ஊடகக் கறையான்கள்

index

தமிழில் ஆனந்தவிகடன் வழியாகவே கேளிக்கை இதழ் x இலக்கிய இதழ் என்னும் வேறுபாடு உருவானது. அதைப் பழித்தும் இழித்தும் உரைப்பது சென்றகாலத்தில் சிற்றிதழ்களில் ஒரு மரபாக இருந்தது. ஆனால் நான் ஒரு சமூகப்பரிணாம நோக்கில் அவை இன்றியமையாத நிகழ்வுகள் என்றே அணுகிவந்தேன், அதையே எழுதியிருக்கிறேன்.

சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி மிகச்சிறுபான்மைக்குரியதாக இருந்தது. ஆகவே இலக்கியமும், கருத்துச்செயல்பாடும் அவ்வண்ணமே நீடித்தன. அக்காலகட்டத்தில் உருவான செய்தி இதழ்களும் இலக்கிய இதழ்களும் அறிவுப்பரிமாற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டவை, ஆகவே சிறிய வட்டத்திற்குள் புழங்கியவை. அவை வாசக அளவால் சிற்றிதழ்கள். அன்றைய அச்சுமுறையும், வினியோக அமைப்புகள் விரிவாக இல்லாததும் அவை சிற்றிதழ்கள்போல செயல்பட்டமைக்கு காரணங்கள்.

ஆனால் 1920 களில் இந்தியாவில் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட தேசியக் கல்வி இயக்கம் கல்வியை மக்களிடம் பரவலாக்க ஆரம்பித்தது. தேசியக்கல்வி இயக்கத்தைப்பற்றி பாரதி விரிவாக எழுதியிருக்கிறார். அதற்கான பாடங்களைக்கூட பரிந்துரைத்திருக்கிறார். அதற்குமுன் அன்றைய ஆட்சியாளர்களாலும் மதநிறுவனங்களாலும் கொண்டுவரப்பட்ட கல்விப்பரவல் சிறிய அளவில் நகர்சார்ந்ததாக இருந்தது. தேசியக்கல்வி இயக்கம் ஒருவகை குடிசைக்கல்வி. மிகக்குறைந்த பணவசதியுடன் கிராமங்களில் உருவாக்கப்பட்ட ஓராசிரியர்பள்ளிகள் அவை.

ஆரம்பக் கல்வியை பரவலாக்கும்பொருட்டு இந்தியாவில் நிகழ்ந்த முதல்பேரியக்கம் இதுவே. ராமகிருஷ்ண மடம், ஆரியசமாஜம், நாராயணகுருவின் இயக்கம் போன்ற பலநூறு இயக்கங்கள் அதில் பங்கெடுத்தன. நம் ஊர்களில் உள்ள பள்ளிகள் எப்போது எவரால் தொடங்கப்பட்டன என்று பார்த்தாலே அவ்வியக்கத்தின் வீச்சை கண்ணால் காணமுடியும்.

indexk

 

தேசியக்கல்வி இயக்கம் வழியாக உருவான கல்விப்பரவல் வாசிப்பார்வத்தை உருவாக்கியது. கூடவே அச்சுத்தொழில் வளர்ச்சியும் இணைந்துகொண்டபோது எளிய வாசிப்புக்குரிய இதழ்களின் தேவை உருவானது. வாசிப்பு ஒருவகை உயர்தரக் கேளிக்கையாக உருவெடுத்தது. இந்தியாவெங்கும் முப்பதுநாற்பதுகளில் வணிகப்பிரசுரமும் கேளிக்கை சார்ந்த இதழியலும் உருவாகி வந்தன. சுதந்திரத்திற்குப்பின் கல்வி மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டபோது அதன்விளைவாக வாசிப்புக்கு மேலும் மேலும் மக்கள் வந்தனர்.

