிப்படுத்தி நின்ற கணங்களைக் கேட்ட போது சிலிர்த்துப் போனேன். அரங்கின் கைத்தட்டல் அங்கிருந்த ஒவ்வொருவரின் சிலிர்ப்பையும் உணர்த்தியது.
மூலநூலாக கருவறையில் வைத்துவிட்டதில் விளைந்த விலக்கம் குறித்து தாங்கள் கூறியது ஒவ்வொரு இளைஞனுக்கும் ‘ஆமால்ல,’ என்ற உணர்வையே ஏற்படுத்தும் என நினைக்கிறேன். முதல் நாள் வந்து அமர்ந்ததுமே பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் அங்கு இசைத்துக் கொண்டிருந்த குரலிசை குறித்து, ‘தம்பி, இது எத்தனாவது அதிகாரம்?’ எனக் கேட்டார். நெளிந்து சற்று குறுகி ‘தெரியலீங்க’ என்றேன். அவர் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்துவிட்டு, எழுந்து நான்கு நாற்காலிகள் தள்ளிப்போய் அமர்ந்தார். தொடர்ந்து அவரைக் கவனிக்கும்போது, அடிக்கடி பக்கத்தில் இருப்பவரிடம் அவர் தன் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார். வாசிப்பதையும் பயில்வதையும் தாங்கள் வேறுபடுத்தி விளக்கியபோது, அந்த பெரியவர் வாசித்திருப்பாரா? இல்லை பயின்றிருப்பாரா? என்ற கேள்வி.
முதல் நாள் தாங்கள் உருவாக்கிய நந்தி கொஞ்சம் கூட தலைசாய்க்க மறுத்தாலும் நின்று வணங்கிச் செல்ல வைத்தது நிதர்சனம். இரண்டாம் நாள் உரை ஒரு பிரமை நிலையில் அரங்கில் இருந்தவர்களைக் கேட்க வைத்தது. மூன்றாம் நாளின் அந்த ஒற்றை விசில் சத்தம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்துதான் வந்ததாக நான் நினைக்கிறேன்.
எப்படி குறளை அதன் ‘திரு’வைத் தாண்டி பயில வேண்டும், அது எப்படி ஒரு தியானமாக மாறும், மாற முடியும், நம் வாழ்வனுவபங்களில் குறள் எப்படி நின்று நம்மை நடத்திச் செல்லும், குறளைப் பயில்தலின் படிநிலைகள் என்னென்ன, சமணம் சார்ந்த குறளின் வரலாறு என்ன, அது சார்ந்த மழுங்கடிப்புகள் எப்படி நிகழ்ந்தன, இன்றைய தலைமுறை இது எல்லாம் அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என தங்கள் மூன்று நாள் ஆராய்ச்சி பகிர்வு தமிழின் மிகப் பெரிய ஒரு நன்முயற்சி ஜெ.
‘இந்த பூமியே விசும்பின் ஒரு துளி தானே’ என்று நீங்கள் முடித்தபோதும், ‘சிரவனபெலகோலாவில் இருக்கும் நூறு காலடிச் செதுக்கல்களில் ஒன்று அய்யனுடையது, அதை வணங்கி முடிக்கிறேன்’ என்ற போதும் என்னுள் ஒரு திறப்பை விதைத்தீர்கள் ஜெ. நன்றி.
இந்த உரைத்தொகுப்பு இணையத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு தமிழனும் கண்டுணர வேண்டியது. இதன் எழுத்து வடிவம் வர வேண்டும் என விரும்புகிறேன் ஜெ. மகிழ்ச்சி ஜெ. நன்றி…
சுசீல் குமார்
***
அன்புள்ள ஜெமோ
திருக்குறள் உரையைக் கேட்க சின்னச்சேலத்தில் இருந்து வந்திருந்தேன்.. ஒவ்வொருநாளும் கலந்துகொண்டுவிட்டு திரும்பிவந்தேன். பேருந்தில் ஒரு தூக்கம் போட்டுவிட்டு விழிக்கும்போது உங்கள் குரலைக் கேட்டுக்கொண்டே இருப்பதுபோல இருக்கும்.
நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். உங்கள் குரல் உடைந்தது, கம்மியது. நீங்கள் அடிக்கடி நினைவுகளில் அரைக்கணம் சென்று தடுமாறுகிறீர்கள். அதோடு சொற்களை விழுங்கிவிடுகிறீர்கள். ஆனால் அதெல்லாமே உங்கள் பேச்சுபோல அந்தரங்கமானதாகவே இருக்கிறது. ’ஸ்டேண்டேர்ட்’ ஆக இல்லாமலிருப்பதுதான் அதன் சிறப்பே. அந்த தடுமாற்றம் எல்லாம் உங்களை மிகவும் அருகாமையில் உணரவைக்கிறது. சிந்தனை கூர்மையாக வெளிப்படும்போது அருமையான சொற்றொடர்கள் வருகின்றன. மற்ற இடங்களில் சொல்லுக்காக உங்கள் மனம் தேடுவது தெரிகிறது. ஆனால் கிளீஷேக்களுக்குள் செல்லாமல் பேசுகிறீர்கள்.
அனைத்தையும் விடமுக்கியமாக என்னதான் அச்சுத்தமிழ் பேசினாலும் வரும் கேரளநெடி. அல்லது கன்யாகுமரி நெடி. ர உச்சரிப்பை சொல்லும்போதெல்லாம் அதுதான் வருகிறது. அது உங்களை இன்னும் நெருக்கமானவராக ஆக்குகிறது. செயற்கையான கம்பீரம் செயற்கையான உச்சரிப்பு கேட்டுக்கேட்டு சலித்த மனதுக்கு அழகான அனுபவமாக இருந்தது. அதிலும் இரண்டு, மூன்றாம்நாள் உரைகளில் மேடையிலேயே உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டீர்கள். பேசமுடியாமல் திணறினீர்கள். வாழ்க்கை முழுக்க மறக்கமுடியாத முகம் அது.
மூன்றுநாள் உரையுமே அருமையானவை. முதல்நாள் உரையை பேராசிரியர் போல எண்ணி எண்ணி பேசினீர்கள். ஏராளமான தகவல்களுடன் ஒரு பெரிய அடிப்படையை அளித்தீர்கள். பின்னர் வந்த உரைகளுக்கெல்லாம் அதுதான் அடிப்படை. குறிப்பாக இரண்டாம்நாள் உரையும் மூன்றாம்நாள் உரையும் முடிந்தபின்னர்தான் முதல்நாள் உரையின் முதலுவமை புரிந்தது. தவம்செய்த ஆசாரவாதிக்குப் பிடிகிடைக்காத தெய்வம் எப்படி வேடனுக்குக் கிடைக்கக்கூடும் என்பதைத்தான் இருபதுக்கும் மேற்பட்ட குறள்கவிதைகளை உவமைகளுடன் விரிவாகச் சுட்டிக்காட்டினீர்கள்.
மூன்று உரைகளுக்கும் பின்னாடி முதல்நாள் உரை தெளிவடைய ஆரம்பித்தது. அதிலிருந்த உவமைகள் மேலும் தெளிவாகப்புரிந்தன. பகடிகள்கூட பிடிகிடைக்க ஆரம்பித்தன [குறிப்பாக திருவள்ளுவருக்கு தமிழாசிரியர்களைப் பலிகொடுப்பது பற்றிய கேலி] அப்படிப்பார்த்தபோதுதான் எவ்வளவு திட்டமிட்டு இந்த உரைகள் ஆற்றப்பட்டிருக்கின்றன, எவ்வளவு கூர்மையான வடிவம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். நன்றி.
செல்வக்குமார்
***
மேடையில் நான் படத்தைப் பார்த்தால் வேறு விதமாக அல்லவா உள்ளது?