அதன் அடுத்தபடியாகவே வாசிப்பு எனும் கேளிக்கை பேருருவம் கொண்டது. அது பெருவணிகமாக ஆகியபோது தமிழ் போன்ற மொழிகளில் ஓர் உடன்விளைவாக சீரிய வாசிப்பு, கருத்தியல் செயல்பாடு ஆகியவை சிறுபான்மையினரிடம் ஒடுங்கி நிற்கநேரிட்டது. ஒருகட்டத்தில் இலக்கியமும் கருத்தியல் செயல்பாடும் அமைப்புபலமே இல்லாமல் தனிநபர் முயற்சிகளால் சிறிய அலகுகளுக்குள் மட்டுமே நிகழவேண்டிய நிலை உருவானது, புதுமைப்பித்தன் உண்மையில் அன்றைய மைய இதழ்களில்தான் எழுதினார். அவர் எழுதிய கலைமகள் மாத இதழ் அன்று இலக்கிய இதழாக இருந்தது. அறுபதுகளில் அது தன்னை ‘குடும்ப இதழ்’ என அறிவித்துக்கொண்டு வணிகப்பெருக்குக்குள் சென்றது.

புதுமைப்பித்தனுக்கு அடுத்த தலைமுறையில் தீவிரஇலக்கியம் மெல்ல அமைப்புகளின் ஆதரவை இழந்தது. இலக்கிய இயக்கமே நின்றுவிடக்கூடும் என்றநிலை, வெகுமக்களால் ரசிக்கப்படுவது மட்டுமே வாழக்கூடும் என்னும் அச்சம் உருவாகியது. க. நா. சு, சி. சு. செல்லப்பா இருவரும் சிற்றிதழ் இயக்கத்தை உருவாக்கியமைக்கான காரணம் இதுவே.

சரியான பொருளில் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ மாத இதழ்தான் ‘அறிவித்துக் கொண்ட’ சிற்றிதழ். அதாவது பெரிய இதழாக உத்தேசித்து விற்காமல் போன இதழ் அல்ல அது. குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் வாசிக்கப்பட்டால் போதும், அமைப்பின் பின்புலம் தேவையில்லை, ஆகவே சமரசங்கள் கூடாது என கொள்கைமுடிவு எடுத்துக்கொண்ட சிற்றிதழ் அது. தமிழின் சிற்றிதழ்களின் தொடக்ககாலம் என அறுபதுகளைச் சொல்லலாம். பொற்காலம் என எழுபது எண்பதுகளைச் சொல்லலாம்.

i

இக்காலகட்டத்தில் தீவிர இலக்கியம் முழுக்க முழுக்க சிற்றிதழ்களை மட்டுமே நம்பி இயங்கியது. மனைவி தாலியை அடகுவைத்து சிற்றிதழ்கள் நடத்தியவர்கள் உண்டு. கையில் சிற்றிதழ்களுடன் அலைந்து திரிந்து விற்றவர்கள் உண்டு. தமிழ்ச்சிற்றிதழ்களின் வரலாறு பி.எஸ்.ராமையா [மணிக்கொடிக் காலம்] வல்லிக்கண்ணன் [தமிழ்ச் சிற்றிதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்] வ.ஜயபாஸ்கரன் [சரஸ்வதிக்காலம்] போன்ற நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

க.நா.சு, [இலக்கியவட்டம், சூறாவளி], சி.சு.செல்லப்பா [எழுத்து], எம்.வி.வெங்கட்ராம் [தேனீ], ரகுநாதன் [சாந்தி], வ.ஜெயபாஸ்கரன் [சரஸ்வதி] ஞானக்கூத்தன் சா.கந்தசாமி [கசடதபற], பரந்தாமன் [அஃ], சிவராமன் [நடை], ஞாநி [தீம்தரிகிட], ரவிசங்கர் [பிரக்ஞை ], ஞானி [நிகழ்], எஸ்.என்.நாகராஜன் [புதியதலைமுறை], சிற்பி, நா.காமராஜன் [வானம்பாடி], அ.மார்க்ஸ், ரவிக்குமார் [நிறப்பிரிகை], பிரேம் [சிதைவு ], கஸ்தூரிரங்கன், அசோகமித்திரன் [கணையாழி], நா.பார்த்தசாராதி [தீபம்], பாக்கியமுத்து, சரோஜினி பாக்கியமுத்து [நண்பர்வட்டம்], ஆ.அமிர்தராஜ் [அரும்பு], ஆத்மாநாம் [ழ], தமிழவன் [இங்கே இன்று], பிரம்மராஜன் [மீட்சி], பொன்விஜயன் [புதியநம்பிக்கை], வனமாலிகை [சதங்கை], ராஜகோபாலன், ராஜமார்த்தாண்டன் [கொல்லிப்பாவை], உமாபதி [தெறிகள்], சுந்தரசுகன் [சுகன்], வெங்கட்சாமிநாதன், அ.கா.பெருமாள் [யாத்ரா], கால. சுப்ரமணியன் [லயம்], சுப்ரபாரதிமணியன் [கனவு], கி.ராஜநாராயணன் [கதைசொல்லி], மகாதேவன் [முன்றில்], அழகியசிங்கர் [விருட்சம்] லட்சுமி மணிவண்ணன் [சிலேட்] ரோஸ் ஆண்டோ [படிகம்] என இந்த மரபில் நினைவுகூரப்படவேண்டிய சிற்றிதழ்களும் அவற்றை நடத்தியவர்களும் பலர் உண்டு