ஆக்ரோஷமாக, கவனியாத மாணவர்கள் மேல் சாக்பீஸ் எரியும் ஆசிரியர் போல் தெரிகிறீர்கள். சிங்கப்பூரில் கற்றுக் கொண்டீர்களோ?
சிவா சக்திவேல்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சிரவணபெலகுலாவின் திருவடிகளில் அய்யனின் திருவடிகளும் இருக்கக் கூடும். அவரது அருள் எங்கும் என்றும் இருக்கும். வானதி என்ற குழந்தையின்பால் தங்கள் அன்பு – “உயிர் ஈரும்” என்பதை விட “உயிர் ஈனும்” என்பதல்லவா உங்களிடம் இருந்து திரும்பத்திரும்ப வந்தது. நிச்சயம் ஈனும். ஆரோக்கியமான, வலிமையான, அழகான உடல் ஈனும் அத்துடன் சிறப்பும் செல்வமும் ஈனும்.
வாளை மட்டுமல்ல அல்ல
வாழ்க்கையை – அத்துடன்
நேற்று வள்ளுவர் கோலையும் கூட
கண்டிருக்கக் கூடும் வானதி.
அது
திருவள்ளுவப்பெருமான் அருள்
நேரம் போவது தெரியாமல் கட்டிப்போட்டு விட்டு சிறந்த பேச்சாளர் இல்லையா? – உங்கள் கூற்றை மறுக்க மாட்டேன் பேச்சு என்பது வெறும் வாய்ச்செயல் என்றால். அது இதயத்தின் செயல் என்றால் நீங்கள் அரிதான சிறந்த பேச்சாளர்களுள் ஒருவர்.
அன்புடன்,
விக்ரம்,
கோவை
***
அன்புள்ள ஜெ
முதல்நாள் உரை சற்றுப்பெரியதாக இருந்தது. நேரத்தைச் சொல்லவில்லை. அதன் தகவல்களின் அளவைச் சொன்னேன். அப்படி கடந்துசென்றுகொண்டே இருந்தமையால் தொகுக்க முடியவில்லை. ஆனால் நான் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். பலரும் அப்படி உணர்ந்திருக்கக்கூடும். மிகச்செறிவான உரை. வழக்கமான ஆழ்ந்த குரலில் அமையவும் இல்லை. ஆனாலும் அத்தனைபேரும் அசையாமல் அமர்ந்து உரையைக்கேட்டனர். திருக்குறள் போன்ற ஒரு தீவிரமான நூலுக்கு இப்படி ஒரு தீவிரமான உரையைக் கேட்க ஆயிரம்பேர் வந்திருந்தது ஆச்சரியமான விஷயம்தான். அவர்கள் சிலைபோல அமர்ந்து கேட்டதும் மிகமிக ஆச்சரியமானது.
முதல்நாள் உரையில் அத்தனை தகவல்களையும் நினைவில் நிறுத்திக்கொள்வதற்காகத்தான் ஏழு உவமைகள், அனுபவங்கள் வழியாக அந்த கட்டமைப்பை உருவாக்கினீர்கள் என நினைக்கிறேன். குறள் எப்படி குழந்தைமனம் கொண்ட, நேரடியான கவிதைவாசகனுக்கு பண்டிதர்களைவிட அணுக்கமானது என்பது முதல் பத்தி. அதற்கு நரசிம்மத்தைத் தவம்செய்தவரின் கதை. குறள் எப்படி பக்தியுடன் ஒற்றைப்படையாக அணுகும்படி ஆக்கப்பட்டுள்ளது என்பது இரண்டாம் கருத்து .அதற்கு ஜிபிஎஸ் வைத்து சுற்றிச்சுற்றி அலைந்தது உதாரணமான கதை. இப்படி ஆறுபத்திகள்.
முதல்நாள் உரையை பிற இரண்டுநாள் உரைகளைக்கொண்டு புரிந்துகொள்ளும்படி அமைந்திருந்தது. வாழ்த்துக்கள் ஜெ
சரவணன்
***
ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண
குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist
https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M