அன்று எழுதவந்த அனைவருக்கும் சிற்றிதழ் நடத்தும் கனவு இருந்தது. நான் ’சொல்புதிது’ என்னும் சிற்றிதழை நண்பர்கள் எம். கோபாலகிருஷ்ணன், சதக்கத்துல்லா ஹசநீ ஆகியோருடன் இணைந்து நடத்தியிருக்கிறேன்; அசோகமித்திரன், ஜெயகாந்தன் முதலிய மூத்த படைப்பாளிகளையும் பாவண்ணன், யுவன் சந்திரசேகர் போன்ற இளம்படைப்பாளிகளையும் அட்டையில் வெளியிட்டு முதன்மைப்படுத்தியது சொல்புதிது. எஸ். ராமகிருஷ்ணன் ’அக்‌ஷரம்’ என்னும் சிற்றிதழை நடத்தியிருக்கிறார். கோணங்கி கல்குதிரை என்னும் சிற்றிதழையும் யூமாவாசுகி குதிரைவீரன் பயணம் என்னும் சிற்றிதழையும் நடத்திவருகிறார்கள்.

தொண்ணூறுகளில் அச்சிதழ்களில் இடைநிலை இதழ்கள் தோன்றலாயின. எண்பதுகளின் இறுதியில் ’தமிழினி’ வசந்தகுமார் [புதுயுகம் பிறக்கிறது] எஸ்.வி.ராஜதுரை [இனி] போன்ற சில முயற்சிகள் நிகழ்ந்தாலும் நீடிக்கவில்லை. முதல் வெற்றிகரமான இடைநிலை இதழ் கோமல்சுவாமிநாதனின் சுபமங்களாதான். அதன் வெற்றி அதற்குமுன் சுந்தர ராமசாமியால் சிற்றிதழாக ஆரம்பிக்கப்பட்டு நின்றுவிட்டிருந்த காலச்சுவடை அவரது மகன் கண்ணன் சுந்தரம் இடைநிலை இதழாக மாற்றி கொண்டுவர வழிசெய்தது. மனுஷ்யபுத்திரன் முயற்சியால் உயிர்மை உருவாகியது. திலகவதி பொறுப்பில் அமிர்தா சுதீர் செந்தில் முயற்சியில் உயிரெழுத்து ஆகியவை இடைநிலை இதழ்களாக இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன

சுபமங்களாவுக்கு ஊக்கமளித்த முன்னோடி நிகழ்வு ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராகியதும் தமிழ்மணி என்னும் இலவச இணைப்பை நவீன இலக்கியத்திற்காக ஒதுக்கியதும். தமிழ் பொதுவாசகர்களுக்கு புதுமைப்பித்தன் பெயரே அப்படித்தான் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாலன், வாசந்தி ஆகியோர் இந்தியா டுடே ஆசிரியர்களாக வந்தபோது நவீன இலக்கியத்தை அதில் அறிமுகம் செய்தனர். அதுவும் ஒரு ஊக்கத்தை அளித்தது

இரண்டாயிரத்தில் இரு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. இணையம் பிரபலமாகியது. இணையம் வழியாக உலகமெங்கும் தமிழ்நூல்கள் அறிமுகமாகத் தொடங்கின. இணையம் இலக்கிய விவாதக்களமாக ஆகியபோது அனேகமாக எல்லா இலக்கியவாதிகளும் அறிமுகமாயினர். கூடவே சென்னை புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நிகழத்தொடங்கியது. இலக்கியவாசிப்பு இன்றிருக்கும் அளவுக்கு தமிழில் என்றுமே இருந்ததில்லை. இன்றைய அளவுக்கு நூல்கள் விற்கப்பட்டதே இல்லை. இது இவ்வாறு உருவாகி வந்த வளர்ச்சிதான்.

இந்த வளர்ச்சியில் ஒவ்வொரு இலக்கியவாதியும் தங்கள் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். பேரிதழ்களுடன் தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளர்கள் இலக்கியத்தை அங்கே கொண்டு சென்று சேர்க்க தங்களால் முடிந்தவரை முயன்றிருக்கிறார்கள். நா.பார்த்தசாரதி, சுஜாதா, பாவைச் சந்திரன் போன்றவர்களின் முயற்சிகள் வழியாகவே சிற்றிதழ் சார்ந்த இலக்கியம் பொதுச்சூழலில் அறிமுகமாகியது.

சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற முதன்மைப்படைப்பாளிகள் பேரிதழ்களில் எழுத வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிற்றிதழ்சார்ந்த இலக்கியத்தை கொண்டுசென்று அறிமுகம் செய்ய முயன்றிருக்கிறார்கள். இளம் எழுத்தாளனாக நான் அறிமுகமானபோது இவர்கள் அனைவராலும் தொடர்ந்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டேன்.

எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியபோது கதாவிலாசம் என்னும் தொடர் வழியாக தமிழின் அத்தனை முக்கியமான எழுத்தாளர்களையும் பொதுவாசகர்களுக்குக் கொண்டு சென்றார். நான் பெரிய இதழ்களில் அதிகம் எழுதியதில்லை. எழுதிய தருணங்களில் எல்லாம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறேன்.

என் இணையதளத்தில் தமிழின் நவீன இலக்கியத்தின் அத்தனை எழுத்தாளர்களைப் பற்றியும், இலக்கிய இயக்கங்கள் பற்றியும் மிகவிரிவான குறிப்புகள் உள்ளன. உண்மையில் இத்தனைபெரிய ஒரு தொகுப்பு இணையத்தில் வேறில்லை இன்று. இலக்கிய வாசகர்களுடன் தொடர்ச்சியாக உரையாடுகிறேன். இலக்கிய வாசிப்பின் சிக்கல்களை விளக்குகிறேன். புதிய இலக்கிய வாசகர்களுக்காக விரிவான தகவல்களுடன் நவீன இலக்கிய அறிமுகம் என்னும் நூலை எழுதியிருக்கிறேன். இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்யும் ‘கண்ணீரைப்பின் தொடர்தல்’ சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ‘புதியகாலம்’ போன்ற நூல்களை எழுதியிருக்கிறேன்

சாரு நிவேதிதா ரசனைமுறையில் கடுமையான விமர்சனங்கள் கொண்டவர் என்றாலும் அவர் பிரபல ஊடகங்களில் எழுதிய பழுப்புநிறப் பக்கங்கள் போன்ற எழுத்துக்களில் நவீன இலக்கிய இயக்கத்தை மிக விரிவாக அறிமுகம் செய்திருக்கிறார். இதுதான் சென்றகால இலக்கிய இயக்கம்மீது பற்றுள்ளவர்களின் வழிமுறையாக இருக்கிறது.

ஆனால் துரதிருஷ்டவசமாக இன்று கசப்பூட்டும் ஒரு போக்கு உருவாகியிருக்கிறது, அதை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். அது இளையோர் மீதான ஒரு கண்டனமாக ஆகக்கூடும் என்னும் தயக்கம் என்னிடம் இருந்தது. ஆனால் அது இன்று தொடர்ந்து வளர்ந்துவருகிறது.இப்போதாவது அதைப் பதிவுசெய்தாகவேண்டும் – இப்படி நடக்கிறது என்பதை இலக்கியவாசகர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக. வரலாற்றுப்பதிவுக்காக

சிற்றிதழ்சார்ந்த நவீன இலக்கியம் மிகுந்த அர்ப்பணிப்புகொண்ட உழைப்பின் விளைவாக மெல்ல இன்று பரவலாக அறிமுகமாகிறது. அதற்கு வாசகர்கள் உருவாகி வருகிறார்கள். பிரபல ஊடகங்கள் அதைக் கவனிக்கின்றன. அதற்குச் சில பக்கங்கள் ஒதுக்குகின்றன. அதில் பணியாற்றும் வாய்ப்பைச் சில இளைய எழுத்தாளர்கள் பெறுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் முதிராவாசகர்கள், ஆரம்பகட்ட எழுத்தாளர்கள்

இவர்களில் சிலர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் மிக வருத்தம் அளிப்பது. இலக்கிய வம்புகளையும் தங்கள் முதிர்ச்சியில்லா கருத்துக்களையும் மட்டுமே அதன் பக்கங்களில் கொண்டுசெல்ல இவர்கள் முயல்கின்றனர். வசைபாடி எவர் எழுதினாலும் அச்சேற்றுகின்றனர்.சென்ற காலங்களில் சிற்றிதழ்களைச் சிறுமைப்படுத்தி கேலிப்பொருளாக்கும் பலநிகழ்வுகளை இவர்கள் அங்கே பிரசுரம் செய்தனர்.

குமுதம் இதழ் தீராநதி என்னும் இலக்கிய இதழை ஆரம்பித்தபோது அதை வெற்றுவசைகளால் நிரப்பி கிட்டத்தட்ட இன்று அது அழிந்து இல்லாமலாகும் நிலைக்குக் கொண்டு சென்றது இவர்களின் ஆளுமைச் சிறுமை. ஒன்று, தனிப்பட்ட காழ்ப்புகள். இரண்டு இயல்பாகவே வம்புகளில் உள்ள ஆர்வம்.

ஆனால் மிக ரகசியமானவர்கள் இவர்கள். ஒரு கீழ்வம்பு பிரசுரமாகும்போது அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள். உதாரணம் சொல்கிறேன். ஒரு கவிதைநூலை சில கவிஞர்கள் சென்னை பறக்கும்ரயிலின் ஒரு பெட்டியில் வைத்து வெளியிட்டனர். பங்கேற்பாளர்கள் பதினைந்துபேர்தான். அன்று பறக்கும்ரயில் காலியாகவே ஓடும், எதற்கு கூடம் வாடகைக்கு எடுக்கவேண்டும் என அங்கேயே விழாவை நடத்தினர். குமுதம் இதழ் ‘கவிதைநூலை கிழித்துச் சாக்கடையில் வீசி வெளியீட்டுவிழா” என செய்தி வெளியிட்டது. இன்றுவரை அச்செய்தியை எழுதியது எவர் எனத் தெரியாது.அவர் சிற்றிதழ்ச்சூழலிலும் இயங்கும் ஓர் இதழாளர் என்பது மட்டும் தெளிவு

aravindan
அரவிந்தன், தமிழ் ஹிந்து

இன்று இதேபோல வரலாற்றினால் அளிக்கப்பட்ட நல்வாய்ப்பை இயல்பான கீழ்மையால் அழித்துக்கொண்டிருக்கும் இருவரைச் சுட்டிக்காட்டியாகவேண்டும். ஒருவர் தமிழ் ஹிந்து நாளிதழின் இலக்கியப் பகுதிகளின் ஆசிரியராகச் செயல்படும் அரவிந்தன். அடிப்படையில் எந்தக்கூர்மையும் இல்லாத மழுங்கலான ஆளுமை கொண்டவர். அந்நாளிதழில் இவர் எழுதும் வெறும் அரட்டைகளான எட்டுபக்க அரசியல் கட்டுரைகளை பதினைந்து வரிகளாகச் சுருக்கிவிடமுடியும். அதைவிட அவர் எழுதிய நாவல்களை அட்டை மட்டுமாகச் சுருக்கிவிடமுடியும். இத்தகைய மழுங்கல் மனிதர்களுக்கு வம்புகளில் வரும் ஆர்வம் மிக ஆச்சரியமூட்டுவது

தமிழ் ஹிந்து நாளிதழ் தமிழில் நிகழ்ந்துவரும் ஒரு அரிய நிகழ்வு. தமிழில் தரமான இலக்கியத்தை, கருத்துச்செயல்பாட்டை அறிமுகம் செய்யும் ஒரு பெருமுயற்சி என்பது எவ்வகையிலும் நவீன இலக்கியம்சார்ந்த ஒருவருக்கு மனஎழுச்சி ஊட்டுவது. ஆனால் இவர்கள் பசுமரத்திலும் படர்ந்தேறும் கறையான்கள். இத்தகைய அத்தனை முயற்சிகளிலும் முதலில் கறையான்கள் எப்படி குடியேறுகின்றன என எண்ணி எண்ணி வியப்பதைத் தவிர வேறுவழியில்லை.

அரவிந்தன் காலச்சுவடு இதழுக்கு நெருக்கமானவர். அப்பிரசுரங்களின் பொறுப்பில் இருக்கிறார் என்கிறார்கள். தானும் பங்குபெறும் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களை பிரச்சாரம் செய்வதற்காகவே தமிழ்ஹிந்துவின் இலக்கியத்துக்குரிய பக்கங்களை பயன்படுத்திக்கொள்கிறார் அரவிந்தன். காலச்சுவடு நூல்கள் மேல் மிதமிஞ்சிய புகழ்களை ஆசிரியர் கூற்றாக எழுதிவைப்பது [உதா: சென்ற 2016 ஆண்டு தமிழிலக்கியத்தில் தேவிபாரதிவருடம் என கொண்டாடப்படுகிறது- தமிழ் ஹிந்துவின் சென்றவருட இலக்கிய அவதானிப்பு] அந்தக் குழுவின் எழுத்தாளர்களைக் கொண்டு மாறிமாறி மதிப்புரை எழுதச்செய்வது.

இதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம், இந்தச் சிறிய ஆசாமியின் காழ்ப்புகளை அந்த மாபெரும் மேடை ஏன் தாங்கவேண்டும்? தமிழ்ஹிந்துவின் இலக்கியப் பக்கங்களில் இன்றுவரை நான் இடம்பெற்றதில்லை. பிறரால் தயாரிக்கப்படும் அதன் பொதுப்பக்கங்களுக்காக மட்டுமே என்னிடம் படைப்புகள் கோரப்பட்டுள்ளன. அதன் இலக்கியப்பக்கங்களில் இன்று தமிழில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய இலக்கியமுயற்சியான வெண்முரசு பற்றிகூட ஒரு சொல் எழுதப்பட்டதில்லை.

இந்த அச்சிதழ் அல்ல, எந்த அச்சிதழும் எனக்கு நேற்றும் இன்றும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. எனக்கு ஊடகமாக அவை தேவையும் இல்லை. இன்று எந்த அச்சிதழும் என் இணையதளம் அளவுக்கு இலக்கிய வாசகப்பரப்பு கொண்டது அல்ல. ஆகவே அரவிந்தனின் சிறுமை எனக்கு ஓரு தனிப்பட்டப் பிரச்சினை அல்ல. ஆனால் நம் சூழலில் அரிதில் நிகழும் ஒன்றைக்கூட தன் சிறுமைக்குக் களமாக ஆக்கும் கீழ்மையே அருவருப்பூட்டுகிறது.

நான் மட்டும் அல்ல சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன் எவரும் அப்பகுதிகளில் எழுதவைக்கப்பட்டதில்லை. அவர்களைப் பற்றிய நக்கல்களும் கிண்டல்களும் மட்டுமே அவற்றில் அச்சாகியிருக்கின்றன. நாங்கள் காலச்சுவடு முகாமின் எதிர்விமர்சகர்கள். ஆனால் காலச்சுவடு இதழின் ஆதரவாளர்களான் நாஞ்சில்நாடன், யுவன் சந்திரசேகர் குறித்துக்கூட அரவிந்தன் பொறுப்பில் உள்ள தமிழ் ஹிந்து பக்கங்களில் செய்திகளோ கட்டுரைகளோ வந்ததில்லை. காரணம் இவர் பொறுப்பில் காலச்சுவடு இருந்தபோது அதில் இவர் எழுதிய மொண்ணைக்கதைகளையும் அதைப்பாராட்டி இவரே வெளியிட்டுக்கொண்ட கடிதங்களையும் எங்கோ ஓரிருவரிகளில் இவர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

தமிழின் எந்த முக்கியமான எழுத்தாளர்கள் தமிழ் ஹிந்துவில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள். கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் என தமிழில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் எவரையும் தமிழ் ஹிந்துவின் பக்கங்களில் காணமுடியாது. ஏனென்றால் இந்த சில்லறை ஆத்மாவை அவர்கள் புனைவாளராக பொருட்படுத்தியதில்லை.

தமிழ் ஹிந்துவுக்கு இதைப்பற்றி வெவ்வேறு புகார்கள் இதற்குமுன்னரும் அனுப்பப் பட்டுவிட்டன. குறிப்பாக நற்றிணை யுகன் நேரடியாகவே ஆதாரங்களுடன் அவர்களின் நிர்வாகத்துக்கே எழுதியிருக்கிறார். ஆனால் அரவிந்தன் அவர் பணியாற்றும் நிறுவனங்களின் அதிகார அமைப்புகளுடன் தொற்றிக்கொள்ளும் கலையறிந்தவர். பொதுவாக ஆளுமைச் சிறுமை கொண்ட இத்தகையவர்களுக்கு தங்கிவாழும் கலை தெரிந்திருக்கும். குடல்புழுக்களை எளிதில் அகற்ற முடியாது, அவற்றுக்கிருக்கும் தொற்றும் வல்லமை பிற உயிர்களுக்கு இருக்காது.

1
கௌதம சித்தார்த்தன்

இன்னொருவர் கௌதம சித்தார்த்தன். இருபதாண்டுகளாக எனக்கு இவரை சிற்றிதழ்ச்சூழலில் சுற்றிக்கொண்டிருப்பாவராகத் தெரியும். கால்முதல் தலைவரை போலியான மனிதர். போலித்தனத்திற்குப் பின்னாலிருப்பது ஆழமான தாழ்வுணர்ச்சி. ஏனென்றால் முறையான கல்வி இல்லை. ஆங்கிலத்தில் அடிப்படையாகக் கூட வாசிக்கமுடியாது. இணையம் வந்தபின் தினம் ஒரு ஆங்கில நூலை வாசித்ததாக சொல்கிறார் என்கிறார்கள். எதுவும் தமிழ்நாட்டில் சாத்தியம்தான். நானறிந்தவரை ஒரே ஒரு சிறுகதை மட்டும் வாசிப்புத்தகுதி கொண்டதாக எழுதியிருக்கிறார். மற்றபடி அசட்டு முதிரா எழுத்து மட்டுமே. ஆகவே இயல்பாக எங்கும் எவராலும் பொருட்படுத்தப்படுவதில்லை, அந்த வன்மமே அவரை ஆட்டுவிக்கிறது. ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர்.

தமிழ் ஹிந்து வெளிவரத்தொடங்கியதும் தினமலர் சிலபக்கங்களை இலக்கியத்திற்கு ஒதுக்கலாமென முடிவுசெய்தது. உண்மையில் இது தமிழிலக்கியத்திற்கு ஒரு பெரிய வாய்ப்பு. அக்கணம் வரை இலக்கியம் என்றால் என்னவென்றே அறிந்திராதவர்களுக்கு முன்பாக அறிவுலகைத் திறந்துவைப்பதற்கான சந்தர்ப்பம் அது. பல்லாயிரம் இளைஞர்கள் பயன்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் சிலபல தொடர்புகள் காரணமாக தேர்ந்தெடுத்தது கௌதம சித்தார்த்தனை. தவறான தேர்வுகள் நிகழலாம், ஆனால் நம் சூழலில் முட்டாள்தனமான தேர்வுகள் மட்டுமே தவறாமல் எப்படி நிகழ்கின்றன என்பது எண்ண எண்ண வியப்பூட்டுவது.

தினமலரின் பக்கங்கள் தாழ்வுணர்ச்சியின் வன்மம் நிறைந்த இந்த நபரால் கிட்டத்தட்ட கழிவறை போல பயன்படுத்தப்படுகின்றன. நவீனத்தமிழிலக்கியத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாடே கீழ்மையானது என்றும், நவீன எழுத்தாளர்கள் அங்கீகாரத்திற்கு அலையும் இழிபிறவிகள் என்றும், தான் மட்டும் எஞ்சிய மேதை என்றும் தொனிக்க நக்கல் கிண்டல் மட்டும் நிறைந்த அசட்டு எழுத்துக்கள் இவரால் எழுதப்பட்டன.

உண்மையில் இலக்கியச்சூழல் என்னும் சிறிய வட்டத்திற்குள் உள்ள தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவ்வளவுபெரிய மேடையைக் களமாக்குவதில் உள்ள மடமைகூட இவர்களுக்கு உறைக்கவில்லை. அந்தக்களத்தில் எவருக்கும் இவர்கள் எவர் மேல்நஞ்சைக் கக்குகிறார்கள் எவரை கொட்டுகிறார்கள் எதுவுமே தெரியாது. யாரோ யாரையோ எதனாலோ ஏதோ சொல்கிறார் என வாசித்துச்செல்கிறார்கள்.

இது தமிழ்நாட்டின் கீழ்மனநிலைகளில் ஒன்று. ஓர் அலுவலகத்தில் கோப்புகளை எடுத்து அதிகாரியின் மேஜைமேல் வைக்கும்பொறுப்பில் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வோம், அவர் அதை ஓர் அதிகாரமாக ஆக்கிக்கொள்வார் -முறைகேடாக அச்செயலைச் செய்வதன்மூலம். தனக்கு வேண்டியவரின் கோப்பை மேலே வைப்பார். பகைப்பவரின் கோப்பை எடுத்து ஒளித்துவைப்பார். அந்தச் சிறு அதிகாரத்தைக்கொண்டு அந்த அலுவலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயல்வார். அதைக்கொண்டு ஊழல் செய்வார்.

அவரை நேரில்சென்று பார்த்தால் அந்தத் தோரணை வியப்பூட்டும். நம் மக்களும் அவரை அந்த அலுவலகத்துக்கே தலைவர் என நடத்தி சார் ஐயா என்பார்கள். இந்த அதிகாரம் இங்கு திகழவேண்டும் என்றால் மேலதிகாரியின் கருணை வேண்டும் என இந்த ஆசாமிக்குத்தெரியும். ஆகவே மேலதிகாரிகளுக்கு முன் உருகும் வெண்ணையாக இருப்பார் அவர்.

இவர்கள் இலக்கிய விமர்சகர்கள் அல்ல. சொல்லும்படியான படைப்பாளிகள் அல்ல. நல்ல இலக்கியவாசகர்க்ள் கூட அல்ல. இவர்கள் அந்நிறுவனத்தின் ஊழியர்கள். அந்த இதழ் தரமாகவும் வாசிப்புத்தன்மையுடனும் அனைத்து இலக்கியப்போக்குகளையும் உள்ளடக்கும் இயல்புடனும் இருக்கும்படிச் செய்வது மட்டுமே இவர்களின் பணி. ஆனால் இவர்கள் இலக்கியத்தை ஆட்சிசெய்யும் செங்கோலை ஏந்தியிருப்பதாக கற்பனைசெய்துகொள்கிறார்கள்.

இது தமிழின் தீயூழ் என்றே சொல்லவேண்டும். வரலாறு அளிக்கும் ஒவ்வொரு நல்வாய்ப்பையும் அழிக்கும் கிருமிகளே எங்கும் முந்துகின்றன. அத்தனையையும் கடந்து இங்கே இலக்கியம் நின்றுகொண்டிருப்பது தகுதியறிந்து வாசிக்கும் சிலராலும் அர்ப்பணிப்புடன் எழுதுபவர்கள் சிலராலும் மட்டுமே. நேற்று சிற்றிதழ் நடத்தி தெருத்தெருவாக அலைந்தவர்களின் மரபைச்சேர்ந்தவர்கள், அம்மரபை மதிப்பவர்கள் இன்றும் அதே அர்ப்பணிப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடையே தனிப்பட்ட பூசல்கள் இருக்கலாம், மாறுபட்ட கருத்துக்களும் அதன் விளைவான கசப்புகளும் இருக்கலாம், ஆனால் அடிப்படையில் அவர்களை இயக்குவது இலக்கியம் என்னும் ஒட்டுமொத்த இயக்கம் மீதான நம்பிக்கை மட்டுமே. தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சி அவர்களின் கைகளிலேயே உள்ளது. இன்றுவரை இதைக் கொண்டு வந்து சேர்த்த அவர்களால் இக்களைகளைக் கடந்தும் அதைக் கொண்டு சென்று சேர்க்கமுடியும்.

வாசகர்கள் இது குறித்த தங்கள் கண்டனத்தை ஹிந்து தமிழ், தினமலர் ஆசிரியர் மற்றும் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். பல பதிப்பகங்களின் புகார்கள் சென்றபின்னரும் அரவிந்தன் அதே மூர்க்கத்துடன் நீடிக்கிறார் என்றால், இருப்பவர்களிலேயே மொக்கையான ஒருவரை தினமலர் தெரிவுசெய்கிறது என்றால் அதற்கு நாம் அறியாத காரணங்கள் இருக்கும். ஆகவே புகார்களால் ஆகப்போவதொன்றும் இல்லை. குறைந்தபட்சம் இத்தகைய தருணங்களில் வாசகர்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு, அவர்கள் எதிர்வினையாற்றுவர் என்பதையாவது அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.

முந்தைய கட்டுரைகுறளுரை -கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைமோட்டார் சைக்கிள் பயணம்